Home சிறுகதைவிடுமுறைக் கொண்டாட்டம்

“அம்மா, அம்மா” என்று அலறியபடி வீட்டுக்குள் நுழைந்தான் கபிலன்.

“என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ”

“வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு அறிவிச்சுட்டாங்களே!”

“அப்படியா? அதுதான் இவ்வளவு சந்தோஷமா? என்ன காரணத்துக்காகச் சீக்கிரம் லீவு விடறாங்களாம்?”

“அதுவா? வெயில் ரொம்பவும் கொடுமையா இருக்கறதுனால எல்லாப் பள்ளிகளையும் மூடச் சொல்லி அரசாங்க உத்தரவு போட்டிருக்காங்களாம். ஒருவிதத்தில் நல்லதுதான். காலையில் சீக்கிரம் எழுந்து ரெடியாக வேண்டாம். ஆனால் இன்னொரு விதத்தில் பார்த்தால் போரடிக்கப் போகுது”

“போரெல்லாம் அடிக்காது. நீ உன்னோட ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போய் அவங்களோட விளையாடு. அப்புறம் அவங்களை இங்கே வரச்சொல்லி நம்ம வீட்டுல விளையாடு. எல்லாரும் சேர்ந்து மூவி பாருங்க. இன்டோர் கேம்ஸ் விளையாடுங்க. அவ்வளவுதானே? இதெல்லாம் ஒரு விஷயமா?”

“இல்லைம்மா, அது முடியாது. என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் அடுத்த வாரம் வெளியூர் போறாங்க. யாருமே இங்கே இருக்கமாட்டாங்க. சில ஃப்ரெண்ட்ஸ் சிங்கப்பூர், துபாய், மலேஷியா கூடப் போறாங்க. அம்மா, நாம கூட எங்கேயாவது போகலாம்மா. லீவு முடிஞ்சு ஸ்கூல் திறக்கும்போது லீவுல என்ன செஞ்சோம், எங்கே சுற்றுலா போனோம்னு கட்டுரை எழுதச் சொல்லுவாங்க. அம்மா, ப்ளீஸ்மா, அப்பா வந்ததும் சொல்லுங்கம்மா” என்று கெஞ்சினான் கபிலன்.

“செரிப்பா, கேட்டுப் பாக்கலாம். நீ போய் டிரஸ்ஸை மாத்திட்டு வா. பாலும், சாப்பிட ஏதாவது ஸ்நாக்ஸும் எடுத்து வைக்கறேன்” என்று அவனைத் திசை திருப்பிவிட்டார் கபிலனின் அம்மா .

அவருக்குத் தெரியும். விடுமுறையில் வெளியூர் செல்வதற்கு அவர்களுடைய பொருளாதார நிலை இடம் கொடுக்காது. அப்படியே அதிகச் செலவில்லாமல் அருகில் இருக்கும் ஏதாவது சுற்றுலாத் தளத்திற்குச் செல்லலாம் என்றால் அதுவும் நடக்க இயலாத செயல். கபிலனின் அப்பா வேலை செய்வது ஒரு தனியார் நிறுவனத்தில். அவ்வளவு எளிதாக விடுமுறை கிடைக்காது. ஆனாலும், கணவர் அலுவலகத்தில் இருந்து வந்ததும் அதைப் பற்றிப் பேசவே செய்தார் கபிலனின் அம்மா.

“சரிம்மா, முயற்சி செய்யறேன். இரண்டு வாரம் கழிச்சு லீவுக்கு அப்ளை பண்ணறேன். பக்கத்துல ஏலகிரி வேணாப் போயிட்டு வரலாம்” என்று சொல்ல, கபிலன் சந்தோஷ வெள்ளத்தில் நீந்தினான்.

“தேங்க்யூப்பா, தேங்க்யூம்மா” என்று மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டு, இந்தத் தகவலைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் தன் அறைக்கு ஓடினான் கபிலன்.

இரண்டு வாரங்கள் விரைவாக முடிந்தன. எப்போது பார்த்தாலும் தங்களுடைய பயணத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த கபிலன், அதைப் பற்றியே அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான். இணையத்தில் ஏலகிரி பற்றிய தகவல்களைத் தேடித் தேடிப் படித்து மகிழ்ந்துபோனான். அம்மாவிடமும் வந்து பகிர்ந்து கொண்டான். அவனுடைய உற்சாகத்தைக் கண்டு கபிலனின் அம்மாவிற்கும் உள்ளூர பயமாகவே இருந்தது. அடிமனதில் இருந்த ஒரு கலக்கம் அவரைச் சங்கடம் செய்துகொண்டே இருந்தது. அவருடைய பயத்தை நியாயப்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தே விட்டது.

சரியாக அவர்கள் கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கபிலனின் அப்பா அலுவலகத்தில் இருந்து திரும்பியபோது வாடிய முகத்துடன் வந்தார்.

