“பொருள் உணர்ந்தார்க்கு இதொரு பொக்கிஷம்” என்றார் சிதம்பரம்.
ஏதோ ரகசியத்தை வெளியிடுவது போல மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தார். வெள்ளை அரைக்கைச் சட்டையும், கருநீல கால்சராயும், அழுந்த வாரிய தலையும், பட்டை சட்டமிட்ட கண்ணாடியும், கோடு போன்ற மீசையுமாக இருந்த அவருடைய தோற்றம், பார்வை, தோரணை எல்லாம் ஏதோ உன்னதமான காரியத்தில் ஈடுபட்டிருக்கும் தீவிரத்தைக் கொண்டிருந்தன. ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர் என்று பத்மநாபன் சொல்லியிருந்தான்.
“இதான் நான் சொன்ன வீடு. அந்தக்காலத்து தமிழ்ச்சங்கக் கூட்டமெல்லாம் இங்க நடந்திருக்கு. பாரதியாரோட போட்டோ இன்னமும் இந்த வீட்டுல இருக்கு. போட்டோன்னா நெகட்டிவ்வாவே இருக்காம். இன்னமும் அந்தக் காலத்து கிளாஸ் நெகட்டிவ், ப்ரிண்ட் போடாமலே தங்கிப் போச்சு. இப்பத்தான் ஏஐ அது இதுன்னு ஒரே பேச்சா இருக்கே. நீ கில்லாடிய்யா.. அதெல்லாம் போட்டுக் கொடுத்திருவேன்னு சொல்லி வச்சிருக்கேன்.”
பத்மநாபன் மேம்போக்காக அடித்து விட்டு, ஆதாயம் கிடைக்கும் திசைகளில் அலைபாய்ந்து, செல்வாக்கானவர்களை நட்பாக்கிக் கொள்ள எந்த விலையும் தரத் தயாரானவன் என்றாலும், எப்படியோ இந்த பாரதி கிறுக்கு அவனிடம் பற்றிக் கொண்டு விட்டது. என் மேல் பெரியதாக அவனுக்கு அபிப்ராயம் எதுவும் கிடையாது என்றாலும், எழுத்தும் வாசிப்புமாக இருக்கிறேன் என்பதால், எப்போது மதுரைக்கு வந்தாலும் பிடித்து இழுத்துக் கொண்டு போய்விடுவான்.
அவன் காட்டிய வீடு சிறியதாக இருந்தது. அருகில் இருந்த கட்டடங்கள் புதியதாகவும், உயரமாகவும் இருக்க, இந்த வீடு ஒற்றை மேல்தளத்துடன், முகப்பு வண்ணம் எல்லாம் உதிர்ந்து சோபையிழந்து காணப்பட்டது. எதிரில் தமிழ்ச்சங்க பல்கலைக்கழகத்தின் அலுவலகம் ஒரு காலத்தில் இருந்தது என்று நினைவு. அந்தச் சாலைக்குப் பெயரே தமிழ்ச்சங்கம் சாலைதான். வாசலில் நிறுத்த இடம் கிடைக்காமல் பக்கவாட்டில் இருந்த பேச்சியம்மன் படித்துறைச் சாலையில் திருப்பி நிறுத்தியிருந்தது நாங்கள் வந்த வாடகைக் கார்.
ஒரு சின்னப் பெண் வந்து கதவைத் திறக்க, அந்த சிறிய வராண்டா வழியே வீட்டினுள்ளே புகுந்தோம். வலப்புறம் ஒரு பத்துக்குப் பத்து அறை இருக்க, ஒடுக்கமான வராண்டாவை கடந்து சென்றால், பெரிய கூடம் இருந்தது. வீட்டின் உட்புறம் மொசைக் தளத்துடன், நல்ல விளக்கு வெளிச்சத்துடன் சூழலில் நவீனத்தன்மை கொண்டதாக இருந்தது.
“சொன்னேனே மதுரையில் மகாகவி-ன்னு டாக்குமென்ட்ரி…. இவர்தான் எடுக்கிறார்” என்று அறிமுகப்படுத்தும்போதுதான் சிதம்பரம் அந்த வாக்கியத்தைக் குறிப்புட்டார்.
“பாரதின்னவுடனே எட்டயபுரத்திலிருந்து, திருவல்லிக்கேணி, கடையம் என்றுதான் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை போகும். இந்த சொற்ப மதுரை வாசம் அவருடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என அதிகம் பேருக்குத் தெரிவதில்லை” என்றார் சிதம்பரம்.
“அந்த காலத்தில் அரசன் சண்முகனார், ம. கோபாலகிருஷ்ணய்யர், போன்றோரின் முயற்சியில் உருவான நச்சினார்க்கினியன் நினைவு நூலகம் பாரதிக்கு உலக இலக்கியத்திற்கான முதன்மையான சாளரமாக இருந்திருக்கனும்” என்றார் புலவர் இரத்தினசாமி. சென்ற முறை பார்த்ததற்கு இப்போது சற்றுத் தளர்ந்து போயிருந்தார். என்னை அவருக்கு அறிமுகம் இருப்பது போலவே தெரியவில்லை.
