Home கவிதைபேசும் வானம் [11 குறுங்கவிதைகள்]

பேசும் வானம் [11 குறுங்கவிதைகள்]

by Ramalakshmi Rajan
0 comments

1. இருள் தளர
நீலத்தில் தேயும் விண்மீன்கள்
விரியும் காலை!

2. வெண்மேகம் விலக
ஒளி சிந்தும் சூரியன்
பேசும் பகல்!

3. மேக நிழல்கள்
மண்ணில் வரையும் சித்திரங்கள்
வானமெனும் குழந்தை!

4. வானம் திறக்க
இலைகளைத் தொடும் வெயில்
மென்மையான வாழ்வு!

5. மலை மேல் சூரியன்
குருவியின் குரல் கரைய
மறையும் ஒளி!

6. குளிரும் மாலை
வான் ஏறும் நிலா
பரவும் இரவு!

7. காத்திருக்கும் விண்மீன்
அடங்கும் காற்று
ஒளிரும் மௌனம்!

8. படிக்கட்டில் நிலவொளி
சற்றே திறந்த கதவு
நுழையும் கனவு!

9. இரவு எனும் கருமண்
சிதறும் விண்மீன் விதைகள்
முளைக்கும் நம்பிக்கை!

10. தென்னை மேல் நிலா
சாலையில் நீளும் நிழல்கள்
நடக்கும் காலம்!

11. கண் சிமிட்டும் விண்மீன்
பிரதிபலிக்கும் நதி
வியப்பில் பூமி!

*

ஒளிப்படம்: ராமலக்ஷ்மி

Author

  • Ramalakshmi Rajan

    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார். இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment