“நீங்கள் உங்களுக்கு அப்பாவிற்குத்தான் பிறந்தீர்கள் என்பது கட்டாயமாகத் தெரியுமா?” என்று உங்களிடம் யாராவது கேட்டால் உடனே கோபம் வந்து கேட்டவரை அடிக்கக் கை எடுப்பீர்கள் அல்லது கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்திருப்பீர்கள்.
ஏன்? என்று உங்களிடம் கேட்டால் “அதெப்படி அவன் அப்படிக் கேக்கலாம் ?” எனப் பதில் வரும் உங்களிடம் இருந்து. ஏனென்றால் சில விஷயங்கள் உணர்வு சம்பந்தப்பட்டவை. எவ்வளவு படித்திருந்தாலும் உணர்வு ரீதியாகச் சிலவற்றைக் கையாள முடியாது.
ஆனால், இதே கேள்வியை அறிவார்ந்த முறையில் கையாளும் பொழுது, “என் அம்மா, அப்பா இருவருக்கிடைய ஆழமான காதல் இருக்கிறது, அந்தக் காதலுக்கான சாட்சியே நான். மேலும் என்னைக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் என் அம்மா அப்பா இருவரது சாயலும் எனக்கு இருக்கிறது” எனப் பதில் வரும். பல அறிவு சார்ந்த விஷயங்களுக்கு இப்படியான பதிலைத் தருவோம். ஆனால் பல நேரங்களில் உணர்வு சார்ந்த விஷயங்களை அறிவார்ந்த முறையில் பலர் அணுகுவது இல்லை.
உணர்வு சார்ந்த விஷயங்களில் பக்தி, கடவுள் நம்பிக்கையும் ஒன்று.
ஆத்திகர்கள் உணர்வுகளின் மூலம் கடவுள் என்கிற கோட்பாட்டை அணுகுகிறார்கள். நாத்திகர்கள் கடவுள் கோட்பாட்டை அறிவின் மூலம் அணுகுகிறார்கள். இதனாலேயே இரு தரப்புக்கும் விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விஷயத்தை நினைவில் வைத்துகொள்ளுங்கள். இனி வரப்போகும் அத்தியாயங்களில் நான் சொல்லப் போகும் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளச் சுலபமாக இருக்கும்.
போன அத்தியாயத்தில், மரணமடைந்த தலைவனைக் கடவுளாக்கி வழிபட ஆரம்பித்தனர் எனச் சொல்லியிருந்தேன். வரலாற்றில் பொருளாதாரத்தைக் கடவுள் வழிபாட்டு மையத்தைத் தவிர்த்துவிட்டு ஒரு வார்த்தை கூட எழுத முடியாது என்பதுதான் நிஜம்.
காலம் போகப் போக.. கடவுளாக்கப்பட்ட, மரணித்த தலைவனுக்கு சாதாரண மனிதர்களுக்கு மீறிய சக்தி இருந்ததாகவும், அவற்றைச் செயல்படுத்தக் கூடுதல் அங்கங்கள் இருந்ததாகவும் நம்பத் தொடங்கினர். தலைவனை நேரில் பார்த்ததில்லை என்றாலும் அவரைப் பற்றிய பிம்பம், சிறு வயதில் இருந்தே கேட்டு வந்த கதைகள் மூலம் சமூக மக்களின் ஆழ்மனதில் ஆலமரமாய் கடவுளான தலைவன் பிம்பத்தின் மீது வளர்ந்திருக்கும்.
ஆலமரமாய் வளர்ந்துவிட்ட நம்பிக்கையின் பக்கம் இன்னொரு சமயத்தில் வருவோம்.
வணிகப் பொருளாதாரம் வழியாக வளர்ந்த வழிபாட்டு மையங்கள், வழிபாட்டு மையங்கள் மூலம் வளர்ந்த பொருளாதார மையங்கள் என இரண்டு வகைகள் உண்டு எனச் சொல்லும்பொழுது எல்லாம், அந்தக் கூற்றை எதிர்த்துப் பலர் விமர்சனம் செய்வதுண்டு. சிலவற்றில் எது, எதனை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தது? எனச் சொல்வது கஷ்டமாக இருக்கும்.
சரித்திர ஆய்வாளர்களிடையே எப்பொழுதும் விவாதிக்கப்படும் தலைப்பாக இருப்பது ஐரோப்பாவின் கிறிஸ்தவ மயமாகுதல்தான். இன்றைய ஐரோப்பாவில், கிட்டத்தட்ட 44 நாடுகள் இருக்கின்றன. அதுவும் பண்டைய ஐரோப்பா நிலப்பகுதியில் கணக்கில் அடங்கா ராஜ்ஜியங்கள் இருந்ததாகச் சொல்கின்றனர்.
