சபராளிகளின் சிறகசைப்புகள் | ஆசிஃப் மீரான்

புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்களின் இலக்கியம்தான் இனிமுதல் வரும் காலங்களில் தமிழ் இலக்கிய உலகில் கோலோச்சும்”  என்று இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.பொ அவர்கள் குறிப்பிட்டபோது, தமிழின் இலக்கிய உலகம் மொத்தமும் அதிர்ந்தது. அதற்கு எதிரான குரல்களும்,  விமர்சனங்களும் தமிழ்நாட்டில் வசிக்கும் எழுத்தாளர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. ஆனால், எஸ்.பொ சொன்னதை ஆதரித்தும் சில குரல்கள் வெளிப்பட்டன.

பணிச்சூழல் காரணமாக, அமீரகத்தில் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நான், இதைச் சொல்வது சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது என்றாலும் அமரராகி விட்ட எஸ்.பொ அவர்கள் குறிப்பிட்டதைப் போல, உண்மையிலேயே புலம்பெயர் தமிழர்களின் படைப்புகள் தமிழ் இலக்கியச் சூழலில் பெரிய அளவில் ஏதேனும் தாக்கத்தை உண்டாக்கியதா? என்றால், அது “ஆமாம்” என்று அழுத்தமாகச் சொல்லி விட முடியாமல், அனேகமாக இல்லையென்றே  சொல்ல வேண்டிய  அவல நிலையில்தான் இன்றைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியப் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்வது தான் மிகையற்ற யதார்த்தம்.

ஆங்காங்கே மிகச் சிறப்பாக எழுதக்கூடிய படைப்பாளிகள் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த போதும் கூட,  அவர்களுடைய மிகப்பெரிய பங்களிப்பு என்பது இன்னமும் ஒரு கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருப்பவர்களுடைய வாழ்வியல் முறைகள் ஒருவிதமானவை என்றால், வளைகுடா நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் என்பது முற்றிலும் நேர் மாறானதாக இருக்கிறது.

இங்கிருக்கும் நிலவியலும், இங்கு வாழ்பவர்களின் வாழ்வு முறையும் இலக்கியம் குறித்த பெரிய தேடல்களுக்கான வழிமுறைகளையோ, பெரும் படைப்புகள் உருவாவதற்கான சூழல்களையோ தருவதில்லை. இத்தனைக்கும், மற்ற நாடுகளில் வசிப்போரை விடவும் வளைகுடா நாடுகளில் வாழ்பவர்களின் அகச்சிக்கல்களும், பொருளாதாரம் சார்ந்த உளவியல் வலிகளும், சேவல் பண்ணைகளில் வாழ்வைத் தொலைத்து வசிப்போரின் எண்ணிக்கையும் மிக அதிகம். இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் ‘அஜ்னபி‘, ‘உயிர்த்தலம்‘ என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவே தவிர முழுமையான வாழ்வியலை மலையாள எழுத்தாளர்கள் அளவிற்குக் கையாளவில்லை என்பது ஒரு குறைதான். ‘ஆடுஜீவிதம்’ ஓர் எளிய உதாரணம்.

இந்த உண்மை ஒருபுறமிருக்க, வளைகுடா நாடுகளில் – அதிலும் குறிப்பாக அமீரகத்திலிருந்து – தொடர்ச்சியாகத் தங்களது பங்களிப்பைத் தமிழ் இலக்கியச் சூழலுக்குத் தந்து கொண்டிருக்கும்   சிலரையாவது  இந்தக் கட்டுரையின் மூலமாக அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன். இதில் சில பெயர்கள் நீங்கள் முன்னரே கேட்டதாகக் கூட இருக்கக் கூடும். எனினும், என் பார்வையில்,  இன்றைக்கு அமீரகத் தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கிக் கொண்டிருப்போராக இவர்கள் இருக்கின்றனர் என்பதைச் சொல்வதற்காகவே இதனை எழுதுகிறேன்.

