பள்ளிக்காலம் அது. அரசு உயர்நிலைப்பள்ளியில் பெரிய நூலகம் உண்டு. ஆனால், நாங்கள் சென்று புத்தகம் எடுக்கவோ, படிக்கவோ அனுமதி இல்லை. அத்தோடு இப்படி ஒன்று இருப்பதுகூட நாங்கள் அறியாதது. ஆசிரியர்களின் மதிய நேர ஓய்வுக்கூடமாகவே இருந்தது அது.
புதிதாக வந்த தமிழாசிரியர் எங்களுக்கு நூலகம் பற்றி கட்டுரை எழுதச் சொன்னார். ‘அப்படி என்றால் என்ன?’ என்ற சிலரின் கேள்விகள் அவரைப் படுத்தியிருக்கும் போல. அந்த வாரத்தில் இருந்து, வாரம் ஒன்று என்ற வகையில் புத்தகம் எடுத்துச்செல்லலாம் எனவும், வாராவாரம் படித்ததை அவரின் வகுப்பு நேரத்தில் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார். வரிசையாக நூலகம் போக வேண்டும். அலமாரியில் எதையும் தேடாமல் கிடைப்பதை உடனே எடுக்க வேண்டும். அதுதான் அவரவருக்கான அந்த வார புத்தகம். மிகப்பெரிய பழமையான நூலகம் எங்கள் ஆத்தூர் பள்ளியுடையது. புத்தகக்கடலில் எனக்கு முதல் வாரம் கிடைத்தது ‘காலயந்திரம்’ என்ற புத்தகம். மொழிபெயர்ப்பு பெ.நா.அப்புசாமி என்று இருந்தது. ஹெச்.ஜி.வெல்ஸ் எனும் மூல ஆசிரியரின் பெயர் என் மனதில் பதியவில்லை.
அந்த வயதில் அது சற்றே பெரிய புத்தகம்தான். எனினும் வீட்டில் எப்போதும் கிடக்கும் புத்தகப் பெட்டிகளில் ஆராய்ந்த அனுபவம் உண்டு. கல்கி, சுந்தர ராமசாமி, லஷ்மி, மகரிஷி, தி.ஜானகிராமன், ராஜேஷ்குமார், அசோகமித்திரன், ஜெயகாந்தன், மாயாவி, வாண்டுமாமா, சுஜாதா என்ற பெயர்களுடன் புத்தகங்கள் அடங்கிய கலவையான பெட்டிகள் அவை. அப்போதெல்லாம் இலக்கியப் பாகுபாடு இன்றைய நாள் போல இல்லை; அல்லது எனக்குத் தெரியவில்லை. அது போன்று படங்கள் இல்லாத எழுத்து மட்டுமே கொண்ட காலயந்திரம் நாவலை முதல் தடவையாக முழுமையாகப் படித்தேன்.
முதலில் புரியாதது போல இருந்தாலும் பக்கம் செல்லச் செல்ல அப்படியே உள்ளே இழுத்துக்கொண்டது அது. நாயகனின் சாகசத்தில் நானும் நேரடியாக இருந்தேன். அவனின் பயணத்தில் நானும் எதிர்காலக் கோர மனிதர்களையும், அந்தப் பூக்களையும் பார்த்தேன். மகிழ்ச்சி, பயம், சோகம் என எல்லா உணர்வுகளையும் ஒருசேரத் தந்த நாவல் அது.
அதன்பின் பெ.நா. அப்புசாமியின் எழுத்துகளைப் பரபரவெனத் தேடினேன். இருந்த புத்தகக்குவியலில் எங்கேயும் அவர் பெயர் காணோம். ஆனால் பாதி கிழிந்த ‘கலைமகள் கதம்பம்’ என்ற பெரிய தொகுப்பு நூலில் அவர் பெயரைக் கண்டேன். அந்தப் புத்தகத்தில் இருந்த புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, தி.ஜா என்ற பெயர்களெல்லாம் எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. அப்புசாமியின் ‘விசேஷச் சார்பு நிலைக் கொள்கை’ எனும் அறிவியல் கட்டுரையே என்னை ஈர்த்தது. ஒரு மாயாஜாலக்கதை போல அதை புரியாமல் படித்தேன்.
