தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 9 – மொழியாக்கம்

அப்பாவிக்கு அடித்த அதிர்ஷ்டம்

தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன் 

ஒரு ஊரில் ஒரு அப்பாவி இருந்தான். அப்பாவி என்றால் பெரியதாகப் புத்தி சுவாதீனம் இல்லாதவன் எனலாம். ஒருமுறை அவன் பிழைப்பு நடத்த ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று துணி மூட்டையை தலையில் ஏந்திக்கொண்டு ஒவ்வொரு ஊராக அலைந்து திரிந்துவிட்டு இருட்டியதும் ஒரு காட்டிற்குள் சென்றான். அப்போதைக்கு நன்கு அலைந்து திரிந்து களைத்துப் போனதால் துணி மூட்டையை ஒரு மரத்தின் மறைவில் மறைத்து வைத்துவிட்டு அந்த வழியிலேயே குறுக்காகப் படுத்துத் தூங்கினான்.

‎அது அமாவாசை நேரம். முன்னால் என்ன இருக்கிறது பின்னால் என்ன இருக்கிறது என்று எதுவும் தெரியாத குத்திருட்டு. அந்த இருட்டில் திருடுவதற்காகத் திருடர்கள் சிலர் அந்த வழியில் போய்க்கொண்டிருந்தனர். இவன் நடு வழியில் படுத்திருந்தான் இல்லையா… அதோடு திருடர்களில் ஒருவன் பார்க்காமல் கால் இடறி டமார்னு கீழே விழுந்தான். அவன் வலியில் “எவன்னு தெரில பாரு… வழியில இவ்ளோ பெரிய கட்டய தூக்கிப் போட்ருக்கான்” என்றான்.

‎அவன் கால் இடறியதனால் எழுந்த அப்பாவி “யார்டா நீங்கலாம்… தங்கம் மாதிரி மனுசனை போயி கட்டனுறிங்க… கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உங்களுக்கு” என்று கத்தினான். அதைக் கேட்டதும் திருடர்கள் “அடடே… இங்க யாரோ இருக்காப்லயே” என்று உடனே திரும்பி வந்து அவனைப் பிடித்துக் கொண்டனர். டார்ச் வெளிச்சத்தில் பார்த்தால் அவன் அழுக்கடைந்த துணிகளோடு, கலைந்த தலையும் நரைத்துப்போன தாடியுமாக பரமஏழை மாதிரி இருந்தான். அதோடு திருடர்களில் ஒருவன் “வா வா போலாம்… இவன் முகத்தை பார்க்க ஏதோ வீடுங்கள்ள பிச்சை எடுத்து திங்குறவன் கணக்கா இருக்கான். இவன்ட்ட என்ன இருக்கப் போகுது” என்றான்.

‎அதைக் கேட்டு அந்த அப்பாவி கோபமாக “என்னப்பா… அலஞ்சி அலஞ்சி துணிங்களாம் மங்கிப் போயிருக்கிறத பார்த்துட்டு இப்டி குறைச்சி பேசுறிங்களே… நான் ஒன்னும் பிச்சை எடுத்து திங்கிறவன் கிடையாது. வியாபாரி. வேணும்னா பாருங்க அந்த மரத்துட்ட இருக்ற துணி மூட்டய” என்றான். அதோடு திருடர்கள் அவனைப் பிடித்து ஆளுக்கொரு போடு போட்டு துணி மூட்டையை எடுத்துச் சென்றனர். அதைப் பார்த்து அவன் வேகவேகமாக ஓடிப்போய் அவர்களை வழிமறித்து நின்று “அண்ணா… அண்ணா… இந்தத் துணிகள எல்லாம் கட்டப் போறீங்களா… விக்கப் போறீங்களா” என்று கேட்டான்.

‎அதற்கு அவர்கள் “கட்டனும்னா கட்டுவோம்… விக்கனும்னா விப்போம். இதுலாம் உனக்கெதுக்குடா?” என்றனர் கோபமாக. “ஒன்னும் இல்லண்ணா , விக்கிறதா இருந்தா கொஞ்சம் குறைச்சி எனக்கே குடுங்க. மூவாயிரம் கொடுக்குறேன்” என்றான்.

