Home இதழ்கள்மருத்துவர் பக்கம் -12: முதுமை போற்றுதும்

மருத்துவர் பக்கம் -12: முதுமை போற்றுதும்

by Farooq Abdullah
0 comments

வயதால் முதியோருக்கான சில உடல்நல மனநல வழிகாட்டல்கள்

தங்கள் வாழ்வின் இளமைப்பருவத்தையும், மையப்பகுதியையும், இளையோர் நலனுக்காகவும் குடும்பத்தின் பாரத்தைத் தங்கள் தோள்களில் சுமந்தும் கழித்து, தங்கள் நலன் பெரிதென எண்ணாமல் பிறர் நலனுக்காக வாழ்ந்து அறுபது அகவையைக் கடந்து தங்களது ரிட்டயர்மண்ட் வாழ்க்கையில் இருக்கும் தாத்தா பாட்டிகள்..

நிற்க ..

வயதால் முதியோர் என்று அழைக்கப்பட்டாலும் இன்னும் மனதால் நாங்கள் இளைஞ இளைஞிகளே.. எங்களை எப்படி முதியோர் என்று அழைக்கலாம்? என்று சண்டைக்கு வரும் அப்பாக்களே அம்மாக்களே.. அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உங்களது தியாகத்தாலும் உழைப்பாலுமே நாங்கள் இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைய முடிந்திருக்கிறது. தற்போது வயதால் முதுமையை அடைந்திருக்கும் தங்களுக்குப் பல சவால்களை உடலும் மனதும் வைத்துக் கொண்டு விடையை எதிர்நோக்கி நிற்கின்றன. உடல் வயோதிகத்தால் சற்று மெலிகிறது, நலிவுறுகிறது, சிலருக்கு உடற்பருமனால் நடமாட இயலாமல் அவதி உண்டாகிறது. தூக்கம் வர மறுக்கிறது. நடை சற்றுத் தளர்கிறது. கண் பார்வை மங்குகிறது. காது கேட்கும் திறன் குறைவதை அறிய முடிகிறது.

நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்குப் பல வருடங்களாக அடைக்கலம் கொடுத்த உடலுக்கு அவை என்னென்ன தீங்கு செய்ய முடியுமோ.. அத்தனையும் செய்து உடலை அவற்றுக்கு இரையாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றன. மூட்டுகள் தேய்மானம் அடைந்து வலி கொடுக்கின்றன. எலும்புகளில் பழைய வலு இல்லை. நூறு கிலோவை அலாக்காகத் தூக்கிய தோள்களில் பத்து கிலோவைத் தூக்க முடியாத அளவு எலும்பின் உயிர்ச்சத்து குறைந்திருக்கிறது.

சில நேரங்களில் தலை சுற்றல் வருகிறது. கால்கள் இடறிக் கீழே விழுந்தால், எலும்பு முறிவு ஏற்பட்டுப் படுத்த படுக்கையாக்கி விடுகிறது. சிலருக்குப் பக்க வாதம், சிலருக்குப் பார்கின்சன், இன்னும் சிலருக்கு அல்சீமர் எனும் மறதி வியாதி, யாரும் தங்களைக் கண்டுகொள்வதில்லை என்ற மன ஏக்கம். அனைத்தும் இருந்தாலும் ஏதோ ஒன்று இல்லை- ஆம், நிம்மதி இல்லை என்ற எண்ணம், மன அழுத்தம், சாதாரண சீசனல் சளி கூட வந்தால் எளிதில் போக மாட்டேன் என்கிறது. நுரையீரலில் கூடு கட்டி நியூமோனியாவை வர வைத்து ஐசியூ வரை எட்டிப்பார்க்க வைத்து விடுகிறது. மாடிப்படி ஏறி இறங்கினால் மூச்சு இளைக்கிறது. நாள்தோறும் காலையில் மலம் சரியாக இறங்க மாட்டேன் என்கிறது, சிறுநீர் அடிக்கடி வெளியேறுகிறது.

இப்படியாகப் பல பல பிரச்சனைகளை முதியோரிடமிருந்து நாள்தோறும் சந்தித்து வருவதால், நிச்சயம் முதியோர் நலன் குறித்தும் அவர்கள் எவ்வாறு தங்களின் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் அறிய இந்த கட்டுரை உதவும் என்றே நம்புகிறேன். முதியோர் தங்கள் நலனை மேம்படுத்திக் கொள்ள சில டிப்ஸ்..

