நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 2

ஸ்ரீ நிவாசப் பெருமாளுக்கு வயது நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் என நினைக்கிறேன். இருந்தும் தீவிர உடற்பயிற்சி யோகா மற்றும் டயட்டில் இருந்து கட்டுக் கோப்போடு இருப்பார் மனுஷன்.

சண்டே என்பதினாலும் சோம்பி இருக்கவில்லை. நியாயப்படி வீட்டில் தூங்க வேண்டியவர், இங்கு வந்து பைல்களை ஒழுங்கு படுத்தி ரைஃபிள்களைக் க்ளீன் செய்து.. இதோ இப்போது இந்த ஃபோன்.

சுறுசுறுப்புடன் என்னிடம் சொன்னார்..

”சைந்தவி சம்திங்க் இஸ் ராங்க்.. சைபர் க்ரைம்க்கு ஃபோன் பண்ணி இந்த ஃபோன் யாரோடதுன்னு கேளு. எங்கிருந்து இந்தக்கால் வந்திருக்கும்?னு லொகேஷன் பார்க்கச்சொல்லிக் கண்டுபிடி” எனச் சொல்லி வெளியே போனார். நான் லேண்ட்லைனில் இருந்து போன் பண்ணும் போது வெளியில் அவர் பேசுவது கேட்டது.

“ஆறுமுகம், யார் இவங்க..?”

“சார்..” என அவர்கள் சொன்னதை ஆறுமுகம் சொல்ல..

“என்னாச்சுங்க.?”

“எங்களோட பேரனைக் காணோங்க”

“எப்ப இருந்து?”

“சாயந்திரத்துல இருந்து”

“அவங்க அப்பா அம்மா வரலையா..?”

“இல்லீங்க.. அவங்க ஆஃபீஸ் விஷயமா புனா போயிருக்காங்க. ஹஸ்பெண்ட் வைஃப் ரெண்டு பேரும் வொர்க்கிங்க்”

“போன் பண்ணிச் சொல்லிட்டீங்களா?”

“இல்லை.. வெய்ட் பண்ணினோம். சொன்னா திட்டுவாங்களேன்னு பயம். ஏற்கெனவே நாங்க வேண்டாத மாமனார் மாமியார் – என் மாட்டுப் பொண்ணுக்கு”

“எப்படி உங்களை நம்பி விட்டாங்க?”

“ஏதோ கனகாரியமான ஆஃபீஸ் வேலையாம்.. ரெண்டு பேருமே ஐடி ஒரே கம்பெனி, சண்டேயும் வேலை”

“சரி..சரி.. இவர்கிட்ட எழுதிக் கொடுங்க.. நாங்க பார்க்கறோம். நீங்க கொக்குப்பாக்கம்தானா..?”

“இல்லை சார், மைனாப்பாக்கம். பையன் ஸ்கூலும் மைனாப்பாக்கம்தான். இன்னிக்கு சண்டேங்கறதால அங்கிட்டு இங்கிட்டு விளையாடிக்கிட்டிருந்தான். சாயந்திரம் வருவான்னு பார்த்தோம்.. வரலை.. கொஞ்சம் யோசிச்சு பயம்மா இருந்ததுன்னு வந்துட்டோம்”

“எங்கயாவது ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்குப் போயிருக்கப்போறான்”

“இல்லீங்க.. அவன் சின்னப் பையன் நாலாங்க்ளாஸ்”

“யார்கிட்டயாவது ஃபோன் பண்ணீங்களா..?”

“இல்லீங்க, தோணலை”

“என்ன தோணலை?.. கம்யூனிகேஷன் எவ்வளவு வளர்ந்திருக்கு. அப்பா அம்மா கிட்டக்கயாவது சொல்லியிருக்கலாம்.. அவங்க எங்களுக்கு ஃபோன் பண்ணியிருப்பாங்கள்ள. சொல்லு சைந்தவி” என்றார் வெளிவந்த என்னிடம்.

“சார்.. இது பதினோராவது அவென்யூல இருந்து வந்திருக்கு. வாங்கினவர் அட்ரஸும், வந்த லொகேஷனும் ஒண்ணுதான் சார்”

“ஓகே.. ஷண்முக நாதன்.. ஆறுமுகத்துக்கிட்டக்க சொல்லுங்க நாங்க இதோ வந்துடறோம்.. ஃபோட்டோ இருக்கா?”

