Home கவிதைபாட்டுக்கு பா! -3

பாட்டுக்கு பா! -3

by admin
0 comments

திண்ணையில் பேச்சென்றுத் தேர்போல் அசைந்தாடி
வண்ணமாய் வந்தமர நேரமில்லை – கண்பார்த்து
வாதி பிரதிவாதி வம்பு வழக்கெல்லாம்
காதிலவன் சொன்ன கதை

  • மாலா மாதவன்

பதில் சொல்லத் தெரியாது விழித்திட்ட
வேதியனைச் சிறையிட்டத் தன்மகனை வேண்டிட்ட
ஆதிசிவன் மண்டியிட பிரணவத்தின் விரிவுரையே
காதிலவன் சொன்ன கதை!

ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காணாது
வீதியிலே சென்றவனை வாவென்று அழைத்து
நீதியிலா மனங்கொண்டு மற்றவரைப் பழித்ததுவே
காதிலவன் சொன்ன கதை
பி.கு: ( வெண்பா இலக்கணத்துக்குள் வரவில்லை)

  • சங்கர் குமார்

மெக்சிகோ தேசத்து மெல்லியலாள் ஜோக்கென்று
கெக்கலிக்கும் விந்தையைக் கேட்டீரோ – தக்கதோ
மாதுலன் என்ற மரியாதை இல்லாது
காதிலவன் சொன்ன கதை

  • நடராஜன் பாலசுப்ரமணியன்

பொய்யோ புனைவோ பொறுப்பில்லாப் பேச்சுகளோ
அய்யோ அழிச்சாட் டியமலவோ – உய்வின்றி
நீதித் தவறி நிலைமாறும் போக்கினதாய்க்
காதிலிவன் சொன்ன கதை

ஈரே(ழு) உலகத்தும் இப்படி ஒன்றில்லை
ஆரேனும் தாங்குவரோ அன்புக்காய்? – வேறேது!
காதலி போட்டிருக்கும் கட்டெல்லாம் என்னவென்று
காதிலிவன் சொன்ன கதை.

(கட்டு = நிபந்தனை)

  • இப்னு ஹம்துன்
    பறங்கிப்பேட்டை

பார்வைப் பதிலேதும் பாவையின்று தந்திடுவாள்
கோர்வையாய் நீயும்தான் கொண்டிருக்கும் கேள்விகளை
பாதியாய்ச் சொல்லாமல் பக்குவமாய்க் கூறென்றே
காதிலிவன் சொன்ன கதை

ஆர்வமாய் மங்கையவள் ஆரணிப் பட்டுடுத்தி
ஊர்வலமாய்க் கோவிலுக்கு உள்ள விளக்கேற்றி
சேதிசொலப் போகின்றாள் சிஷ்யாநீ செல்லென்றான்
காதிலிவன் சொன்ன கதை

  • சின்னக் கண்ணன் ( கண்ணன் ராஜகோபாலன்)

ஆவென்று வாய்பிளந்து ஆச்சரியம் தந்துநிற்கும்
நாவென்றும் ஆகாது நம்புதற்கு – நீவெல்ல
சூதிருக்கும் வாய்ப்புணர்ந்து சூதான மாய்க்;கேட்பாய்
காதிலவன் சொல்லும் கதை.

அடுத்தவர் பற்றி அசரா(து) கதைகள்
அடுக்கிடும் ஆளின் அவலம் – வெடுக்கென
வீதியில் சொன்னாலோ வெட்கமென்று கைகுவித்துக்
காதிலவன் சொன்னான் கதை.

  • பிரசாத் வேணுகோபால்

காதிலவன் சொன்ன கதை
பாதி கூட மெய்யில்லை
மீதி கதையை கேட்டிடவே
பீதியாக உள்ளதே

வீண் வம்புதனை கேட்டதுமே
கண் இரண்டும் பிதுங்கியதே
பண்பற்ற ரகசியம் வேண்டாம்
எண்ணம் மாசுபட வேண்டாம்

  • கண்மணி பாண்டியன்

Author

You may also like

Leave a Comment