அமீரகத்தைப் பொருத்த வரையிலும்,  இலக்கிய உலகின் முன்னோடி என்று எழுத்தாளர் ஆபிதீன் அவர்களைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

கணையாழி, படித்துறை, யாத்ரா, பன்முகம், புது எழுத்து, தொனி உள்ளிட்ட இதழ்களிலும் திண்ணை உள்ளிட்ட இணையதளத்திலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. உயிர்த்தலம் மற்றும் இடம் என்னும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

முழுமையான கிரகணத்தில் ஒரு துளி வெளிச்சம் வைரமாய் பிரகாசித்தலைப் போன்ற வாழ்வைக்குறித்த எழுத்துகள் இவருடையது. நாம் பார்க்கும் அதே வாழ்க்கைதான் அவர் காண்பதும். ஆனால் மனிதர்களது இன்மைகளையும், அசாத்தியங்களையும், பரிதாபங்களையும் கேள்விக்கு உட்படுத்தி  அவல நகைச்சுவையாக மாற்றி,  மனிதம் தனித்து தெரியும்படிச் செய்வதில் நிபுணத்துவம் நிறைந்தது ஆபிதீனின் எழுத்து. நகுலனுக்கோர் சுசீலாவாய் ஆபிதின் அவர்களின் தனித்த கதாபாத்திரம் அஸ்மா.

முழுக்கவே  நாகூர்வாசம் வீசும்  அவரது படைப்புகளில் நாகூருக்கென்றே அமைந்த மொழி ஓடி விளையாடிவரும்.

இவரது சிறுகதைகள் ஓரிடத்தில் நில்லாது தன்னைச் சூழ்ந்திருக்கும் கூட்டை உதறி, காற்றிலோடும் சிறகசைப்பை மாத்திரம் துணையாகக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகளின் வடிவங்கொண்டது.

சபராளிகள்” என்று இஸ்லாமிய உலகில் பொதுவாகச் சொல்லப்படும் புலம் பெயர்ந்தோரின் வளைகுடா வாழ்க்கையை அத‌ன் எல்லாக் கசப்பு அனுபவங்களோடு, தனது உன்னதமான அங்கதத்தால் சிறுகதைகளாக வெளிப்படுத்தி, சிடுக்குகள் மிகுந்த வாழ்வைக் கூட,  கொஞ்சம் சிரிப்புடன் கடந்து செல்வதற்கு தனது எழுத்துக்கள் மூலமாக அடித்தளம் இட்டவர் ஆபிதீன்.  வளைகுடா மட்டுமில்லாமல், தமிழ் இலக்கிய உலகிற்கே கூட முன்னோடியாக அவரை உறுதியோடு குறிப்பிட முடியும்.

“தன்னைப் பெரிதாக முன்னிறுத்தாத அவரது கூச்ச சுபாவம் காரணமாக,  இப்படி ஓர் எழுத்தாளர் தமிழ் இலக்கியச் சூழலில் இருக்கிறார் என்பது கூட, தேடிக் கண்டடைந்தால் மட்டுமே கிடைக்கும்படி இருப்பது தமிழ் இலக்கியச் சூழலின் அவலங்களில் ஒன்று” என்று குறிப்பிட்டு இருக்கிறார் எழுத்தாளர் மீரான் மைதீன் அதுதான் உண்மையும் கூட. அவர் அமீரகத்தில் இருப்பதே அமீரகத் தமிழ் இலக்கியச் சூழலுக்குப் பெருமைதான்.

தன்னைப் பற்றிப்‌ பெரிதாக வெளியில் சொல்லிக்‌கொள்ளாமல் இருப்பது ஆபிதீனின் இயல்பு என்றால், “தமிழில் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த ஐந்து இளம் எழுத்தாளர்களில் நானும் ஒருவன்” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளரும் அமீரகத்தில்தான் இருக்கிறார். அப்படி,  எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் சொல்வது அவரது தன்னம்பிக்கையென்றோ, தலைக்கனமென்றோ சொல்லிக் கொள்ளுங்கள். இரண்டில் எது உண்மை? என்பதைக் காலம் சொல்லட்டும்.  ஆனாலும், இப்படிச் சொல்வதற்கு தனக்கு அருகதை இருக்கிறது என்று ஒர் எழுத்தாளர் நம்புவதே கூட மிக முக்கியமான விசயம்தான் இல்லையா?

