Home கட்டுரைஉலகம் யாவையும் உருக்கொண்ட வாசிப்பு | ரா கிரிதரன்

உலகம் யாவையும் உருக்கொண்ட வாசிப்பு | ரா கிரிதரன்

0 comments

டந்த இருபது வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வந்தாலும் வாசிப்பு ஆர்வமிக்க நண்பர்கள் குழு ஒன்று கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் தான் அமைந்தது. இங்குள்ள புறச் சூழல்களில் ஓரிடத்தில் சந்திப்பதும் விவாதிப்பதும் அதைத் தொடர்ச்சியாகச் செய்வதும் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே இருந்தது. லண்டனில் அப்போது பல தமிழ் சங்கங்களும் குழுக்களும் இருந்தன என்றாலும் பல வெளிநாட்டுத் தமிழ் கழகங்கள் போல அவை பொங்கல், தீபாவளி எனும் பண்டிகைக்கால குழுமங்களாகவும், பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் கூடுபவர்களாகவும், பிள்ளைகளுக்கு தமிழ் மொழி கற்றுத்தரும் பள்ளிக்குழுக்களாகவும் மட்டுமே இருந்தன. எப்போதாவது இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வரும் பட்டிமன்றப்பேச்சாளர்கள், சில எழுத்தாளர்கள் என அயலகத் தமிழ் கூட்டங்களை மகிழ்வுக்கும் சந்தர்ப்பங்கள் அமையும். ஆனால் இவை எதுவும் இலக்கிய வாசிப்பு குழுக்களாகவோ, நம் ரசனையை உயர்த்தும் கலை அமைப்புகளாகவோ இருக்கவில்லை. அல்லது அப்படிப்பட்ட அமைப்புகளோடு எனக்குத் தொடர்பு ஏற்படவில்லை. தமிழ் மொழியைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது மற்றும் இசை பயிற்சிகளை ஏற்படுத்தும் குழுக்களாகவும் அவை இயங்கி வந்தன. பல இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்களின் குழந்தைகள் தமிழை எழுதப்படிக்கக் கற்றுக்கொள்வதோடு , பரதநாட்டியம் கற்பது , வாத்தியங்கள் போன்றவற்றை பயின்று வந்தனர். ஆனால் இவை எதுவும் புத்தக வாசிப்பு, கலாச்சார ஆய்வுக்குழுக்கள், இலக்கிய ரசனை சார்ந்த குழுக்களை உருவாக்கவில்லை. அப்படி இருந்த சிறு குழுக்களும் தனிப்பட்ட ஆர்வலர்களால் பேணப்பட்டு வந்தன எனலாம்.

அப்போது இயங்கி வந்த சொல்புதிது கூகிள் குழுமத்தில் நாடு வாரியாக எடுத்த கணக்கெடுப்பில் நண்பர்கள் சிவா கிருஷ்ணமூர்த்தி, கேஷவ் பிரசாத், ஆனந்த் உன்னத், பிரபு ராம் போன்ற ஒரு சிலர் ஆங்காங்கே வாழ்ந்து வருவதை அறிந்துகொண்டோம். இருட்டில் திடுமெனத் தட்டுப்படும் சிறு வெளிச்சம் போல சிறு குழு. சந்திப்போம் என முடிவெடுத்தபோதுதான் ஒவ்வொருவரும் குறைந்தது லண்டனிலிருந்து ஒரு மணி நேரத்தூரத்தில் இருந்தவர்கள் என்பதை அறிந்துகொண்டோம். தமிழர்கள் பலர் தங்கி இருந்த ஈஸ்ட் ஹாம் பகுதியில் சந்திப்பது என முடிவானது. ஒரு சனிக்கிழமை மதியம் சந்தித்தபோது கூகிள் குழு வழியாக ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் எனும் உணர்வும், புதிதாக ஒருவரை சந்திக்கிறோம் எனும் நினைப்பும் ஒன்றாகச் சேரத் தோன்றியது. வாழ்க்கைப்பாதையில் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் இருந்தோம். பல வருடங்களாக வாழ்ந்து வந்த சிவா, லண்டனுக்கு வந்து சில நாட்களே ஆன நான் மற்றும் ஆனந்த் உன்னத். அடுத்த சில மாதங்களில் ஆனந்த் உன்னத் இந்தியா சென்று பின்னர் ரீங்கா என்பவரை மணந்தபின் கனடாவில் சென்று சேர்ந்துவிட்டார். சன்னதம் வந்த ஒரு கவிஞர், ஒரு ஞானியின் தொடர் வாசிப்பில் இருந்தவர் அப்படியாகவே கனடிய குளிரில் ஐக்கியமானார். நாங்கள் சில புத்தகங்களைப் பகிர்ந்துகொண்டபின், அவரவர் வாசிப்பைப்பற்றிப் பேசிவிட்டு, டிபன் காப்பியுடன் விடைபெற்றோம். அங்கு தொடங்கிய பயணம் இதோ நேற்று (டிசம்பர் 6, 2025) தென் இந்திய இலக்கியத்துக்கென ஒரு இலக்கிய விழாவை சென்ட்ரல் லண்டலில் நடத்தியதுவரை எங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

