இன்னும்கூட நன்றாக நினைவிருக்கிறது. அது பூப்போட்ட வெளிர் மஞ்சள் நிறச்சட்டை.

அவன் அப்பொழுது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்த ஐவரில் மூவர் பெரிய மனிதர்களாகிவிட, நான்காவது அண்ணன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். இவன்தான் கடைக்குட்டி. அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்றாலும் அப்பாவிற்கு இவன் கொஞ்சம் கூடுதல் செல்லம். நிலையான வேலையின்றி முதல் இரண்டு அண்ணன்கள் படும் பாடுகளைக்கண்டு மூன்றாவது அண்ணன் தையல் கற்றுக்கொள்வதாக முடிவான சமயம்.

வழக்கமாக புத்தாடை என்பது, அவனுக்கு ஒவ்வொரு வருடமும் புது வகுப்பில் நுழையும்பொழுது, செட்டிகுளம் சந்தையில் மலிவான துணிகளில் வாங்கிவரப்படும் பள்ளிச்சீருடைதான். அதுவும் போக, புத்தாடை என்றால், தீபாவளி மற்றும் பொங்கலின்பொழுது பள்ளியில் வழக்கமாக வழங்கப்படும் இலவசச் சீருடைதான். அதுவும்  சில சமயங்களில் தீபாவளிக்கு வழங்கப்பட வேண்டிய சீருடை வருகையில் பொங்கலே கழிந்துவிட்டிருக்கும். விழைவு அவனது ஒற்றை கால்சராயின் பின்புறம் கிழிந்து புட்டங்களை பெருமளவு வெளிக்காட்டிக்கொண்டிருக்கும்.

 வழக்கமாக தீபாவளி, பொங்கலின்பொழுது புத்தாடை வாங்குவது என்பது அதீத ஆடம்பரமாகப்பட்டதாலோ என்னவோ, நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனுக்குப் புத்தாடை என்பது பள்ளியில் வழங்கப்படும் இலவச சீருடைதான். இலவச சீருடை வந்து சேராத வருடங்களில் அவனுக்கு புத்தாடையின்றியே கழியும். உண்மையில் வீட்டிலுள்ள அனைவருக்கும் இதே நிலைதான் என்றாலும் அதனை ஒரு சிறிய வருத்தமான உரையாடலோடு முடித்துக் கொள்வதுதான் வழக்கம். குடும்பத்தின் வறுமை தெரியுமாதலால் யாரும் அதனைப் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை.

 உண்மையில் அவனுக்குத் தீபாவளி பிடித்தமான பண்டிகையாக மாற காரணங்கள் மூன்று. முதலாவது இட்டிலி. வருடத்தில் அதிகபட்சம் இரண்டு முறை(சில வருடங்களில் தீபாவளியோடு நின்றுவிடுவதும் உண்டு) மட்டுமே சுடப்படும் இட்டிலியானது தீபாவளிக்குக் கண்டிப்பாக உண்டு என்பது. இரண்டாவது பட்டாசுகள். பட்டாசுகள் என்பது பலமணிநேரம் கொஞ்சி, கெஞ்சியபிறகு தரப்படும் ஓரிரு ரூபாய்களில் வாங்கப்படும் கொஞ்சம் ஓலைப் பட்டாசுகளும் கம்பி மத்தாப்புகளுமே. அது எப்பொழுதுமே அவனுக்குப் போதுமானவையாக இருந்ததில்லை. பெரியவனானதும் நிறையப் பட்டாசுகள் வாங்கி நாள் முழுவதும் வெடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் அவனது கனவாக இருந்தது ஒவ்வொரு தீபாவளியின்போதும். மூன்றாவது கறிக்குழம்பு. ஆடிப்பெருக்கின்பொழுது சாப்பிட்ட ஆடு அல்லது கோழி தவிர்த்து அடுத்த மூன்று மாதங்களுக்கு ஏதேனும் விசேஷ வீட்டில் சாப்பிட நேர்ந்தால் தவிர, தீபாவளி வரை வீட்டில் அனைவரும் அசைவப் பட்டினிதான். அதிலும் புரட்டாசி மாதத்தில் முட்டை கூட அவிக்கப்படுவதில்லை.