தொடர்ச்சியாக வலைப்பூக்களில் தன்னுடைய கவிதைகள், சிறுகதைகள், திரைப்பார்வைகள், நூல் விமர்சனங்கள் என்று எழுதி வந்த அய்யனார் தொடர்ச்சியாகப் புதினங்களையும் எழுதி வந்து கொண்டிருக்கிறார்.  நவீன இலக்கிய உலகில் அதற்கான வாசிப்பாளர்களையும் தனக்கென அவர் உருவாக்கி இருக்கிறார் என்பதால்தான் தன்னைக் குறித்தே அவரால் துணிச்சலாகப் பேச முடிகிறது.  “வன்முறையும் காமமும் அவரது எழுத்துக்களில் மிகுந்து நிற்கின்றன” என்கிற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்ட போதிலும் கூட,  அவற்றையும் கூட கொச்சைப்படுத்தாத அழகிய மொழி வழியாக அதனை வெளிப்படுத்தும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது என்று அவரது எழுத்தை உள்வாங்கியவர்கள் அவருடன் தோள் நிற்கிறார்கள்.  அய்யனாரிடம் கேட்டால்,  “காமமும், வன்முறையும் இன்றி வாழ்க்கையில் என்ன மீதம் இருக்கிறது?” எனச் சொல்லிவிட்டு நகர்ந்து விடக்கூடும். உண்மையில் விகடன் முன்பொருமுறைக் குறிப்பிட்டது போல, ‘சொக்க வைக்கும்’ மொழிநடைதான் அய்யனாரின் பெரும்பலம்.   வரும் காலங்களில், சமூகம் சார்ந்த கோபமும்,  வளைகுடா வாழ்வின் உளவியல் சிக்கல்கள் குறித்த புதிய சிந்தனை திறப்புகளுடனான எழுத்துக்கள் அய்யனாரிடம் இருந்து நிறைய வரும் என்று எதிர்பார்க்கலாம்.

அமீரகத்தைப் பொறுத்த வரையில் கவிஞர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டின் மக்கள் தொகையை விடவும் அதிகமாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். கவிதை எழுதாதோரை விரல்  விட்டு எண்ணி விடும் அபார சூழல் நிலவுகிறது என்றாலும் கூட, உண்மையிலேயே கவிதை எழுதக் கூடிய வெகு சிலரும் இங்கிருக்கின்றனர் என்பது பெரும் ஆறுதல். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கவிஞர்கள் வரிசையில் மிக முக்கியமானவராக செல்வராஜ் ஜெகதீசனைக் கருதுகிறேன். தமிழின் முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுத்த சிறந்த கவிதைகளை,  அவர்களுடைய அனுமதியோடு தொகுத்திருக்கிறார் செல்வராஜ் ஜெகதீசன். கிட்டத்தட்ட 400 கவிதைகளைத் தொகுத்திருப்பதன் மூலம்,  கவிதை குறித்த தெளிவான பார்வையை எளிய வாசகர்களிடம் கடத்துவதோடு, புதிதாகக் கவிதை எழுத வருவோருக்குத் தமிழ்ச்சூழலில் எம்மாதிரியான கவிதைகளெல்லாம் புழக்கத்தில் இருக்கின்றன என்கிற பாடத்தையும் கூட இத்தொகுப்பின் வழியாகச் செய்திருக்கிறார் அவர்.  ஏழு கவிதைத் தொகுப்புகளும், ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியிட்டு இருக்கும் செல்வராஜ் ஜெகதீசன் தன்னைப் பற்றி எங்கும் பெரிதாகக் குறிப்பிட்டதில்லை.  இவரும் கூட தன்னை முன்னிலைப்படுத்த உடன்படுவதில்லை. அதற்கான காரணமாக,  “எழுதுவது மட்டுமே எனது வேலை. என் எழுத்துக்கள் எப்போதேனும்  அடையாளம் காணப்பட்டால் அதுவே எனக்குப் போதுமானது” என்கிற எளிய சித்தாந்தம் இவருடையது.