“நான்காம் தமிழ்ச்சங்கத்தை விட்டுட்டீங்களே. பாண்டித்துரைத் தேவர், சேதுபதி சமஸ்தானம், பரிதிமாற் கலைஞர், வ உ சிதம்பரனார்“. அருகில் அமர்ந்திருந்த மூதாட்டி பக்கமாகத் தலையசைத்துக் காட்டி, “உங்க தாத்தா பராங்குசம் ஐயா போன்ற தமிழ் ஆர்வலர்களிடையே மதுரையில் பாரதிக்கு பெரிய வரவேற்பு இருந்திருக்கனும்” என்றார் சிதம்பரம். அவருடைய குரல் இயல்பிலேயே மெலியதாகத்தான் இருந்தது. ஆனால் கூர்மையுடன் இருந்தது.
அவர் பக்கத்தில் அகலமான சாய்வு சோபாவில் இருந்த பெண்மணியை அப்பொழுதுதான் பார்த்தேன். எண்பதுக்கு மேல் வயதிருக்கும். மிகச் சிறியவராக அகல சால்வை ஒன்றில் சுருட்டிப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்று விட முடியும் என்பது போல சிறிய உருவம். வெளிறிய சருமத்தின் சுருக்கங்கள் முதுமையின் வறட்சியைக் காட்டின. கண்கள் மட்டும் அவ்வளவு உயிர்ப்புடன் ஒளிர்ந்தன. வெளுத்திருந்த அடர்த்தியான தலைமயிர் கழுத்துவரை மட்டுமே இருந்தது. அடர்சிவப்பு வண்ணத்தில் கலைடாஸ்கோப் போன்ற வடிவங்களை அள்ளித் தெளித்தது போன்ற நீண்ட உடையில் அவர் உருவம் இன்னமும் சிறியதாக தெரிந்தது.
“விவேகபாநு, ஞானபாநு போன்ற பத்திரிகைகள்….” என்றார்.
நான் சற்றுத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் அவரைப் பார்த்தபோது அவர் கண்கள் என் மீதே இருந்தன. அவர் சொன்ன பத்திரிகைகள் பற்றிய அறிமுகம் எனக்கு இல்லை என்பதைக் கண்டறிந்து கொண்டது போல, முன்தள்ளிய மேல்வரிசை பற்கள் தெரிய, ‘அட அசடே,’ என்ற பாவனையில் உதடுகளில் ஒரு சிரிப்பு உதிர்ந்தது அவரிடமிருந்து.
“ஆமாம். விவேகபாநுல எழுதியிருக்காரே. யோசிச்சுப் பாத்தா நீலா மேடம், ஒரு படைப்பாளியாகவும், ஒரு பத்திரிகையாளராகவும் பாரதிக்கு உத்வேகம் கிடைச்சதுக்கு அவருடைய மதுரை வாசம் மிகவும் முக்கியமானது. அப்ப என்ன…. அவருக்கு இருபத்திநாலு வயசு இருக்குமா?” நிறுத்திவிட்டு இரத்தினசாமி ஐயாவைப் பார்த்தார் சிதம்பரம். அவர் ஆமோதிப்பாக தலையசைக்கவும், தொடர்ந்து, “புலவர் ஐயாவுக்கு தெரியாதது இல்லை. அவ்வளவு துடிப்பும் வேகமுமா பாரதி இந்திய தேசிய விடுதலை தாகத்துடன், சமூக முன்னேற்றத்திற்கான தீர்க்கத்துடன், அரசியல் விழிப்புணர்வு மிக்கவராக உருவாகத் தொடங்கியிருந்த காலம் அது. செட்டூர் சங்கரன் நாயர் பற்றி அவர் எழுதிய கட்டுரை அன்றைய ஆங்கில இந்து பத்திரிகையில் வெளிவந்தது”. என்றார். அவரது மெலிய குரல் மெள்ள மெள்ள அறை முழுவதும் நிறைக்கத் தொடங்கியிருந்தது.
“இப்போ செட்டூர் நாயர் பத்தி வடக்கில சினிமாப் படம் எடுக்கிறான் சார். நாமதான் இங்க பாரதி பத்தி ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்து முடிக்க அல்லாடிட்டு இருக்கோம்” என்றான் பத்மநாபன் வறண்ட சிரிப்புடன்.
என்னிடம் திரும்பி, “ஆயிரத்தி தொள்ளாயிரத்து அம்பதுலயே பாரதியோட படைப்புகளை நாட்டுடமை ஆக்கிட்டாங்க. ஆனா, ஆறேழு வருஷமா அரசு சார்பில ஒரு புத்தகம் கூட பாரதியோட படைப்புன்னு வெளிவரல தெரியுமா. புலவர் ஐயா போன்றவங்க சொந்தக் காசு செலவழிச்சுப் புத்தகம் கொண்டாந்ததுதான்.”