அதிசயமாக அந்த வருடம் அப்பா தீபாவளிக்கு முதல் நாள் ஏதோ ஒரு வேலையாக திருச்சி வரை சென்றவர், அனைவருக்கும் புத்தாடைகள் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். அவ்வளவுதான்.. அனைவரின் முகத்திலும் வெளிச்சம் கூட, தீபாவளிக்கான கொண்டாட்டம் அப்பொழுதே ஆரம்பித்தது போலிருந்தது. அவனும் அவனது நான்காவது அண்ணனும் இட்டிலிக்கு மாவரைத்துக்கொண்டிருந்ததை அப்படியே விட்டுவிட்டு கையை ஒழுங்காகக் கழுவாமல் வந்து அவர்களுக்காகக் கொண்டு வந்திருந்த ஆடைகளை அணிந்து பார்த்தார்கள். எல்லோருக்கும் ஏதோ ஒரு சிறு குறை இருக்க, இவனுக்கு மட்டும் எந்தக் குறையும் இல்லாமல் மிகவும் பொருத்தமாக இருந்தது. அதில் அவனுக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி. போதாக்குறைக்கு அப்பா அவனையும் நான்காவது அண்ணனையும் கூப்பிட்டு, ஆளுக்கு கொஞ்சம் பட்டாசுப்பணம் கொடுத்தபொழுது அவனது மகிழ்ச்சி மும்மடங்காகியது. அண்ணனுக்கு நான்கு ரூபாய்களும் அவனுக்கு மூன்று ரூபாய்களும். மீண்டும் அவனுக்கு மாவரைக்கும் எண்ணமே எழவில்லை. இருப்பினும் அம்மா அவனை வைது மாவரைக்க வைத்தாள்.

மாவரைத்து முடிக்கையில் இரவு எட்டுமணியாகியிருந்தது. அம்மா நன்றாக அரிசி மாவையும் உளுந்து மாவையும் கலந்து, ஒரு மெல்லிய வெண்ணிறத்துணியால் மண்பானையின் வாயைக் கட்டி அடுக்களைத்திண்டில் கவனமாக தூக்கி வைத்தவுடன், அவன் மீண்டும் சென்று அவனது புத்தாடையை எடுத்துக்கொண்டுபோய் தெரு விளக்கு வெளிச்சத்தில் வைத்து நன்றாகப்பார்த்தான். வெளிர் மஞ்சள் நிறத்தில் அடர்பச்சை நிறப்பூக்களுடன் சட்டை தகதகவென்றிருக்க, கால் சட்டை அடர் பச்சை நிறத்தில் கருப்பு நிற பொத்தான்களுடன் இருந்தது. பக்கத்து வீட்டுப் பையன்களும் வந்து பார்த்து மிகவும் நன்றாக இருப்பதாகச் சொன்னவுடன் அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. புத்தாடையை மிகக்கவனமாக எடுத்துக்கொண்டுபோய் அவன் தானியக் குதிரின் மேல் மிகக் கவனமாக மறைத்து வைத்தான். அவனுக்குப்பயம்.. எங்கே அவனது அண்ணன் இவனது சட்டையை தனதென்று எடுத்துக் கொள்வானோயென்று. கடைசிப் பேருந்தில் பெரம்பலூரிலிருந்து ஆலத்தூர் கேட் வழியாக வந்த பெரியண்ணன் கொஞ்சம்போல் பட்டாசுகள் வாங்கி வந்திருப்பதைக்கண்டவுடன் அவனுக்கு மகிழ்ச்சி நான்கு மடங்காகியது. அப்பொழுதே வெடித்தாக வேண்டும் என்று நெஞ்சம் பரபரத்தாலும், அண்ணன் நாளைப்பிரித்துத் தருவதாகச் சொல்லி மற்றொரு தானியக்குதிரின் மேலிருந்த தகரப்பெட்டிக்குள்ளாக வைத்துவிட்டார். அவன் ஒரு பாட்டம் அண்டை வீடுகளுக்குச் சென்று பெரியண்ணன் பட்டாசு வாங்கிவந்ததைப் பெருமையாகப் பீற்றிக்கொண்டு வந்து விட்டான்.

மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க அன்றைய இரவு சாப்பாடு கூட அவனுக்கு தொண்டையில் இறங்கவில்லை. ஏனோதானோவென்று சாப்பிட்டுவிட்டு அப்பாவின் அருகில் சென்று படுத்தவனுக்கு உறக்கமே வரவில்லை. அண்ணன்களும் அப்பாவும் பேசிக்கொண்டதிலிருந்து காரிக்காளையை விலை பேசி முன்பணம் பெற்றுத்தான் அனைவருக்கும் புத்தாடைகள் வாங்கிவந்தது தெரிந்தது. நாளைக்காலையிலேயே தரகர் வந்து காளையை ஓட்டிச்சென்றுவிடுவார் என்று அப்பா வருத்தத்தோடு சொன்னபொழுது, அவனுக்கு என்னவோ போலிருந்தது. விபரம் தெரிந்த நாளிலிருந்து உழவிலிருந்து எல்லா வேலைகளுக்கும் குடும்பத்தில் ஒருவனாக உழைத்தே வந்திருந்த காரிக்காளை, தீபாவளிக் கொண்டாட்டத்தில் எங்கோ ஒரு ஊரில் கூறு போடப்படுவதில் யாருக்குத்தான் வருத்தம் இருக்காது?!.  

இரவு மணி பத்தரையானபொழுது மழை ஆரம்பித்தது. வீட்டின் முன்கட்டில் படுத்திருந்த அனைவரும் ஒழுகாத இடம் தேடி இரண்டாம் கட்டில் தஞ்சமடைய, அப்பா அவனைத் தனது மடியிலேயே கிடத்தித் தூங்க வைத்தார். கனவில் அவன் அவனது புத்தாடையை அணிந்துகொண்டு பள்ளிக்குப் போவது போலவும் அனைவரும் அவனது புத்தாடையை வியந்து பாராட்டுவதுபோலவும், நாள் முழுவதும் இட்டிலியைத் தின்றுகொண்டே பட்டாசு வெடிப்பதுபோலவும் கண்டுகொண்டிருந்தான். அதிகாலையில் எழுந்தபோது மழை விட்டிருக்கவில்லை. முன்கட்டில் மொத்தமும் ஈரமாகியிருக்க நல்லவேளையாக தனது புத்தாடையை நடுக்கட்டில் பத்திரமாக வைத்ததை எண்ணித் தன்னைத்தானே மெச்சிக்கொண்டான்.

 அடுக்களையில் அம்மா இட்டிலிகள் சுடும் வைபவத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். இவன் சென்றபொழுது,  “சின்னவனே இன்னும் மாவு புளிக்கல. இன்னும் கொஞ்ச நேரம் ஆவும்போல. நீ போய் பட்டியைக்கூட்டிச் சுத்தம் பண்ணு” என்றாள்.

அவனும் சென்று பட்டியிலிருந்த ஆடு மாடுகளை வீட்டை ஒட்டிய வேம்பினடியில் மாற்றிக்கட்டினான். அதிகாலையிலேயே தரகன் காரிக்காளையை ஓட்டிக்கொண்டு போயிருந்ததை அவனால் உணர முடிந்தது. மனம் ஏனோ வலித்தாலும், தீபாவளி அதனைப் புறந்தள்ள வைத்தது. இரவிலிருந்து பெய்துகொண்டிருந்த மழையில் வேம்பினடி சொதசொதத்து போயிருந்தது. ஆதலால் அவசரம் அவசரமாகப் பட்டியைக் கூட்டியவன், ஆடு மாடுகளை மீண்டும் பட்டிக்குள்ளேயே மாற்றிக்கட்டி அவைகளுக்குத் தீனியிட்டான்.அதன்பிறகு அம்பாரமாய்க் குவிந்திருந்த ஆட்டுப்புழுக்கைகளையும் மாட்டுச்சாணியையும் அவர்களுக்குச் சொந்தமான எருக்குழிக்கு சுமக்கலானான். கடைசித்தட்டைச் சுமக்கும்பொழுது சூரியன் உதிக்க ஆரம்பித்திருந்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாய் பட்டாசுச் சத்தம் கேட்க அவனுக்குப் பரபரவென்றிருந்தது. கடைசித்தட்டை ஓட்டமும் நடையுமாய் சென்று கொட்டிவிட்டு, வீட்டிற்கு விரைந்து வந்தவன், அம்மா அடுத்து ஏதோ ஒரு வேலையை அவன் மீது ஏவியத்தைப்பொருட்படுத்தாமல் நல்லெண்ணெயை ஒரு கிண்ணம் நிறைய எடுத்து தலைக்குத் தேய்க்கலானான். அதற்குள்ளாக அவனது நான்காம் அண்ணனும் தண்ணீர் சுமந்து அனைத்துப் பாத்திரங்களையும் தொட்டிகளையும் நிரப்பிவிட்டு வர, இருவரும் சூடு பறக்க மாற்றி மாற்றி எண்ணெய் தேய்த்துக்கொண்டார்கள். அடுக்களையில் மூலையில் பெரிய அண்டாவில் நீர் சூடாகிக்கொண்டிருந்தது. ஆளுக்கொரு மண்பானையில்  சுடுநீரினை பாதி நிரப்பி மீதிக்குத் தண்ணீர் விளாவி, அம்மா அரைத்து வைத்திருந்த அரக்குப்பொடியெடுத்து தேய்த்துக்குளித்துவிட்டு, இடுப்பில் துண்டோடு அடுக்களைக்குள் நுழைகையில்  இட்டிலியின் வாசம் மூக்கைத்துளைத்தது. அவன் நேராக அடுக்களையின் சனிமூலையைப் பார்த்தான். அங்கே தாத்தாவிற்கு நான்கு இட்டிலிகள் வைத்து அம்மா கும்பிட்டிருப்பது தெரிந்தது. அவ்வளவுதான்.. அவன் பாய்ந்து ஒரு இட்டிலியை எடுத்துக்கடித்துத் தின்ன ஆரம்பித்தான்.

