- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
விந்திய மலைத்தொடரின் சிகரங்களில் விடியற்காலையின் முதல் பொன்னிற ஒளி விழுந்தபோது, துங்கபத்திரை நதி தன் நீலத் தோள்களில் அந்த ஒளியை ஏந்திக்கொண்டு, சலசலத்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பாறைகளுக்கிடையே நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சலசலப்புகள் கிஷ்கிந்தைக்கு வர இருக்கும் துயரங்களுக்கான கிசுகிசுப்பைப் போன்று இருந்தன. கிஷ்கிந்தையின் பாறை இடுக்குகள் மௌனமாக இருந்தாலும், அவற்றின் ஆழத்திற்குள் ஏதோ ஒரு மர்மமான எதிர்பார்ப்பு துடித்துக்கொண்டிருந்தது.
சுக்ரீவனுக்கும் அனுமனுக்குமான நட்பு அந்தப் பாறைக் கோட்டையின் அஸ்திவாரத்தைப் போலவே உறுதியாகத் தொடங்கியது. அரியாசனத்தின் நிழலில் ஒதுங்கியே வாழப் பழகியிருந்த சுக்ரீவனுக்கு, அனுமன் ஒரு மந்திரியாக மட்டுமல்லாமல், ஒரு வழிகாட்டியாகவும், உற்ற தோழனாகவும் அமைந்தான். உல்லாசத்துக்கான புறத் தேடல்களை மெது மெதுவாகத் தவிர்த்தான்.
ஒரு மாலைப் பொழுதில், ருசியமுக மலையின் சரிவில் அமர்ந்திருந்தபோது, அனுமனின் கண்கள் வானில் மறையத் தொடங்கிய சூரியனை நோக்கியிருந்தன. அந்தப் பார்வையில் ஒரு பழங்கால நினைவின் சுவடு தெரிவதைக் கண்ட சுக்ரீவன், அனுமனின் கடந்த காலத்தைப் பற்றிக் கேட்டான்.
அனுமன் புன்னகைத்தான்.
அந்தக் கதை இதுதான். அவன் பிறந்து சில காலமே ஆகியிருந்த அந்தப் பருவத்தில், ஒரு விடியலில் கிழக்கே உதித்தச் செக்கச் சிவந்தச் சூரியனை ஒரு மகா தித்திப்பானப் பழம் என்று அவன் உள்ளம் எண்ணியது. அந்தப் பழத்தைச் சுவைக்க வேண்டுமென்றத் தீராத வேட்கையில், அவன் விண்ணில் ஒரு பாய்ச்சல் பாய்ந்தான். அந்த வேகம் காற்றையே கிழித்தது. மேகங்களுக்கு அப்பால், சூரிய மண்டலத்தை அவன் நெருங்கியபோது, உலகமே இருளில் மூழ்கிவிடுமோ என்று அஞ்சிய தேவேந்திரன், தன் வஜ்ராயுதத்தை அவன் மீது ஏவினான். அந்த ஆயுதம் தாக்கியதில் அவனது தாடை (அனு) சிதைந்து, அவன் நிலத்தில் விழுந்தான். அதனால்தான் அவனுக்கு ‘அனுமன்’ என்ற பெயர் நிலைத்தது.
அந்த வீழ்ச்சியால் சினமுற்ற வாயு தேவன் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ள, பிரபஞ்சமே மூச்சுத் திணறியது. பின்னர் தேவர்கள் சமாதானம் செய்து, அனுமனுக்கு இணையற்ற பலத்தையும், மரணமில்லாத வரத்தையும் அளித்தனர்.
சுக்ரீவனுக்கு அது ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அதை மீண்டும் அனுமனின் வாயால் கேட்பதில் அலாதி இன்பம் அவனுக்கு.
அவனது அதீதச் சேட்டைகளைக் கண்ட முனிவர்கள், அவன் தன் சுய பலத்தை எப்போதுமே மறந்திருக்க வேண்டும் என்றும், யாராவது ஒரு மாவீரன் வந்து அவனது பலத்தை அவனுக்கு நினைவுபடுத்தும் வரை அவன் ஒரு சாதாரண வானரனாகவே இருப்பான் என்றும் அனுமனுக்குச் சாபமிட்டிருந்தனர். இந்த மறதியே அனுமனை ஒரு பணிவான பக்தனாக மாற்றியிருந்தது. இது இருவருக்குமே தெரியாத ஒன்று.
கிஷ்கிந்தையில் இந்த அமைதி நிலவிய அதே வேளையில், வாலியின் கடந்த காலப் பகை ஒன்று குகையின் வாயிலில் மாயாவி என்ற பெயரில் வந்து நின்றது.
முன்பு ஒரு காலத்தில் துந்துபி என்ற அசுரன் ஒரு எருமையின் உருவம் கொண்டு வாலியைப் போருக்கு அழைத்தான். அவனது அகங்காரத்தை அடக்கிய வாலி, அவனைக் கொன்று தூக்கி வீசி எறிந்தான். அந்தத் துந்துபியின் மகன்தான் இந்த மாயாவி.
