வரலாற்றில் பொருளாதாரம் – 23

போன அத்தியாயத்தில் புனித தோமையரின் இந்திய வருகையின் பொழுது உடன் வந்தவர் அப்பான்ஸ் என்கிற வணிகர் என்பதால், தோமையர் மூலம் ஒரு வணிக மையத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கலாமென்பதைப் பற்றிச் சொன்னேன். அப்படி இயேசுவின் சீடர்கள் உலகமெங்கும் போக மூன்று விஷயங்கள் காரணமாக அமைந்தன. அவை இயேசு தனது போதனைகளை முடிந்த வரையில் உலக மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதும், இயேசுவின் சீடர்களை ஆதரித்தவர்களும் முதன்முதலில் கிறித்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களுமான பெரும் வணிகர்கள், இதையெல்லாம் விட முக்கியமாக ரோமானியத்தின் பரந்து விரிந்து இருந்த ராஜ்ஜியமும் வணிகத் தொடர்புகளும்தான்.

மூன்று விஷயங்களின் மூலம் நடந்த மதப் பிரச்சாரமும் மத மாற்றமும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான் என்றாலும், அதில் உள்ள வணிகத் தன்மை குறைவு என்பதால் அவற்றை பின்னர் வேண்டுமென்றால் சொல்கிறேன். ஆனால் நாட்டில் கிறித்துவம் பரவி அதனை எதிர்த்துப் பின்னர் அரசர் ஏற்றுக்கொண்டதில் பெரும் வணிக நோக்கம் இருந்திருக்கிறது.

இதனைக் கிறித்துவமயமாக்கல் எனச் சொல்வார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் அக்காலத்தில் கிறித்துவமயமாக்கப்பட்டதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தோமானால் அதில் வணிக நோக்கம் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கிறித்துவச் சபைகள் எவ்வளவு தூரம் வணிகர்களின் வசம் இருந்தன என்பதைத் தெரிந்துகொள்ள நமக்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது மேக்னா கார்டா சாசனம். 13-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மன்னர் ஜான் ஆட்சியில் இருந்த பொழுதுதான் இந்தச் சாசனம் இயற்றப்பட்டது.

ஏன் மேக்னா கார்டா சாசனம்?

ஜான் மன்னர் தனது கல்யாணத்தில் ஆரம்பித்துத் தொடங்கிய பிரெஞ்சு நாட்டுடனான போரில் ஏற்பட்ட செலவுகளைச் சந்திக்க, பொருளாதார மையமாக இருந்த தேவாலயம் மீதும் பெருங்குடிப் பிரபுக்கள் மீதும் வணிகர்கள் மீதும் அதிக வரிகளைச் சுமத்தினார். இதனை எதிர்த்து வணிகப் பிரபுக்கள் அடங்கிய குழு ஒன்று அந்த வரிகளை எதிர்த்து மன்னருக்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டது.

இதன்பிறகு இரு தரப்பினரும் சமாதான முறையில் ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். அந்த உடன்படிக்கை காரணமாக இயற்றப்பட்ட சாசனம்தான் மேக்னா கார்டா.

அந்த மேக்னா கார்டா சாசனத்தில் பல சரத்துகள் இருந்தாலும், அதில் முக்கியச் சரத்தாக இருப்பது என்னவென்றால், இங்கிலாந்து ராஜ்ஜியத்தில் இருக்கும் கிறித்துவச் சபைகள் சுதந்திர அமைப்பாகச் செயல்படவும் அவை மன்னரின் கட்டுப்பாட்டுக்கு வராமல் இருக்கவும் வழிவகை செய்தது. 13-ஆம் நூற்றாண்டில் கிறித்துவச் சபை பெரும் வணிக மையமாக இருந்தது. அப்பொழுது சபைக்குப் பல்வேறு வணிகங்களின் மூலம் வருவாய் வந்தது. இதைத் தவிர விவசாய அறுவடைகளிலும் வணிக லாபங்களிலும் 10% வரியாகச் சபைக்குக் கிடைத்துக்கொண்டு இருந்தது.

இதன் மூலம் மதச் சபைகள் உலகெங்கும் எத்தகைய சக்தி வாய்ந்தவைகளாக இருந்தன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதனைத் தவிர்த்து மேக்னா கார்டா சாசனத்தில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய வணிகத் தன்மை கொண்ட சரத்துகள் பல இருக்கின்றன. அதனையெல்லாம் தொடரில் வரப்போகும் அத்தியாயங்களில் தேவைப்படும் பொழுது சொல்கிறேன்.