இன்னொரு முக்கியக் கவிஞராக பிரபு கங்காதரனைச் சொல்லலாம். காட்டருவி போன்ற பாய்ச்சல் அவருடைய எழுத்து. காமத்தையே பேசினாலும் அதைக் காளியின் வடிவமாகக் காண முடிந்ததை இன்றைய சூழலில் இந்துத்துவர்கள் கடித்துக் குதற வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் அவரது அம்புயாதனத்துக்காளி அதற்கெல்லாம் அப்பாற்பட்டு தனித்து நிற்பதிலிருந்து பிரபுவின் கவித்துவத்தை உணர முடியும்.

எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில் நாஞ்சில்நாடனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக அவரது நாஞ்சில் நாட்டுத் தமிழுக்கு நான் மிகப்பெரும் ரசிகன் அவரைப் போலவே நாஞ்சில் நாட்டின்,  சற்று மலையாளம் கலந்த தமிழில், சிறப்பாக எழுதக்கூடியவர்களில் மீரான் மைதின் பரவலாக அறியப்படுகிறார். இவர்களைப் போலவே மிகச் சிறப்பான முறையில் நாஞ்சில் தமிழில் எழுதக்கூடியவர் தான் தெரிசை சிவா. சிவாவின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி அவர் எழுதக்கூடிய கதைகளிலும் கட்டுரைகளிலும் இயல்பாகவே வெளிப்படும் . நாஞ்சில் நாட்டுக்காரர்களைப் போலவே உணவின் மீதான அலாதியான ஆர்வம்,  இவர் எழுதிய “ரசவடை” என்ற கட்டுரையின் மூலமாக வெளிப்பட்டு இருந்தது. நாஞ்சில் நாட்டிற்கேயுரிய ரசவடை குறித்த தகவல்களும், ஏக்கங்களும் ஒருங்கே வெளிப்பட்ட மிகச் சிறப்பான கட்டுரை அது. இவர் எழுதிய “சடல சாந்தி” என்ற சிறுகதை, எழுத்தாளர் பவா செல்லத்துரையால் பலமுறை பல்வேறு கூட்டங்களில்,கதை சொல்லும் நேரத்தில் வாசகர்களுக்கு கடத்தப்பட்டு இருக்கிறது என்பதிலிருந்தே அந்தக் கதையின் சிறப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்,  ஒரு நாவலும் எழுதி இருக்கும் சிவாவின் பங்களிப்பில் விரைவில் தமிழில் திரைப்படமொன்றும் வரவிருக்கிறதென்பதும், மேலும் இரண்டு நாவல்கள் வரிசையில்  வெளிவரக் காத்திருப்பதும் மகிழ்ச்சி தரக் கூடிய விசயம். நம்பிக்கை தரக்கூடிய புதிய எழுத்தாளர்களில் ஒருவராக சிவாவை நம்மால் அடையாளம் காண முடியும்

வலைப்பூக்கள் காலத்திலிருந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர் “பெனாத்தல் சுரேஷ்” என்ற பெயரில் இயங்கும் சுரேஷ்பாபு. ஐம்பதிற்கும் அதிகமான சிறுகதைகள் எழுதி இருக்கும் இவர் சுஜாதாவின் வகுப்பறை மாணவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்.  “எழுத்து என்பது எளிய வாசகர்களுக்குச் சிக்கலில்லாமல் எதையும் கடத்துவதாக இருக்க வேண்டும்” என்பதுதான் இவரது நிலைப்பாடு. எனவே தன்னுடைய எழுத்துக்களில் அல்லது கதாபாத்திரங்களில் சிக்கலான எந்த விஷயங்களையும் எடுத்துச் சொல்லாமல் ஒரு தேர்ந்த கதை சொல்லியாக மட்டுமே தன்னைத் தனது எழுத்துக்கள் மூலமாக அடையாளம் காட்ட முனைகிறார் சுரேஷ்பாபு. நவீன இலக்கியம் குறித்த தீவிர வாசிப்பனுபவம் இருந்தபோதும் கூட வெகுஜன இதழ்களுக்கான மொழிநடையே தனக்குப் போதுமானதெனக் கருதும் சுரேஷ் பாபு எழுதிய “கரும்புனல்” புதினம், நிச்சயம் குறிப்பிடத்தகுந்த படைப்புக்களில் ஒன்று.