‎”என்னது… மூவாயிரமா… அவ்ளோ பணம் எங்கடா இருக்கு உன்ட” என்றான் ஒரு திருடன். “என்ன அண்ணா அப்படி சொல்ற. கறி திங்குறோம்னு எலும்பை கழுத்துல போட்டுட்டு சுத்துவாங்களா யாராச்சும்… உங்கள மாதிரி திருடங்களுக்குத் தெரியாம உள்ள எங்கயாச்சும் மறைச்சி வைச்சிருப்போமே தவுர்த்து பணம் மேல் பையில எதுக்கு இருக்கப்போவுது?” என்றான்.

‎”ஆஹா… அப்படினா இவன்ட நிறைய பணம் இருக்குது போலயே” என்று நினைத்து அனைவரும் சுற்றுப்போட்டு கீழே மேலே என்று அலசி ஆராய்ந்து லுங்கியின் உள் பையில் மறைத்து வைத்திருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டனர். மீண்டும் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது அந்த அப்பாவி ஓடோடி அவர்கள் முன்னால் சென்று தடுத்து நிறுத்தி “அண்ணா.. அண்ணா… சாப்பிடுறதுக்கு கூட எதுவும் வைக்காம என்ட இருந்த எல்லாத்தையும் திருடிக்கினிங்க. இனி நான் என்னதான் பண்றது. என்னையும் உங்க கூடயே கூட்டிட்டு போங்க. நீங்க என்ன சொல்றீங்களோ அதைப் பண்றேன். ஏதோ திங்க கொஞ்சம் சோறு போட்டா போதும்” என்று கெஞ்சினான். அதோடு அவர்கள் “சரி… வா… ஜாக்கிரத. நாங்க சொல்றத அப்படியே செய்யணும் பார்த்துக்கோ” என்று அழைத்துச் சென்றனர்.

‎அவர்கள் அன்று அந்த அப்பாவியோட ஊருக்கே திருடச் சென்றனர். ஒரு வீடு நன்கு செழிப்பாகத் தெரியவும் அதில் புகுந்தனர். இவனும் அவர்களோடு சேர்ந்து உள்ளே சென்றுகொண்டே “அண்ணா… அண்ணா… உள்ள என்ன பண்ணனும் ” என்று கேட்டான். “வேற என்ன… சத்தம் போடாம தங்கம், வெள்ளினு கிடைக்கிற எல்லாத்தையும் ஒன்னும் விடாம சுத்தமா வழிச்சு அப்டியே மூட்டய கட்டு” என்றனர். அதற்கு அவன் “வெள்ளி, தங்கமா… அதுலாம் எப்படி இருக்கும்?” என்று மீண்டும் கேட்டான். “பின்ன எப்டி… மஞ்சளா இருக்குறதுலாம் தங்கம், வெள்ளையா இருக்குறதுலாம் வெள்ளி… இது கூடயா தெரியாது?” என்றனர் அவர்கள்.

‎சரியென்று அந்த அப்பாவி உள்ளே சென்றான். சத்தம் போடாமல் ஒவ்வொரு அறையாகக் கடந்துசென்று சமையலறைக்குள் போனான். அங்கே ஒரு கிழவி படுத்திருந்தாள். அந்த அறையில் இருந்த ஈயக் கிண்ணங்கள் எல்லாம் வெண்மையாகவும் செம்புப் பாத்திரங்கள் எல்லாம் மஞ்சளாகவும் தகதகனு மின்னிக் கொண்டிருக்க, ‘ஆஹா … எவ்ளோ தங்கம், எவ்ளோ வெள்ளி’ என்று மகிழ்ச்சியில் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து மூட்டையில் போட ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்கு எல்லாம் மூட்டை நிறைந்துபோனது. இனி என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் சமையலறையில் சர்க்கரை, நெய், சேமியா, பால் இருப்பதைக் கண்டான். அவை எல்லாவற்றையும் பார்த்ததும் அவனுக்கு வாய் ஊறியது. “அப்பா! பாயாசம் தின்னு எவ்ளோ நாளாச்சு. அவங்க எல்லாரும் திருடி முடிக்கிறதுக்குள்ள பாயாசம் செஞ்சு குடிச்சிப்போம்” என்று அடுப்பைப் பற்றவைத்து பாயாசம் செய்யத் தொடங்கினான்.

