பொருளாதாரம் உருவாக ராஜ்ஜியங்கள் அடிப்படையாக அமைந்தன என்பதை போன அத்தியாயத்தில் சொல்லிருந்தேன்.
அதற்கு முன்னால் ராஜ்ஜியம் அரசன் பிரஜைகள் என்கிற கோட்பாடெல்லாம் எந்த புள்ளியில் இருந்து உருவானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முன்பு சொன்னது போல மனிதனின் அடிப்படை தேவைகளே இன்றைய தேதியில் இருக்கும் அனைத்து வளர்ச்சிகளுக்கும் காரணம் என்பது போல வேட்டையாடி சமூகமாக இருந்து நகரவாசி அல்லது விவசாயியாக உருவானதற்கும் காரணம்.
பூமியில் முதன் முதல் குரங்கில் இருந்து மனிதனாக மாறின பின்னர் பசி எடுக்கும் பொழுது பழங்களை தேடி சாப்பிடுவதற்கும் சிறு மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவதற்கும் பழகி இருந்தான். யாரும் அதை புதிதாக சொல்லி தர தேவை இருந்தது இல்லை. அதே போல் கூட்டமாக வாழ்வதற்கும் தலைவன் சொல் கேட்டு நடக்கவும் குரங்குகளாக இருந்த நாட்களிலிருந்தே பழகி இருந்தான்.
மனிதனாக மாறின உடன் அவன் செய்ததெல்லாம் சமூக அமைப்பொன்றினை உருவாக்கியது தான்.
அதில் தலைவன் என்பவன் வீரம் மற்றும் விவேகம் மிக்கவனாக இருந்தான். அவனை விட குறைந்த ஆற்றலுடையவர்கள் அவனை தலைவனாக ஏற்று கொண்டனர். குழுவாக வாழ்ந்ததினால் வேட்டையாடி கொண்டு வரும் மாமிசத்தை எல்லோரும் சம பங்கில் பிரித்து கொண்டு உண்டனர். இதில் தலைமை பொருப்பில் இருந்தவனுக்கு அதிக பங்கு கிடைத்தது.
சிறு குழுவாக வாழ்ந்த மனிதன் குடும்பம் என்ற உணர்வுகளுடன் வாழ தொடங்கிய பொழுது அவனது தேவைகள் இன்னும் அதிகமாகின. வெறும் வேட்டையாடியாக இருந்த பொழுது பசி மட்டுமே அவனது முதன்மை உணர்வாக இருந்தது. இரண்டாம் உணர்வாக பயங்கள் இருந்தன.
இந்த பயங்களை தான் மனிதன் வழிபட ஆரம்பித்தான், அது பின்னாட்களில் சமயங்களாக மாற்றியது. சமயங்கள் மதங்களாக மாறியது.
ஆம் மதங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி இருக்கின்றன. அதை பற்றி பிற்பாடு பார்ப்போம்.
ராஜ்ஜியங்கள் –
பெரும் ராஜ்ஜியங்களெல்லாம் ஒரு காலத்தில் சிறு தலைவனின் கீழ் வாழ்ந்து இயங்கிய சமூகங்களாக தான் இருந்தன. பிறகு எந்த புள்ளியில் அவை ராஜ்ஜியங்களாக உருமாறி இருக்கும் ?.
வேட்டையாடி சமூகமாக இருந்த மக்கள் வேட்டையாடி அதனை பகிர்ந்து உண்டு வந்திருக்கிறார்கள். எதோ ஒரு நேரத்தில் வேட்டையில் மாமிசம் கிடைக்காமல் போயிருக்கும் அல்லது வேட்டைக்கு செல்ல முடியாத நிலை நிலவி இருக்கும்.
அது போன்ற நேரத்தில் இவர்களை போலவே தூரத்தில் ஒரு குழு வாழ்ந்து கொண்டு இருப்பதும் அவரிடத்தில் மாமிசம் அல்லது பழ வகைகள் நிறைய இருப்பதாய் தகவல் கிடைத்ததும் ஒரு குழுவாக கிளம்பி போய் வேவு பார்த்து சரியான நேரத்தில் அவர்களை தாக்கி உணவு பண்டங்களை தங்கள் வசம் கொண்டு வந்திருப்பார்கள்.
எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தவர்களை சண்டைக்கு வந்தவர்களை கொலை செய்திருப்பார்கள். மேலும் அந்த குழுவில் வலிமையான நபர்களை வேட்டைக்கு பயன்படுத்த தங்களோடு அழைத்து சென்று இருப்பார்கள். இப்படியாக தான் முதல் போர் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். இப்படியாக நடந்திருக்க தான் வாய்ப்புகள் அதிகம்.
அன்றைய தேதியில் சட்டம் என்பதெல்லாம் தோன்றாத காலம் என்பதால் மனித உணர்வின் அடிப்படையில் தான் எல்லாம் நிகழ்ந்தது. இப்படி ஒவ்வொரு முறையும் உணவு பண்டங்களுக்காக படயெடுப்பு நடந்துவதை காட்டிலும் அந்த பகுதியையும் அந்த சமூகத்து மக்களையும் என்றும் தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டால் தொடர்ந்து அவர்கள் தனக்காக வேலை செய்து உணவு பண்டங்கள் கொடுப்பார்கள் என்று நினைத்திருக்க வேண்டும்.
அதனால் அவனுக்கு கீழ் நிலையில் இருந்த வீரனை அங்கு பொறுப்பில் விட்டு அவன் மூலம் தலைவன் அங்கு ஆளுமை செலுத்தி வந்திருப்பான். ஏன் இப்படியான ஒரு அமைப்பை அந்த தலைவன் உருவாக்கி இருக்க வேண்டும் என்ற கேள்வி இந்த சமயத்தில் தோன்றுகிறது.
தலைவனை சார்ந்து இருந்த மக்களின் எண்ணிக்கை அதிகமானதால் இவ்வாறாக தலைவன் செய்திருக்கலாம். ஒரு நிலத்தில் யார் முதலில் குடியேறுகிறார்களோ அவர்களே அந்த நிலத்தின் உரிமையாளர்களாகுகிறார்கள் என பொருளாதார கோட்பாடு சொல்கிறது.
படையெடுப்பின் பொழுது அந்த நிலத்தின் முதல் குடியேறினவர்களை தாக்கி அடிமை படுத்தினால் அந்த நிலம் படையெடுத்தவனின் வசம் ஆகிவிடும். அப்படி படையெடுத்த தலைவனின் தேவைகளுக்கு ஏற்ப தான் அடிமைப்பட்ட நில குடியேறிகள் இயங்க வேண்டும்.
இந்த புள்ளியில் தான் ராஜ்ஜியங்கள் உருவாகி இருக்க வேண்டும்.
ராஜ்ஜியங்கள் எப்படி உருவாகி இருக்கும் என்பதையும் மதிப்பு பரிமாற்றத்திற்காக எப்படி நாணயங்கள் உருவாகி இருக்கும் என்பதை பற்றி சொன்னேன்.
வரி என்ற ஒன்று எப்படி ஆரம்பித்திருக்கும் என்பதை விளக்கி விட்டால் அதன் பிறகு ஒவ்வொரு காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி எப்படி எல்லாம் வளர்ந்து மாற்றமடைந்தது என பார்க்கலாம்.
தொடரும்.