எழுத்தாளர் அனுராதா ஆனந்த் இதுவரை ஏழு மொழிபெயர்ப்பு கவிதைத்தொகுதிகள் வெளியிட்டுள்ளார். மயிற்பீலி சிறுகதைத் தொகுப்பு இவரது எட்டாவது புத்தகம் மற்றும் முதல் சிறுகதைத்தொகுப்பு. இப்புத்தகம் இவ்வருட ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்றுள்ளது. இது சால்ட் பதிப்பக வெளியீடு.
தொகுப்பில் மொத்தம் ஏழு சிறுகதைகள் உள்ளன.
வண்ணங்களின் குணாதிசயங்கள் மனிதர்களில் பதிந்துள்ளனவா அல்லது ஒவ்வொருவருக்கும் அவருக்கேற்ற பிரத்தியேக நிறம் உள்ளதா? தொகுப்பின் முதல் கதையான பதினேழாவது நிறம் இதைப் பற்றிப் பேசுகிறது. வண்ணங்களின் காதலனாக வரும் சித்தன் என்பவன் மனிதர்களை அவரவர்க்கான நிறங்களின் மூலம் புரிந்து கொள்கிறான். சித்தன் இந்த உலகத்தையே வண்ணங்கள் வழியே தான் பார்க்கிறான். அக்ரைலிக் வண்ணங்கள் வழியே இந்த உலகத்தைப் பார்த்து மனித மனங்களின் எண்ணங்களுக்கெல்லாம் வண்ணம் பூசி தனித்துவமான சித்திரங்களாக்குபவன். முருகன், சித்தன் மீது மிகுந்த மதிப்பு உள்ளவன்.
காலப்போக்கில் சித்தனின் வாழ்க்கையில் நடைபெறும் மாறுதல்கள் முருகனைப் பாதிக்கின்றன. காக்கைச் சிறகினிலே கரிய முகம் காண்பது போல் முருகன் தான் பார்த்த மனிதருக்குள் சித்தனைக் கண்டடைந்தான்.
நீல வண்ணம் காதலின் குறியீடு.
அம்மாவின் இளமைக்கால காதலை அவள் மறைவுக்குப் பின் மகன் தெரிந்து கொள்கிறான். அம்மாவின் நீல நிற டைப்ரைட்டர் கதையில் அம்மாவுக்கு அவளுடைய நீல நிற டைப்ரைட்டர் மீது அலாதியான பிரியம்.
நெஞ்சுக்குள் பூட்டி வைத்த நினைவுகள் என்றேனும் ஒரு நாள் குமிழ் குமிழாக வெளியேறும் தருணம், தன் காலத்துக்குப் பின் தனது டைப்ரைட்டர் உரியவரிடம் போய்ச் சேர வேண்டும் எனக் கனிந்திருந்த தருணம், தன் தாயின் பால்ய காலத்துடன் தொடர்புடைய ஒருவரை எதிர்பாராமல் சந்திக்கும் தருணம் என எல்லாமே டைப்ரைட்டரில் அடுத்தடுத்த பட்டன்களை விரல்கள் லாவகமாய் இயக்கும் இசையாய் பிரம்ம நாயகத்தை சூழ்ந்திருக்கிறது.
வருடக்கணக்காக தன் மனதில் பூட்டி வைத்திருந்த அவளின் ரகசியத்தை அறிந்த பின் தன் மனைவியை, தன் குழந்தையை, இந்த உலகத்தையே அவன் பார்க்கும் பார்வையில் மேலும் மேலும் அன்பு கூடி இருந்தது. தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளுள் ஒன்று. டைப்ரைட்டர் வழி எழுதப்பட்ட அழகிய கவிதை .
