————————————
தேவையான பொருட்கள்
1. கடலைப் பருப்பு – ஒரு கப்
2. வெல்லம் – இரண்டு கப்
3. ஏலக்காய் தூள்
4. முந்திரி பருப்பு பத்து எண்ணிக்கை
5. நெய் கால் கப்
செய்முறை
வெறும் வாணலியில் கடலைப் பருப்பைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் அதை வெந்நீரில் ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் பருப்பை ரவை
பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைப் பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கரைய விடவும். வெல்லம் பாகு வரத் தேவையில்லை. கரைந்தால் போதும். அதை வடிகட்டி தனியாக வைத்திருக்கவும்.
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றிச் சூடானதும், முந்திரிப் பருப்பைப் போட்டு வறுத்து தனியாகத் தட்டில் எடுத்து வைக்கவும். பின்னர் மீதமுள்ள நெய்யில் அரைத்த விழுதைச் சேர்த்து உதிர் உதிராக வரும் வரை கிளறவும். பின்னர் கரைத்து வைத்திருந்த வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும். வெல்லத்தை இழுத்துக் கொண்டு விழுது உதிர் உதிராக வரும் வரை கிளற வேண்டும். ஏலக்காய் தூள், வறுத்த முந்திரிப் பருப்புச் சேர்த்து இறக்கவும்.
பார்ப்பதற்குப் புட்டு போல ருசியுடன் இருக்கும். புரோட்டீன் சத்து நிறைந்த பலகாரம். வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு எளிமையாகச் செய்யக் கூடியது.
இது திருநெல்வேலி, காரைக்குடி பகுதிகளில் தீபாவளிக்குச் செய்யக்கூடிய இனிப்புப் பலகாரம்.