வரலாற்றில் பொருளாதாரம் – 9

போன அத்தியாயத்தில் சட்டங்கள், மற்றும் அதனை ஆவணப்படுத்துதல் பற்றிச் சொல்லிருந்தேன். மேலும், புணர்வு அது சார்ந்த குற்றங்களைக் குறைக்க திருமணம் என்கிற கோட்பாடு உருவானது என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தத் திருமணம் என்னும் கோட்பாடுதான் இன்றைய நவீன பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இதனைப் புரிந்துகொண்டால் பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சியின் பாதையை எந்த விதச் சிக்கலும் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும்.

நான் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியிலும் அதனைச் சார்ந்த குடியிருப்புப் பகுதியிலும்தான் வளர்ந்தேன். அங்கு எல்லோரும் சொல்லி வைத்தது போல் காலையில் தொழிற்சாலைக்குக் கிளம்பிப் போவார்கள். எல்லாம் பெரிய அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள்தான். அதனால் அதில் வேலை செய்யும் பொழுது உடற்சோர்வு மற்றும் மனச்சோர்வு என இரண்டும் கலந்து ஊழியர்களைப் படுத்தி எடுத்துவிடும்.

அந்த ஊழியர்கள் எல்லோரும் சொல்லி வைத்தது போல் வேலை முடிந்த கையுடன் நேராக வீட்டிற்குத்தான் வருவார்கள். தங்களுக்கென்று செலவு எதுவும் செய்யாமல் எல்லாவற்றையும் வங்கியில் சேமித்து வைப்பார்கள்.

சரி.. எல்லோரும் முதல் தலைமுறையாகப் படித்து வேலைக்கு வந்தவர்கள், அதனால் அப்படி என நினைத்திருந்தேன். அப்படிக் கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தில், பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியையும் அவர்களுக்கான சிறப்பான வாழ்வாதாரத்தையும் அமைத்துக் கொடுத்தனர். ஏதோ ஒரு வகையில், அவர்களது கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் அடுத்த தலைமுறையின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்துகிற மாதிரி திட்டமிட்டு இருப்பார்கள்.

சரி, இதெல்லாம் இப்படியான ஒரு வேலை வாய்ப்பு அமைந்ததினால் தான் இப்படிச் செய்கிறார்கள் என நினைத்திருந்தேன். பொருளாதாரம் வரலாற்றில் பயணித்து வளர்ந்த விதத்தை வாசிக்கும் வரைக்கும்.

தொழிற்சாலைகளில் கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றும். தன்னுடைய சந்தோஷங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஏன் இவர்கள் இப்படி உழைக்க வேண்டும்? இந்தக் கேள்வி எனக்கு மனதில் தோன்றியபொழுது நான் எனது பதின்ம வயதில் இருந்தேன். மேல் சொன்ன கேள்வியும் அதனைச் சார்ந்த மற்ற கேள்விகளும். சொல்லப் போனால் அத்தகைய கேள்விகளால் விளைந்த தேடல்கள்தான் இந்தத் தொடரை எழுதக் காரணமாய் அமைந்தது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பொருளாதாரத்தைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் நாம் மனித உளவியலைப் பற்றியும் பேச வேண்டும். ஒரு மனிதன் ஏன் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்க வேண்டும்? ஒரு மனிதன் ஒரு கட்டத்திற்கு மேல் ஏன் தனது விருப்பங்களைச் சுருக்கிக் கொண்டு வாழ வேண்டும்? ஒரு மனிதன் ஏன் தனது குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு அவர்களுக்குத் தன்னாலான சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொடுக்க, தொடர்ந்து உழைக்க வேண்டும்?

எந்த மிருகமாவது தனது குட்டி பெரிய மிருகமாகும் வரைக்கும் தொடர்ந்து வேட்டையாடித் தந்துகொண்டு இருக்குமா? அல்லது ஒரு பகுதியில் வேட்டையாடும் உரிமையையும் உருவாக்கி, தனது அடுத்த தலைமுறைக்குத் தருமா?

எனக்குத் தெரிந்து. ‘இல்லை’ என்பதுதான் பதில்.

இவற்றை எல்லாம் ஏன் மனிதன் மட்டும் செய்கிறான்? இவற்றைச் செய்யாத மிருகங்களிடம் சொத்து, வணிகம் போன்றவை உருவாகவில்லை. ஆனால் இதனைச் செய்யும் மனிதர்களிடம் மட்டும் இவை உருவாகி பயன்பாட்டில் இருப்பதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் பொருளாதாரம் மனிதர்களுக்கு மட்டுமானது என்பது பலரது எண்ணம். சரி, ‘மிருகங்கள் அதைச் செய்திருக்கிறதா? இதனைச் செய்திருக்கிறதா?’ என்றெல்லாம் சில வரிகளுக்கு முன் கேட்டேன். எந்த மிருகமும் அவற்றைச் செய்வது இல்லை. ஆனால் மனிதர்கள் செய்கிறார்கள்.

காட்டில் மிருகங்கள் வேட்டையாடிகளாக இருக்கின்றன. ஆனால் வேட்டையாடியாக இருந்த மனிதன் இன்றைய உலகின் இப்போது இருக்கும் பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறானென்றால் அதற்கு, சமூகமாக வாழ்வதும் திருமணம் என்கிற கோட்பாட்டுடன் வாழ்வதும்தான் முக்கியமான காரணம். அவற்றைப் பற்றி எல்லாம் முந்தைய அத்தியாயங்களில் பேசி இருக்கிறேன்.

பெண்ணை தனக்கு என்று உரிமை கொண்டாடி, அவளை வெளி ஆட்களின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பிடத்தில் தங்க வைப்பான். அந்தச் சமூகத்தில், தனக்கென்று ஒரு தனிப்பட்ட இருப்பிடத்தைச் சம்பாதித்துக் கொள்ள இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும், அல்லது வேட்டையாட வேண்டி இருக்கும். முன்பு தன் ஒருவனது பசிக்கு மட்டும் வேட்டையாடிச் சாப்பிட்டவன், தன்னை நம்பி வந்த பெண்ணிற்கும் சேர்த்து வேட்டையாட ஆரம்பிக்கிறான். அவளுக்கும் சேர்த்து வேட்டையாடி அவளுடன் வாழ்கிறான். அவர்களிருவரும் ஒரு குடும்பத்தை உருவாகுகிறார்கள்.

குடும்பத்திற்குத் தேவையான, தினந்தோறும் பயன் படுத்துகிற பொருள்களைச் சம்பாதிக்க தினமும் வேட்டைக்கோ, அல்லது காட்டு வேலைக்கோ போக ஆரம்பிக்கிறான். அப்படி அவன் தினந்தோறும் வேலைக்கு போவதினால் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களைப் பின்னர் பேசலாம். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் வாழத் தொடங்கும் பொழுது இவளுக்காகத்தானே கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன் என்கிற உரிமையில் அவளைப் புணர்கிறான். பின் புணர்கிறார்கள்.

பலன் குழந்தை.

குழந்தைகள் பிறப்பு – பொருளாதார வளர்ச்சி தொடர்பு இருக்குமா?

தொடரும்..

Author

Related posts

சிரிப்பால் சமூகத்தைச் செதுக்கிய யதார்த்தக் கலைஞன்

தமிழே அமிழ்தே – 4

அழகின் வெளிச்சம்.