2011ஆம் ஆண்டு சந்தித்தபோது நாங்கள் தொடர்ந்து வாசிப்பைப் பகிர்வதற்கென ஒரு குழுவை உருவாக்குவது என முடிவு செய்து துவங்கியது தான் லண்டன் கதை நேரம் எனும் அமைப்பு. அப்போது அது லண்டன் வாசிப்புக்குழு எனும் பெயரில் தொடங்கப்பட்டது. அந்த காலத்தில் வாட்சாப் இல்லை. வாரம் ஒரு முறை கூகிள் காலில் இணைந்து கதைகளைப் பற்றிப் பேசி விவாதிப்பது என முடிவானது. எல்லாருமே முழு நேர வேலையில் இருந்தவர்கள் என்பதால் இரவு 9.30 மணிக்கு மேல் தான் எங்கள் பேச்சு துவங்கும். வாரம் இரண்டு கதைகள் தேர்ந்தெடுப்போம். மாஸ்டர்கள் எழுதியகதை ஒன்றும், புதிதாக இணையத்தில் வெளியான கதை ஒன்றும் எடுத்துக்கொள்ளப்படும். மாஸ்டர்கள் கதைகளுக்கு பல இணையத்தளங்களும், கணையாழி உருவாக்கிய தொகுப்பு நூல்களும் உதவின. புதிய கதைகள் பலவும் இணையப் பத்திரிகைகளிலும் பல கூகிள் குழுமங்களிலும் எழுதப்பட்டு வந்தன. அவற்றையும் நாங்கள் தேர்ந்தெடுப்போம். நான்கு பேராக இணைந்ததும் ஒருவர் ஒரு கதையை முழுவதுமாகச் சொல்ல வேண்டும். அதன் மீதான விமர்சனத்தை பின்னர் அனைவரும் சொல்லலாம். இப்படியாக ரெண்டு கதைகளைப் பேசி முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும். எங்களுக்குள் சில அடிப்படைகளை உருவாக்கிக்கொண்டோம். பத்து வருடங்களுக்குப் பின் இக்கதை நினைவில் இருக்குமா, கதை சொல்லும் உலகம் இன்றைக்கு எந்தளவு நமக்கு நெருக்கமாக உள்ளது, சிறுகதையின் அடிப்படை கட்டமைப்புள் அமைந்திருக்கிறதா எனச்சில பொதுவான கேள்விகள் உண்டு. சில இலக்கிய விமர்சன நூல்களின் அளவுகோல்களையும் நாங்கள் காலப்போக்கில் எடுத்துக்கொண்டோம். .நா.சு, சுந்தர ராமசாமி, ஜெயமோகன் எனும் ஆசிரியர்களின் அளவுகோல்கள் பல உருவாறி எங்களுக்குப் பயன்பட்டன. வாசிப்பு இன்பம் எனும் அளவுகோல் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப திரித்து உபயோகித்தோம். இப்படியாக எங்களுக்குள் ஒரு சிறு குழு கதைகளை வாசிப்பது பற்றி எழுதியும் வந்தது. ஆம்னிபஸ், பதாகை போன்ற மின்னிதழ்கள் அவை வெளி வரத்தொடங்கின. கடந்த வாரம் வரை கிட்டத்தட்ட இதே கட்டமைப்பில் நாங்கள் பேசி வருகிறோம். பல புது நண்பர்கள் இணைந்துவிட்டார்கள், சிலர் காணாமல் போய்விட்டனர். ஆனாலும் முடிந்தவரை விடாது இந்த கதை நேரத்தை வாரம் ஒரு முறை கடந்த பன்னிரெண்டு வருடங்களாக நடத்தி வருகிறோம். விளையாட்டாகத் தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து வருவது எங்களைப் பொருத்தவரை பெரும் சாதனை. இதன் காரணமாகப் பல கதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறோம். மெல்ல வாசிப்பதற்கான வழிமுறைகளும், ரசனைக்கான கோட்பாடுகளும் எங்கள் கதையல்லா விமர்சனங்கள் வழி வந்து இணைந்துகொண்டன.

