ரிஷிகேஷ் சொல்லித்தந்த நிதர்சனம்
பயணத்தின் தொடக்கமே எங்களுக்கு ஒரு சோதனையாக அமைந்தது. தங்குமிடத்தில் படுக்கைகள் இன்றி, எண்ணெய்ப் பிசுக்கு நிறைந்த தலையணைகளும், அழுக்குப் போர்வைகளும் மட்டுமே கிடைத்தன.
“இக்கலிங்கம் போனால் என்ன ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை” என்று தரையில் படுக்கலாமென்றாலோ, அது ஐஸ்கட்டி மேல் படுப்பது போல இருந்தது. கடும் குளிரில் சில்லிட்ட தரையில் படுப்பது பெரும் சவாலாக இருந்தது. மன உளைச்சலில் இருந்தபோது அம்மா சொன்ன அறிவுரை என் பார்வையை மாற்றியது: “சினம் கொண்டு நேரத்தை வீணடிப்பதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை. உன்னுடைய நேரம்தான் வீணாகக் கழியும். அதை என்ன செய்தாலும் மீண்டும் கொண்டுவர முடியாது. நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.”
அடுத்த நாள் அதிகாலையிலேயே நாங்கள் நால்வரும் எழுந்து தங்குமிடத்திலேயே நீராடிவிட்டோம். சில்லென்ற நீரில் குளித்தோம். நல்ல சூடாகத் தேநீர் குடித்தால் நலமாக இருந்திருக்கும். ஆனால் யாருமே விழித்திருக்கவில்லை (எழுந்திருக்கவில்லை). அங்கே இருந்த ஒற்றைக் குளியலறை எங்களைச் சுறுசுறுப்பாக்கியிருந்தது.
இயற்கையின் எழிலும், இதிகாசங்களின் சுவடுகளும் சங்கமிக்கும் இடம்தான் ரிஷிகேஷ். உத்தரகண்ட் மாநிலத்தின் நுழைவாயிலாகக் கருதப்படும் இந்த நகரம், கங்கை நதி மலைகளிலிருந்து சமவெளிக்குத் துள்ளிக்குதித்து வரும் அழகிய தலம். நாங்கள் மேற்கொண்ட ரிஷிகேஷ் பயணம், வெறும் வழிபாடாக மட்டுமன்றி, வாழ்வின் சில எதார்த்தங்களைப் புரியவைத்த பாடமாகவும் அமைந்தது.
ரிஷிகேஷ் என்ற பெயர் வந்ததற்குப் பின்னால் ஓர் ஆழமான ஆன்மீக வரலாறு உண்டு. ‘ஹ்ரிஷிகேஷா’ (Hrishikesha) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து இப்பெயர் உருவானது. ‘ஹ்ரிஷிக’ என்றால் புலன்கள், ‘ஈஷா’ என்றால் இறைவன் – அதாவது ‘புலன்களின் அதிபதி’ என்று பொருள். இது மகாவிஷ்ணுவைக் குறிக்கிறது. ரய்பிய முனிவர் எனும் பெரியவர் இப்பகுதியில் புலன்களை அடக்கிக் கடும் தவம் செய்தபோது, மகாவிஷ்ணு அவருக்குக் காட்சியளித்த இடமே இது.
தங்குமிடத்தில் குளித்துவிட்டு நாங்கள் கங்கைக் கரைக்குச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் அனைவரும் புனித நீராடத் தொடங்கினர். ஆனால், நாங்கள் கங்கையில் குளிக்காமல் கரையில் நின்றிருந்தோம். இதைக் கண்ட அங்கிருந்த சிலர், “இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுப் பயணம் செய்துவிட்டு, கங்கையில் குளிக்காமல் இருக்கிறீர்களே?” என்று ஆச்சரியத்துடனும் வினாவுடனும் கேட்டனர்.
நாங்கள் குளிக்க மறுத்ததற்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது. கங்கைக் கரையில் புனித நீராடும் பெண்களுக்கு, உடை மாற்றவோ அல்லது மறைவாகச் சென்று வரவோ எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இது போன்ற புனிதத் தலங்களில் கூடப் பெண்களுக்கான குறைந்தபட்ச வசதிகள் இல்லாதது வேதனையளிக்கும் ஒரு நிதர்சனம்.
ரிஷிகேஷின் அடையாளமான **’லஷ்மண் ஜூலா’**வில் நடப்பது ஒரு சிலிர்ப்பான அனுபவம். 70 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கும் இந்தப் பாலத்தின் அடியில் ஆர்ப்பரித்து ஓடும் கங்கையின் நீலநிற நீர் கண்கொள்ளாக் காட்சி. பாலத்தின் இருபுறமும் தியானம் செய்யும் துறவிகளும், ஒலிக்கும் கோயில் மணிகளும் அந்த இடத்திற்கு ஒரு தெய்வீக அதிர்வைச் சேர்க்கின்றன.
பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழுவினர் இங்கே வந்து தங்கியிருந்தனர். அதனால் கவர்ந்திழுக்கப்பட்ட அவர்களுடைய ரசிகர்களும் மற்ற மேற்கத்தியர்களுமாக ரிஷிகேஷில் நிறையப் பேரின் நடமாட்டத்தைக் காண முடிந்தது. இன்னொரு பக்கம் நிறைய யோகாக் குழுவினர். யோகா பயில்பவர்களும் கற்றுத்தருபவர்களுமாகப் பல பயிற்சி மையங்களும் இருந்தன.
ரிஷிகேஷ் பல படிப்பினைகளைத் தந்தது. ஒருபுறம் புனிதமான சூழல் இருந்தாலும், மறுபுறம் முதியவர்களின் ஆன்மீகப் பற்றை வணிகமாக்கும் போக்கு தென்பட்டது. தவம் செய்பவர்களிடம் கூட இன்னும் மிஞ்சியிருக்கும் சினமும், பொறுமையின்மையும் மனித இயல்பு எத்தனை பலவீனமானது என்பதை உணர்த்தியது.
“நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீ மனமே மாற்றிப் பிழைக்க வகை யறிந்தாயில்லை மாமறைநூல் ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய் ஆற்றில் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றாயே”
என்ற பட்டினத்தாரின் பாடல்தான் நினைவுக்கு வந்தது. அண்ணனிடம் சொன்னேன். எத்தனையோ தவறுகளைச் செய்துவிட்டு, பாவங்களைப் போக்கக் கங்கையில் குளிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நதி மட்டும் எதற்கும் தன் இயல்பில் மௌனமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
திரும்ப அனைவரும் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் அவரவர் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத்தான் திரும்பப் போகிறார்கள். இதில் எந்தக் குணங்களும் பழக்கங்களும் மாறப்போவதில்லை. இதில் என்ன முக்தி கிடைத்துவிடப்போகிறது? ஆனால் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இமயமலையும் கங்கை நதியோர ஊர்களும் மனதைக் கவர்ந்ததென்னவோ உண்மை.
மதிய வேளையில் அங்கிருந்த மடங்களில் யாத்ரீகர்களுடன் அமர்ந்து உணவருந்தினோம். இரவு வேளையில் எங்களுடன் வந்த வரதனின் கைவண்ணத்தில் சுடச்சுட உணவருந்திவிட்டு, ஒரு புதிய தெளிவுடன் அடுத்த இலக்கான ‘தேவப்பிரயாக்’ நோக்கிப் பயணமானோம். ரிஷிகேஷ் பயணம் எனக்குக் கற்றுத் தந்தது இதுதான்: வசதிகள் அல்ல, நம் மனநிலைதான் ஒரு பயணத்தை அழகாக்குகிறது.
(தொடரும்)