Home இதழ்கள்இதழ் - 4நல்லாச்சி – 10
This entry is part 11 of 14 in the series நல்லாச்சி

ஐந்தாறு நாட்களாய்
அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடு
பருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்
பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றன
ஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி
‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’
குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி

பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வை
அன்றாடம் கணக்கெழுது
நிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்
அப்பாவும் அம்மாவும்
வம்புவழக்கில் போய் விழாதே
அறிவுரையுடன்
தலைவலி வாசனாதி திரவியங்களுக்கு
துண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்
தாத்தா கிணற்றடியில்
துணி வெளுக்கக் கற்பிக்கிறார்
அடுப்படியிலோ நல்லாச்சியிடம் நளபாகப்பாடம்;
காணும் செல்லாச்சி வம்பு வளர்க்கிறாள்
புருஷன்வீடு போகும் பெண்ணுக்கல்லவா
இத்தனை பாடமும் தேவை
ஆணுக்கெதற்கு இக்கடமை என்கிறாள்

வாடிய பேத்தியின் சார்பாய்
பதிலளிக்கிறாள் நல்லாச்சி
‘அடிப்படைத்தேவைகளுக்குப் பேதமேது
பாலினம் பார்த்தா பசி துளிர்க்கிறது
கடமையின் பொருட்டன்றி
வாழ்தலின் பொருட்டேனும் கற்றல் வேண்டும்
கற்றவரெல்லாம் கடந்து விட்டனர்
கொடிகட்டிக் கோலோச்சுகின்றனர்
கற்காலம் விட்டு நீ இக்காலம் வா’ என்கிறாள்
நயந்துரைக்கிறாள் நல்லாச்சி அனைவருக்குமாய்
உயிர்வரை இனிக்கிறது பேத்திக்கு.

Series Navigation<< நல்லாச்சி – 11நல்லாச்சி – 12 >>

Authors

You may also like

1 comment

அவந்திகா October 2, 2025 - 10:11 am

சமீபத்தில் தான் நல்லாச்சியை படிக்க ஆரம்பித்தேன். நல்லாச்சி மனதுக்கு நெருக்கமாக உள்ளது. உங்களை என் சக தோழியாகவே மனதில் ஏற்கிறேன். நன்றி தோழி

Reply

Leave a Comment