மூன்றாவதாக பொன்வண்டு புடவை கதையிலும் மகள் பால்ய காலத்தில் தான் பார்த்த அம்மாவை, அவளின் புடவைத் தேர்வுகளை, நகைகள் அணிவதை உடை உடுத்தும் பாங்கினை அம்மாவின் மரணத்துக்குப் பின் நினைத்துப் பார்க்கிறாள். ஸ்போர்ட்ஸ் டேக்கு அம்மா அழகாக அணிந்து வந்த பொன்வண்டு நிறப் புடவையும் நகைகளும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அதை அறிந்த அம்மா அந்தப் புடவையையும் நகைகளையும் அதற்கு பின் அணியவே இல்லை. வளர் இளம் பெண்களுக்கு, அவர்கள் அம்மா நடுத்தர வயதில் தன்னை அலங்கரிப்பதை, அழகாகப் புடவை உடுத்துவதைக் கூட அந்த வயதுக்கே உரிய பொறாமையுடன் பார்க்கும் மனதை நுட்பமான விபரங்களில் அழகாகக் கோர்த்துள்ளார். அதனுடன் பருவ வயதுக்கே உரிய பரவசங்கள், தன் உடல் மீதான ஆனந்த லயிப்பு என்ற இரண்டு வெவ்வேறு புள்ளிகளும் ஓரிடத்தில் இணையும் போது தான் அம்மாவின் இழப்பு வலிக்கிறது.
திருமணமான பின் பெண்களுக்கு அவர்களை, அவர்கள் உடலை மனதை சிலாகித்தும் கணவன் கிடைக்காவிடில் நரக வாழ்க்கைதான். அதிலும் படுக்கையில் கிடக்கும் கணவன் தன் மனைவியை இழிவான வசைச் சொற்களால் அழைத்து தன்னுடைய இயலாமையை மறைத்துக் கொள்கிறான். அவளுக்கான குரலற்றவள் தன் இருண்ட வாழ்க்கையில் சில சில வெளிச்சப் புள்ளிகளைக் காண்கிறாள். ஆனாலும் மறைந்த கணவனின் குரலைக் கேட்காமல் திரும்பவும் இருண்ட உலகத்திலே கிடக்கிறாள். நிறையப் பெண்கள் ஒரு வகையில் குரலற்றவர்கள் தான்.
அனாமிகா என்ற பெரும்பூனை கதை
காஃப்காவின் உருமாற்றம் நாவல் போல ஆச்சரியங்களைக் கொடுக்கிறது. ஒரே வித சூழ்நிலையை இருவர் வெவ்வேறு விதமான பார்வையில் பார்க்கின்றனர். அதனால் வரும் குழப்பங்கள் தெளிவுகள், தெளிவுகள். நல்ல முயற்சி.
வாழ்க்கையில் அடிபட்டு மேலும் மேலும் கஷ்டங்களை அனுபவிப்பவனுக்கு சோதனைகளில் இருந்து மீள எதற்காக பிரயத்தனப் பட்டானோ முயற்சிகள் செய்தானோ அது கிடைக்கும்போது பார்ப்பதற்கு அவன் இல்லை. இதுவே மங்கள நாதனின் கதை.
ஒரு சிங்கிள் மதர் ஆக தன் பெண் குழந்தையைக் கஷ்டப்பட்டு வளர்க்கும் தாய் எந்தச் சூழலிலும் உண்மையைப் பேசும் தன் மகளைப் பார்த்து பெருமைப்படும் கதையே மஞ்சள் குருவி.
வானவில் போல ஏழு அழகிய கதைகள். ஒவ்வொன்றின் தளங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பெண்களின் அகஉலகை, நுட்பமான உணர்வுகளை, அவர்களுக்கான திறப்புகளை எவ்வித சமரசமும் இன்றி வெகு இயல்பாக அனுராதா ஆனந்த் படைத்துள்ளார். நிறைய மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் புத்தகங்களாகப் படைத்தவரின் முதல் சிறுகதை தொகுப்பு இது என்பது ஆச்சரியமாக உள்ளது. அவ்வளவு முதிர்ச்சியான எழுத்து.
அனுராதா ஆனந்தின் மயிற்பீலி மிகச்சிறந்த தொகுப்பு.