தாய்மாரும் தந்தையரும் குழந்தைகளின் முதன்மை வழிகாட்டிகள் மட்டுமல்ல; அவர்கள் வாழ்க்கையின் முதல் ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகள் எதையும் முதலில் பெற்றோரிடம் காண்கிறார்கள், அதனால் பெற்றோர் நடத்தை, குறிப்பாக உணர்ச்சிக்கள கட்டுப்பாடு (Emotional Regulation), குழந்தையின் மனநிலையை உருவாக்க முக்கிய பங்காற்றுகிறது.
பல பெற்றோர்கள் பிஸியான வாழ்க்கை, உறவுகள் தரும் அழுத்தம், குடும்ப பொறுப்புகள் மற்றும் நிதி சிக்கல்கள் ஆகியவற்றால் எளிதில் மனச்சோர்வு அடைவார்கள். இந்த மன அழுத்தங்கள் நேரிடையாக குழந்தைகளிடம் வெளிப்படுகின்றன. பெற்றோர் கோபம் அடையும் போது, குழந்தைகளும் அதையே பின்பற்றுகிறார்கள். அதனால், பெற்றோர்கள் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
கோபம் வருகையில் சம்பந்தமே இல்லாமல் பிள்ளைகள் அல்லது வாழ்க்கை துணை மேல் எரிந்து விழுவது ஒரு தவறான முன்னுதாரணம். நம்மை பார்த்து தான் பிள்ளைகளும் இவற்றை பழகுவார்கள். நீங்கள் ஆபிஸ் வேலைப்பளுவால் வாழ்க்கைதுணையை திட்டினால், பையன் ஸ்கூல் ஹோம் ஒர்க் அதிகம் என சொல்லி தன் தங்கையை திட்டுவான். ஒரு தவறான வழக்கம் இன்னொரு தலைமுறைக்கு கடத்தபடும்
உணர்ச்சி கட்டுப்பாடு என்பது உங்கள் உணர்வுகளை அடக்குவது அல்ல; அதற்குப் பதிலாக, அவற்றை புரிந்து கொண்டு சரியான வழியில் வெளிப்படுத்துவதை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பெற்றோர் குழந்தையின் தவறுக்கு மிகுந்த கோபத்தில் இருக்கும் போது, உடனே கூச்சலிடாமல், சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, சற்றே அமைதியாய் பேசுவது குழந்தைக்கும், பெற்றோருக்கும் நல்லது.
இதற்காக சில நடைமுறைகளை பெற்றோர் மேற்கொள்ளலாம். முதலில், தினசரி ஒரு சில நிமிடங்களை தங்களுக்காக ஒதுக்க வேண்டும் — இது யோகா, மெடிடேஷன் அல்லது நேரடி நடைப்பயிற்சி ஆகியவற்றாக இருக்கலாம். இரண்டாவது, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக நண்பர்கள் அல்லது துணையிடம் மனம்விட்டு பேசுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மூன்றாவது, குழந்தைகள் முன்னிலையில் கோபத்தால் செயல் படுவதற்கு முன் ஒரு பிரேக் எடுத்து, பின்னர் பேசும் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், குழந்தைகளுக்கும் உணர்ச்சி கட்டுப்பாட்டை கற்றுக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, குழந்தை ஒரு பொருளை கோரி அழும்போது, பெற்றோர் அந்த உணர்வுகளை மதித்து, ஆனால் நேர்மையான விளக்கம் அளிக்க வேண்டும். “நீ நிச்சயமாக அந்த பொம்மையை விரும்புகிறாய், ஆனால் இப்போது அதை வாங்க முடியாது” என்ற வகையில் பதில் அளிப்பது, குழந்தையின் உணர்வுகளையும் மதிக்கிறது மற்றும் ஒரு கட்டுப்பாட்டு நிலைக்கும் வழி வகுக்கிறது.
உணர்ச்சி கட்டுப்பாடு என்பது ஒரு நாள் பயிற்சி அல்ல; இது தொடர்ச்சியான பயிற்சி. பெற்றோர் தங்கள் செயல்கள், சொற்கள் மற்றும் முகபாவனைகள் மூலம் குழந்தைகளை கட்டியெழுப்புகிறார்கள். அதனால், பெற்றோர் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம், பக்குவமான, மனநிலையியல் ரீதியாக ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும்.
பெற்றோர் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறனை மேம்படுத்திக் கொண்டால், குடும்பத்தில் அமைதி நிலவும். மேலும், இது குழந்தைகளுக்கு வாழ்க்கை முழுவதும் பயன்படும் ஒரு குணமாகும். உணர்ச்சி கட்டுப்பாடு என்பது பெற்றோர்களுக்கே முதலில் தேவையான ஒரு திறமை என்பதையும் நாம் மறக்கக்கூடாது.