ஷண்முகம் காண்பிக்க அதை வாங்கிப் பார்த்து ஆறுமுகத்திடம் கொடுத்தார். “ஆறுமுகம்.. ஏதாவது தகவல்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க.. பெரியசாமியைக் கூப்பிட்டு இங்க வரச் சொல்லுங்க.. அவர் நாளைக்கு ஆஃப் எடுத்துக்கட்டும்”

வெளியில் வந்து, ”சைந்தவி.. உன்னோட ஹையுண்டையை எடு. ஸ்கார்ப்பியோல ஃப்ரண்ட் டயர்ல காத்து ரொம்பக்கம்மி..”

எடுத்தேன்.. என் சொந்த உபயோகத்துக்காக போலீஸ் ஸ்டேஷனிலேயே பார்க் பண்ணி வைத்திருப்பேன்.. அதை எடுத்தேன்.

“வழி தெரியுமில்லயா?”

“அனதர் ட்வெண்ட்டி மினிட்ஸ் ஸார்”

என் கரு நீல நிறக் குட்டியானையை எடுத்து உசுப்பி ஓட்டி பதினைந்து நிமிடங்களில் பதினோராவது அவென்யூ.

தனித்தனி பங்களாக்கள் தான் அங்கு. டபக்கென அந்த நூற்றிரண்டாம் எண்ணில் நிறுத்தி பெல் அடித்தோம்.

ர்ர்ர்ர்ர்ர்…

‘திறக்கும் வழியாய் இல்லையே’ என கதவைத் தொட்டால் திறந்து கொண்டது.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி துப்பாக்கியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, “ஸார் கருணாகரன்.. மிஸ்டர் கருணாகரன்..( அந்த ஃபோன் ஓனரின் பெயர்)” என உள் நுழைய ஹால், அதன் மூலையில் ஒரு அறை.. சற்றே மூடியிருந்த கதவு கொஞ்சம் விலகி அந்தக் காட்சி புலப்பட்டது.

கால் அந்தரத்தில் தொங்கிய கால்.

ஓடி ஓடி அறைக்கதவைத் திறந்தால் அங்கே தொங்கிக் கொண்டிருந்தார் அந்த ஆள். உச்சியில் அவரது கழுத்தில் நீல நிறக் கயிறு இருந்தது.

“என்னது இது சைந்தவி?.. யாரோ கொல்லப் போறான்னு சொன்னவர், சாவதானமாத் தூக்குப் போட்டுக்குவாரா?”

“தெரியலை சார்” என்றேன். நிறைய இந்த மாதிரி பார்த்திருக்கிறேன் என்றாலும், நேரில் ஓவ்வொரு முறை பார்க்கும் போதும் மனதுக்குள் திடுக்தான்.

அந்த அறையைச் சுற்றிலும் பார்த்தேன். அது ஒரு பெட்ரூம்.. ஒரு ஒழுங்கோடு டபுள் பெட் போடப்பட்டு அதில் இரு தலையணைகள்.. ப்ரெளன் நிற படுக்கை விரிப்பு நடுவாக மடித்து வைக்கப்பட்டிருந்த கம்பளி.. பெட்டிற்கு மேலே கொஞ்சம் உயரே ஸாம்சங்க் ஏசி ஸ்ப்ளிட். ஆனால் ஓடவில்லை.

இவர் தொங்கிக்கொண்டிருந்தது பெட்டிலிருந்துகொஞ்சம் தள்ளி மேலே இருந்த வளையத்தில் (எதற்காக வளையம்) கீழே கொஞ்சம் விழுந்திருந்த ஒரு சாய்மானமில்லாத மொட்டை நாற்காலி.

