அருணுக்குப் பத்து வயது. கோடை விடுமுறையில் அவன் பாட்டி வீட்டுக்குச் சென்று இருந்தான்.
அது ஒரு கிராமம். நகரத்தில் வளர்ந்த அருணுக்கு, அந்த ஊர் பிடிக்கவே இல்லை. பொழுதே போகாமல் போரடித்தது. அவன் ஒரு நாள் மாலை வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்துக்குச் சென்றான். அவனுக்குச் செடி, கொடி என்றால் மிகவும் பிடிக்கும்.
தோட்டத்து மூலையில் ஒரு செடி காய்ந்து போனது போல் இருந்தது. ‘அடடா! தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து விட்டது’ என்று நினைத்தவன், ஒரு குவளை தண்ணீர் கொண்டு போய் ஊற்றினான்.
“அது என்ன செடி?” என்று அருண் பாட்டியிடம் கேட்டான்.
“தெரியலப்பா. தானா முளைச்சுது. ஏதோ களைச்செடின்னு நினைக்கிறேன். அதனால தான் பட்டுப் போகட்டும்னு, தண்ணி ஊத்தாம விட்டுட்டேன்” என்றார் பாட்டி.
அவனுக்கு களைச்செடி என்றால் என்னவென்று புரியவில்லை. ‘துளிர் எதுவும் விடுகிறதா’ என்று அருண் தினமும் அந்தச் செடியைப் போய்ப் பார்த்தான். செடி நிச்சயம் பிழைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தினமும் நீர் ஊற்றினான்.
மூன்று நாள் கழித்து தண்டுப்பகுதியில் பச்சையாகச் சிறு முளை தெரிந்தது. அதைப் பார்த்த அருணுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சாகப் போன ஓர் உயிரைக் கடைசி நிமிடத்தில் காப்பாற்றிய மகிழ்ச்சி!
அடுத்த இரண்டு நாள் கழித்து அந்தச் செடி நன்றாகத் துளிர் விட்டது. புது இலைகள் வந்தன. செடி நெடு நெடு என்று வளர ஆரம்பித்தது. தினமும் போய்ச் செடி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அருண் பேசினான்.
“நீதான் களைச்செடியா? உன் பூ என்ன கலர்ல இருக்கும்? வாசனை இருக்குமா? இருக்காதா?” என்று செடியிடம் கேட்டான்.
அது பூச்செடி என்றே அருண் நம்பினான். ‘அதன் பூ எப்படி இருக்கும்?’ என்று விதவிதமாகக் கற்பனை செய்தான். அவனுக்குத் தெரிந்த இட்லிப்பூ, நந்தியாவட்டை, செம்பருத்தி, சூரியகாந்தி, அரளி உட்பட பல பூக்கள், அவன் கற்பனையில் வந்து வந்து போயின. எதுவும் அவனுக்குத் திருப்தியாக இல்லை.
அருணுக்கு ஓவியம் வரையவும் பிடிக்கும். ஒரு நாள் அவன் ஒரு தாளை எடுத்து ஒரு பெரிய பூவை வரைந்தான். பூவுக்கு மஞ்சள், பச்சை, நீலம் என்று விதவிதமாக வண்ணங்களைக் குழைத்துத் தீட்டினான். அந்த ஓவியம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அந்தத் தாள் நுனியில் ஒரு ஓட்டை போட்டு அதை ஒரு குச்சியில் சொருகினான். அந்தக் குச்சியை எடுத்துப் போய் செடி பக்கத்தில் மண்ணில் ஊன்றினான்.
“இந்தப் பூவுக்கு என்ன பேர் தெரியுமா? வானவில் பூ! வானவில்லுல இருக்குற எல்லாக் கலரும் இதுல இருக்கு. இந்தப் பூ தான் எனக்குப் பிடிச்சிருக்கு. இது போல நீ பூத்தா, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்” என்று செடியிடம் சொன்னான். செடி ஆடாமல் அசையாமல் நின்றது.
“என்னப்பா? செடிகிட்ட போய் மனுசங்க மாதிரி பேசிக்கிட்டு இருக்கே?” என்று பாட்டி சிரித்தார்.
நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு அவனும் அம்மாவும் வெளியூர் போக வேண்டி இருந்தது.
“நான் வர்ற வரைக்கும் என் செடிக்குத் தினமும் தண்ணி ஊத்துங்க பாட்டி. மறந்துடாதீங்க” என்று சொல்லிவிட்டு ஊருக்குச் சென்றான் அருண்.
ஒரு வாரம் கழித்து அவர்கள் ஊருக்குத் திரும்பினர். அருண் உடனே கொல்லைக்கு ஓடிச் சென்று அந்தச் செடியைப் பார்த்தான்.
என்ன ஆச்சரியம்! அவன் தாளில் வரைந்ததைப் போலவே, வானவில் வண்ணங்களுடன் செடியில் ஒரு பெரிய பூ இருந்தது. பல வண்ணப் பட்டு இதழ்கள் கொள்ளை அழகுடன் இருந்தன! பூ நடுவில் மஞ்சள் மகரந்தம் தங்கம் போல் மின்னியது.
“ஐ! நான் ஆசைப்பட்ட மாதிரியே வானவில் பூ பூத்து இருக்கியா?” என்று செடியிடம் கேட்டான்.
“ஆமாம்” என்று அவனுக்குத் தலையாட்டுவது போல், அந்தச் செடி காற்றில் அசைந்து ஆடியது.
அருண் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.