Home தொடர்தமிழே அமிழ்தே – 5

தமிழே அமிழ்தே – 5

0 comments
This entry is part 5 of 5 in the series தமிழே அமிழ்தே

சொல் விளையாட்டு!

நட்பிற் சிறந்த அரசர் ஒருவரும் நற்றமிழ்ப் புலவர் ஒருவரும் காலார நடந்தனர். புலவர் மன்னருக்குக் குடை பிடித்தார். அதை விரும்பாத மன்னர் அக்குடையைப் பெற்று, கற்றறிந்த புலவருக்கு அரசனாகிய தானே குடை பிடிக்க விரும்புவதாகச் சொன்னார்.

உடனே புலவர் “உங்கள் குடை நிழலில்தான் நான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ?” என்று கேட்டார். மன்னருக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. வேறு வழியின்றி புலவர் கையிலேயே குடையைக் கொடுத்துவிட்டார். புலவர் உடனே மன்னருக்குக் குடை பிடித்து, “தங்களுக்குக் குடை பிடிக்கும் பேறு பெற்றேன்” என்றார். மன்னருக்கு என்ன சொல்வது என்று விளங்கவில்லை. இப்படி எச்சூழலிலும் உடனடித் திறனோடு உரைக்கவும் செயலாற்றவும் மொழிப் புலமை உதவும்.

பொதுவாக மொழி என்பது மகத்தான வாழ்வியல் பண்பாட்டுக் கூறாகும். அதிலும் அதன் நுட்பங்களைத் துய்த்து உணர முடியும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. மொழியின் சிறப்புகளுள் ஒன்று சிலேடை. ஒரு சொல் அல்லது சொற்றொடர் பல பொருளைத் தருவதாக அமைவது சிலேடை எனப்படும். இசைத் தமிழையும் தன் கூறாகக் கொண்டிருக்கும் நம் தமிழ் மொழியின் இத்தகு இரட்டுற மொழிதலில் மொழிப் புலமை மிக்கோர் மிகவும் சிறப்புற்று விளங்குவர்.

குறிப்பாக, கார்மேகம் போல் பொழியும் கவி என்று பெயர் பெற்ற ஆசுகவி காளமேகம் பல சிலேடை வெண்பாக்களைத் தமிழில் தந்த தனிச் சிறப்புக்குரியவர். தமிழில் சிலேடை இன்பம் என்ற தலைப்பில் சொல்வேந்தர் மன்றத்தில் உரையாற்றிய போது, கவி காளமேகத்தின் கீழ்வரும் வெண்பாவையும் குறிப்பிட்டேன்.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பர் இச்சரக்கை? – மங்காத
சீரகம் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியா ரே

இதில் நாம் அறிந்த வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம் பெருங்காயம் என்பதை வைத்துப் பொருள் கொள்வது மேலோட்டமானது. அதே சமயம் வெங்காயம் = வெற்று உடல், வெந்த அயம், சீரகம் = சீரான உள்ளம் என்று உட்பொருள் கொண்டால் கிடைக்கும் கருத்து எண்ணிச் சுவைக்கத் தக்கது. (இப்பாடல் கவி காளமேகத்தின் தனிப்பாடல் திரட்டில் காணக் கிடைக்கவில்லை என்பதால் இதை இயற்றியவர் வேறொரு புலவர் என்றும் ஒரு கருத்து உண்டு)

தமிழறிஞர் பலரும் சிலேடையாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் சிறப்புற்று விளங்கினர். அறிஞர் கி.வா.ஜா சிலேடையில் மிகவும் சிறந்து விளங்கினார். ஒரு வணிகர் வீட்டு விருந்துக்கு கி.வா.ஜா சென்றிருந்த போது உணவருந்தும் சமயம் அந்த வணிகரின் கடையில் பணிபுரியும் ஒருவரைக் காணாமல் விசாரித்திருக்கிறார். அந்தப் பையன் இறுதியில் வந்து உண்பார் என்று சொல்லப்பட்ட போது, “ஓ, கடை சிப்பந்தி என்பதால் கடைசிப் பந்தியோ” என்று சிலேடை செய்தாராம்.

ஒரு முறை மடத்துத் தலைவர்களின் மாநாடு ஒன்றுக்கு கடைமடை என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தாமதமாக வந்த போது, கூட்டத்தின் தலைவர் அவரை அவமதிக்கும் பொருட்டு “வாரும் கடை மடையரே” என்று எள்ளிவிட, உடனே அவரும் “வந்தேன் மடத் தலைவரே” என்று விடையிறுத்தாராம்.


அடியேன் எழுதிய சிலேடை வெண்பா ஒன்று.

சகோதரி பகுத்தறிவு அண்ணாதுரை என்பவர் ஆக்கிய பாகற்காய் பதிவுக்கு, உடனடியாகக் கலாய்க்கும் எண்ணத்தில் பகுத்தறிவும் பாகற்காயும் என்று மறுமொழி தொடங்க அது ஒரு சிலேடை வெண்பாவாக வந்தது.

// “பகுத்தறிவும் பாகற்காயும்”

நாவுக்கும் ஏற்றதனால் நோய்க்கிருமி நீக்குதலால்
‘பாவ’க்காய் என்றளவில் பக்தர்கள் கூவலினால்
தா-வரம் வேண்டுபவர் தேடுகிற பாகற்காய்
யாவும் பகுத்தறிவு ஆம்.

  • இப்னு ஹம்துன்; சிலேடைப் பாக்கள். //

இதனை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் வைத்த போது, ” ‘பக்தர்கள்’ என்றெல்லாம் வருகிறதே, விளக்கம் சொல்லிவிடுங்களேன்” என்று நண்பர் ஒருவர் அலைபேசியில் சொன்னார். ‘சரி’ என்று பொழிப்புரையும் தந்தேன் அங்கே:

பாடல் விளக்கம்

நாவுக்கும் ஏற்றதனால்

பாகற்காயும் நாவுக்கு ஏற்றது
பகுத்தறிவும் நாவுக்கு’ம்’ ஏற்றது. (உலக அளவில் பகுத்தறிவாளர்கள் பலரும் நாவலர்கள்)

நோய்க்கிருமி நீக்குதலால்
பாகற்காய் (உடலில் உள்ள) நோய்க்கிருமி நீக்கும்
பகுத்தறிவும் (சமூக அளவில்) அதனைச் செய்யும்.

‘பாவ’க்காய் என்றளவில் பக்தர்கள் கூவலினால்

பொதுவாக எல்லா மதத்துப் பக்தர்களுக்கும் பகுத்தறிவு ‘பாவ’த்தின் காய் தானே.

அதுபோல் பாகற்காய் மேல் பற்று உள்ளவர்களும் அதனை பாவக்காய் என்று தான் சொல்கிறார்கள்.

தா-வரம் வேண்டுபவர் தேடுகிற பாகற்காய்

தாவரம் என்றால் சைவம். அவர்களின் தேடலில் பாகற்காய் இருக்கும்.

தா-வரம் என்று இறைவனை வேண்டுபவர் தேடலிலும் பகுத்தறிவு இருக்கும்.

ஆகவே இரண்டும் ஒன்று, என்று குறிப்பிட்டேன்.

தமிழில் சிலேடை இன்பம் குறித்து இன்னுமின்னும் அயராமல் சொல்லிக்கொண்டே போகலாம்.

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 4

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

You may also like

Leave a Comment