ஐயா மறுத்துத் தலையசைத்து, “அவரை மனசாரப் படிச்சவனுக்கு, வேறெந்த புறக்காரணமும் தேவையில்லப்பா. பாரதியார் பாடல்கள்ன்னு முதல் பிரதியை என் கையில் எடுத்துப் பார்த்தப்ப இருந்த சந்தோஷம்…. அதுக்கப்புறம் என்னிக்கும் கிடைச்சதில்ல”, இப்போது அவர் கண்களில் ஜீவன் ஒளிவிடத் தொடங்கிற்று.
“எனக்கும் நினைப்பிருக்கு” என்றார் நீலா. “உங்க இன்னொரு டாக்குமெண்ட்ரி கூடப் பாத்திருக்கேன். அந்தக் காலத்து மதுரை பத்தி, பழைய போட்டோஸ்லாம் வச்சு” என்றார் சிதம்பரத்தைப் பார்த்து.
“மாமதுரை போற்றுதும்தானே. பத்தொம்பதாம் நூற்றாண்டுல நிகோலஸ் கம்பெனின்னு ஒரு ப்ரிட்டிஷ்காரரோட ஃபோட்டோ ஸ்டூயோ எடுத்த படங்கள் கிடைச்சது. அப்புறம் ஜி ஆர் மணின்னு ஒரு எமினென்ட் ஃபோட்டோகிராஃபர். உங்க தாத்தாவோட பாஸ் கேப்டன் ஆல்ஃப்ரட் டேபர் (Captain Alfred Tabor) எடுத்த படங்கள் கூட ப்ரிட்டிஷ் லைப்ரரில சிலது கிடைச்சது. எல்லாத்தையும் தொகுத்ததுதான் அந்த டாக்குமென்ட்ரி. ஆனா இதையெல்லாம் முக்கியமான ஆய்வுப் படங்களா ஒத்துக்க மாட்டாங்க. யூட்யூப்ல போட்டுத் திருப்திப்பட்டுக்கலாம்” என்று சொல்லிச் சிரித்தார்.
“அப்படில்லயே” நீலா சற்றே குரலுயர்த்திச் சொன்னார். “இந்தக் காலத்துக்கு உங்களைப் போன்றவர்களோட வொர்க் ரொம்ப முக்கியம். துல்லியமான தகவல்களும், அதையொட்டிய அசலான கருத்துரைகளுமாக சமநிலையோட நீங்க கொண்டு வர்றது அருமை.” சிலநொடிகள் நிறுத்திவிட்டு, அயர்ச்சியுடன் “இப்ப எல்லாம் நார்மலைஸ் ஆகிட்டது.” என்றார்.
“அசலான நேரேட்டிவ்னு புதுசா என்ன இருக்கு மேடம்” என்றார் சிதம்பரம். “எல்லாம் இங்கேயே இருக்கிறதுதான். ஒண்ணுமில்லாத மாதிரி நம்ம கண்ண மறைச்சிட்டிருக்கும். அதுவாகவே சூன்யத்தை விலக்கிட்டு நம்ம கண்ணு முன்னாடி வந்து நிக்கிறவரை பொறுமையா இருக்கனும்.” என்றவர், பக்கவாட்டு டேபிளில் இருந்த ஒரு சிறிய கைப்பெட்டியை சுட்டிக் காட்டி. “இதான அந்த பாரதி படம் இருக்கிற லாட்? ப்ரிண்ட் போட்டதே இல்லன்னு சொன்னீங்கள்ல” எனக் கேட்டார்.
“ஆமாம். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேந்து, இந்தப் பெட்டியை அதிகம் தொறந்து கூட பாத்ததில்ல. வருஷா வருஷம் சரஸ்வதி பூஜைக்கு எடுத்து பூப்போட்டு சந்தன குங்குமம் வைக்கிறதோட சரி” என்றார் நீலா.
“பாரதின்னாலே சரஸ்வதிதானே” என்றான் பத்மநாபன். சமயம் பாத்து வசனம் பேசுவதில் அவன் சமர்த்தன்.
என்னைப் பார்த்த சிதம்பரம், “நூத்திருபது, நூத்தம்பது ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள். எல்லாம் கிளாஸ் நெகட்டிவ்ஸ். டிஜிட்டல் ஆக்கி ப்ரிண்ட் போடனும். அதுக்குத்தான் பத்மநாபன்….” என்றார்.
“ஆமாம். முக்கியமா அந்த பாரதி படத்தை நல்லா ஏஐ-ல போட்டு பிரமாதப்படுத்திடு” என்றான் என்னைப் பார்த்து.
நீலா அம்மையாரின் கண்களில் ஒரு தயக்கம் தெரிந்தது.
