1 – என்னதப்பு செய்தாலும் ஏச்சுக்கள் ஏதுமின்றி
இன்னுமிது கூடாதென் றின்முகம் மாறாது
தன்னோடு சேர்த்துபின் தக்கபுத்திச் சொல்லுகையில்
அன்பை அளிப்பாள் அணைத்து.
— பிரசாத் வேணுகோபால்
2 – வாதம் பலசெய்வாள் வக்கணையாய் எப்பொழுதும்
பேத மிலாமலே பேத்தியவள் என்னிடமே
புன்னகைப்பூ தொக்கிநிற்கப் பொற்கரத்தால் மெல்லிழுத்து
அன்பை அளிப்பாள் அணைத்து
–கண்ணன் ராஜகோபாலன் ( எ ) சின்னக் கண்ணன்
3 – இன்னலோ இக்கட்டோ ஈதொன்றும் இல்லையெனக்
கன்னம் வழித்துக் கதைசொல்வாள் – சொன்னபின்னர்
கன்னலாய் முத்தமிட்டுக் காவியமாய்த் தாலாட்டி
அன்பை அளிப்பாள் அணைத்து
— மாலா மாதவன்.
4- தாயவளே தள்ளி யங்கே நின்றாலும்
தந்தை யவன் மறந்தங்கே போனாலும்
இன்முகமே காட்டி யுன்றன் பாட்டியென்றும்
அன்பை அளிப்பாள் அணைத்து.
— சங்கர் குமார்
5- அன்னை பிழைத்தால் அவளுக்கு ஏச்சுண்டு
கன்னற் கனிமொழியாள் செய்யும் குறும்புகளோ
முன்னர் கடிதோச்சும் மூதன்னை பின்தணிந்து
அன்பை அளிப்பாள் அணைத்து
— சாந்தி மாரியப்பன்
6- என்புருகி ஈந்த இதற்குவேறு ஏற்றமுண்டோ
அன்புருகிக் காணுகின்ற ஆர்வத்தால் காட்சியும்
அன்பிழை கொண்டு கோர்த்தது போலன்றோ
அன்பை அளிப்பாள் அணைத்து
7 -அன்பு நிறைந்தவர்க்கு உள்ளம் நிறைந்தால்
என்பு உருகிய நிலை இதுவென்றோ.. என்றும்
காணும் உறவுகளில் ஈதுபோல் காட்சிகள்
பேணும் ஆவலாகிப் போம்
–பானுமதி நாச்சியார்
8- உன்னில் கண்டேன் என் பெண்ணை
அன்பில் பூரித்து விம்மினேன்
அன்னையை போல் அணைத்தாய்
உன் முன் குழந்தை ஆனேன் நான்
–கண்மணி பாண்டியன்
9- வார்த்தை போதாது வர்ணிக்க
பெறாது பெற்ற மாமணியை
பேத்தியை அணைக்கும் உவகையை
பூலோகம் வந்த சொர்க்கலோகத்தை
–பவளமணி பிரகாசம்
10- கன்னலவள் இன்மொழி
மின்னலவள் கண்ணொளி -முன்னம்
நன்னெஞ்சே .அவளைப் பணிய
அன்பை அளிப்பாள் அணைத்து.
— ஷைலஜா நாராயணன்.