‎அந்த அறையில் தான் கிழவி படுத்திருந்தாள் இல்லையா… அவள் கையை வயிற்றில் வைத்திருந்தாள். கொஞ்ச நேரத்தில் தூக்கத்தில் அந்தக் கையை நீட்டினாள். அதைப் பார்த்த அப்பாவி கிழவி பாயாசத்திற்காகத்தான் கையை நீட்டுகிறாளோ என்னமோ என்று “இருயேன் கிழவி… பண்றத விட பாக்குறதுக்கு அப்டி என்ன அவசரம்… கொஞ்சம் பொறுக்க மாட்டியா… ஆனதும் தாறேன்” என்று கையை எடுத்து மீண்டும் வயிற்றின் மேல் போட்டான். சிறிது நேரத்தில் திரும்பவும் தூக்கத்தில் கிழவி கையை பக்கத்தில் நீட்டினாள். அதைப் பார்த்த அப்பாவி “அடடே… ஏன் இந்த அவசரம்… எப்பயும் சோத்தையே பாத்தது இல்லாத மாதிரி… ஒரு நிமஷம் இரு முடிஞ்சிது” என்று பாத்திரத்தை இறக்கி… பாத்திரத்தோடு சுடச்சுடப் பாயாசத்தை எடுத்துவந்து கிழவியின் கையில் ஊற்றினான்.

‎அவ்வளவுதான்… திடீரென்று கை பொத்துப்போனதும்… கிழவி “அடேங்கப்பா… கடவுளே… என் கையை எவனோ சுட்டுட்டான்” என்று சத்தமாக அலறிக்கொண்டே மேலே எழுந்தாள். அந்த அலறல் சத்தத்திற்குப் பயந்து அப்பாவி ஓடிப்போய் மூட்டையைக் கட்டினான். அவ்வளவுதான் அதிலிருந்த பாத்திரங்கள் எல்லாம் படபடனு கீழே விழுந்து பலத்தச் சத்தத்தை எழுப்பின.

‎அவ்வளவுதான்.. அந்தச் சத்தத்திற்கும், கிழவியின் அலறலுக்கும் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் இல்லை.. தெருவில் உள்ளவர்கள் எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தனர். திருடர்கள் எல்லோரும் சாமான்களை எடுத்துக்கொண்டு ஓடினர். உடனே மக்கள் எல்லோரும் அவர்களை ஓடவிடாமல் பிடித்துவைத்து உதைத்தனர். அந்த அப்பாவி அந்த ஊர்க்காரன் என்பதாலும் அவனைப் பற்றி தெரியும் என்பதாலும் அவனை யாரும் எதுவும் செய்யவில்லை. அடுத்ததாக நடந்தது அனைத்தையும் தெரிந்து கொண்டு “டேய்.. நீ அப்பாவியா இருந்தாலும் ரொம்ப நல்ல வேலைதான் பண்ணிருக்க. இந்தத் திருடனுங்க ஒன்னும் அப்டி இப்டி சாதாரண திருடனுங்க கிடையாது. சரியான எம கள்ளனுங்க. சுத்தி இருக்கிற ஏழேழு பதினாலு ஊர்லயும் இவங்க பேரை கேட்டாலே பயப்புடுவாங்க. இவங்கள யாரு பிடிச்சிக் குடுக்குறாங்களோ.. அவங்களுக்கு லட்சம் ரூபாய் சன்மானம்னு தண்டோராலாம் போட்டாங்க. ஆனா யாராலயும் பிடிக்க முடில. இன்னைக்கு உன்னால மாட்டிக்கினாங்க” என்று கூறி அவனையும் திருடர்களையும் அழைத்துக்கொண்டு ராஜாவிடம் சென்றனர்.

‎ராஜா நடந்தது அனைத்தையும் தெரிந்துகொண்டு “எப்டி இருந்தாலும் உன்னாலதான் இவங்க பிடிபட்டாங்க” என்று சொல்லி அந்த இலட்ச ரூபாய் சன்மானத்தை அவனுக்கே கொடுத்தார். அதோடு அவன் கல்யாணம் செய்துகொண்டு குழந்தை குட்டிகளோடு நிம்மதியாகக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.

Series Navigation<< தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 8 – மொழியாக்கம்

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

தனிமையின் தண்மை

ஜப்பானிய சிறுவர் கதைகள் 15 – மொழியாக்கம்

அவளும் நானும்