அம்மா “போடா, மொதல்ல புதுக் துணி உடுத்து. கறி வெந்தவுடன, உப்புக்கறி கொஞ்சம் எடுத்து வைக்கிறேன், வந்து தின்னு. குழம்பு கூட்டி வச்சவுடனே இட்டிலி திங்கலாம்” என்றாள். அவனும் ‘சரிம்மா’ என்றவாறே நடுக்கட்டுக்கு விரைந்தான். அங்கே குதிரின் மேலே வெறும் கால் சாராய் மட்டுமிருப்பதைக் கண்டு குழப்பத்துடன்

 “டேய் அண்ணா, நீ என்னோட புது மேல் சட்டையை எடுத்தியா?” என்றான் கால் சராயை மாட்டியபடியே. அவனது அண்ணன் அவனது புதுத்துணியை உடுத்தியபடியே

“இல்லியேடா.. வேறெங்கேயாவது வச்சிட்டு இங்க தேடாத” என்றவாறே அவன் உப்புக்கறி திங்கப்போனான். இவன் மென்மேலும் தேட ஆரம்பித்தான். எங்கு தேடியும் அவனது புதுச்சட்டை கிடைக்கவேயில்லை. அவனுக்கு உப்புக்கறி மறந்துபோனது.

அம்மா, “இங்கதாண்டா எங்கியாவது இருக்கும். நான் வந்து எடுத்துத்தாரேன். இப்ப வந்து கறியத்  தின்னுடா” என்றதையும்  அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அப்பாவும் அண்ணன்களும் ஒவ்வொருவராக வந்து புத்தாடையை அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க தயாரான பொழுதுதான் அனைவரும் ஒன்றைக்கவனித்தனர். அப்பா தனக்கென்று ஒரே ஒரு தேங்காய்ப்பூ துண்டு மட்டுமே எடுத்திருந்தார். அம்மாவுக்குக்கூட அப்பா கத்தரிப்பூ கலரில் புடவை வாங்கிவந்திருந்தார். ஆனால் தனக்கென்று வெறும் துண்டை மட்டுமே வாங்கி வந்திருப்பதை அனைவரும் கவனித்தாலும் என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. அம்மா அவளுக்கென்று வாங்கி வந்த சேலையைத் தொடவே இல்லை.

”எல்லாருக்கும் வாங்கிட்டு வந்த மனுஷன் ஒரு இருவது ரூவாய்க்கு வேட்டி ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கக்கூடாது?!” என்றவாறே மூக்கைச் சிந்தியபடி அடுப்படி வேலைகளைப்பார்த்தாவாறேயிருந்தாள். அவனுக்கு எதிலும் கவனம் போகவில்லை. தனது சட்டையைக்காணவில்லை என்பது அப்பாவின் வேட்டி பஞ்சாயத்தில் தனது மேல் சட்டை பொருட்படுத்தப்படாமல் போவதையெண்ணி அழ ஆரம்பித்தான். பெரியண்ணன் வாங்கிவந்திருந்த பட்டாசுகளைப் பாகம் பிரித்துக்கொடுத்த பொழுதும் அவன் வாங்கவில்லை. மீண்டும் மீண்டும் அவன் தொலைந்த சட்டையை அழுதுகொண்டே தேடிக்கொண்டிருந்தான். ஆரம்பத்தில் கவனமாகப் பொறுப்பாக அவன் சட்டையை வைத்துக்கொள்ளவில்லை என்றே வைதவர்களும், அவனுக்காக பின்பு வருந்தவே செய்தார்கள். உப்புக்கறி ஆறிப்போயிருந்தது. வழக்கமாக அவனது பங்கையும் ஆட்டையப்போடும் நான்காவது அண்ணன், அன்றைக்கு அவனது பட்டாசில் கொஞ்சம்  அவனுக்குத் தர விழைந்தான். அனைவரும் அவனைச் சமாதானப்படுத்த முனைந்தபொழுதும் அவனது அழுகை நின்றதே தவிர, சட்டை எங்கே தொலைந்திருக்கும் என்ற எண்ணவோட்டம் மட்டும் நிற்கவேயில்லை. இறுதியாக அப்பா தனக்காக வாங்கிவைத்திருந்த தேங்காய்ப்பூ துண்டை அவனுக்கு அணிவித்தபொழுது அவன் மீண்டும் மீண்டும் மறுத்தான்.