“தாத்தாவுக்கு அப்போ ஃபோட்டோகிராஃபில ரொம்ப ஆர்வம்னு பாட்டி சொன்னதுதான். பத்திரிகைகான வேலைன்னாலும் சரி, கேப்டனோட போய் ஃபோட்டோ எடுக்கிறதுன்னாலும் சரி, அவருக்கு அவ்ளோ இஷ்டம். தாத்தாவுக்குத் துணையா பாட்டியும் எல்லா வேலையும் இழுத்துப் போட்டுச் செஞ்சிருக்கா. கிளாஸ் நெகட்டிவ்களை ஜெலட்டின் பேப்பரில் டெவலப் செய்து ப்ரிண்ட் எடுக்கிறது“. அந்தக் கூடத்திற்கு அப்புறம் இருந்த தனியறையைக் காட்டி, “ரொம்ப நாளைக்கு, அந்த முன் ரூம்ல ப்ளாக் வச்சு ப்ரிண்ட் எடுக்கிற மெஷின், பெல்லோஸ் வச்ச பெரிய கார்ஃப்ளெக்ஸ் காமெரா, ஃப்ளாஷ் லைட் ஹோல்டர்ன்னு நிறைய சாமான்கள் இருந்தது. விவேகபாநு மேகஸினுக்கு வர்ற ஆர்ட்டிகிள்ஸை ஃபேர் காப்பி எடுத்து கம்பாஸிடருக்குக் கொடுக்கிறதுல்லாம் கூட பாட்டி செஞ்சிருக்கா. அது பெரிய பத்திரிகை. மாசாமாசம் நூறு இருநூறு பக்கங்களுக்கு வரும்” என்றார். “பாட்டி வாஸ் வெரி வெர்ஸடைல்”
“பாரதியை வரைஞ்ச படங்கள்னு ஒரு கோடிக்கு மேல இருக்கும். ஆனால் அவரைக் கேமரால எடுத்த படம் அஞ்சோ என்னமோத்தான்” என்றார் புலவர் இரத்தினசாமி.
“ஆறு. பாண்டிச்சேரில லெக்சர் கொடுக்கப் போனபோது போஸ்டர்ல ஒரு போட்டோ இருந்ததுன்னு சமீபத்துல ஒரு நியூஸ் வந்ததே”
மற்றவர்களுடைய பேச்சை விட, நீலா அம்மையாரின் பேச்சு எனக்கு மிகவும் வியப்பை அளித்தது. வற்றிக் காய்ந்து போன நீர்த்தடங்களிலிருந்து, என்றோ கரைபுரண்டோடிய ஆற்றை உயிர்ப்பித்துக் காட்டுவது போல வரலாற்றைத் தேடிக் கொண்டிருப்பவர்களில் அவருடைய பேச்சு வித்தியாசமானதாக இருந்தது.
சிதம்பரம் ஒன்றும் பேசாமல், அந்தப் பெட்டியை எடுத்து டீப்பாய் மீது வைத்து மெல்லத் திறந்தார். செவ்வக வடிவில் காகித உறைகளில் வரிசையாகக் கண்ணாடி நெகடிவ்களாக அடுக்கி வைத்திருந்தது.
“ஆயிரத்து தொள்ளாயிரத்து நாலுலதான் தாத்தா வைரஸ் காய்ச்சல் வந்து போயிட்டார். அதனால இந்த நெகட்டிவ்கள் ப்ரிண்ட் போடாம தங்கிப் போச்சு. தாத்தா போனதும் பாட்டியால இந்த வேலைல்லாம் செய்ய முடியல. அந்தக் காலம் அப்படித்தானே. மூளின்னு சொல்லி மூலைல உக்காத்தி வச்சிடும். அவ்வளவு குரூரமானது. பட், இந்தப் பெட்டி அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்றார்.
கிழக்குப் பக்கமான சுவருக்கு நேரெதிரே நாற்காலியின் மீது சில புத்தகங்களை அடுக்கி உயரத்தில் சிறிய புரஜெக்டர் ஒன்றை அமர்த்தினேன். லேடக்ஸ் கையுறைகளை அணிந்த கைகளோடு செவ்வக வடிவத்து கண்ணாடி நெகட்டிவ்களை ஒவ்வொன்றாக உறையிலிருந்து எடுத்து, கேமரா ஸ்லைட் ஒன்றின் நடுவே பொதிந்தேன். சரியாகப் பொருந்திக் கொண்டது.
“டிஜிட்டல் படங்களை இதில் சேமித்துக் கொடுங்கள்” என்று ஒரு பென் டிரைவ்வை என்னிடம் கொடுத்தார் சிதம்பரம்.
“சிதம்பர ரகசியம்” என்ற எழுத்துக்களுடன் ஒரு லோகோ மேலே பொறித்திருந்தது. என் பார்வையின் நோக்கை உணர்ந்தவர் போல “அது எங்களோட யூட்யூப் சேனல். எங்க டாக்குமெண்ட்ரில்லாம் அதில இருக்கு” என்றார்.