இன்றைய ஜார்க்கண்ட் முந்தைய பீகார் மாநிலத்தில் நிலக்கரிச்சுரங்கம் தோண்டும் பின்னணியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கரும்புனல் , அங்கு புரையோடிக் கிடக்கும் ஜாதிய வெறியின் காரணமாக ஓர் ஊரே எவ்வாறு அழிந்து போகிறது, அதற்கு அரசு பயங்கரவாதம் எவ்வாறு துணை நிற்கிறது.. என்பதைச் சொல்லிச் சொல்கிறது. தற்போது அறிவியல் புனை கதைகளில் ஆர்வம் காட்டி வரும் சுரேஷ்பாபு அந்த வகைமையில் புதிய நாவல் ஒன்றை எழுதி வருகிறார்.

“சவுதி அரேபியா” என்றாலே அது இப்படித்தான் இருக்கும்’ என்ற பொதுப் புத்தியில் இருப்போரிடம் புதிய மாற்றத்தை உருவாக்குவதற்காக, தான் பயணித்த,  தான் கண்டு உணர்ந்த சவுதி அரேபியாவின் நிலப்பரப்புகளை ஒருங்கிணைத்து இஸ்லாமிய வாழ்வு நெறிகளில் புதிதாக உள் புகுந்திருக்கும் தூய்மைவாதக் கோட்பாட்டை தோலுரித்து, அது உருவான வரலாற்றைத் தனது கதாபாத்திரங்கள் மூலமாகக் கடத்துவதில் வெற்றி பெற்றவர் தான் முகமது யூசுப். இவர் எழுதிய “மணல் பூத்த காடு’ என்ற நாவல்தான் மேற் சொன்ன அத்தனையையும் உட்கொண்டிருக்கிறது. தன்னுடைய எழுத்து புனைவு அல்லது அபுனைவு என்று இல்லாமல் இரண்டும் கலந்த ஆவணப் புனைவு வகைமையில் வரவேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டிருப்பவர் முகமது யூசுப். “‘டாக்குஃபிக்ஸன்’ என்பதுதான் தனது எழுத்துமுறை. “வழமையாகப் புனைவுகளில் தென்படும் எழுத்துக்களோடு என்னை நீங்கள் அடையாளப்படுத்த வேண்டாம். நான் வாசித்தவற்றை, அறிந்து கொண்டவற்றைத் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு அதை ஆவணப்படுத்துவேன், அதுதான் இந்தச் சமூகத்திற்கு நான் செய்யும் பங்களிப்பு” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார் முகமது யூசுப். தகவல்கள் இறைந்து கிடக்கும் அவரது நாவல் உத்திக்குப் புதிய வாசகர்கள் அமைவது ஒருபுறமிருந்தாலும், அதுகுறித்த விமர்சனங்களும் எழாமல் இல்லை. ஆனால் அதைக்‌குறித்த கவலைகளின்றி, தனது புதினத்தின் வழியாகப் புதிய புதிய செய்திகளை வாசகர்களுக்குத் தொடர்ச்சியாக கடத்திக் கொண்டே இருக்கிறார் யூசுப். கடற்காகம், தட்டப் பாறை, அரம்பை என்று தொடர்ச்சியாக இவர் எழுதிய நாவல்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார் இவர்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனால் அடையாளம் காட்டப்பட்ட 100 சிறுகதைகளைப் பல்வேறு இடங்களில் இருந்தும்,  பல்வேறு நபர்களிடமிருந்தும், மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஒருங்கிணைத்து, அவற்றை முழுமையாக தட்டச்சு செய்து முழுத் தொகுப்பாக அதனைக் கொண்டு வருவதற்காக நான்கரை ஆண்டு காலங்கள் அயராமல் உழைத்த ஓர் இலக்கிய ஆர்வலர் உண்டென்றால் அது சென்ஷி மட்டுமே. இலக்கியப் பங்களிப்பிற்கு ஒருவர் எழுத்தாளனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்ற கூற்றை சென்ஷி முழுமையாக நிரூபித்த தருணம்‌ அது.  தமிழ் இலக்கியங்களில் மட்டும் அல்லாமல் உலக இலக்கியங்களிலும் அதி தீவிரமான வாசிப்பை முன்னெடுக்கும் சென்ஷியின் படைப்புகள் முழுத்தொகுப்பாக இன்னமும் அச்சில் வரவில்லை என்றாலும், இணைய இதழ்களில் வெளிவரும் அவரது கதைகளும், கட்டுரைகளும் அச்சில் வெளிப்படும் காலத்தில் நிச்சயமாக இலக்கிய அந்தஸ்தை வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