இந்த நவீன காலத்திலுமே இயேசுவின் போதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதால் ஒரு தெய்வீகக் காரியத்தை நிறைவேற்றுகிறோம் என மக்கள் நம்புகிறார்கள். இப்பொழுதே அப்படி என்றால் அக்காலத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

இயேசுவின் போதனைகளை, கிறித்துவ மதத்தைப் பரப்புவதின் மூலம் தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தனக்கும் தனது குடும்பத்திற்கும் மேலுலகத்தில் ஓர் இடத்தைப் பெற்றுத் தரும் என நம்பினார்கள். மேலும் இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அக்கால வணிகர்களும் கிறித்துவச் சபைகளும் கடல் கடந்த, கிறித்துவம் பற்றித் தெரியாத இடங்களில் மதப் பரப்ப அனுமதி பெற்றனர்.

கொலம்பஸ், வாஸ்கோ டா காமா ஆகியோரது வணிகக் கடல் வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் மதம் பரப்புதல் என்ற அடையாள முத்திரை தந்து அனுமதி பெறப்பட்டது. அன்றைய வணிகக் கடல் வழிகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த அரேபியர்களுக்கு முன்னால், வணிக வழியைக் கண்டுபிடிக்கப் போகிறோம் எனக் கிளம்பி இருந்தால் அது தேவையற்ற கடல் போரில்தான் முடிந்திருக்கும். மதம் சார்ந்த பயணம் என்பது ஒரு முகமூடியாகக் கூட இருந்திருக்கலாம்.

இப்பொழுது எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கலாம். கிறித்துவ மதத்தில் மட்டும் ஏன் இப்படி நடந்திருக்கிறது என. ஆனால் வரலாற்றைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தோமானால் எல்லா மதங்களிலும் சமயங்களிலும் இது போன்றவை நடந்திருக்கின்றன.

முந்தைய அத்தியாயங்களில் பாண்டியர் வசம் இருந்த துறைமுகங்களைப் பற்றிச் சொல்லி இருந்தேன். பாண்டியர்களின் வசம் இருந்த முக்கியத் துறைமுகங்களாக இருந்தவை கொற்கை, தொண்டி, மருங்கூர்ப்பட்டினம், காயல்பட்டினம், குமரி, விழிஞம்.

அப்பொழுது இருந்த பெரும்பாலான ராஜ்ஜிய அரசர்களைப் போல் சமண சமயத்தைக் கூன் பாண்டியன் ஆதரித்து வந்தார். அக்காலத்தில் சமண மதத்தை ஆதரித்து வந்த மன்னர்கள் வசம் முக்கியத் துறைமுகங்கள் இருந்தன. முக்கியமாகக் கங்க மன்னர்கள் வசம் இருந்த தாம்ரலிப்தி துறைமுகம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அக்காலத்தில் சமண சமயம் பெரும் செல்வாக்குடன் இருந்திருக்க வேண்டும்.

அந்த நேரத்தில் தான் கூன் பாண்டியன் வெப்பு நோயுடன் போராடிக்கொண்டு இருந்தார். சமணர்களிடத்தில் அதற்கான வைத்தியம் இல்லை. அப்பொழுது சைவ சமயத்தைச் சார்ந்த மருத்துவர்கள் மருத்துவம் பார்த்துக்கொண்டு வந்திருக்கும் பொழுது, திருஞான சம்பந்தர் “மந்திரமாவது நீறு” என்ற பதிகத்தைப் பாடி கூன் பாண்டியனது வெப்பு நோயைக் குணப்படுத்தினார்.

அதன்பின் கூன் பாண்டியன் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு. கூன் பாண்டியனது காலம் என்பது 7-ஆம் நூற்றாண்டு. 10-ஆம் நூற்றாண்டு வரைக்கும் சைவ சமயம் கோலோச்சிக்கொண்டு இருந்தது.

ஏன் 10-ஆம் நூற்றாண்டு வரைக்கும்? அதன்பின் என்ன ஆனது?

இராமானுஜர் காலம் வந்தது, கம்ப இராமாயணம் எழுதப்பட்டது. தமிழகத்தில் வைணவ சமயம் மலர்ச்சி அடையத் தொடங்கியது.

தொடரும்…

Author

Related posts

என்ன செய்ய?

சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 10

தொப்புள் கொடி பந்தம்