“கதவு திறந்து தான் இருக்கு. வா”
**
வாயை நன்றாகத் திறந்து கொஞ்சம் பின்பக்கத்தைச் சுருக்கி சாக்ஸை வலதுகாலில் நுழைத்து நிமிர்கையில் செல்லிடைப் பேசியின் சிணுங்கல்
பார்த்தால் மேலாளர். உள்ளே அறையுள் உடை மாற்றிக் கொண்டிருந்த மனைவியும் பெண்ணும் இன்னும் வரவில்லை.
எடுத்தான்.
“ஹலோ.. குட் ஈவ்னிங். என்ன பண்ணறே?”
கொஞ்சம் வந்த கோபத்தை மறைத்து “சொல்லுங்க சார்”.
’அதான் சொன்னேனே. நீ என்ன பண்ணறே. அந்த மார்த்தாண்டம் பக்கத்துக் கிராமக் கஸ்டமர்க்கு கிஃப்ட் கொண்டு போய்க் கொடுத்துடு”
“சார். வெளிய கிளம்பிக்கிட்டுருக்கேன்.”
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். .இன்னிக்கு கிறிஸ்ட்மஸ்.. நீ என்ன பண்ணறே.. பேங்க் விஷஷ் யூ மெர்ரி கிறிஸ்ட்மஸ்னு சொல்லி பரிசைக் கொடுத்துட்டு வந்துடு. அப்புறம் என்னன்னா.”
“சார்”
“நாம கொடுத்த லோனோட ரெண்டு இ எம் ஐ கட்டாம இருக்கார் இல்லியா. அதப்பத்தி.”
“கண்டிப்பா ஞாபகப் படுத்தறேன் சார்”
“அதான் கூடாது. ஜஸ்ட் நம்ம பேங்க்கோட வாழ்த்துகளச் சொல்லிட்டு பேங்க்குக்கு முடிஞ்சப்ப வரச் சொல்லிடு.. நாம என்ன சும்மாவா லோன் கொடுத்துருக்கோம்.? செக்யூரிட்டியோடத் தானே. ”
“..”
“என்ன பேசமாட்டேங்கற? கோபமா? நீ நயன் தாரா மாதிரிப்பா.. உன் திறமை உனக்கே தெரியாது.. போய் விட்டு வா”
ஃபோனை மெளனமாக வைத்து விட்டு நிமிர்ந்தான். விரக்தி கொஞ்சம் நெஞ்சில் குழுமியது.
தனியார் வங்கியில் வேலை பார்த்தால் இப்படித் தான். ஞாயிற்றுக் கிழமை அதுவும் கிறிஸ்ட்மஸ்.. வேலை சொன்னால் போகத் தான் வேண்டும்.
நயன் தாராவாம். எனக்கும் நாற்பது வயசாம்..சிரிக்கிறார் அவர். முடியாத் போய்யா எனச் சொல்லவும் முடியாது. எப்படி வேலை செய்தேன் என்னும் விஷயம் தமிழில் பெர்ஃபார்மன்ஸ் அப்ரைஸல் என்பார்கள் – அது விரைவில் இருக்கிறது.
உள் சென்றால் – உரையாடலைக் கேட்டக் குட்டி மகளுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
“நீங்க போய்ட்டு வாங்கப்பா.. நாங்க இங்கனக்குள்ள ஷாப்பிங்க் போய்ட்டு வந்துடறோம். வர்றச்சே கேக் மறந்துடாத. சரியா. கீழே குனி” குனிந்தால் கன்னத்தில் முத்தமிட்டுச் சிரித்தாள்.. அந்தப்பக்கம் உள்ள மனைவியைப் பார்த்தால் அவள் கண்ணில் அனல்.
“போய்விட்டுச் சீக்கிரமா வந்துடறேன்” என அவள் பதிலை எதிர்பார்க்காமல் உள் சென்று பேங்க் கொடுக்கும் அன்பளிப்புகள் ( ஒரு பேனா, ஒரு கப் அண்ட் சாஸர் செட், ஒரு டைரி,ஒருடேபிள் கேலண்டர்) எடுத்துக் கொண்டு வெளியில் வந்து பைக்கை எடுத்து வடசேரியில் இருந்து கிளம்பி நாகர்கோவிலில் பேக்கரியில் நிறுத்தி கேக் வாங்கிக் கொண்டு நாகர் கோவில் கன்னியாக்குமரி பாதையைத் தொட இருபத்தைந்து நிமிடங்கள்.
