போன அத்தியாயத்தில், “உண்மையிலேயே அவுரங்கசீப்பின் ஆட்சியில் கோயில்கள் இடிக்கப்பட்டிருக்குமா?” எனக் கேட்டு முடித்திருந்தேன். சிலர், கட்டாயம் அப்படித்தான் நடந்தது எனத் தற்காலத்தில் விவாதம் செய்துகொண்டு இருக்கின்றனர். சரி, அவுரங்கசீப் இடித்ததாகச் சொல்லப்படும் சில பிரபல கோயில்கள் எவை என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேசலாம்.
வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் விஸ்வேஸ்வரர் கோயில்.
மதுராவில் இருக்கும் கேசவ் தேவ் கோயில்.
ஒடிசாவில் இருக்கும் புரி ஜெகந்நாதர் கோயில்.
குஜராத்தில் இருக்கும் சோமநாதர் கோயில்.
இந்தக் கோயில்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் முக்கிய வணிகப் பொருட்களாக எவையெல்லாம் இருந்தன எனப் பார்ப்பது முக்கியம். ஜவுளிப் பொருட்கள் (முக்கியமாக மஸ்லின் துணி & பட்டுத் துணி வகைகள்), விவசாயப் பொருட்கள், கச்சா பட்டு, வெடிமருந்து போன்றவை முக்கியமானவை. இதில் கடல் சார்ந்த வணிகத்தில் ஜவுளிப் பொருட்களுக்கான தேவை அதிகமாக இருந்தது.
இப்போது அவுரங்கசீப் இடித்ததாகச் சொல்லப்படும் கோயில்களின் வணிகப் பக்கத்தைப் பற்றிப் பார்ப்போம். வாரணாசியில் கங்கை நதிக்கரை அருகில் அமைந்திருக்கும் விஸ்வநாதர் கோயில் மற்றும் விஸ்வேஸ்வரர் கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் ஜவுளி வணிகத்தில் முக்கிய மையங்களாக இருந்தன.
அக்காலத்தில் கங்கை நதி, உள்நாட்டுச் சந்தையை வெளிநாட்டுச் சந்தை மையமான தாம்ரலிப்தி துறைமுகத்தோடு இணைக்கும் வணிகப் பாதையாக விளங்கியது. இதனால்தான் என்னவோ, பண்டைய இந்தியாவில் காசியில் மட்டும் கங்கை நதிக்குச் சிறப்பான இடம் தரப்படுகிறது. சில அத்தியாயங்களுக்கு முன்பு நாம் பார்த்த, “கோயில்களுக்கு இடையே பண்டைய காலத்தில் இருந்த வணிகத் தொடர்பு” என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டு இதைப் புரிந்து கொள்ளவும். கங்கை நதி சார்ந்த வணிகப் பாதையைப் பற்றி நாம் பேச வேண்டுமென்றால், நவீன கால வங்காளதேச நிலப்பரப்பைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும். அதனைப் பற்றிப் பின்னர் சொல்கிறேன்.
வாரணாசியை அடுத்து மதுரா. இந்த இடம் பண்டைய இந்தியாவில் பல்வேறு வணிகப் பாதைகள் கடக்கும் முக்கியப் புள்ளியாக இருந்துள்ளது. அரேபியக் கடற்கரையில் அமைந்திருக்கும் குஜராத் சோமநாதர் கோயில் மற்றும் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்திருக்கும் ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயில் – இவை இரண்டும் இந்திய நிலப்பரப்பில் மேற்கத்திய நாடுகளின் வணிகத்தையும் கிழக்கத்திய நாடுகளின் வணிகத்தையும் இணைக்கும் மையங்களாக இருந்தன.
ஆக, அவுரங்கசீப் வணிக நோக்கத்திற்காக மேற்சொன்ன இடங்களைக் கைப்பற்றும்போது, பொருளாதார மையங்களாக இருந்த வழிபாட்டு மையங்கள் அதுவரை கிடைத்துக்கொண்டிருந்த வருமானத்தை இழந்ததால், கோயிலைச் சார்ந்து வணிக லாபத்திற்காக உருவான சமூகம் இப்படியாகப் பேசியிருக்கலாம் என நினைக்கிறேன். கோயில் எப்படிப் பொருளாதார மையமாக விளங்கியது என முன்பு சொல்லியிருக்கிறேன் என்பதை நினைவுபடுத்துகிறேன். கோயில்களில் அதுவரையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொன், பொருள், சொத்துகள் எல்லாம் அவுரங்கசீப் பின்பற்றிய இஸ்லாமிய வணிக மையங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும்.
இந்த இடத்தில் ஓர் உதாரணத்தைச் சொன்னால் புரிந்துகொள்ளச் சுலபமாக இருக்கும். பேரரசர் இராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில், பொருளாதார ஆதாரங்களை இழந்த பின்னர் சமூக மக்கள் அந்தக் கோயிலைக் கவனிப்பின்றி விட்டுவிட்டனர். காலங்கள் மாற, அந்தக் கோயிலின் பெருமைகளை மறந்தனர்; கோயிலைக் கட்டியவரை மறந்தனர். கோயிலைப் பற்றிய விவரங்களை மக்கள் முற்றிலும் மறந்துவிட்ட நிலையில், ஓர் ஆங்கிலேயர் தனது ஆர்வத்தால் கண்டுபிடித்து 1887-ஆம் ஆண்டு சொன்ன பின்னர்தான் கோயிலின் சரித்திரத் தன்மையை உணர்ந்துகொண்டனர்.
அவுரங்கசீப் வணிக நோக்கத்திற்காகக் கலிங்கத்தைக் கைப்பற்றுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே, அரேபியர்கள் மேற்கத்திய நாடுகளில் வணிகப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தனர். அப்படிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்ததினால், “அவர்கள் வைத்ததுதான் விலை” என்கிற நிலை இருந்தது. அவர்களை விட்டுவிட்டால் அப்பொருட்களை வேறு எங்கிருந்து வாங்குவது என்பதோ அல்லது அந்தப் பொருட்கள் கிடைக்கும் இடத்திற்குப் போகும் வழியோ தெரியாமல் இருந்தனர். அதனை ரகசியமாக வைத்திருக்க அரேபியர்கள் பல கதைகளைப் புனைந்து வணிகச் சந்தையில் உலாவ விட்டனர். அந்தக் கதைகளைப் பற்றிச் சில அத்தியாயங்களுக்கு முன்பு பார்த்தோம்.
அந்தக் கதைகளெல்லாம் அரேபியர்கள் நிர்ணயித்த அதிக விலையை நியாயப்படுத்துவதாக இருந்தன. இந்த அதிக விலையைக் கடல் சார்ந்த அரேபிய வணிகர்களிடம் கொடுத்து வாங்கிய உள்நாட்டு வணிகர்கள், லாபம் பார்க்க இன்னும் அதிக விலை வைத்து விற்றனர். “ரோமானியத் தங்கம் முழுவதும் இந்தியாவிற்குச் செல்கிறது” என்று ரோமானிய அறிஞர் பிளினி மூத்தோன் சொன்னார் என்பதைப் பற்றி முன்பு சொல்லியிருந்தேன்.
இந்த அதிக விலை மக்களுக்குப் பெரிய பிரச்சனையாக மாறியது. அது ஆட்சியாளர்களிடம் சென்றபோது அவர்கள் என்ன செய்தனர்?
தொடரும்.