“அம்மா.. வாங்கம்மா வாங்க, எல்லாம் புது ரகம். சுடிதார், நைட்டி, புடவை, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் எல்லாம் இருக்கு. வாங்கம்மா வாங்க”
ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருச்சி மலைக்கோட்டை பஜாரில், உச்சி வெயிலில் பிளாட்பாரத்தில் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் வசந்தி.
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே குடும்பக் கஷ்டத்திற்காக படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு, மிகப்பெரிய ஜவுளிக்கடையில் சேல்ஸ்மேன் வேலைக்கு சேர்ந்தாள். 14 மணி நேரம் வேலை. நின்று கொண்டேயிருக்க வேண்டும், கால் வலித்தாலும்கூட உட்காரக்கூடாது. உடல்நிலை சரியில்லையென்றாலும்கூட விடுமுறை கிடையாது. வரும் கஸ்டமர்களிடம் வலியை மறைத்து சிரித்துப் பேசவேண்டும்.
வேலைக்குச் சேர்ந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டாள். போகப்போகப் பழகிவிட்டது. குடும்பக் கஷ்டத்தை நினைத்து, எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் பார்த்தாள். சாப்பிடக்கூட நேரமிருக்காது. நின்றுகொண்டும் மரத்தடி நிழலில் உட்கார்ந்துகொண்டும் சாப்பிடுவாள். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தாள், நிறையப் படிக்க வேண்டும் என்று கனவு கண்டாள். நிறைவேறவில்லை, படிக்க நினைத்தவளை துணியை மடிக்க வைத்துவிட்டது வறுமை.
புதுத்துணி உடுத்த வேண்டும் என்பது அவளின் கனவு, ஆனால் உடுத்தியதே கிடையாது. பெரும்பாலும் உறவினர்கள், தெரிந்தவர்கள் கொடுத்த பழைய துணிகளையே உடுத்திக் கொள்வாள். அவள் வேலைக்குச் சேர்ந்த புதிதில் யூனிபார்ம் கூட அவளுக்குப் புதியது கிடைக்கவில்லை, பழையதுதான் கிடைத்தது. முதன் முறையாகப் பொங்கல் போனஸோடு சுடிதாரும் ஜவுளிக்கடையில் கொடுத்தார்கள், அதுதான் அவள் உடுத்திய முதல் புதுத்துணி. ஆயிரம் ரூபாய், லட்சம் ரூபாய் ஆடைகளைக் கையால் தொட்டுப் பார்த்து ஆசையைத் தீர்த்துக் கொள்வாள். வேலைக்குச் சேர்ந்த பல வருடங்களுக்கு பிறகுதான் காசு கொடுத்து புதுத்துணி எடுத்து உடுத்திக் கொண்டாள்.
காலையில் அவசர அவசரமாக எழுந்து பாதி சாப்பிட்டும் சாப்பிடாமலும், மதியம் சாப்பிட கொஞ்சம் சோத்தை டப்பாவில் கட்டிக் கொண்டு பஸ்ஸூக்கு ஓடுவாள். பஸ்ஸில் நிற்கக்கூட இடமிருக்காது. நெரிசலில் சிக்கி, சின்னா பின்னமாகி வேலைக்குச் செல்வதற்குள் ஒரு வழி ஆகிவிடுவாள். ஒருநாள் இருநாள் அல்ல முப்பது வருடங்களாக வசந்தியின் வாழ்க்கை இப்படித்தான் செல்கிறது.
இதற்கிடையில் வசந்தியின் வாழ்வில் கல்யாணம் என்ற சந்தோஷமான நிகழ்வும் நடந்தது. கல்யாணத்திற்குப் பின் கணவனிடம்,
“நான் வேலைக்கு போகட்டுமா?” எனக்கேட்டாள்.
“தாராளமாக வேலைக்குப் போ, அது உன் விருப்பம். உன்னோட எந்தச் செயலுக்கும் நான் தடையாக இருக்க மாட்டேன்” என கணவன் கூற வசந்தி வேலைக்குச் சென்றாள்.
என்ன ஒரு சந்தோஷமான விஷயமென்றால் வசந்தி வேலை செய்யும் ஜவுளிக்கடைக்கு அருகில்தான் அவளது கணவனும் வேலை செய்கிறார். அதனால் கணவனுடன் வண்டியில் வேலைக்குச் சென்று வந்தாள்.
