நீரோட்ட நெல்வயலில் நித்தம் சிறுதிருட்டாம்
ஊரோட்ட நேரமில்லை உள்பகையே – ஏரோட்டும்
தம்பியின் கைகள் தளராது வேலியிடக்
கம்பிகளின் காட்டில் கதிர்
காலைக் கதிரவன் கண்ணால் கவிபாடி
மாலை மயங்குவான் மாவெளியில் – சோலைதனில்
செம்பந் திறங்கிடச் சேர்ந்தது வேலிமுகம்
கம்பிகளின் காட்டில் கதிர்
மாலா மாதவன்
காலையிலே எழுந்தவுடன் கதிரவனும் திகைத்திட்டான்
கோலமாக என்மீதில் கோடுபோட்ட தவனாரு
வேலையில்லா மனிதர்களை எழுப்பிடவோ இயலாது
ஓலைக்குடிசையிலே தினமென்னைப் பார்த்தவன்தான் செய்திருப்பான்
வாலைக்குமரியவள் வயிறாரச் சாப்பிடவே நானெழுந்தேன்
மாலையவன் திரும்புங்கால் வஞ்சியவள் காத்திருப்பாள்
வட்டிலிலே சோறாக்கி வெஞ்சினமும் உடன்வைத்து
கட்டியணைத்து காதலுடன் பரிமாறித் தந்திடுவாள்…
கம்பிகளின் காட்டில் கதிர்.
— சங்கர் குமார்
இரவில் துயின்று விடியலில் கனிந்து
விடுமுறை இல்லா கடமை.
கம்பிகளின் காட்டில் கதிர்* உதயம்
கடலின் விளிம்பிலும் எழும்பும்.
சிவந்து உருண்ட ஆதவனை
கனியென எண்ணி
அனுமன் தின்றது வியப்பில்லை
–கண்மணி பாண்டியன்
ஒயாது ஒளிர்கின்றாய்
தேயாது பிறக்கின்றாய்
வருகையும் செல்கையும்
ஒன்றாக இருக்கும் உன்போல்
இருமைகள் அனைத்தையும்
ஒன்றெனக் கொள்ளும் வரம் தா
–சங்கரநாராயணன் உஷா.
இரவா பகலா தெரியவில்லை
இருள் பிரிகிறதா கவிழ்கிறதா
நிழலாய் மாறுகின்ற பிம்பங்கள்
நிஜமாய் குழப்பும் கோளங்கள்
தொடுவானத்தில் தங்க பந்துகள்
தோற்றத்தில் அத்தனை ஒற்றுமை
பயணம் துவங்கும் பகலவனா
பௌர்ணமி பூரிப்பில் முழு நிலவா
–பவளமணி பிரகாசம்.வ்