“ஸாரி கபிலா, நம்ம ட்ரிப்பை கேன்ஸல் பண்ணனும். எங்க ஆஃபீஸில் திடீர்னு ஆடிட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க. என்னோட லீவை கேன்ஸல் பண்ணிட்டாங்க” என்றார். கபிலனால் ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை.

“என்னப்பா இது, கடைசி நிமிடத்தில் இப்படிச் சொல்லறீங்களே? நான் எவ்வளவு ஆசையோட காத்துட்டு இருந்தேன் தெரியுமா? உங்க வேலையை வேற யார் கிட்டயாவது கொடுத்துட்டுக் கிளம்பலாமே?”

“இல்லை கபிலா. அது முடியாது. எங்க ஆஃபீஸோட அக்கவுண்ட் முழுவதும் என் பொறுப்பில் இருக்கு. அதை எப்படி வேற யார் கிட்டயாவது கொடுக்கிறது? தப்பில்லையா அது?”

“என் கிட்ட வெளியூர் கூட்டிட்டுப் போறதா பிராமிஸ் பண்ணிட்டு இப்போ மாட்டேன்னு சொல்கிறது மட்டும் தப்பில்லையா?” கபிலனின் குரலில் அழுகை எட்டிப் பார்த்தது.

“என்ன கபிலா இது? அப்பாவை இப்படி எதுத்துப் பேசலாமா? அவருக்கு ஏதோ கட்டாயம்னு புரியலையா உனக்கு?” என்று அம்மாவும் சேர்ந்து கபிலனைக் கடிந்துகொள்ள, கபிலன் அழுதுகொண்டே போய்விட்டான். அந்தச் சிறுவனால் அப்பாவின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அம்மா என்ன பேசுவதென்று புரியாமல் தன் கணவரைப் பார்த்தார்.

“பரவாயில்லை விடும்மா. அவன் சொல்லறதும் நியாயம்தானே? கொஞ்சம் பெரியவனானதும் தானே புரிஞ்சுக்குவான்” என்று சமாளித்தாலும் அவருக்கும் வருத்தமாகவே இருந்தது.

அடுத்த இரண்டு நாட்களும் கபிலன், வாடிய முகத்துடன் வளைய வந்தான். அவனுடன் விளையாடவும் யாரும் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் அவர்கள் கொஞ்சம் கூட எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது.

கபிலனின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு வயதான தம்பதி வசித்து வந்தார்கள். அவர்களுடைய குழந்தைகள் வெளிநாட்டில் வேலை பார்த்ததால் இவர்கள் இங்கே தனியாக வசித்து வந்தார்கள். தங்களுடைய கடைசிக் காலத்தைத் தாய்மண்ணிலேயே கழிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள்.

பக்கத்து வீட்டுத் தாத்தா அன்று காலையில் அவர்கள் வீட்டுக்கு வந்தார். கபிலனின் அப்பாவிடம் ஓர் உதவி வேண்டினார்.

“எனக்கு பேங்கில் ஒரு முக்கியமான வேலை இருக்கு. என் மனைவிக்கும் உடம்பு சரியில்லை. நான் மட்டும் தனியாகப் போகவேண்டிய சூழ்நிலை. நீங்கள் என் கூட வரமுடியுமா? “ என்று கேட்டார். அவருடைய நடையில் தடுமாற்றம் இருந்ததால், யாராவது கூட வந்தால் நல்லதென்று நினைத்தார்.

அவருடைய மனைவியின் உடல்நிலை இவரளவுக்கு மோசமில்லை என்பதால் இருவருமாகச் சேர்ந்து போகும்போது எப்படியாவது சமாளித்துவிடுவார்கள். இந்த முறை மனைவியால் வரமுடியாது என்பதால் இவர்களிடம் உதவி கேட்டார்.

“எங்க ஆஃபீஸில் ஆடிட் நடக்குது அங்கிள். என்னால லீவு போட முடியாது. நீங்க வேணா கபிலனைக் கூட்டிட்டுப் போங்களேன். அவனுக்கு இப்போ லீவு தான். கபிலனோட அம்மா, ஆன்டியைப் பாத்துக்குவாங்க” என்று கூற, பக்கத்து வீட்டுத் தாத்தா அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார்.

கபிலனும் வேறு வழியில்லாமல் தாத்தாவுடன் கிளம்பிப் போனான். ஆனால் வங்கியில் அவனுக்குக் கிடைத்த அனுபவம் நன்றாக இருந்தது. நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டான். தாத்தாவுடன் வழியில் பேசிக் கொண்டே போனபோது அவருக்கும் கபிலனுக்கும் நடுவில் நல்லதொரு நட்பு உருவாகிவிட்டது.

வங்கியில் நுழைந்ததும் வயதான தாத்தாவிற்குத் தனி மரியாதை கிடைத்தது. ஸீனியர் ஸிட்டிசன் என்பதால் வரிசையில் அதிக நேரம் நிற்க வேண்டியிருக்கவில்லை. மேனேஜரின் அறையில் உட்காரவைத்ததுடன் அவருடைய வேலைகளை விரைவாக முடித்துக் கொடுத்தார்கள். வங்கியைப் பற்றிய நிறைய கேள்விகள் எழுந்தன கபிலனின் மனதில்.