இடைப்பட்ட காலத்தில் 2014 ஆம் ஆண்டு லண்டன் பத்மநாப ஐயரின் தொடர்பு மூலம் சங்க இலக்கியம், கம்பராமாயணம் போன்ற செவ்வியல் படைப்புகளை ஆராய்ந்து வந்த லண்டன் சுவாமிநாதன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. பிபிசி தமிழ் பிரிவில் பணிபுரிந்து அப்போதுதான் ஓய்வு பெற்றிருந்தார். தினமணியின் ஆசிரியராகவும், எமர்ஜென்சி காலத்தில் பல சாகசங்களைச் செய்தவராகவும் பின்னர் அவரைப் பற்றி பல செய்திகள் அறிந்துகொண்டோம்., ராஜீவ் காந்தி மறைவு செய்தியை உடனுக்குடன் பிபிசி லண்டன் வானொலியில் அறிவித்ததும் அதன் பின்னணியில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் பின்னர் ஒரு நாள் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். நாங்கள் முதல் முறை தொலைபேசியில் பேசியபோது செவ்வியல் படைப்புகளை முறையாக ஆய்வு செய்து வருபவர் எனும் அளவில் மட்டுமே பேசினோம். அப்போது நாஞ்சில் நாடன், கம்பராமாயண வகுப்புகளை தமிழ்நாட்டில சில சிறு குழுவினரிடம் நடத்தி வந்தார். அவ்வப்போது அந்த குறிப்புகளைப் படித்தபோது எங்களுக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொண்டது. கம்பரமாயணம் வாசிப்பில் எங்களை ஆற்றுப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை லண்டன் சுவாமிநாதன் அவர்களிடம் முன்வைத்ததும் உடனடியாக சம்மதித்தார். அது மிகப்பெரிய திறப்பாக எங்களுக்கு அமையப்போகிறது என்பதை நாங்கள் உணரவில்லை.