பின்னும் விரட்டினான்.. கொஞ்சம் ஏழுமணிக்கு இருட்டாய்த் தான் இருந்தது..சாலையில் அவ்வளவாக வாகனங்கள் இல்லை.. இருமருங்கிலும் சிலச் சில சிகப்பு பச்சை மஞ்சள் கிறிஸ்ட்மஸ் நட்சத்திரங்கள் சில வீடுகளில் ஜொலித்தன.
”என்னை இங்கு போகச் சொல்லி விட்டு மேலாளர் வேறு கிறிஸ்ட்மஸ் பார்ட்டிக்குச் சென்றிருப்பார்” இவன் மனதிற்குள் சற்றே பொருமல்.
பின்னால் சென்ற சர்ச்களில் முழுக்க சீரியல் அலங்காரங்கள், மற்றும் வண்ண விளக்குகள். அங்கும் அவ்வளவாகக் கும்பல் இல்லாமல் தான் இருந்ததா இல்லையா எனத் தெரியவில்லை..ஏனெனில் இவனது வேகம்.
ஒன்றே கால் மணித்துளியில் மார்த்தாண்டம் முன்னால் இருந்த கிராமத்திற்கு வலது கைப்பு|றம் திரும்பி உள் சென்று மேலாளர் அனுப்பிய வரைபடத்தை செல்ஃபோனில் பார்க்க அந்த உள் தெருவைக் காட்டியது.
திருப்பினால் – கொஞ்சம் இருள் தான் அந்தத் தெருவில். மூலையில் சோகையாய் ஒரு தெருவிளக்கு. நடுவிலேயே அந்த வீடு.
கொஞ்சம் இருளோ என்று தான் இருந்தது. குட்டி கேட். அதைத் தாண்டி நடை பாதை. அதைத் தாண்டிக் கதவு. அங்கே முகப்பில் சோகையாய் ஒரு மஞ்சள் விளக்கு.
ஏன் கிறிஸ்ட்மஸ் கொண்டாட்டத்திற்கான அறிகுறியே தெரியவில்லை? வண்ணச் சரக் குட்டி விளக்குகள், விளக்கு நட்சத்திரம் போன்றவை – என மனதில் யோசித்தவண்ணம் அழைப்பு மணியை அழுத்திய போது தான் இந்த “ கதவு திறந்திருக்கிறது வா” என்ற குரல்.
**
உள் நுழைந்தான்.
ஒரு சிறிய ஹால் . சுவர்களில் பச்சை வர்ணம். திறந்தவுடன் எதிர்ச் சுவரில் அருகில் தென்பட்ட ஒரு கட்டில். கட்டிலில் படுத்திருக்கும் உருவம்.. முழுவதும் மேக்ஸி என்பது போன்ற உடை.. தலையில் வெண்ணிற மேகங்கள் சூழ்ந்தாற்போன்ற நரை.. அந்த மேகத்தின் விள்ளல் விழுந்தது போன்ற புருவம். சுருக்கம் விழுந்த முகம். கூர்மையான மூக்கு. வெளிறிய உதடு. வயதான பெண்மணி. படுத்திருந்தாள். பழுப்பு நிறக் கண்களின் பின்னால் கேள்விக் குறி.
“ஃப்ரான்ஸிஸ் வீடு இதானே?”
“ஓ சேவியருக்குத் தெரிந்தவனா? வா உட்கார். சேவியர் வரலையே. எப்போ வருவான்னு. ஃபிலோக்குத் தெரியும். அவளும் வெளில போயிருக்கா இப்ப வந்துடுவா. உக்கார்ப்பா”
சுற்றிலும் பார்க்க ஒரு காலத்தில் பச்சையாய் இருந்த நிறம் மழுங்கிய ப்ளாஸ்டிக் நாற்காலி. அமர்ந்தான். இடது பக்கச் சுவரில் ஒரு பலகை. அதில் ஜீஸஸ் புகைப்படம். அருகில் ஒரு ஏற்றப் படாத குட்டி மெழுகுவர்த்தி. அதுசரி ஃபிலோ யார்?
இருபது லட்ச ரூபாய்கள் வங்கிக் கடன் வாங்கியிருக்கும் நபரின் வீடா இது?
”சேவியர் ஹார்ட் வொர்க்கர் யூ நோ.. நல்லாப் படிச்சான். அழகா காலேஜ் முடிச்சு வேலை. பாம்பேல தான். இங்க இருக்கறவரை கிறிஸ்ட்மஸ்க்கெல்லாம் வித விதமா அலங்காரம் செய்வான்.. ஜீஸஸ் மேலப் ப்ரியம் ஜாஸ்தி அவனுக்கு.”
கிழவி சொல்லிக் கொண்டிருந்தாள்.
எப்போ பிலோ வருவாள்? எனக்கெதற்கு இந்த ஃப்ரான்ஸிஸின் முன் கதை எல்லாம்? – கேட்க நினைத்ததைக் கேட்காமல் அவள் சொல்வதைக் கேட்கும் பாவனையில் இருந்தான்.
“மிட் நைட் மாஸ் லாம் போய்ப் ப்ரே பண்ணிட்டு வருவான். க்றிஸ்ட்மஸ் ஈவ்னிங்க்னா நல்லா கொண்டாடுவான்.. ரெண்ட் மூணு நாளைக்கு முன்னாலேயே ட்ரீல்லாம் பண்ணி வச்சு, ஸ்டார்லாம் கட்டி அதகளம் தான் வெச்சுக்கோயேன்.. அந்தக் கிறிஸ்ட்மஸ்க்கு. பாம்பேலருந்து வந்தானா.. என்ன ஆச்சு தெரியுமா.?”
அவர் ஃபோன் நம்பரைக் கேட்கலாமா.? லேப்டாப்பில் இருந்து எடுத்து வந்திருக்கலாமா.?. திடீரென வந்த உத்தரவு.. பின் அனுப்பப்பட்ட லொகேஷன் மேப் பார்த்து வந்திருக்கப் படாதோ?
”அவன் வந்தப்ப கூடவே ஒரு பொண்ணு.. நல்ல கலர். நெகு நெகுன்னு கேசம். பின்முழங்கால் வரைக்கும் இடிச்சுதுன்னா பார்த்துக்கோயேன். பியூட்டின்னா அப்படி ஒரு பியூட்டி. டார்க் ப்ளூ ஐஸ். பேரு ஜெனிஃபராம்”
நீலமணிக் கண்கள். சாண்டில்யனின் யவன ராணி ஏனோ மனதில் வந்து போனாள்.
“மம்மி. இந்தப் பொண்ணப் பிடிச்சுருக்குன்னான். ரெண்டு நாள் இங்க தான் இருப்பான்னான். அதுவும் நல்ல சுபாவம்.. பிலோமினாக்குக் கூட ஜெனிபர் அழகப் பார்த்து கொஞ்சம் ஜெலஸி.. இருந்தாலும் அண்ணியா வரப்போறவ தானேன்னு. சிரிச்சுப் பேசிக்கொண்டு இருந்தா.”
சேவியர் எங்கே போய்த் தொலைந்தான். இந்த ஃபிலோமினா எப்போது வருவாள்.? ஜெனிஃபரை விட அழகில் குறைவா.? எப்படி இருப்பாள்?.
கிழவி அவனைப் பார்க்காமல் விறுவிறு என்று சொல்லிக் கொண்டு போனாள். கண்கள் எங்கோ வெறித்தன.
”மிட் நைட் மாஸ்க்கு எல்லாரும் போய்ட்டு வந்தாங்க. மறு நாள் கிறிஸ்ட்மஸ் ஒரே கலகல தான். நல்ல டின்னர். அதுக்கு மறு நாள் எர்லி மார்னிங் கன்யாகுமரிக் கிட்டக்க இருக்கற சர்ச்சுக்கு ரெண்டு பேரும் போனாங்க”.
”ஹல்லோ. யார்ங்க நீங்க? அம்மா..”
திரும்பினான். வாசலில் ஒரு பெண் நின்றிருந்தாள். வெளிர் நீலச் சுடிதார்.. நெற்றியில் வெறுமை. கூந்தலில் கொஞ்சம் மின்னித் தெரிந்த வெண்மை. காதுகளில் நெகிழியில் செய்யப் பட்ட நீலத் தோடுகள். கழுத்தில் ஒல்லியான வெள்ளிச் சங்கிலியில் கோர்த்திருந்த க்ராஸ் குறுக்கு வடிவம் சுடிதாரைத் தாண்டி வெளிவந்திருந்தது. சற்றே கிழவியின் ஜாடை. நடுத்தரவயது. இவள் தான் ஃபிலோமினாவா?…
எழுந்தான்..