ஆனால், இவர்களுக்கிடையிலான பகை வெறும் தந்தையைக் கொன்றவனின் மகனுக்கும் வாலிக்குமான பகை என்பதோடு முடிந்துவிடவில்லை. அங்கே ஒரு பெண் தொடர்பான தீராத சிக்கலும் இருந்தது. மாயாவி தான் விரும்பிய ஒரு பெண்ணைக் கவர முயன்றபோது, வாலி குறுக்கிட்டு அவனைத் தடுத்து அப்பெண்ணைக் கைப்பற்றினான்.
அந்த அவமானமும், தன் தந்தையைக் கொன்ற பழியும் மாயாவியைப் போருக்குத் தூண்டியது.
நள்ளிரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு மாயாவியின் கர்ஜனை கிஷ்கிந்தையின் சுவர்களில் மோதிப் பிரதிபலித்தது. “துந்துபியின் மகனான இதோ மாயாவி வந்திருக்கிறேன்! வாலி… உன் சிம்மாசனத்தின் ஆயுள் இன்றுடன் முடிந்தது!” என்று அவன் விடுத்த சவால் வாலியின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது.
தன் கதையை ஏந்திக்கொண்டு, ஒரு மின்னலைப் போலக் குகையை நோக்கிப் பாய்ந்தான். மாயாவி பயந்து ஓடுவது போலப் பாசாங்கு செய்து, ஒரு இருண்ட குகைக்குள் புகுந்துகொண்டான். வாலி அவனைக் கொல்ல அந்தக் குகைக்குள் நுழைந்த அந்தத் தருணம், கிஷ்கிந்தையின் சரித்திரத்தில் ஒரு துயரமான பக்கத்தின் தொடக்கமாக அமைந்தது.
அண்ணனுடன் சென்ற சுக்ரீவனை, குகையின் வாயிலில் நிற்க வைத்துவிட்டு வாலி உள்ளே சென்றான். மாயாவி தப்பித்து வெளியே ஓடினால் சுக்ரீவன் அவனைப் பிடித்து அழிக்க வேண்டும் என்பதே வாலியின் ஏற்பாடு.
வாலி உள்ளே சென்றான். நாட்கள் பல கடந்தன. பலவிதமான போரிடும் ஓசையும் ஒருத்தரை ஒருவர் தாக்கும் போது எழுந்த வீர கர்ஜனை ஓசையும் எனக் கேட்டுக்கொண்டே இருந்தவரைக்கும் சுக்ரீவன் மன திடத்தோடு இருந்தான். அந்த ஓசைகள் மெல்ல மெல்ல மறைந்து ஓசை அடங்கிப் போக, சுக்ரீவனுக்கு அச்சம் மேலிட்டது.
அந்த அச்சத்தை உறுதி செய்வது போல குகையின் உள்ளிருந்து இரத்த வெள்ளம் வெளியேற, அவன் அச்சத்தின் உச்சிக்கே சென்றான். அவனுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை எடுத்துரைக்க அனுமன் அருகில் இல்லை. அனுமன் அரசு நிர்வாகத்தைக் கவனிக்க, தாரையின் ஆலோசனையின்படி கிஷ்கிந்தை அரண்மனையில் தங்கிவிட, சுக்ரீவன் ஏதும் செய்வதறியாது திகைத்தான்.
விவரம் அறிந்து ஆலோசனைக்கு வந்த மந்திரிகள் வாலி இறந்துவிட்டான் என்றே முடிவு செய்து சுக்ரீவனை அரசனாக்கினார்கள். மாயாவி குகையில் மாண்டு போகட்டும் எனப் பெரும் பாறை கொண்டு மூடச் செய்தார்கள்.
இரண்டு தினங்கள் கழிந்த போதில் சுக்ரீவன் அரியணையில் அமர்ந்திருக்கும் சமயம் பாறைகள் பொடிபடும் இடியோசை கேட்டது. எல்லோரும் மாயாவி வந்துவிட்டான் எனப் பயந்து நடுங்குகையில் அரண்மனை வாயிலில் வாலி நின்றிருந்தான்.
“வந்துவிட்டேன் சுக்ரீவா.. வந்துவிட்டேன்… ” என அவன் கத்திய பொழுதில் அருகிருந்த மலைகளில் இருந்து பாறைகள் அதிர்வில் உருளத் தொடங்கின.
சுக்ரீவன் எதிர்கொண்டு அழைக்க வாலி முன் நின்றான். ஆனால்..
சட்டென்று சுக்ரீவனின் கழுத்தை வாலியின் கை பற்றி இறுக்க, வாலியின் கண்கள் கொலை வெறியோடு சுக்ரீவனைப் பார்த்தன.
(தொடரும்)