முதல் நேரடி சந்திப்பு வெம்ப்ளி எனும் இடத்திலிருந்த பூங்காவில் என்று ஏற்பாடானது. ஒரு வியாழக்கிழமை மாலை ஆறரை மணிக்கு சந்திப்பு. எப்படி சாத்தியப்படும் எனத் தெரியாது ஆரம்பித்தோம். நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த அவரது அலுவலகத்திலிருந்தும், நான் ஒரு மணி நேரம் பயணம் செய்தும் வர வேண்டும். வகுப்பு முடிந்தபின் சிவாவுக்கு மீண்டும் இரவு ரயிலில் ஒரு மணி நேரம் பயணம் செய்து இறங்கி அங்கிருந்து இருபது நிமிடங்கள் சைக்கிள் பயணம் இருந்தது. நானும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்து வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஒரே மாதத்தில் இது தொடர்ந்து செய்ய சாத்தியப்படாது என்பதை உணர்ந்துகொண்டோம். லண்டன் சுவாமிநாதன் நேரடி வகுப்புகளை SOAS போன்ற தென்னிந்திய கழகங்களில் எடுத்து வந்தவர். ஆனால் முதல் முறையாக இணையம் வழி கற்க முடியுமா எனும் திட்டத்தை அவரிடம் சொன்னதும் உடனடியாக சம்மதித்தார். இணையத்தில் பயன்படுத்தப்படும் நிரலிகளில் அவருக்கு பரிச்சயம் இருக்கவில்லை. ஒரு வழியாக அவற்றை ஏற்பாடு செய்தது அன்றைய காலத்தில் எங்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இணையம் அப்போது மிகப்பரவலாக இருந்த ஒன்று தான் என்றாலும் இணையம் மூலம் கற்கலாம் என்பது எங்களுக்கு நூதனமாக இருந்த காலம். ஒரு வழியாக ஞாயிறு காலை எட்டு மணி முதல் ஒன்பதரை வரை வகுப்பு என முடிவெடுத்து ஒவ்வொரு பாடலாக உலகம் யாவைக்குள் நுழைந்தோம். எங்களுடன் இணைந்துகொண்டவர்கள் மொத்தம் எட்டு நண்பர்கள்.

ஒரு சிறு குழுவாகத் தொடங்கினாலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் எங்களால் கம்பராமாயணப் பாடல்களை வாசிக்க முடிந்தது. பாடல்களின் பொருள், தத்துவத் தீவிரம் போன்றவற்றுடன் பல தமிழ் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் இணையான சமஸ்கிருத வரிகளை சுவாமிநாதன் அவர்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு படலத்தை முடித்ததும் எங்களால் இயன்றவரை அவற்றைத் தொகுத்துக்கொள்ள நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி சில கட்டுரைகளை சொல்வனம் மற்றும் பதாகை இதழில் எழுதத்தொடங்கினார். இதோடு மட்டுமல்லாது நாஞ்சில் நாடனின் அம்பறாத்தூணி எனும் நூல் எங்கள் வாசிப்புக்குப் பெரிய துணையாக அமைந்தது. விஷ்ணுபுரம் அமைப்பினர் நடத்திய ஊட்டி கூட்டத்தில் அவரது மேற்பார்வையில் நடந்த கம்பன் சுவை நிகழ்வுகள் கோப்புகளாக எங்கள் ஒப்பீடுகளுக்கு உதவின. ரெண்டு வருடங்களில் கம்பனின் சொற்களுக்குள் பயணம் செய்தபின் அடுத்து சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு, திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் எனத் தொடர்ந்து எங்கள் செவ்வியல் இலக்கிய வாசிப்பு வளர்ந்தது. லண்டன் குழுவினரின் வாசிப்பு விரிவானதில் இக்காலகட்டம் மிக முக்கியமாக அமைந்தது. கிட்டத்தட்ட கொரானா காலம் வரை ஐந்து வருடங்களுக்கு எங்கள் வாசிப்புத் தொடர்ந்து. இதைச் சாத்தியப்படுத்திய எங்கள் ஆசிரியர் சுவாமிநாதன் சாருக்கு என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இன்றும் எங்களில் சிலர் வேறு சில கம்பராமாயணக் குழுவினரோடு மீண்டும் பாடல்களைப் படித்து வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் செவ்வியல் பாடல்களை ரசித்திருந்தாலும் அவற்றைக் கொண்டு சில ரசனைக்கட்டுரைகள், சில வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிக்காமல் நம்முள் இறங்காது என்பதை உணர்ந்திருந்தேன். என் முயற்சியில் அவற்றை மீண்டும் படித்து உள்முகப்படுத்த வேண்டிய பயணத்துக்கு நாள் கனியக்காத்திருக்கிறேன்.

