பிறவாமை வேண்டும் என்பதே
அனைவரின் இறைஞ்சலாகினும்
வேண்டாமல் பிறத்தலும், இறத்தலும்
இடையே போராடி வாழ்தலும்
காலத்தின் கட்டாய விதி.
அவரவர் வகுத்துக்கொண்ட
குறுகிய வட்ட எல்லையில்
செக்கைச் சுற்றி உழன்று
ஓய்வில்லாது பொருள் ஈட்டிட
பணிப்பது வாழ்வின் அயற்சி.
கதிரொளியும் புள்ளினக் கூவலும்
சாளர வழி கூட ரசிக்க இயலாது
நில்லாது ஓடும் காலச்சக்கரத்தினை
துரத்தி ஓடிக்கொண்டே இருப்பது
இயந்திர கதியான சுழற்சி.
சற்றே ஆசுவாசம் கொள்ள
நகர விடாது செய்யும்
நரகமான நகர வாழ்வின்
பிடியினின்று விலகி அவ்வப்போது
இயற்கையோடு இணைந்தால் மலர்ச்சி.
வானளாவும் மரங்களும்
செடிகொடி, மலர்களும்
சிற்றுயிர்களும் மகிழ்விக்கும்
வடிவான ஒற்றையடிப் பாதை
இட்டுச் செல்லும் கானகமொன்றில்
புத்துயிர் பெற்றிடச் செல்லுதல்
மனம், மெய், உயிருக்கு மீட்சி