வரலாற்றில் பொருளாதாரம் – 11

போன அத்தியாயத்தில் ‘வழிபாட்டு மையங்களுக்கும், பண்டைய கால பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருந்துள்ளது’ எனச் சொல்லி முடித்திருந்தேன்.

ஆதிமனித காலத்தைத் தாண்டி, சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கோயில்களின் பங்கு சமூகத்தில் என்னவாக இருந்தது? என முதலில் பார்த்துவிடுவோம். அப்பொழுது தமிழகத்தில் இந்து சமய வழிபாடுதான் பரவலாக இருந்ததால் கோயில்களைப் பற்றிப் பார்ப்போம்.

அக்காலத்தில் கோயில்கள் பல செல்வந்தர்களிடம் தானமாகப் பெற்றப்பட்ட விவசாய நிலங்களை மூலதனமாக வைத்து, ராஜ்ஜியத்தில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தி ஆட்சியைச் சீராக இயங்க வைத்தன. கோயில்கள் அக்காலத்தில் மிகப் பெரிய நிலச்சுவான்தார்களிடத்தில் இருந்துள்ளன என்பதைச் சொல்ல நமக்குப் பல்வேறு தடயங்கள் கிடைத்துள்ளன.

விவசாயத்திலிருந்து லாபத்தில் வணிகர்களுக்குக் கடன் உதவி, அந்தக் கடன்களின் மூலம் கிடைத்த வட்டித்தொகை மற்றும் வணிகர்கள், பயணிகள் மூலம் வந்த வைப்புத்தொகை இவையெல்லாம் சேர்ந்து கோயில்களை மிக முக்கியமான வணிக மையமாக மாற்றி இருந்தன.

குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களில் இருந்து கோயில் பங்கு எனக் கிடைத்த நெல் வகைகள், தானிய வகைகள் ஆகியவற்றைக் கோயிலின் பண்டகசாலையில் சேமித்து வைத்து, பஞ்ச காலத்தில் அவை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

தாராளமாக இருந்த நிதியை வைத்துக் கொண்டு ஏரிகள், குளங்களை வெட்டி விவசாயம் மற்றும் மக்களின் பயன்பாட்டுக்கு அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளக் கொடுத்தனர்.

உதாரணமாக திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய். இந்தக் கால்வாய் 1200 வருடங்களுக்கு முன்பு திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீரின்மையால் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க, இராஜராஜச் சோழனால் வெட்டப்பட்டது. அதனை வெட்ட நிதி, உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயிலிலிருந்து பெறப்பட்டது.

இந்தக் கால்வாய் திருச்சியைச்  சுற்றி மேலும் கீழுமாய் ஓடியதால், சுமார் 32000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்றன. மேலும் காவேரி ஆற்றில் வெள்ளக்காலத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தையும் கருத்தில் கொண்டே இந்தக் கால்வாய் வெட்டப்பட்டது.

தஞ்சாவூரைப் போல திருச்சியும் விவசாயத்தில் சிறக்கக் காரணமாக அமைந்தது.

சரி.. புதிதாகப் பெரிய கால்வாய் வெட்டியதால், சோழ ஆட்சிக்கு என்ன நன்மை அல்லது லாபம் கிடைத்திருக்க முடியும்?

சீரான விவசாயம் மூலம் நெல், தானியம் ஆகியவற்றின் உற்பத்தி அதிகமாகும். அவற்றின் மூலம் கிடைக்கும் வரி, விவசாயம் சார்ந்த வணிகம் என ஒரு புதிய பொருளாதார வாய்ப்பை  அது உருவாக்கி இருக்கும்.

இது ஒரு புறம் இருக்க.. அரசரோ அல்லது அரசியோ ஒரு கிராமத்தைக் கோயிலுக்காக எழுதித் தருவதுண்டு. எழுதித் தருவதென்றால் அந்தக் கிராமத்தில் இருந்து வரி வசூலிக்கும் உரிமையைக் கோயிலுக்குத் தருவது.

நிலங்கள், கிராமங்கள், செல்வந்தர்கள் தரும் நகை, பொன், பொருள், கொடை என எல்லாமும் சேர்ந்து அந்தக் காலத்தில் கோயில்கள் சக்தி வாய்ந்த பொருளாதார மையமாகத் திகழ்ந்தன.

எப்பொழுது மக்கள் தங்களது உரிமைகளை ஆங்கிலேயர்களிடம் இழக்கத் தொடங்கினார்களோ, அப்பொழுதே வரலாற்றில் இப்படி சக்தி வாய்ந்த பொருளாதார மையங்களாகத் திகழ்ந்த கோயில்களின் நிலையும் மாறத் தொடங்கியது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 120 வருடங்களுக்கு முன்பு கோயில்கள் இருந்த நிலையைப் பற்றிப் படித்தாலே புரிந்துகொள்ள முடியும்.

சிதிலமடைந்த நிலையில்தான் பல கோயில்கள் இருந்தன.

2019ஆம் ஆண்டு வாக்கில் நான் தஞ்சாவூரிலுள்ள திருவலஞ்சுழி பிள்ளையார் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அது பழங்காலத்தில் ஒரு பொருளாதார மையமாகத் திகழ்ந்தது எனக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் நேரில் பார்த்த பொழுது, பல வருடங்களாய்க் கேட்பாரற்று இருந்தது போல் இருந்தது.

உய்யக்கொண்டான் கால்வாயின்  நிலையும் அவ்வாறே கேட்பாரற்று  அது அடுத்த கூவமாகிக் கொண்டிருக்கிறது. அது வளர்த்தெடுத்த 32000 ஏக்கர் விவசாய நிலங்களில் பெரும்பாலானவை, இப்பொழுது குடியிருப்புப் பகுதிகளாகிவிட்டன.

எல்லாம் சரி.. ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த பொருளாதார மையங்களாக இருந்த வழிபாட்டு இடங்கள் எப்படி உருவாகி இருக்கும்?

தொடரும்..

Author

Related posts

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

அழகின் வெளிச்சம்.

அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.