தற்போது வளைகுடாவில் இல்லாவிட்டாலும் வளைகுடா நாடுகளில் தனது மிகப்பெரும் காலத்தை கழித்த அபுல் கலாம் ஆசாத் குறிப்பிடத்தகுந்த இன்னொரு எழுத்தாளர்.  இவர் நாவல்கள் முன்வைக்கும் களன்கள் மிக முக்கியமானவை. இதற்கு முன்பு தமிழ் நாவல் உலகத்தில் எவராலும் தொடப்படாதவை. புதிய களங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அடிப்படையாக வைத்து,  மிகத் தெளிவான விளக்கங்களோடு ஆனால் அவற்றை எந்தவிதமான துருத்தலும் இல்லாமல் மிகச் சிறப்பான முறையில் வெளிப்படுத்தும் விதத்தில் வித்தகர் இவர். தமிழில் மரபு சார்ந்து கவிதைகள் எழுதுவதோடு மட்டுமல்லாமல் உருதுவில் இருந்து தமிழுக்குக் கவிதைகளை மொழிபெயர்க்கும் சிறந்த பணியையும் மேற்கொண்டு இருக்கிறார் இவர். இவர் எழுதிய உடல்வடித்தான் நாவல் உடல்வளக் கலை தொடர்பான எத்தனையோ புதிய திறப்புகளை வாசகர்களுக்கு தந்திருக்கிறது. அதுபோலவே திரைத்துறையில் கதாநாயகர்களுக்குப் பதிலாக ஆபத்தான சண்டைக் காட்சிகளில் கூலிகளாக இடம் பெறுவோரின் வாழ்க்கையைத் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கும் “போலி” என்ற நாவலும் நிச்சயம் வாசிக்கத் தகுந்தது. பெரும் பயிர்களுக்கு இடையே ஊடு பயிர் இடுவது போல அவ்வப்போது குறுங்கதைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார் இவர்.

நண்பன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் ஷாஜஹானின் எழுத்துக்கள் மிகுந்த கூர்மையானவை. தர்க்கரீதியான ஆழமான வாதங்களோடு கட்டுரைகளைப் புனையும் நண்பனின் கவிதைகளும் பாத்திரமானவைதான். நவீன இலக்கியச் சூழலின் மொழியில் இவர் எழுதும் கதைகளும் மிக முக்கியமானவையே.

வாசிப்பையும் எழுத்தையும் பரவலாக்க அமீரகத்தில், அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்கும்போதும், வழக்கம்போலவே வெகு சிலருக்கானதாகவே அது அமைந்து விடுவது தமிழ்ச்சூழலின் பெரும் தேக்கம் என்று சொல்லலாம்.

வளைகுடா வாழ்க்கையின் பெரும் அழுத்தங்களுக்கிடையில் வாசிப்பது என்பதே கூட அருஞ்செயலாகி விட்ட நிலையிலும் கூட,  தமிழில் சீரிய படைப்புகளைத் தரும் சில படைப்பாளிகளாவது இங்கிருக்கின்றனர் என்பதுதான் பெரும் ஆறுதலாக இருக்கிறது.

Author

  • ஆசிஃப் மீரான், வளைகுடா தமிழ்ச் சமூகம் நடத்தும் "பண்புடன்" பத்திரிகையின் ஆசிரியர்.  சமூக யதார்த்தங்கள் கொண்டு புனைவுகள் எழுதுபவர்.  'கானல் அமீரகம்' எனும் அமைப்பின் வழியே தமிழ் இலக்கியச் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்துபவர்.

Related posts

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்