”நான் ஃப்ரான்ஸிஸ் தேடி வந்தேன்.”
கிழவியைப் பார்க்க கிழவி கண்மூடி இருந்தாள்.
“ஃப்ரான்ஸிஸ்?”
“ நான் இந்த… வங்கிக் காரன். ஃப்ரான்ஸிஸ் எங்களது கஸ்டமர். ப்ளாஸ்டிக் தொழிற்சாலை வைத்திருப்பவர். எங்களிடம் கடன்…”
“ஓ.” வெளிறிச் சிரித்தாள். “அவர் ஜோஸப் ப்ரான்ஸிஸ். இல்லையா. அவர் வீடு இந்தத் தெருவிற்கு நேர் பின்னால் இருக்கிறது. அடுத்த தெருவில்.”
“ஸாரி” எழுந்தான். “ நான் போய் பார்த்துக் கொள்கிறேன்”
“அவரைப் பார்க்க முடியாதே. அவர்… ஜோஸப். ஃப்ரான்ஸிஸ் ஊரில் இல்லையே. குடும்பத்தோடு கிறிஸ்ட்மஸ் கொண்டாடுவதற்கு துபாய் போயிருக்கிறார். வருவதற்கு ஒரு வாரம் ஆகும். எனக்கு எப்படித் தெரியும் என்றால்….. நான் அவர் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன்..”
”ஓ” உடன் கொண்டுவந்திருந்த பரிசுப் பொருட்களின் பையை எடுத்துக் கொண்டான். “சரிங்க வரேன்” என நடக்க ஆரம்பிக்க அவள் பின் தொடர்ந்தாள்.
இடைகழியில் “ ஒரு நிமிஷம்” என்றாள் பிலோமினா.
நின்றான்.
“அயாம் ஸாரிங்க்..என் அம்மா பழங்கதைல்லாம் சொல்லிக்கிட்டு உங்க டயத்த..”
“இட்ஸால் ரைட்ங்க..”
அவள் கண்கள் பள பளத்தன.
“அண்ணாவும் ஜெனிபரும் சர்ச்சுக்கு மறு நா போனான்னு சொல்லிக்கிட்டுருந்தாங்கள்ள..அது பலவருஷத்துக்கு முன்னாடி. கிறிஸ்ட்மஸ்க்கு மறு நாள் போனவங்க வரவே இல்லை..”
அவனுக்குப் புரியவில்லை.. கேள்வியாய்ப் பார்க்கத் தொடர்ந்தாள்.
“அந்த வருஷம் 2004. சுனாமி.. சர்ச் விட்டு வந்தவங்கள சுனாமி கொண்டு போய்டுச்சு. உடல்கள் கிடைக்கவே இல்லை”
கண்களில் இருந்து சரசரவென அருவிப் பிராவகம் அந்த ஹால் விளக்கிலிருந்து வந்த மெல்லிய ஒளியில் தெரிய அவன் திகைத்து நின்றான்.
“ம்” பெருமூச்சு விட்டு கண்ணைத் துடைத்துத் தொடர்ந்தாள். “அந்த அதிர்ச்சில தான் இவங்களுக்கு பாராலிட்டிக் அட்டாக் வந்து விட்டது. அண்ட் கொஞ்சம் நினைவுப் பிறழல். எப்போதும் சேவியர் பத்தியே பேச்சு.
ஆனா அப்பா அப்போ இருந்தார். பார்த்துக்கிட்டார். கொஞ்சம் கொஞ்சமா வைத்தியமும் பார்த்துக்கிட்டோம்.. அப்பா ரெண்டு வருஷம் முன்னால காலமாயிட்டார். அப்பாவோட ஃப்ரெண்ட் தான் ஜோசப் ஃப்ரான்ஸிஸ். அவர் கம்பெனில ஏதோ ஒரு வேலை.. ஏதோ ஓடிக்கிட்டிருக்கு. அதனாலயே நான் க்றிஸ்ட்மஸ் கொண்டாடறது இல்ல.கர்த்தர மனசால மட்டும் நெனச்சுக்கறேன்..ஆனா அம்மாவப் பார்த்துக்கறேன்.”