கூடத்தைச் சற்றே இருட்டாக்கி, கேமரா ஸ்லைடின் பின்னணி வெளிச்சத்தில் ஒளிர்ந்த பிம்பத்தை, டிஜிட்டல் வடிவில் மேக்புக்கில் ஏற்றிக் கொண்டு, புகைப்படங்களுக்கான செயலியைத் திறந்து, நிறங்களை மாற்றி, புரஜெக்டர் வழியே சுவரில் ஒளிபரப்ப, பளீரெனத் தெரிந்தது படம்.
“ஆன மலை” என்றார் சிதம்பரம்.
அடுத்து வரிசையாக அக்காலத்துப் புது மண்டபம், ராஜகோபுரம், தத்தசுத்தி மண்டபம் என்று அழைக்கப்பட்ட பதினாறுகால் மண்டபம், நாகாபரண சிற்பங்கள் என்று ஒவ்வொரு நெகட்டிவ்களாக வர, அவற்றை டிஜிட்டலில் மாற்றிக் கொண்டே வந்தேன்.
கேப்டன் டேபருக்கு ஒளியமைப்புப் பற்றி பிரமாதமான ஞானம் இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படமும் மிகவும் துல்லியமாகப் படமாக்கப் பட்டிருந்தன. எந்தவிதச் செயற்கை நிரலிகள் கொண்டு பிற்சேர்க்கை செய்ய வேண்டிய அவசியமே இல்லாத அற்புதமான வேலை.
‘Dry Slide’ என்ற தலைப்போடு, அமெரிக்க நியூடோன் நிறுவனத்து செவ்வக உறையிலிருந்து, நெகட்டிவை வெளியே எடுக்கும்போது இறுக்கமாக இருந்தது. டிஜிட்டல் நெகட்டிவ் ஆக்கிப் போட்டோவாகச் சுவரில் பரப்பிப் பார்த்தால், பக்கவாட்டுத் தோற்றத்தில் சிறு பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
“சார், கால்வாசிதான் நெகட்டிவ்ல லைட்டிங் வந்திருக்கு. வலது பக்கம் முக்காலும் ஓவர் எக்ஸ்போஸ் ஆயிட்டிருக்கு” என்றேன். சில நொடிகள் யாரும் பதில் பேசவில்லை. பிறகு சிதம்பரம், “இந்த வீட்டுல எடுத்த போட்டோதான். அந்தப் பொண்ணு சாஞ்சு நிக்கற தூண் பாருங்க அப்படியே இருக்கு”.
அவர் சொன்னது சரிதான். மேல்தளத்தை ஒட்டிய தூண் பகுதியில் சிறிய புடைப்புச் சிற்பமாக அன்னப்பறவை வடிவத்தைப் பார்த்ததும் அது இந்த வீட்டுத் தூண்தான் எனத் தெரிந்தது.
பதினாறு பதினேழு வயதிற்கு மேல் சொல்லப்பட முடியாத சிறு பிராயத்துப் பெண்தான். நீண்ட பின்னலை தோள்மேல் இழுத்து விட்டபடி தூணின் மீது சாய்ந்து கூடத்தின் மையப்பகுதியை நோக்கிக் கொண்டிருந்தாள். கூராக இறங்கிய நாசியின் கீழ் சற்றே முன்னகர்ந்த மேல்வரிசைப் பற்களின் மீது உதடு மூடியும் மூடாததுமாக ஒரு சிரிப்பு. உடனே திரும்பி, அந்த குறைவான வெளிச்சத்தில் தெரிந்த நீலா மேடத்தின் முகத்தைப் பார்த்தேன். என் நினைப்பைப் படித்தவர் போல, “அது எங்கப் பாட்டி. நீலாயதாக்ஷி” என்றார்.
இன்னொரு முறை அந்தப் படத்தைப் பார்த்தபோது, வெளிச்சமடித்த முக்கால்பகுதியைக் காட்டிலும், அந்தச் சிறுபெண்ணின் உருவம்தான் கண்களில் பிரதானமாகத் தெரிந்தது. அவள் உன்னிப்பாகப் பார்க்கும் திசையில், கூடத்தின் மத்திய பகுதியெல்லாம் வெளிச்சம் பரவி ஒன்றும் தெரியாமல் ஆக்கிவிட்டிருந்தது.
“ஏதோ முக்கியமான கூட்டம் நடந்திருக்கனும். அதை ஃபோட்டோ எடுக்கும் போது ஆக்ஸிடென்டல் எக்ஸ்போஷர் ஆகி, பாதிக்கு மேல வேஸ்ட்டாப் போயிட்டிருக்கு” என்றார் சிதம்பரம்.
எனக்கு அந்த மீதிப் பகுதியின் வசீகரம் வியப்பாக இருந்தது. அதிலும் அந்தப் பெண்ணின் துறுதுறு பார்வையும் சிரிப்பும் அவ்வளவு உயிர்ப்புடன் அந்தப் படத்தை காட்டியது. மேலும் இருமுறை, நீலா மேடத்தைத் திரும்பிப் திரும்பிப் பார்த்தேன்.