“நம்முடைய நிறைய வேலைகளை பேங்க் மூலமா நம்மால ஈஸியா சமாளிக்க முடியுது. நம்ம பணத்தைப் பத்திரமா பேங்க் அக்கவுண்ட்ல வச்சுட்டு, வேணுங்கறபோது எடுத்துக்கலாம். நிறைய சேமிப்புத் திட்டங்கள் இருக்கு. அதுல பணம் போட்டா வட்டி கிடைக்கும். பணத்தேவை இருக்கும் மக்களில் தகுதியானவர்களுக்குக் கடன் உதவி கொடுக்கறாங்க. தொழில் ஆரம்பிக்க, கல்விக்காக, வீடு வாங்க இப்படி நிறையக் காரணங்களுக்காகக் கடன் உதவி தராங்க. கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பிக் கட்டலாம். அப்புறம் வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ பணம் அனுப்பவோ, வரவழைக்கவோ இவங்க உதவி செய்யறாங்க. லாக்கர் வசதி இருக்கு. விலை உயர்ந்த பொருட்களை பேங்க் லாக்கரில் வச்சா பத்திரமாக இருக்கும். திருட்டு பயம் இல்லாமல் நிம்மதியா இருக்கலாம் ” என்று ஒவ்வொன்றாக, கபிலனுக்குத் தாத்தா விளக்கினார். ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டான் கபிலன்.

நிறையக் கேள்விகள் கேட்டான் கபிலன். தாத்தாவும் பொறுமையாக அவனுக்கு அனைத்தையும் எடுத்துச் சொன்னார்.

“நானும் அக்கவுண்ட் ஓபன் பண்ணலாமா?” என்று கேட்டான் கபிலன்.

“ஓ, தாராளமாகப் பண்ணலாமே? உங்க அம்மா இல்லைன்னா அப்பாவை உனக்கு கார்டியனாப் போட்டு ஓபன் பண்ணலாம். நீ மேஜரானதும் அதை நீயே ஆபரேட் பண்ணலாம்” என்று வங்கியின் மேனேஜர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டான்.

அன்று வீடு திரும்பிய கபிலனின் முகம் மலர்ந்திருந்ததைப் பார்த்து அவனுடைய பெற்றோர் நிம்மதியடைந்தார்கள்.

அன்றிலிருந்து தினமும் பக்கத்து வீட்டுத் தாத்தா, பாட்டியுடன் நேரத்தைக் கழித்த கபிலன் அவர்களுக்கு நிறைய உதவிகள் செய்தான். அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டான். தாத்தா, இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தன்னுடைய ராணுவ அனுபவங்களையும், இந்தியப் படையினரின் சாகசங்களையும் அவனுடன் பகிர்ந்து கொண்டார். பாட்டி அவனுக்கு நிறையக் கதைகள் சொன்னதோடு, நிறைய இடங்களில் வசித்த தன்னுடைய அனுபவங்களை அவனுக்குச் சொன்னார். சமையலும் கற்றுக் கொடுத்தார். தாத்தாவுடன் சேர்ந்து மாலையில் தோட்ட வேலை செய்து செடி, கொடிகளைப் பற்றியும் தெரிந்துகொண்டான்.

கபிலனின் விடுமுறை முடிவதற்கு முன்னால் கபிலனின் அப்பாவுக்கு அலுவலகத்தில் ஆடிட் முடிந்துவிட்டது. முதலில் திட்டமிட்டபடி ஏலகிரியும் போய்விட்டுத் திரும்பினார்கள்.

“அப்பா, என் பேரில் பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணித் தரீங்களா?” என்று கபிலன் கேட்க, அப்பாவும் உடனடியாக அதைச் செய்தார். தன்னுடைய உண்டியலில் இருந்த பணத்தைத் தன்னுடைய வங்கிக் கணக்கில் கட்டினான் கபிலன். இனிமேல் தொடர்ந்து பணம் சேமிக்கப் போவதாகவும் சொன்னான் கபிலன். சேமிப்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டான்.

விடுமுறை முடிந்து பள்ளி திறந்தபோது, கபிலனுக்குத் தன்னுடைய கட்டுரையில் எழுதுவதற்கு நிறையத் தகவல்கள் இருந்தன.

Author

  • ஓய்வு பெற்ற வங்கி ஊழியர், மதுரையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், சிறார் இலக்கியம், கட்டுரை போன்ற பல்வேறு தளங்களில் எழுதுகிறார். 'பராந்தகப் பாண்டியன்', 'தென்னவன் பிரம்மராயன்', 'காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கம்', 'சங்கரபதிக் கோட்டை' மற்றும் 'சிவபுராணம்' போன்ற வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். 'பூஞ்சிட்டு' குழந்தைகள் மாத மின்னூலின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

You may also like

Leave a Comment