“உங்களுக்குக் கல்யாணம்..?”
“ப்ச்” உதட்டை சுழித்தாள்.
“வேலைக்குப் போய்ட்டீங்கன்னா இவங்கள யார் பார்த்துப்பா..?’
“யாரும் இல்ல.. காலைல ப்ரேக்ஃபாஸ்ட் கஞ்சி கொடுத்துட்டு ஒரு டாப்லட் கொடுத்துடுவேன்..டாக்டர் கொடுத்தது தான். லோ லெவல் தூக்க மாத்திரை. அவங்க தூங்கிடுவாங்க நடுல ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பேன் ஃபேக்டரிலருந்து. பார்த்துக்கற ஆள் போடற அளவுக்கு ஃபேக்டரில வராது எனக்கு.. இதை எல்லாம் நான் ஏன் சொல்றேன்னா…”
அவன் அவளது துடிக்கும் கண்களை, பேச்சில் துடிக்கும் உதடுகளைப் பார்த்தான்.
‘எங்க அம்மாவை நீங்க தப்பா நெனச்சுக்கக் கூடாதுன்னு தான். நீங்க சேவியரோட ஃப்ரெண்ட்டுன்னு நினச்சு….” நிறுத்தினாள் ஃபிலோமினா.
“சேச்சே. அப்படில்லாம் ஒன்றுமில்லைங்க.” என்று நகர முயன்றவன் கையில் இருந்த கனம் உறுத்தியதால் நின்றான்.
ஜோஸப் ப்ரான்ஸிஸோ ஊரில் இல்லை. இதை எதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்?.
“பிலோமினா. இதைப் பிடியுங்கள்” அவள் கைகளில் திணித்தான். அவள் திகைத்தாள்.
“ஒன் செகண்ட்” என பர்ஸ் திறந்து தனது விஸிட்டிங்க் கார்டைக் கொடுத்தான்.
”நீங்கள் உங்கள் எண்ணையும் என்னிடம் கொடுங்கள். என்னை நாளைக்கு அழையுங்கள். ஏதாவது வேலைக்கு முயற்சி செய்ய முடியுமா பார்க்கிறேன். அட்லீஸ்ட் உங்கள் அம்மாவை பார்த்துக் கொள்ள ஆள் வைக்கும் அளவுக்காவது வருகின்ற சம்பளத்தில். பட் அயம் நாட் ஷ்யூர். முயற்சிப்பதில் தவறேதும் இல்லையென நினைக்கிறேன்.”
“சார்” எனப் பேச முயன்ற ஃபிலோமினாவைப் பார்த்து முறுவலித்தான். மெல்ல நடந்து அவள் நிறுத்தியிருந்த வண்டியைக் கடந்து தனது பைக்கின் அருகில்வந்து பாக்ஸ் திறந்து அதை எடுத்தான்.
“ஒரு நிமிஷம்” என ஃபிலோமினாவை ஒதுக்கி உள் சென்றான். அவள் அம்மா இப்போது கொஞ்சம் முழித்திருந்தாள். கண்கள் கொஞ்சம் சலனப் படக் கைகளில் கொடுக்கப் பார்த்தான். “இந்தாங்க. ஆண்ட்டி. கிறிஸ்ட்மஸ் கேக்.மெர்ரி கிறிஸ்துமஸ்”.
“எனக்குப் பிடிக்க முடியாது. ஃபிலோமினா கிட்டக் கொடு” கொஞ்சம் குழறலாய் வந்தது வார்த்தைகள்.
பின்னால் தொடர்ந்து வந்த ஃபிலோமினாவின் கைகளில் கொடுத்தான் கேக் பாக்ஸை.
”வரேன் ஆண்ட்டி. சந்திச்சதுல சந்தோஷம்” எனச் சொல்லி பிலோமினாவிடம் கண்களால் விடைபெற்றுச் செல்ல முயல்கையில் கிழவியின் குரல்.
“உன் பேர் என்னன்னு சொல்லவே இல்லையேப்பா”
“ஸாண்ட்டான்னு வெச்சுக்குங்க ஆண்ட்டி” சிரித்தபடி சொல்லிவிட்டுத் திரும்பி மறுபடியும் பிலோமினாவிடம் பை சொல்லி அவளது மெல்லிய சிரிப்பை வாங்கி வெளிவந்து பைக்கைக் கிளப்பினான் நடராஜன்.
.