யாரோ ஒருவரின் திராட்சை ரசம் நான்
பருகப் பருகக் கடக்கிறது காலம்
ஒரு நாள் அது கசப்பின்
அடையாளமாகிறது
பருகியவர்கள் எவரும்
இது திராட்சை ரசமென
ஒப்புக் கொண்டதில்லை என்பதுதான்….


எனது வேர்களிலும்
கனிகள் விளையும்
உரமொன்றைத் தயாரிக்கிறார்கள்
எனக்கே எனக்கென
மெனக்கெட்டதாக
தூற்றித் திரிகிறார்கள்
அறுவடைக் காலங்களில்
பள்ளத்தாக்கில் வீசப்படும்
மீதக் கனிகள்
விரும்பாவிட்டாலும் நஞ்செனப் பரவுகிறது
கனிகளற்ற கிளைகளில்
வந்தமர்கிறது
வண்ணத்துப் பூச்சியின்
இறகொன்று.


அவர்களின் சத்தத்திற்குக் கீழ்ப்படியாததால்
என் எல்லாப் பாடல்களும்
இரைச்சலென்றாயிற்று


எனது பாதையை
வனாந்தரமென்று தீர்மானித்தவர்கள்
இருளையே விளக்குகளாக்கினார்கள்
தெளிவற்றதலின் கோடையில்
வழிகாட்டிக் கொண்டிருந்தது
என்னைத் தூண்டும்
அகவொளி.


உன்னதங்களின் விளிம்பில் நின்று
வெளிச்சத்தை அடைய நினைத்த ஒருவனை
வழிப் போக்கனாய்க் கண்டேன்
இருவரும் பேசிக் கொள்ள
ஏதுமில்லை என்பது போலவே
பயணம் முடிவு பெற்றது
இருவரின் சொற்களும்
தங்கள் பேரோலத்தைத்
துவங்கியிருந்தன.


இடைவிடாமல் அழுத்திக் கொண்டிருக்கிறேன்
அழைப்பு மணி மௌனித்தே கிடக்கிறது
இறுதியில்
வெறுப்பில் விடைபெறுகிற போது
திறக்கப்படுகிறது கதவு
நாட்களற்ற காலத்தில்
கிடைக்கும் கனிகள் குப்பைகள்


நாளையும் வரவேண்டும் என்றார்கள்
நேற்றைய பொழுதிலிருந்து
வடியும் கண்ணீரைப் பருகியபடி
இன்றெனும் எதிர்பார்ப்பு
பாதையின் முட்களில்
வழியும் தேனை
ருசிக்கத் துவங்கின பாதங்கள்


நானற்ற நானை
பாலைவனத்தின் பகல் பொழுதில் கண்டேன்
ஒரு குவளை மதுவை
வேண்டி விரும்பிக் கேட்கிறது
துளி விஷம் கொடுத்து
கொன்றழித்த போது
மெல்லத் தூறத் தொடங்கி
பொருத்தமான அளவில்
பெய்யத் துவங்கியது மகிழ்ச்சி மழை


புற்களும் கற்களும் நிரம்பிய வெளியை
ஆயிரமாயிரம் கலப்பைகள் கொண்டு
பண்படுத்தினார்கள்
தங்களையே விதைத்து
தங்களையே அறுவடை செய்து கொள்ளும்
கால நிலத்தின் அதிகாரம்
என் கரங்களில்..!


பயன்படுதலின் கடிகாரம்
சுழன்று கொண்டிருக்கும் வரை
முட்களில் எழும் ஓசை
இசையின் பேரின்பம்

Author

  • எழுத்தாளரும் கவிஞருமான க. அம்சப்ரியா, பல புத்தகங்கள், கவிதைகள், மற்றும் சமூகப் பதிவுகளின் ஆசிரியராவார். பல்வேறு விருதுகளை வென்ற இவர்  "புன்னகை" என்ற இதழின் ஆசிரியரும் கூட.

You may also like

Leave a Comment