போன அத்தியாயத்தில், சக்தி வாய்ந்த பொருளாதார மையங்களாகத் திகழ்ந்த வழிபாட்டு மையங்கள் எப்படி உருவாகி இருக்கும்? எனக் கேட்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் பணப்பரிவர்த்தனை, வர்த்தகம், அது சார்ந்த வரிவசூலித்தல் ஆகியவை நிகழ்ந்து கொண்டு இருந்தன என்றுதான் பல சரித்திரப் புத்தகங்கள் சொல்லும். அதற்குமேல் சொல்ல, அதற்கு உண்டான ஆதாரங்களும் கிடைத்ததில்லை, தேவையும் இருந்தது இல்லை.
நாடோடிகளாக இருந்து, பண்பட்ட சமூக வாழ்க்கைக்குத் தனது கூட்டத்தைக் கொண்டுபோக தலைவனுக்கு ஒர் கோட்பாடு தேவைப்பட்டது. அதனை உருவகப்படுத்தலில்தான் பல்வேறு சமூகங்கள் வேறுபட்டன. சட்டங்கள், திட்டங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த ஒழுங்கமைப்பு கொண்ட ஒரு சமூகம் தேவைப்பட்டது.
அத்தகைய ஒழுங்கமைப்பைக் கொண்டு வர, கை கொடுத்தது என்னவென்று பார்த்தால்.. அது ஆதிகால மனிதர்களுக்கு இருந்த பயம்தான்.
ஆரம்பகாலத்தில் மனிதன், தான் பயந்த விஷயங்களை, ஆச்சரியப்படுத்திய விஷயங்களை, புரிந்து கொள்ள முடியாத விஷயங்களைக் கண்டு பயந்தான். அந்தப் பயங்களைப் பார்த்து, ஒரு நிலையில் அதற்குச் சரணாகதி அடைந்தான். அந்த நிலையில் அவற்றை வழிபட்டால், அவை தனக்குச் சாதகமாக இருக்கும் என நம்பினான்.
இந்தப் பயம் தலைவனுக்கும் இருந்தது. தலைவனே அதை முழுமையாக நம்பியதால், அவனைச் சார்ந்து இருந்த மக்களும் எந்தவிதக் கேள்வியுமின்றி நம்பத் தொடங்கினர்.
இந்த நிலையில், கூட்டத்திற்கான முதல் தலைவன் இறந்த பொழுது அவனது ஆளுமை, அறிவுத்திறன், அவன் தந்த பாதுகாப்பு ஆகியவை மக்களைக் கவர்ந்ததால், அந்தத் தலைவனது மரணத்திற்கு பின் அவன் வாழ்ந்த இடத்திலோ அல்லது இறந்த இடத்திலோ வழிபாட்டு மையங்களை உருவாக்கினர்.
தலைவனோடு நன்கு பழகியோருக்கு, அந்த வழிபாட்டு மையத்தைப் பராமரித்துக் கொள்ளும் பொறுப்பு தரப்பட்டது.
இரண்டு, மூன்று தலைமுறை கடந்த பின்னர் தலைவன் என்கிற பிம்பத்தைத் தாண்டி, கடவுளின் இல்லம் என்கிற நிலைக்கு அந்த மையம் வளர்ந்திருக்கும்.
சரி.. இது ஒரு ஆரம்பப்புள்ளிதான். கடவுளரின் உருவாக்கத்தைப் பற்றி இந்த இடத்தில் நிறுத்திவிட்டு, போன அத்தியாயத்தில் சொல்லிருந்ததைப் பற்றி அதனை வாசித்தவர்கள் சில கேள்விகளைக் கேட்டனர், அந்தக் கேள்விக்கெல்லாம் பதிலளிப்பதால் பொருளாதாரமும் வழிபாட்டு மையங்களும் எப்படி ஒன்றோடொன்றாகத் தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
நான் ஏன் கோயில்களெனச் சொல்லாமல், வழிபாட்டு மையங்களென்று சொல்கிறேனென்றால்.. அந்தக் காலத்தில் உலகம் முழுக்க இருந்த, வளர்ச்சியடைந்த சமூகக்குழுக்கள் எல்லாம் ஒரே மாதிரியான பாதையில்தான் முன்னேறிக்கொண்டு இருந்தனர்.
எல்லா மதங்களும் தங்களது வழிபாட்டு மையங்களைப் பொருளாதார மையமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு இருந்தனர்.
இதில் பொருளாதாரத்திற்கு வழிபாட்டு மையங்கள் இன்றியமையாதவைதான், ஆனால் அந்த இன்றியமையாதவையிலேயே இரண்டு வகைகள் உண்டு.
பொருளாதார வளர்ச்சியின் மூலம் வந்த வழிபாட்டு மையங்கள்.
வழிபாட்டு மையங்கள் மூலம் வந்த பொருளாதார வளர்ச்சி.