எப்படியேனும் பத்து நபர்கள் வரை எங்கள் குழுவில் இக்கட்டத்தில் இணைந்திருந்தனர். சிறிய குழு என்றாலும் மிக நிறைவான வாசிப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தோம் என்பதில் எங்களுக்கு ஓரளவு பெருமை உண்டு. அடுத்த நகர்வாக 2019 ஆம் ஆண்டு ‘லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்‘ எனும் அமைப்பை உருவாக்கி முதல் நிகழ்வை நடத்தினோம். எழுத்தாளர் ராய் மாக்ஸம் மற்றும் லண்டன் சுவாமிநாதன் தலைமையில் நடந்த விழாவில் சிவா கிருஷ்ணமூர்த்தியின்வெளிச்சமும் வெயிலும் (யாவரும் பதிப்பகம்,2018) மற்றும் அனோஜன் பாலகிருஷ்ணனின்பச்சை நரம்பு (கிழக்கு பதிப்பகம், 2018) வெளியாகி விரிவான விமர்சன உரைகள் நிகழ்த்தப்பட்டன. வாசிப்பிலிருந்து அடுத்த கட்ட நகர்வாக இந்த நிகழ்வு அமைந்தது. பிறகு கிரிதரனின்காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை (தமிழினி பதிப்பகம், 2020) மற்றும் தன்ராஜ் மணியின்சாம்பனின் பாடல் (யாவரும் பதிப்பகம், 2021) நூல்கள் அடுத்தடுத்த வருடங்கள் வெளியாயின. இந்த புத்தகங்கள் மேல் அமைந்த விமர்சனங்களும், விரிவான பார்வைகளும் எங்களது வாசிப்பை மேலும் கூர்மையடையச் செய்தது.