  1. தங்களுக்கு இருக்கும் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய், சிறுநீரக நோய் போன்றவற்றிக்குத் தகுதியான மருத்துவரைச் சந்தித்து அவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை மட்டும் சரியாக உட்கொண்டு அவரைப் பிரதி மாதம் சந்தித்து, மேற்சொன்ன நோய்களைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
  2. மருத்துவர் பரிந்துரையின்றித் தேவையற்ற மருந்துகளைச் சுயமாக மருந்துக் கடைகளிலோ மருத்துவர் அல்லாதவரிடம் இருந்தோ வாங்கிப் போடக்கூடாது. பல பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தான செயலாகவும் அமைந்து விடும்.
  3. காபி டீயில் இனிப்பு கலக்காமல் பருகுவதைப் பழக்கமாக மாற்றிக் கொள்ளலாம்.
  4. தினமும் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை காலாற நடக்கலாம்.
  5. கண் பார்வைப் பிரச்னை இருப்பதை உணர்ந்தால் கண் மருத்துவரைச் சந்தித்து கண் புரை / க்ளாகோமா போன்ற பிரச்சனைகள் இருந்தால் அறுவை சிகிச்சை மூலமாகவும் சொட்டு மருந்துகள் மூலமும் சரி செய்து கொள்ள வேண்டும். கிட்டப்பார்வை மங்குகிறதென்றால் அதற்குரிய கண்ணாடியைப் படிக்கும்போது அணிந்து கொள்ள வேண்டும்.
  6. அன்றாடச் செய்தித்தாள்கள், நாவல்கள், புத்தகங்கள் போன்றவற்றைப் படிப்பதை ஒரு வழக்கமாக மாற்றி விட வேண்டும். புத்தகங்கள் படிப்பதால் அறிவையும் வளர்த்துக் கொண்டு மூளையையும் தொய்வின்றிப் பராமரிக்கலாம்.
  7. பேரன் பேத்திகளுக்கு நன்னெறிக் கதைகளைக் கூறி வளர்ப்பது அவர்களுடன் செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பது, அவர்களுக்கு வினா விடை நிகழ்வு நடத்திப் பாராட்டுவது
    இதனால் மனமும் லேசாகும். உங்களுக்கு இடையேயான உறவு இன்னும் இணக்கமாகும்.
  8. செவித்திறன் குறைவதாக அறிந்தால் அதற்குரிய மருத்துவரை அணுகிச் செவித்திறன் கூட்டும் கருவிகளைப் பொருத்திக் கொள்ள வேண்டும். எப்படி பார்வை முக்கியமோ அதே போல நல்ல செவித்திறன் இருந்தால் மட்டுமே நமது தன்னம்பிக்கை குறையாமல் இருக்கும்.
  9. மன அமைதி தரும் விசயங்கள்.. அது இசையாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, சோசியல் மீடியாவாக இருந்தாலும் சரி.. அவற்றில் ஈடுபட்டு மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இருக்கும் தனித்திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்த இளமைக் காலத்தில் நேரம் இருந்திருக்காது. அதை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம்.
  10. உடற்பருமன் பிரச்சனை இருப்பின், குறை மாவு உணவு முறையைக் கடைப்பிடித்து எடையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். உடல் எடை அதிகமாக இருப்பது இதய நோய், மூட்டுத்தேய்மானம் போன்ற பல பிரச்சனைகளை வரவழைக்கும்.
  11. பற்களின் நலனில் ஈடுபாடு கொண்டு, பல் மருத்துவரை வருடம் ஒருமுறையேனும் சந்தித்துச் சிகிச்சை பெறுவது சிறந்தது. பற்கள் விழுந்துவிட்டாலும், செயற்கைப் பற்களைப் பொருத்திக் கொள்வது நல்லது. பலரும் பல் இல்லை என்ற காரணத்தால் புரதச்சத்து மிக்க உணவுகளைப் புறக்கணிக்கும் சூழல் உருவாகிறது.
  12. உடல் எடை திடீரென மெலிதல், மலம் கழித்தலில் பிரச்சனை, சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறுதல், பல வருடங்களுக்கு முன்பு நின்ற மாதவிடாய் மீண்டும் ஆரம்பிப்பது, ஆறாத புண்கள் போன்ற அறிகுறிகள் புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, உடனடியாக அதற்கு முக்கியத்துவம் தந்து சிகிச்சை பெற வேண்டும்.

முதியோர் தங்களது உடல் நலனைப் பேணுவதற்குச் சத்துள்ள உணவுமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம். தங்களது உணவில், புரதச்சத்து மிக்க உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் , மெக்னீசியம் , பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் உடல் வலிமையைக் கூட்டி இளமையுடன் வாழ உதவி செய்கின்றன. முதியோருக்கான எளிதான ஒருநாளைய உணவு அட்டவணை எப்படி இருக்கலாம்? என்பதை வடிவமைத்திருக்கிறேன். உங்களுக்கு உகந்ததாக இருப்பின் கடைப்பிடிக்கலாம்.