வசந்தி கஷ்டப்பட்டு உழைத்தாள், கணவரும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார். கடனையெல்லாம் அடைத்து ஓரளவு நிம்மதியான வாழ்க்கை வாழத் தொடங்கினாள். வசந்திக்கு ஒரு ஆசை, கனவு இருந்தது. ‘ஜவுளிக்கடை வைக்கனும்’ அடிக்கடி வசந்தி சொல்லும் ஒரு வார்த்தை, ‘சாகுறதுக்குள்ள முதலாளி ஆகணும்’ இதே வைராக்கியத்தோடு வேலை பார்த்தாள். ஒரு சில நேரம் மனதில் நினைத்துக் கொள்வாள், ‘வறுமையில் பிறந்த உனக்கு, இந்த ஆசையெல்லாம் தேவையா? நீயெல்லாம் கடைசி வரைக்கும் கஷ்டப்பட்டு, சாக வேண்டியதுதான்’ என தனக்குத்தானே புலம்பிக் கொள்வாள்.
தீபாவளி நெருங்கியது, கடையில் கூட்டம் அலைமோதியது. முன்பு போல் வசந்தியால் நிற்க முடியவில்லை. வேலையும் சரிவர செய்ய முடியவில்லை. கல்யாணமாகி, ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்டாள். வீட்டில் வேலை.. கடையில் வேலை, அவளால் என்ன செய்ய முடியும்!
ஒரு நாள் தன் கணவனிடம், “ஏனுங்க.. நான் வேலையை விட்டு நிற்கலாம்ன்னு நினைக்கிறேன்” என்றாள்.
“வசந்தி, உன்னால வேலை செய்ய முடியலைன்னா நின்று விடு”
“ஆனா, நான் வேலையை விட்டு நின்று விட்டால், இன்றைய சூழ்நிலையில் குடும்பம் நடத்துவது ரொம்ப கஷ்டம், அதான் யோசிக்கிறேன்”
“வசந்தி, அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதே. பாத்துக்கலாம் விடு”
“நாம ஏன் பிளாட்பாரத்துல சின்னதா ஒரு ஜவுளிக்கடை வைக்கக்கூடாது?”
“வைக்கலாம்.. ஆனால் அதுக்கு நிறையப் பணம் வேணும். அதுக்கு எங்கே போறது”
“இல்லீங்க.. இன்னும் பத்து நாளில் தீபாவளி. நான் வேலையை விட்டு நின்றால் போனஸ், சம்பளம், இன்சூரன்ஸ் பணம் எல்லாம் வரும். இந்தப் பணத்தில் கடை வைக்கலாம்.
“இதுவும் நல்ல யோசனைதான் வசந்தி, கண்டிப்பாகச் செய்” என கணவன் தைரியம் கொடுக்க, மறுநாள் வசந்தி ஜவுளிக்கடைக்கு சென்று வேலையை ராஜினாமா செய்தாள். வர வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டு, கணவருடன் திருப்பூர், ஈரோடு சென்றாள். மொத்த ஜவுளிக்கடைகளில் கொஞ்சம் துணிகளை வாங்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் கடை வைத்தாள். நல்ல தரமான துணிகளை குறைந்த விலைக்கு லாபம் குறைவாக வைத்து விற்பனை செய்தாள். தன் கணவனிடம், “ஏனுங்க.. என்னுடைய முப்பது வருட கனவு, லட்சியம்.. இந்த வருடம் நிறைவேறிட்டுது, ரொம்ப சந்தோஷம்” என்றாள்.
“என் மனைவியின் கனவு நிறைவேறியது எனக்கும் சந்தோஷம்தான். இந்தா, உனக்கு ஒரு கிஃப்ட்” என்று ஒரு பெரிய அட்டைப்பெட்டியைக் கொடுத்தார்.வசந்தி ஆர்வமாகப் பிரித்துப் பார்த்தாள், அதில் ஒரு அழகிய நாற்காலி இருந்தது. வசந்திக்கு ரொம்ப சந்தோஷம்.
“வசந்தி.. கால் வலிச்சா உட்கார்ந்துக்கோ. யாருக்கும் பயந்தோ, கால் வலியோடு நின்று கொண்டோ வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை” கையைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தார் கணவர்.
சிறு புன்னகையோடு, “வாங்கம்மா வாங்க.. நம்ம கடைல தரமான துணி வாங்குங்க” என கூவிக்கூவி விற்க ஆரம்பித்தாள் வசந்தி.
வசந்தியின் வாழ்வில், முதன்முறையாக வசந்தகாலம் வீசத் தொடங்கியது.