மொத்தம் பத்தொன்பது நெகட்டிவ்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றியபின், கூடத்து விளக்குகளை எரியவிட்டேன்.
சிதம்பரம் அந்த ஹாலின் கிழக்கு மற்றும் வடக்குச் சுவர்களைக் காண்பித்து, “இங்க சில போட்டோஸை ப்ரிண்ட் போட்டு மாட்டி வைப்போம். விவேகபாநு ப்ரஸ், தமிழ்ச்சங்க கூட்டம் நடந்த இடம்னு காட்டறதுக்கு நல்ல ஆம்பியன்ஸா இருக்கும்” என்றார்.
“எம்பத்தி ஆறு, இல்ல எம்பத்தியெட்டுல பாபுன்னு ஒர்த்தர். நைஸ் ஜென்டில்மேன். மாடர்ன் கேமரால்லாம் வச்சு நிறைய போட்டோ எடுத்திட்டிருந்தார். அப்ப அதெல்லாம் ரொம்ப லக்ஸுரியாச்சே” கைகளைத் தூக்கி வியப்பாகக் காண்பித்தார். “அவர் இந்த நெகட்டிவ்ஸ்ல இன்ட்ரெஸ்ட் எடுத்து, ப்ரிண்ட் போடறதுக்கு கேட்டார். அப்ப ஜெலட்டின் பேப்பர்ல டெவலப் பண்ணி ப்ரிண்ட் போடனும். ஆனா அது அப்ப நடக்கல” என்றார் நீலா.
ஆர்வத்தை அடக்க முடியாமல் “ஏன்?” என்று கேட்டேன்.
“மே பி, பாட்டிக்கு அதில விருப்பம் இல்லையோ என்னவோ” என்று கைகளை வீசிக்காட்டிச் சிரித்தார். போட்டோவில் பார்த்த சிறு பெண்ணிடம் கண்ட அதே முயல்பற்கள் சிரிப்பு. தன்னுடைய பால்யத்தைத் தொட்டுத் தொட்டு மீண்டு வருவது போல் சுவரில் இருந்த பிம்பத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தார். “எவ்ளோ அழகு! அந்த வயசுல”
நெகட்டிவ்வை அதன் உறையில் நுழைக்க முயலும்பொழுது, இறுக்கத்துடன் மீண்டும் தடுக்கியது. உள்ளே செலுத்த சற்று அழுத்தம் கொடுக்க, “பாத்து, உள்ளே ஏதோ இருக்கு பாருங்க” என்றார் சிதம்பரம்.
உறையினுள் தெரிந்த சிறிய காகித நுனியை விரல் நுனியால் பற்றி இழுத்துப் பார்த்தேன். நன்றாக உறையினுள்ளே ஒட்டிக் கொண்டிருந்தது. நூறாண்டு கால பிணைப்பு. என் கையிலிருந்த உறையை வாங்கிய சிதம்பரம்,
“உள்ளே என்னமோ சிக்கிட்டிருக்கு” என்றார் மென்மையான குரலில்.
நகத்தின் நுனி கொண்டு ஜாக்கிரதையாக அவர் பற்றியிழுக்க, ஒட்டியிருந்த காகிதங்கள் மெள்ள மெள்ளப் பிரிந்து வருவது தெரிந்தது. காகித உறையினுள் ஒரு கையடக்கக் காகிதம் மடித்துச் செருகப்பட்டு இருந்தது. முற்றிலுமாக வெளியில் எடுத்த அந்தப் பழைய காகிதத்தை, அன்று பிறந்த மகவைத் தொட்டுத் திருப்புவது போல, சிதம்பரம் பிரித்துப் பார்த்தார். சில நொடிகளில் ஆச்சரியத்தில் முகமெல்லாம் விகசிக்க, முன்னால் இருந்த சிறிய டீப்பாய் மீது, அந்த காகிதத்தை விரித்து வைத்தார்.
“இதை டிஜிட்டல் படம் எடுத்து சுவரில புரஜக்ட் பண்ணுங்களேன்” என்றார்.
நான் ஃபோன் காமரா வழியாக, சரியான வெளிச்சத்தில் படம் எடுத்து மேக்புக்கிற்கு மாற்றி எதிரில் இருந்த திரைக்கு மாற்ற, அந்தக் காகிதத்தின் பிம்பம் ஒளிர்ந்தது.
“என்னன்னு தெரியுதா? விவேகபாநு இதழில் வெளியான பாரதியின் கவிதை.” என்றார் சிதம்பரம்.
‘தனிமை யிரக்கம்’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டு அடிக்கோடிட்டிருந்தது. கீழே ‘குயிலினாய்!’ என்று தொடங்கி பதினான்கு வரிகளில் நேர்த்தியாக அச்சிட்ட எழுத்துகளில் ஒரு பாடல் இருக்க, கீழே ‘இங்ஙனம் எட்டயபுரம் ஸி. சுப்ரமணியபாரதி’ என்று எழுதியிருந்தது.