காலை எழுந்ததும்

100 மில்லி பாலில் டீ/காபி ( இனிப்பு இல்லாமல் பருகுவது சிறந்தது) காலாற அரைமணிநேரம் முதல் ஒரு மணிநேரம் நடை

காலை உணவு
2 தோசை அல்லது 3 இட்லி
வாரம் ஒரு முறை பூரி செட் ( எண்ணெயை முடிந்தவரை நீக்கி விட்டு உண்பது நல்லது)
அல்லது
கேப்பை உப்புமா/களி/ கூழ் வாரம் இரண்டு நாட்கள் உண்ணலாம். உணவில் வெரைட்டி முக்கியம், ஒரே மாதிரி உண்பது சலிப்பை ஏற்படுத்தும்.

காலை நேர ஸ்நாக்ஸ்

50 கிராம் நிலக்கடலை அல்லது 30 பாதாம் பருப்பு

மதிய உணவு

100 கிராம் கஞ்சி வடிகட்டப்பட்ட சோறு
கூடவே 100 கிராம் காய்கறி. இத்துடன் கட்டாயம் ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் உண்ண வேண்டும்.
மாமிசம்/ மீன் செய்திருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மரக்கறி மட்டும் உண்போராய் இருந்தால் சோற்றில் நெய் சேர்த்து உண்ணலாம்.
பனீர் போன்ற புரதமும் கொழுப்புமிக்க உணவைச் சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கொண்டைக்கடலை(சென்னா) உணவில் சேர்த்துக் கொள்வது மரக்கறி மட்டும் உண்பவர்களுக்குப் புரதத்தை அளிக்கும்.

மாலை வேளையில்
100 மில்லி பாலில் டீ/காபி ( இனிப்பு சேர்க்காமல் )
கூடவே
கொய்யாப்பழம் அல்லது வெள்ளரிக்காய் உண்ணலாம்.

இரவு எட்டு மணிக்குள் 3 தோசை அல்லது 3 சப்பாத்தி உண்ணலாம்.

இரவு உறங்கச் செல்வதற்கு இரண்டு மணிநேரம் முன்பே இரவு உணவு முடிக்கப்பட வேண்டும். உணவைச் சாப்பிட்டு விட்டு உடனே படுக்கக்கூடாது. நீரிழிவு நோய் இல்லாதவர்கள் உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் பால் இனிப்பு இல்லாமல் பருகலாம். உணவுக்குப்பிறகு இதமான இசை அல்லது பேரன் பேத்திகளுடன் சிறு விளையாட்டு, உரையாடல் அல்லது இணையருடன் சிறு உரையாடல் என்று முற்றத்தில் அமர்ந்து சற்று காற்று வாங்கிவிட்டு அமைதியான மனநிலையில் உறங்கச் செல்ல வேண்டும்.

இவையன்றி, தங்களுக்கு இருக்கும் மருத்துவம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முறையாக பிரதிமாதம் மருத்துவரை விசிட் செய்து எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டின் தரையை ஈரமில்லாமல் பராமரிக்க வேண்டும். குறிப்பாகக் குளியலறை, கழிப்பறை போன்றவற்றில் ஈரத்தை உறிஞ்சும் சாக்குகளைப் பயன்படுத்தி ஈரமில்லாமல் வழுக்காமல் தரையைப் பராமரிப்பது இடறிக் கீழே விழுவதைத் தடுக்கும். முதியோர் இருக்கும் வீடுகளில் கழிப்பறைகளில் சுவற்றில் பிடிமானத்திற்குக் கைப்பிடிகள் பொருத்துவது சிறந்தது.

முதுமையில் சிலர் தனிமையை விரும்புவர், சிலர் தனிமையை வெறுப்பர். அவரவர்க்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்குரிய ஸ்பேஸ் வழங்கப்பட வேண்டும். பொதுவாக முதுமையில் அனைவரும் தங்களது பிள்ளைகள் அனுசரணையுடன் பேசுவதையும் தங்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதையும் விரும்புவர். எனவே அவர்களைச் சொல்லாலும் செயலாலும் துன்புறுத்தாத வண்ணம் அவர்களது மனம் குளிரும் வண்ணம் பக்குவமாக இளையோர் நடந்து கொள்ள வேண்டும்.

உறக்கமின்மை, அதீதப் பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பதை உணர்ந்தால் தயங்காமல் மன நல மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மற்றும் ஆற்றுப்படுத்துதல் கவுன்சிலிங் எடுத்தால் உடனே பிரச்சனை சரியாகும். முதுமை என்பது அனைவரும் நிச்சயம் அடையவேண்டிய வாழ்வின் முக்கியமான கட்டம்.

முதியோரின் நலனைப் பேணுவதில், அவர்களும் அவர் தம் குடும்பத்தாரும் மிகுந்த அக்கறை எடுக்க வேண்டும் என்றுரைத்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

Author

You may also like

Leave a Comment