Home இலக்கியம்நண்பேன்டா

மலையடிவாரக் கிராமத்தில் ஒரு குடிசையில் எட்டு வயது ராமு தன் பெற்றோருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

தூக்கத்தின் இடையில் ஏதோ ஒரு சத்தம் அவனை எழுப்பியது. மீண்டும் தூங்க முயற்சி செய்தான், தொடர்ந்து சத்தம் கேட்டது. வெளியே போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தான். அம்மா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

அந்தக் கிராமத்தில் மின் விளக்கு தெருக்கம்பங்களில் மட்டுமே. பக்கத்தில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். தோட்டத்தில் பெருச்சாளித் தொந்தரவு அதிகமாக இருப்பதால் ஒரு எலிப்பொறியை அம்மா அங்கு வைத்திருந்தார்.

அங்கு ஓர் ஓநாயின் கால், எலிப்பொறியில் மாட்டிக் கொண்டதால் வலியில் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து இரக்கம் கொண்ட ராமு, சிறிதும் பயமின்றிப் பொறியில் இருந்து அதன் காலை விடுவித்தான்.

ஓநாய் ராமுவை நன்றியுடன் பார்த்துவிட்டு நகர்ந்தது.

‘எலிப்பொறியுடன் ஓடவும் முடியாது. ஓடினால் அதன் கால் துண்டித்து இருக்கும். நல்ல வேளை நான் வெளியே வந்தேன்’ என்று தனக்குள் பாராட்டிக் கொண்டான்.

அதன் பின்னர் பள்ளி செல்லும் வழியில் ஒரு நாள் அவன் முன்னால் வந்து நின்றது ஓநாய். பார்க்கவே பாவமாக இருந்தது.

“என்ன.. உனக்கு எதுவும் சாப்பிடக் கிடைக்கலையா?”

“இல்லை. காட்டை அழிச்சு வீடு கட்ட ஆரம்பித்து விட்டார்கள், பறவை இனங்கள் அழிந்து விட்டன. முயல், மான் இவற்றை மக்கள் வேட்டையாடி அதன் இறைச்சியை உண்கின்றனர்”

“ரொம்ப அழகா பேசற. நான் நாளைக்கு உனக்கு வேண்டிய உணவைக் கொண்டு வருகிறேன்” என்றான்.

“நான் வேட்டையாடிச் சாப்பிடுவேன். கவலைப்படாதே”என்று கூறி விட்டு ஓடி விட்டது.

தினமும் இரவில் கோழி காணாமல் போயிற்று. ஊர் மக்கள் “இது ஓநாயின் வேலைதான். அதனால் அதைக் கொன்று விட வேண்டும்” என்று முடிவு செய்தனர். ராமுவின் மனதில் பயம், ‘பாவம் ஓநாய்’ என்று நினைத்தான்.

ஓநாயை நினைத்துக் கொண்டே பள்ளிக்குக் கிளம்பினான். அந்தக் கிராமத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராமுவின் பள்ளிக்கு, சைக்கிளில் வேகமாகச் செல்லும் சமயம் ஒரு இரு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்து விட்டான். வாகன ஓட்டி கீழே விழுந்த ராமுவைக் காப்பாற்றாமல், அங்கிருந்து ஓடி விட்டான்.

எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஓநாய், ராமுவின் சட்டையை வாயில் கவ்விக் கொண்டு வேகமாக ஓடியது. என்ன நடந்தது என்று தெரியாமல் மக்கள் ஓநாயைத் துரத்திக்கொண்டு ஓடினர்.

“ஓநாய் ராமுவைத் தூக்கிக்கிட்டு ஓடுது”என்று கூச்சல் போட்டுக் கொண்டே ஓடினர்.

ஆனால் ஓநாய் மிகவும் கஷ்டப்பட்டு அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனையின் நுழைவாயிலில் போட்டு விட்டு ஓடி விட்டது. மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தது.

மருத்துவர்கள் விரைந்து வந்து அவனுக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய பின்னர் ஓநாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.

கண் விழித்த ராமு நடந்ததை அறிந்து ஓநாய்க்கும் தனக்கும் இடையே உள்ள நட்புறவைக் கூறினான். அனைவரும் வியந்தனர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
‘ என்ற திருக்குறளுக்கு உதாரணமாக இருந்தது ஓநாய். இந்நிகழ்வுக்குப்பின், ஓநாய்க்கும் ராமுவுக்குமிடையே இருந்த நட்பும் பண்பும் அக்கம்பக்கம் எங்கும் பரவலாயிற்று.

Author

  • தமிழின் மீதும், தமிழ்ப்புத்தகங்கள் மீதும் தீராப்பற்றுடைய ருக்மணி வெங்கட்ராமன், M.A.,M.Sc., B.Ed. பட்டங்கள் பெற்றவர். சில வருடங்கள் பண்ருட்டியில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும், பின்னர் நெய்வேலியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றியவர். 20 ஆண்டு காலம் கல்வித்தொண்டு புரிந்த இவர் சிறந்த எழுத்தாளர். நுட்பமான எழுத்திற்குச் சொந்தக்காரர். இது வரை 16 கதைத்தொகுப்புகளில் எழுதியுள்ளார்.

You may also like

Leave a Comment