புலவர் ஐயா, “ஆமாம். அச்சில் வெளியான பாரதியின் முதல் கவிதை.” என்றார். அவர் குரல் உற்சாகத்துடன் வெளிப்பட, அந்த அரையிருட்டிலும் அவர் முகம் பிரகாசம் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
சிதம்பரம் ஆமோதிப்பாக தலையசைத்து. “கம்பாஸிடருக்காக எழுதப்பட்ட திருத்திய வடிவமாக இருக்க வேண்டும்.”. பிறகு திரும்பி நீலா அம்மையாரைப் பார்க்க, அவர் மெள்ளத் தலையசைத்தார்.
“பாட்டியோட கையெழுத்துதான். ப்ரூஃப் பாக்கிறது, டைப் செட் பண்றது கூட தெரியும் அவளுக்கு”
“வேற பெட்டில ஏதும் நெகட்டிவ்ஸ் இருக்குமா, பாருங்க மேடம்” என்றான் பத்மநாபன். பாரதியின் படம் என்று எதுவும் கிடைக்கவில்லை என்கிற ஏமாற்றம் விரவியிருந்தது அவன் குரலில்.
“இதான் இருக்கு” என்ற நீலாவின் கண்கள், அச்சுக் கோக்கப்பட்டது போன்ற கையெழுத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.
அந்தக் காகிதத்தையும், கண்ணாடி நெகடிவ்வையும் கவருக்குள் ஜாக்கிரதையாக வைத்து, அந்தக் கைப்பெட்டியிலே மீண்டும் வைத்தேன்.
“ஆன மலை, கோவில் கோபுர படங்கள் எல்லாமே ப்ரிட்டிஷ் லைப்ரரி ஆர்கைவ்ஸில் இருக்கிறது. நீங்களே பார்த்திருப்பீர்களே. மாமதுரை டாக்குமெண்ட்ரியில் அதெல்லாம் ஏற்கெனவே சேர்த்திருக்கிறோம்.” என்ற சிதம்பரம் தொடர்ந்து, ‘தத்தசுத்தி மண்டபப் படம் புதுசுன்னு நினைக்கிறேன். பழைய புத்தகங்களை செக் பண்ணிட்டு சொல்றேன்” என்றார்.
பக்கவாட்டு மேஜையில் இருந்த அந்த கைப்பெட்டியைச் சுட்டிக் காட்டி “பாரதியை எத்தனையோ பேர் வரைந்திருக்கிறார்கள். வெகுசிலர் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்த பாரதியின் படம் வெகு அபூர்வமானது. பத்திரமா வைங்க” என்றார்.
“இத்தனை காலம் கழித்து பாட்டிக்கு உங்களை எல்லாம் பாக்கனும்னு தோணியிருக்கு பாருங்க. அதுவே அபூர்வம்தான். அவ எப்போதும் வெளியிலேயே வந்ததில்லை” என்றார் நீலா. தொடர்ந்து “அந்த போட்டோல தெரியற பாட்டியை நாங்களே நேர்ல பாத்ததே இல்ல. இப்படி நீங்க யாராவது கேக்கும்போதுதான் பாக்க முடியும்” என்றார்.
சிதம்பரம் புரிந்து கொண்டவர் போல் தலையசைத்துவிட்டு, தன் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். லெக்சர் முடித்துவிட்டு கிளம்பும் பேராசிரியர் போல, தலையசைப்பில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.
அந்தி சாய்ந்து, இருட்டிக் கொண்டு வந்ததால், புலவர் ஐயாவை அவர் வீட்டில் விட்டு வருகிறேன் என்று பத்மநாபனும் புறப்பட்டான். “நாம் வந்த காரிலேயே கூட்டிட்டு போயிடு. நான் பாத்து கிளம்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, எனது உபகரணங்களைப் பேக் செய்ய ஆரம்பித்தேன்.
“நீங்க எப்போ உங்க ஊருக்குத் திரும்பறீங்க” என்று நீலா அம்மையார் கேட்க நிமிர்ந்து பார்த்தேன். அவர் முகத்தில் முதலில் குடிகொண்டிருந்த அமைதி மீண்டும் வந்து அமர்ந்திருந்தது.. “பத்தாம் தேதி கிளம்பிருவேன் மேடம்” என்றேன். அந்த கண்ணாடி நெகட்டிவில் இருந்த சிறிய பெண்ணின் சாயல் இப்போது அவருடைய முகத்தில் முழுவதுமாக வெளிப்பட்டது போலிருந்தது. தலை சற்றே கிறுகிறுக்க, தண்ணீர் குடித்தால் தேவலை என்றிருந்தது. என் பார்வையின் தேடலைப் புரிந்து கொண்டவர் போல, “ஐஸ் வாட்டர் ஓகேயா. பொதுவா அமெரிக்காவில் இருந்து வர்றவங்க கூடவே ஒரு தண்ணி பாட்டில் வச்சிருப்பீங்களே” என்று எழுந்து கூடத்தைக் கடந்து மேற்கு மூலையில் இருந்த ஃப்ரிட்ஜை நோக்கி நடந்தார். அந்த அன்னப்பறவைத் தூணைக் கடக்கும்போது அவர் சற்றே திரும்பிப் பார்க்க, புகைப்படத்தில் இருந்த சின்னப்பெண் போலவே இருந்தது. அப்படியொரு அசாதாரண ஒற்றுமையைக் கண்டு பிரமிப்பாக இருந்தது. கைதவற இருந்த கணிணியைக் காப்பாற்றி பையில் இருத்தினேன்.