நமது தென்னிந்தியாவில் இரண்டும் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி எல்லாம் பின்னர் சொல்கிறேன். பொருளாதார வளர்ச்சிக்கு, ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம் தேவை என்பதால் எவை எல்லாம் சமூக அமைதிக்கு எதிராக இருந்தனவோ, வணிக நோக்கத்திற்கு எதிராக இருந்தனவோ.. அவை எல்லாம் சமூகத் தவறுகளில் சேர்க்கப்பட்டன. எவையெல்லாம் நன்மையைப் பெற்றுத் தருமோ, அவையெல்லாம் சமூக நல்லவைகளில் சேர்க்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, வழிபாட்டு மையங்களின் உருவகப்படுத்துதல் நடந்தது.
“கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என நமது கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அந்தக் காலங்களில், கோயில்கள் பொருளாதார மையமாகச் செயல்பட்டதால் சமூகத்திற்கான வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, கடன் வாய்ப்பு, அன்னதானம் எல்லாம் கோயில்களின் தினசரி செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தன. அதனால் கோயில்கள் இல்லாத ஊரில் ஒருவன் குடியேறினால், அவனுக்கான பொருளாதார வாய்ப்புகள் கிடைக்காமல் போகும். வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால் கோயில்கள் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் எனச் சொன்னார்கள்.
15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, தமிழகத்தில் பெரும் ராஜ்ஜியங்கள் எல்லாம் காணாமல் போய், நிலப்பகுதிகள் எல்லாம் விஜய நகர சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியின் கீழ் வந்தன.
விஜய நகர சாம்ராஜ்ஜியங்கள், கீழ் இருந்த பகுதிகளை நிர்வாகிக்க சிற்றரசர்கள் என்கிற அமைப்பிற்குப் பதில் பாளையக்காரர்கள் என்கிற அமைப்பை முன்னிறுத்தி 1529ஆம் ஆண்டு வாக்கில் 72 பாளையங்களாக உருவாக்கினார்கள்.
இந்தப் பாளையக்காரர்களின் முக்கிய வேலையாக இருந்த வரி வசூலித்தல், பாளையக்காரருக்கென ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டம் ஒழுங்கை நிர்வகித்தல், ராஜ்ஜியத்திற்குத் தேவையான போர்ப்படையை உருவாக்குதல், மக்கள் நலனைப் பாதுகாத்தல் என்கிற எல்லைக்குள் முடங்கி விட்டது.
தமிழக நிலப்பரப்பில் பெரிய அரசர்களோ சிற்றரசர்களோ இல்லாமல் போகவே கோயில்களுக்கான பொருளாதார முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.
அப்படிக் குறையத் தொடங்கிய காலத்தில், பொருளாதார மையங்களாக விஜய நகர ஆட்சி மையம்தான் இருந்தது. அப்படியான நிலையில் விஜய நகர அரசர்களின் மதிப்பினைப் பெற்ற கோயில்களுக்கு மட்டுமே தானங்கள் கிடைத்தன.
காலங்கள் போகப் போக, அந்தப் பழமொழியில் இருந்த பொருளாதார நோக்கம் மறைந்து, ஆன்மீக நோக்கம் பதிக்கப்பட்டது. அதாவது கடவுளை வழிபட முடியாத ஊரில் வாழ வேண்டாம் என்றாகிவிட்டது.
இப்படியான நிலை தான் உலகம் முழுக்க நடப்பில் இருந்தது. பொருளாதார மையங்களின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் குரல்கள் வரத் தொடங்கின. அதில் முக்கியமான குரல் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டிலுடையது.
பணம் மலட்டுத் தன்மை கொண்டது. மலட்டுத் தன்மை கொண்ட ஒன்றை மக்களுக்குக் கடனாய்த் தருவது பாவம். ஒரு பசுவைக் கடனாய்க் கொடுத்தால் அது கன்று போடும், அதனால் திரும்பக் கேட்கும்பொழுதும் பசுவையும் கன்றையும் சேர்த்துக் கேட்கலாம். பணம் குட்டி போடாத, உயிர் இல்லாத ஒன்று, அதனைக் கடனாய்க் கொடுத்துவிட்டு வட்டியுடன் திரும்பக் கேட்பது எந்த வகையில் நியாயம் ? எனக் கேள்வி எழுப்பினார் அரிஸ்டாட்டில்.
பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையே கடன் கொடுத்தல், திரும்ப வட்டியுடன் வசூலித்தல்தான். அதுதான் பல வளர்ச்சிகளுக்கான வழியை ஏற்படுத்தித்தரும். மேலும் வட்டி வசூலித்தல் என்பது ஆன்மீக ரிதியிலான பாவ செயல் என்று வழிபாட்டு மையங்கள் சொல்ல தொடங்கின.
அதென்ன ???
தொடரும்.
3 comments