வழி நடத்தும் நிழல்கள்

மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றன
தலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டி
மேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.
அதுவே சத்தியம் என
கூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.
அவற்றின் காதுகள்
பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமே
செவிமடுக்கப் பழகி விட்டன.

செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லை
அடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லை
கோலை உயர்த்தி முழங்கும்
மேய்ப்பனின் குரலில் கிட்டுகிற ஆறுதலுக்காக
கடும் பாறைகளை, பள்ளத்தாக்கை நோக்கி
நீர்சுழிகளை, சுழல்காற்றை நோக்கி
ஓநாய்களின் விரியத் திறந்த வாய்களை நோக்கி
தாம் பாதுகாப்பாக இருப்பதாக நம்பியபடி
அணிவகுத்துச் செல்கின்றன.

மந்தையைப் போலவே பார்வையற்றவனாக,
யாரை யார் வழிநடத்துகிறார் எனும் புரிதலின்றி,
மேய்ப்பனும் பின்தொடருகிறான்
இருளை நோக்கித் தன்னை வழிநடத்தும்
மற்றொரு நிழலை.

Author

  • எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார். இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

மருத்துவர் பக்கம் -15: சுய மருத்துவம்

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 4

அவளும் அவனும்