ஸ்ரீனி அதற்குள் பேச ஆரம்பித்திருந்தார். “எஸ் ஃபாரன்ஸிக்.. யா நான் பெருமாள்.. இங்கே லெவந்த் அவென்யூ.. அங்கே போலீஸ் இருக்கிறார்களா? ரெண்டு பேரா? பின் ஆம்புலன்ஸ்க்கும் வரச் சொல்லுங்கள்”

நான் வெளியே வந்தேன்.. அவரும்…

“சைந்தவி.. இவ்ளோ பெரிய வீட்ல யாருமே இல்லியே”

“சார் அதான் தெரியலை.. இப்போ டைம் ஒன்பதே காலா.. அதுவும் கதவு திறந்து கிடக்கு”

“ம்.. எவ்வளவோ பத்திரமா இருக்கணும்னுதான் மனுஷன் நினைக்கறான். உடம்பைப்பாத்துக்கறதுக்கு ஜிம், வியாதி இல்லாம இருக்கறதுக்கு டாப்லட்ஸ்.. ப்ரஸண்ட்டபிளா இருக்கறதுக்கு ஆடைகள்.. உயிருக்கு உடம்பு தான் காவல்னு நினைக்கறான். ஆனா, அவனது உயிருக்குக் காவல்ங்கறதே கிடையாது. நாமல்லாம் சும்மா வெறுமனே காவல் துறைன்னு இருக்கோம். ஒரு உயிர் போறதை எவ்ளோமுயற்சி பண்ணாலும் போகற நேரம் வந்தா தடுத்து நிறுத்த முடியாது..ம்.ம்”

என தத்துவமாக அவர் சொல்லி முடிப்பதற்குள், வீட்டின் வெளியே ஒரு கார் வந்து நிற்கும் ஒலி என் காதுகளில் ப்ளஸ் காரின் விளக்குகளின் ஒளி என் கண்களில்…

கார் நிறுத்தப்பட டிரைவர் “என்னங்க இது என்ன இன்னொரு கார்.. வீட்ல லைட்லாம் எரியுது? “என வெளியே வர.. அந்தப்பக்க இருக்கையிலிருந்து ஒருவர், பின் சீட்டுகளில் இருந்து ஒரு இளைஞன் இளைஞி இறங்க ஸ்ரீனிவாசன் எதிர்கொண்டார்.

“நீங்கள்.. போலீஸ் எதற்காக இங்கே?”

“நீங்கள் யார்?”

“நான்” என்றான் இளைஞன். “நான் ப்ரபாகர்.. இவள் ப்ரகதி.. இவர் என் பார்ட்னர்.. ருத்ராபதி.. இது ட்ரைவர் முகுந்தன்.. இது என் மாமா வீடு.. வந்தோம் அருகில் ஒரு மால் போனோம் ஷாப்பிங்.. அப்படியே படம் பார்த்து வருகிறோம்”

“உங்கள் மாமாவின் பெயர்?”

“அது கூடத் தெரியாமல் மாமாவின் வீட்டிற்கு எப்படி வந்தீர்கள்?” ஸ்ரீனியின் முறைப்பைப்பார்த்து, “அவர் பெயர் கருணாகரன்”

“கருணாகரனா..?”

“ஆமாம்.. ட்ராவல்ஸ் தேன்பாக்கத்தில் வைத்திருக்கிறார்.. இங்கு அவர் வீடு.. இன்று தான் வந்தோம்.. எதற்காக?”

ப்ரபாகர் சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்த பார்வை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.. அவள்.. ப்ரகதி.. நான் பெண் என்பதால் என் கை பிடித்து, “என்ன ஆச்சுங்க ?”

“வாருங்கள்” என பெருமாள் கூட்டிச் சென்று அறையைக் காண்பிக்க.. அதிர்ந்தார்கள்.

ட்ரைவரிடமிருந்து ஒரு நீண்ட ஆ.. ப்ரகதி சரிந்தாள்.. ப்ரபாகர்.. “மாமா.. ஏன் என்னாச்சு? எதுவா இருந்தாலும் என்னிடம் சொல்லியிருக்கலாமே “என அலறினான்..கண்கள் ஆட்டோமேடிக்காய் நீரைவார்த்தன.

படக்கென அந்தப்பக்கம் இருந்த ஜக்கை எடுத்து நான் ப்ரகதி மேல் தண்ணீர் தெளிக்கவும் வாசலில் சத்தமிட்டபடி ஆம்புலன்ஸ் வந்து நிற்கவும் சரியாக இருந்தது..

ப்ரகதி மலங்க மலங்க விழித்து எழுந்தாள். ”மாமாக்கு இப்படி ஆகும்னு எனக்குத் தெரியும்..” என்றாள்.

Series Navigation<< நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 1நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 3 >>

Author

Related posts

மாய நதி

அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)

உப்புக் காற்று