- எலியின் திருமணம் (ねずみの嫁入り)
முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு பணக்கார எலிக்குடும்பம் இருந்தது. அப்பா எலி, அம்மா எலி, மகள் எலி என மூன்று எலிகளைக் கொண்டது அந்தக் குடும்பம். மகள் எலி மிகவும் அழகானது, நல்ல குணங்கள் கொண்டது. அப்பா எலியும் அம்மா எலியும் மகள் எலியின் நல்ல குணங்களையும் அழகையும் பார்த்துப் பெருமைப்பட்டன. அவை தம்முடைய மகளுக்கு இந்த உலகத்திலேயே சிறந்த துணையைத் தேடித் திருமணம் செய்துவைக்க நினைத்தன.
அப்பா எலி அம்மா எலியிடம், “இந்த உலகத்தில் சிறந்தது எது?” எனக் கேட்டது.
அதற்கு அம்மா எலி, “இந்த உலகத்தில் சிறந்தது சூரியன். அதுதான் வானத்திலிருந்து இந்த உலகத்துக்கு ஒளியைத் தருகிறது.” எனப் பதில் சொன்னது.
அப்பா எலி சூரியனிடம் சென்று தம்முடைய மகள் எலியைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டது.
“சூரியனே, நீ எல்லாருக்கும் ஒளியைத் தருகிறாய். உன்னைவிடச் சிறந்தது இந்த உலகில் இல்லை. எங்கள் எலி மகளுக்கு இந்த உலகில் சிறந்ததை மணமகனாக்க நினைக்கிறோம். நீ எலி மகளைத் திருமணம் செய்துகொள்வாயா?”
அதற்கு சூரியன், “நான் ஒளியைத் தரலாம். ஆனால், என்னுடைய ஒளியை மேகம் எளிதாக மறைக்கிறது. ஆகவே, என்னைவிடவும் மேகம்தான் சிறந்தது.” எனப் பதில் சொன்னது.
சூரியனின் பதிலைக் கேட்ட அப்பா எலி மேகத்திடம் சென்று தன்னுடைய விருப்பத்தைச் சொன்னது.
“மேகமே, நீ சூரியனைவிடவும் சிறப்பாமே. சூரிய ஒளியையே மறைக்கிறாய். எங்கள் எலி மகளுக்கு இந்த உலகில் சிறந்ததை மணமகனாக்க நினைக்கிறோம். நீ எலி மகளத் திருமணம் செய்துகொள்வாயா?”
அதற்கு மேகம், “நான் சூரியனை மறைக்கலாம். ஆனால், காற்று வீசினால் நான் கலைந்துவிடுவேன். என்னைவிடவும் காற்றுதான் சிறந்தது.” எனப் பதில் சொன்னது.
“அப்படியா?” என அப்பா எலி கேட்டுக்கொண்டது.
மேகம் சொன்னதைக் கேட்ட அப்பா எலி காற்றிடம் சென்று மகள் எலியைத் திருமணம் செய்துகொள்ளும்படிக் கேட்டது.
அதற்குக் காற்று, “நான் மேகத்தையே கலைக்கலாம். ஆனால், என்னால் வலிமையான சுவரில் மோதி ஜெயிக்கமுடியாது. நான் வீசினால் வலிமையான சுவர் எளிதாகத் தடுத்துவிடுகிறது. என்னைவிடவும் சுவர்தான் சிறந்தது.” எனப் பதில் சொன்னது.
அப்பா எலி சிறிதும் சோர்வடையாமல் சுவரிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்தது.
“சுவரே, நீ காற்றைவிடவும் சிறப்பாமே. காற்று வீசினால் தடுக்கிறாய். எங்கள் எலி மகளுக்கு இந்த உலகில் சிறந்ததை மணமகனாக்க நினைக்கிறோம். நீ எலி மகளத் திருமணம் செய்துகொள்வாயா?”
அதற்குச் சுவர், “நான் காற்றைக்கூடத் தடுக்கலாம். ஆனால், எலி நினைத்தால் கொறித்துக் கொறித்து எளிதாக என் மீது ஓட்டையிடலாமே! என் மேல் ஓட்டைகளை உண்டாக்கக்கூடிய எலிதான் என்னைவிடவும் சிறந்தது.” எனப் பதில் சொன்னது.
சுவரின் பதிலைக் கேட்டு அப்பா எலியும் அம்மா எலியும் யோசித்தன. அவற்றின் எலி வளைக்கு அருகில் இன்னொரு எலி வசித்தது, அதன் பெயர் சுசுகே எலி. அந்த சுசுகே எலியும் தங்களுடைய எலி மகளும் நட்பாகப் பழகுவதை அப்பா எலியும் அம்மா எலியும் பார்த்தன.
சுசுகே எலியைத் தங்கள் எலி மகளுக்குத் திருமணம் செய்துவைத்தன. அந்தத் திருமணக் கொண்டாட்டம் மூன்று நாள்களுக்குத் தொடர்ந்தது. எலி மகளும் சுசுகே எலியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.