அந்தக் கணக்கில் அடங்கா ராஜ்ஜியங்களிலெல்லாம், தனித்தனி இனக்குழுவும் அந்த இனக்குழுவிற்கென்றே பிரத்தியேக வழிபாட்டு முறைகள் மூலமாகப் பிரத்தியேகக் கடவுளரை மக்கள் வழிபட்டு கொண்டிருந்தனர், அதே கடவுளரை இப்பொழுதும் மக்கள் வழிபட்டுக் கொண்டு இருக்கின்றனரா? என்றால் இல்லை.
காலப்போக்கில் மக்கள் அவற்றை எல்லாம் மறந்து விட்டனர். எப்படி தமிழ்நாட்டில் எல்லோரும் வன தேவதைகள், கிராம தெய்வங்கள், வட்டார வழிபாட்டு முறைகள், சிறு தெய்வங்கள் எனப் பலவற்றை மறந்துவிட்டோமோ அது போலதான்.
அப்படிப் பல கடவுளரை வழிபட்டுக் கொண்டிருந்த ஐரோப்பாவில், இன்றைய தேதியில் கிறிஸ்துவ மதத்தைத்தான் மக்கள் அதிகம் பின்பற்றுகிறார்கள் எனப் பொதுவெளியில் கிடைக்கும் தகவல் களஞ்சியங்கள் சொல்கின்றன.
இந்த நிலைக்குக் காரணமாகப் பலர் கருதுவது, 1 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் வணிகரான தியத்தீராவின் லீதியாள்.
தியத்தீரா என்னும் நிலப்பகுதி, அந்தக் காலத்தில் துணிகளுக்குப் போடப்படும் வண்ணச் சாயங்களுக்குப் பெயர் போனது. அதுவும் ஊதா நிறச் சாயம். இந்த ஊதா நிறச் சாயத் துணிகள் விலை உயர்ந்தவை. பணக்காரர்களும் அதிகாரம் படைத்தோரும் மட்டுமே வாங்க முடியும். அத்தகைய துணிகளை வைத்துதான் தியத்தீராவின் லீதியாள் வணிகம் செய்து கொண்டு இருந்தார்.
கிறிஸ்துவத்தை ஏற்று கொண்ட லீதியாள், தனது வணிகத் தொடர்புகள் மூலம் சமூகத்தின் மேல்தட்டு மக்களிடம் கிறிஸ்துவ மதத்தைக் கொண்டு போனார் எனச் சொல்லப்படுகிறது. அவர் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு 300 ஆண்டுகள் கழித்து வாழ்ந்த அரசர் முதலாம் கான்ஸ்டன்டைன், ஆடைகள் மற்றும் பல்வேறு விதமான துணி உடைகளின் மீது விருப்பம் கொண்டவர். இவரது காலத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.
அந்தக் காலத்தில், உடைகளில் ஊதா நிறமென்பது அரச குடும்பத்தினர், அதிகாரம் படைத்தவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் தியத்தீராதான் ஊதா நிறச் சாயத்திற்குப் பெயர் போனது.
மன்னர் கான்ஸ்டன்டைன் மாக்செண்டியஸை கி.பி. 312ஆம் ஆண்டு மில்வியன் பாலம் போரில் வீழ்த்தி வெற்றியடைந்த பிறகு, போருக்கு முன் பார்த்த ஒரு சின்னத்தால்தான் வெற்றி பெற்றோம் என நினைத்தார்.
அது வரையில் சட்டத்தால் ஏற்கப்படாத மதமாக இருந்த கிறிஸ்துவத்தை, சட்டத்தால் ஏற்கப்பட்ட ஒன்றாக மாற்றினார். மாற்றியதோடு மட்டும் இல்லாமல், தான் ஆண்ட நிலப்பகுதிகளில் கிறிஸ்துவத்தைப் பிரதான மதமாகக் கொண்டு வந்தார்.
மேலும், கிறிஸ்தவ மதத்திற்குச் சட்ட ரீதியான பாதுகாப்பைத் தந்து, தேவாலயத்திற்குப் பல பொன், பொருள், நிலம் எனத்தந்தார். மேலும் வரிச் சலுகைகளும் தந்தார்.
கான்ஸ்டன்டைன் மட்டுமல்ல.. உலகளவில் பல்வேறு நிலப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்த மதங்கள், சமயங்கள் எல்லாம் மன்னர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன.
தொடரும்…