தண்ணீர் குடித்துவிட்டுக் கிளம்பும்போது, தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு. “பாட்டிக்கும் சேத்து பை” என்று கைகளைப் பிடித்துக் கொண்டார். “நீங்க ஒரு சிறந்த ஜென்டில்மேன்” சொல்லிச் சிரித்தார். அவர் அந்தளவிற்கு உணர்ச்சிவயப்படுவதற்கு நானொன்றும் பெரிய உதவி செய்யவில்லையே என்று சற்று வெட்கமாக இருந்தது.
அந்திப் பொழுதின் குளுமை மெள்ள சூழலின் இனிமையைக் கூட்ட, அந்த தமிழ்ச்சங்கச் சாலையில் இறங்கி, நடக்க ஆரம்பித்தேன்.
அடுத்து இரண்டு நாட்களில் அமெரிக்காவிற்குப் புறப்படும்வரை ஏகப்பட்ட அலைச்சல்கள். பூமியின் சுழற்சியை எதிர்த்துக் கொண்டு மேற்குத் திசைக்குப் பறந்து வந்ததால் இழந்த மணித்துளிகளால் சீர்குலைந்திருந்த பயாலஜிகல் கிளாக்கின் சோர்விலிருந்து மீண்டு அன்றாடப் பணிகளின் ஒழுங்கமைவு கூடி வரும்போது, சிதம்பரத்திடமிருந்து ஒரு மெயில் வந்தது. நீலா அம்மையாருக்கும் எனக்கும் மட்டும் அனுப்பியிருந்தார்.
அவருடைய டாக்குமென்ட்ரிக்கு உதவிகரமாக அமைந்த எங்கள் சந்திப்பிற்கு நன்றி கூறி, குறிப்பாக நீலா அம்மையாரின் உபசரிப்பைச் சிலாகித்து எழுதியிருந்தார். பாரதியின் முதல் படம் இருந்த சேகரிப்புகளைக் காட்டியதைக் குறிப்பிட்டு, அவர் தன்மேல் வைத்திருக்கும் மரியாதைக்கு அது அத்தாட்சி என்றிருந்தார்.
“பொருளுணர்ந்தார்க்கு அதொரு பொக்கிஷம். அதையும் கடந்தோர்க்கு அதொரு தத்துவம்” என்றிருந்தன அடுத்த வரிகள்.
முழுவதுமாகப் புரியவில்லை. ஏதோ மிகையுணர்ச்சியில் எழுதியிருப்பாராக இருக்கும் என்று எண்ணினேன்.
அடுத்து என் பெயரைக் குறிப்பிட்டு, வழக்கமான முறையில் நன்றி பாராட்டிவிட்டு, “அந்த பென் டிரைவ் உங்களுடனே தங்கிவிட்டது. அதையே காரணமாகக் கொண்டு நாம் மீண்டும் சந்திக்கக் கூடிய சாத்தியம் அமைந்தால் மகிழ்ச்சியே” என்று எழுதியிருந்தார்.
அந்த பென் டிரைவ் என்னுடனே தங்கி விட்டது என்பது எனக்குப் புதிய செய்தி.
அந்த நாளைய நிகழ்வுகளை, நினைவு அடுக்குகளில் இருந்து மீட்டு, அந்த ‘சிதம்பர ரகசியம்’ என்ற லோகோ பொறித்த பென் டிரைவ்வை யாரிடம் கொடுத்தேன் என்று துழாவிப் பார்த்தேன். சிதம்பரத்திடமா? பத்மநாபனிடமா? இல்லை அது என்னிடமே தங்கிவிட்டதா!
பரபரப்புடன் என்னுடைய கணிணிப் பை, பிரயாணப் பைகள், அன்றைக்கு அணிந்திருந்த உடைகளைக் கிடந்த லான்ட்டிரிக் கூடைகள் என்று கொட்டிக் கவிழ்த்துத் தேடிப் பார்த்தேன். ஒன்றும் அகப்படவில்லை.
ஃபோன் நோட்டிஃபிகேஷன் கேட்க திறந்து பார்த்தால், சிதம்பரத்தின் மெயிலுக்கு நீலா அம்மையார் உடனுக்குடன் பதில் அனுப்பியிருந்தார். “உங்கள் இருவருக்கும் என் நன்றி. நீங்கள் இருவரும் சிறந்த கனவான்கள்”.
எனக்கு அந்த உரையாடலில் பதிலளிக்க ஏதுமில்லை எனப் புரிந்தது.