“அப்பா எனக்குத்தான் கால் சட்டையிருக்குள்ளப்பா?” என்றபொழுது அம்மா வந்து “பரவால்லடா. இன்னைக்கி இதப்போர்த்திக்க .நாளைக்கு காரிக்காளையோட மீதிக்காசு வந்துரும். அப்பாப்போய் உனக்குன்னு இன்னொரு சட்ட எடுத்துட்டு வருவாரு” என்றதும்தான் அவன் அழுகையை நிறுத்தினான்.

ஒருவாறு அவன் மனதைத்தேற்றிக்கொண்டு இட்டிலிகளைத் தின்றுவிட்டு பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தான். இருப்பினும் ஒரு ஓரம் வருத்தம் சம்மணமிட்டு அமர்ந்திருக்கவே செய்தது.  அப்பா வழக்கம்போல் தனது பழைய வேட்டித்துண்டிலேயே இருக்க, அம்மா ஏனோ தனது புதுச்சேலையை உடுத்தவே இல்லை. மதியத்திற்குப்பிறகு இந்த நிகழ்வு அவனைக் கேலிசெய்வதற்கான ஒரு காரணமாகிப்போனது.

அந்த வருடத்திற்கான இலவசச் சீருடையும் தாமதமாகியிருந்ததால் அவனுக்கு  தீபாவளி புதுச்சட்டையின்றியே கழிந்தது. அது ஒன்றும் அவனுக்குப்புதிதில்லையே? ஒரு வாரம் பத்துநாட்களுக்குப்பிறகு அதை மறந்தே போனான். அனைவரும் அதனை மறந்துபோக, வேறு ஒரு சட்டை வாங்கித்தருவதாக சொன்னதும் நடக்கவில்லை.

கடைசியாக, தொலைந்த அந்தச் சட்டை மீண்டும் கிடைத்தபொழுது போகிப்பண்டிகை ஆரம்பித்திருந்தது. ஆனால் அவனால் உடுத்தத்தான் முடியவில்லை. காரணம் அதிலிருந்த ஓட்டைகள்தான். வழக்கமாக பொங்கலின்பொழுது மட்டும் சுத்தப்படுத்தப்படும் பரணில் உள்ள பொருட்களைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபொழுது எரவானத்தில் ஏதோ மஞ்சளாய் பஞ்சுப்பொதிபோல் தெரிய, அதனைப் பிடித்திழுத்தான்  அவன். அது கீழே ஒரு பொட்டலம் போலும் வந்து விழ, அதிலிருந்து ஒரு பெருச்சாளியும் ஏழெட்டு குட்டி எலிகளும் மூலைக்கொன்றாகத் தெறித்து ஓடின. மனம் மிகவும் கனக்க, அந்த பூப்போட்ட வெளிர்மஞ்சள் சட்டையை, தான் ஒரே ஒரு நிமிடம் மட்டும் போட்டுப்பார்த்த அந்தச் சட்டையை, கனன்று எரிந்துகொண்டிருந்த போகி நெருப்பில் வீசினான் அவன்.

அதன் பிறகு எத்தனையோ தீபாவளி கடந்து விட்டாலும், கால ஓட்டத்தில் வசதி வாய்ப்புகள் வந்தவுடன், புத்தாடைகள் இல்லாமல் தீபாவளி கொண்டாடுவதில்லை என்றாலும், சட்டையில்லாமல் கழிந்த அந்தத் தீபாவளி மட்டும் அப்படியே மனதில் தங்கிவிட்டது. இப்பொழுதும் தீபாவளி என்றால் சட்டென்று அந்தத் தீபாவளி மட்டுமே ஞாபகம் வருகிறது அவனுக்கு.

Author

You may also like

Leave a Comment