இதற்கிடையில் எங்கள் மூன்றாம் கட்ட வாசிப்பு நகர்வு நாங்கள் நடத்திய சில முகாம்கள் மூலம் நடந்தன. தேர்ந்த மலையேறியான நண்பர் தன்ராஜ் மணி மலையேற்றங்களின் ருசியை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதுவரை நீண்ட நடை மற்றும் சில சிறு மலை ஏற்றங்கள் மட்டுமே சென்று வந்த எங்கள் நண்பர்கள் குழுமம் முதல் முறையாக இங்கிலாந்தின் உயரமான மலைகளை ஏறும் வேட்கையில் இறங்கினோம். இங்கிலாந்தின் மூன்று மலை உச்சங்களான பென் நவிஸ், ஸ்காபல் பைக் மற்றும் ஸ்னோடோனியோ முறையே முதல் மூன்று உயரமான மலைத் தொடர்களை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டோம். புதிய அனுபவங்கள் எங்களுக்காகக் காத்திருந்தன. அரை நாள் பயணம் செய்து ஒரு வார இறுதி மலை அடிவாரத்தில் தங்கி இருந்து எங்கள் பயணத்தை செய்யத் தொடங்கினோம். இதில் ஒரு நாள் பயணம் மற்றோரு நாள் வாசிப்பு அல்லது ஏதேனும் தலைப்பில் கலந்துரையாடல் எனும் வடிவத்தில் எங்கள் பயணங்கள் இருந்தன. இதற்குள் நண்பர்கள் நெருக்கமாக ஆனதால் பல நேரங்களில் பேச்சு தனிப்பட்ட சுவாரஸ்யங்கள், திரைப்படங்கள், குழந்தைகள் படிப்பு வேலை எனச் சென்றுவிடும். மலை ஏற்றத்தின் போது இவையும் உண்டு என்றாலும், வாசிப்புக்காக ஒதுக்கிய ஒரு நாளில் மிகத் தீவிரமாக சில தலைப்புகளில் மட்டுமே பேசுவோம். நவீனத் தமிழ் நாவல்கள், கம்பராமாயணத்தின் சில பாடல்கள், குறிப்பிட்ட கவிஞர்களின் கவிதை வாசிப்பு ரசனைப் பகிர்வு என கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரங்கள் விவாதிப்போம். நிறைய கேலி கிண்டல்களும் சிரிப்புகளும் உண்டு என்பதால் களைப்பே தெரியாது. அதுவும் வார இறுதி முழுவதும் ஒரு காட்டேஜ் ஒன்றை வாடகை எடுத்து சாப்பாட்டுக்குத் தேவையானவற்றை எடுத்துச் சென்றுவிடுவோம். வாடகைக்குவிடும் வீட்டுக்காரர்களுக்கு நாங்கள் வாசிப்போம் உரையாடுவோம் வெளியே வரவே மாட்டோம் எனச் சொன்னாலும் நம்பாமல் அவ்வப்போது வந்து நோட்டம் விட்டபடி இருப்பார்கள். மலையேறியதில் வந்த புத்துணர்ச்சியும், புது இடத்தின் வசீகரமும் எங்கள் உரையாடலை மிகவும் கூர்மையாக ஆக்கியிருப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். பாடல் இசை துணையுடன் நீண்ட இரவுகள் பேசிக்கொண்டிருப்பதும் உண்டு. ஆனால் அவரவர்களுக்குக் கொடுக்கப்படும் தலைப்புகளில் உரையாடல் தீவிரமாக அமைவதால் பல சிறப்பானத் திறப்புகளை அனுபவித்துள்ளோம். ஒரு தலைப்பில் சில மணி நேரங்கள் பேசுவதால் எங்களுக்குள் மிக ஆழமான கருத்துகள் உருவாகி இருப்பதை பின்பு உணர்ந்திருக்கிறோம். பல சமயங்களில் இந்தத் தலைப்புகளை சில கட்டுரைகளாகவும் எழுதினோம். வருடத்துக்கு ரெண்டு அல்லது மூன்று முறை இப்படிச் செய்து வருவது எங்கள் வாசிப்பு மேலும் தீவிரமாக்கியது .

பொதுவாக நம் சொந்த நிலத்திலிருந்து விலகி நின்று பார்க்கும்போது தான் நம் அகம் சார்ந்த வாசிப்புகள் விரிவடையத் துவங்கும் எனும் நம்பிக்கை ஒன்று உண்டு. பல எழுத்தாளர்களும் வாசகர்களும் தங்கள் நிலம் மற்றும் மொழி போன்றவற்றோடு ஏதேனும் ஒரு வகையில் பிணைப்பை நீட்டித்து வைப்பதற்காகத்தான் வாசிக்கத் துவங்குகிறார்கள். அதுவும் பிறந்த நிலத்திலிருந்தும், தங்கள் சொந்த மொழி சார்ந்த ஊர்களிலிருந்தும் பிரிந்து வாழும் வாசகர்களுக்கு இந்த உணர்வு மேலும் அதிகமாக இருக்கலாம். இப்படிப் பொதுப்படையாகச் சொல்ல முடியாது என்றாலும், பல எழுத்தாளர்கள் தங்கள் வெளிப்பயணங்களை சற்றே சிறிய பிரிவு எனும் வகையில் அகப்பயணமாக மாற்றுவதை நாம் பார்க்கலாம். இந்தியாவை விட்டு வெளியே வசிக்கும்போது நம்மால் தொடர்ச்சியாக நம் மொழியுடன் தொடர்பு கொள்ள முடிவதில்லை. ரசனையை கூர் தீட்டிக்கொள்ள இது மிகப்பெரிய தடையாக அமையும. கூட்டாக வாசிப்பதும் விவாதிப்பதும் ரசனைய மேம்படுத்தும் ஒரு வழியாக நாங்கள் உணர்ந்துகொண்டோம். அதே போல தமிழ் காதில் அதிகம் புழங்காகததால் எழுதுவதில் சிறு தடை உள்ளதுதான். நாம் எழுதியதை இந்த சிறு குழுவினர் படித்து கருத்துரைக்கும்போது அக்குறை ஓரளவு காணாமல் போகிறது.

கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் இங்கிலாந்து வந்தார். இக்கட்டுரையை எழுதும் வேளையில் அவர் ஸ்காத்லாந்து பகுதியின் க்ளென்கோ எனும் பகுதியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருப்பார். டிசம்பர் ஆறு அன்று எங்கள் குழுவினரின் ஏற்பாட்டில் லண்டனின் அக்டோபர் அரங்கில் சிறு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தனது அறம் நூலின் ஆங்கில மொழியாக்கத்தின் வெளீயீட்டுக்காக ஜெயமோகன் பல விழாக்களில் பங்கேற்று வருகிறார். அதன் தொடர்ச்சியாக, லண்டனில் தென் இந்திய மொழிக்கான ஒரு மேடையை அந்த மாலை விழாவில் ஏற்பாடு செய்திருந்தோம். நண்பர் தன்ராஜ் மணி ஒருங்கிணைக்க அறம் நூலின் கன்னட மொழி பெயர்ப்பைக் குறித்து டாக்டர் பிரேமலதா மற்றும் தெலுங்கு மொழிபெயர்ப்பின் பிரதிநிதியாக பவண் அவர்களும் எங்களுடன் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அறம் நூல் குறித்தப் பார்வையை கிட்டத்தட்ட நூறு நபர்கள் நிரம்பிய அரங்கில் பகிர்ந்து கொண்டனர். மொழியாக்கத்தின் வீரியம், மொழி மற்றும் கலாச்சாரம் தாண்டி தாக்கத்தை உண்டு செய்யும் கதாபாத்திரங்கள் அவர்களின் அற நிலைகள் போன்றவை விவாதிக்கப்பட்டன. மேலும், காலத்தின் அசைவுகளின் படி எப்படி அறம் உருமாறி வந்துள்ளது என்பதைக் குறித்த விவாதித்தோம். அடுத்த வருடம் தென்னிந்திய மொழிகளின் மொழியாக்கங்கள் குறித்து மேலும் சில விழாக்களை விஷ்ணுபுரம் இங்கிலாந்து அமைப்பினர் மேற்கொள்வர் என ஜெயமோகன் அவர்கள் பேசினார். ஆங்கிலத்திலும் மேற்கு இலக்கியத்துக்கும் நமது தரமானப் படைப்புகள் சென்று சேர வேண்டும் என்பது இவ்விழாக்களின் பிரதான நோக்கமாக இருக்கும் அவர் குறிப்பிட்டார். இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் இவை மேலும் பல குழுவினரிடம் சரியான வாசிப்பைக் கொண்டு சேர்க்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இப்படியாக எங்கள் வாசிப்பும் ரசனையும் எழுத்தும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு வடிவத்தில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறோம். நிச்சயமாக எங்களைப் போல பல குழுவினர் இங்கேயும் ஐரோப்பாவிலும் இருப்பார்கள் என்பதை அறிவோம். இக்குழுக்கள் இணைந்து பயணம் செய்யாவிட்டாலும் எல்லாரும் ஒரே விதமான பாதையில் தமிழ் இலக்கியத்துக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பை அளிக்க முடியும் எனும் நம்பிக்கை உள்ளது.

Author

  • கிரிதரன், சிறுகதைகள், இசைக் கட்டுரைகள் மற்றும் விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருகிறார். நியுஹாம் லண்டன் சிறுகதைப் போட்டி முதற்கொண்டு பல புனைவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர். அறிவியல் புனைவுத் தொகுப்பு உட்பட பல நூல்களின் ஆசிரியர்.

You may also like

Leave a Comment