பெ.நா. அப்புசாமி (1891-1986) அறிவியல் தமிழ் உலகின் ஒரு வரம். பல்வேறு அறிவியல் கட்டுரைகளை அழகுத்தமிழில் மொழிபெயர்த்தவர். இவ்வளவு ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் இப்படி அறிவியல் தகவல்களை அழகாகத் தர நமது இதழியல் சமூகம் மனது வைக்கவில்லை. கலைக்கதிர் போன்ற ஒரு சில இதழ்களே நிகழ்கால, எதிர்கால அறிவியல் போக்கைப் பதிவு செய்கின்றன. இவரே எழுதிய புத்தகங்கள் தவிர்த்து, ‘அற்புத உலகம், விஞ்ஞானமும் விவேகமும், அணுசக்தியின் எதிர்காலம், கால யந்திரம்’ உள்பட இருபத்தைந்து அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார் இவர். அத்தோடு வங்க இலக்கியங்களையும் மொழிபெயர்த்துள்ளார். அற்புதமான அறிவியல் களஞ்சியம் இவரது நூல்கள்.
வாசிப்பின் ஆசையில் பொது நூலக உறுப்பினராகச் சேர்ந்தபோது எடுத்துப் படித்த புத்தகம் ‘மதகுரு’. நூலகத்தில் பத்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருப்பேன். அதில் பாதி நாட்களில் இதே புத்தகம் திரும்பத்திரும்ப என் பட்டியலில் வந்து வந்து போகும். நோபல் பரிசு பெற்ற “கெஸ்டா பெர்லிங்” என்பதும் இதை எழுதிய ஸெல்மா லாகர் லெவ் அவர்களின் இன்னொரு நாவல் “தேவமலர்” என்பதும் இரண்டையும் மொழிபெயர்த்தவர் க.நா.சுப்ரமணியம் என்பதையும் பின்னர் அறிந்தேன். பல தடவைகள் படித்தேன். ஒவ்வொரு தடவையும் அந்த எழுத்தின் மாயாஜாலம் புதிய புதிய உலகங்களைக் காட்டும். காதலும் ஆன்மீகமும் கலந்த ஒரு பேண்டஸி உலகம் அது. தேவமலர் பொறுத்தவரை எனக்குச் சிறுவர் கதையை ஞாபகப்படுத்தும். மதகுரு வேறு மாதிரி. ஒருவேளை முதலில் தேவமலர் படித்திருந்தால் என் பார்வை மாறியிருக்கலாம்.
க.நா.சு எனப்படும் க.நா.சுப்ரமணியம் (1912-1988) ஒரு பிரமிக்கத்தக்க ஆளுமை. கிட்டத்தட்ட வெறித்தனமான உழைப்பு அவருடையது. தனிப்பட்ட அவரது படைப்புகள் தவிர்த்து மொழிபெயர்ப்பில், அதன் புத்தகத் தேர்வில் அவரது ஆர்வம் புலப்படும். ‘1984, கில்காமெஷ், தேவமலர், மதகுரு, விலங்குப்பண்ணை’ உள்பட கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள். அற்புதமான மொழி ஆளுமை. மூலப்பிரதியின் உணர்வுகளைத் தமிழுக்கேற்ப அழகாகத் தந்தவர் அவர்.
இதே சமயத்தில் மொழிபெயர்ப்புக் கதைகள் மேல் ஆர்வம் வரத் தேடித்தேடிப் படித்தேன். ‘இரட்டை மனிதன்’ படித்துவிட்டு ஜன்னலின் ஓரமாகத் தெரிந்த அந்த ஹைடின் முகத்தை நினைத்துப் பயந்திருக்கிறேன். இரட்டை மனிதன் (டாக்டர் ஜேக்கால் அண்ட் மிஸ்டர் ஹைட்) / கு.ப.ராஜகோபாலன். ‘பிரேத மனிதன்’ (ஃப்ராங்கென்ஸ்டைன்) / புதுமைப்பித்தன், இப்படி. இவர்களெல்லாம் தமிழ் இலக்கிய உலகின் பிதாமகர்கள் என்பதுகூட அறியாமல் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் என்று இருந்த வயது அது.
இந்தச் சின்னப் பத்தியில் நான் சொல்ல வந்தது, இளம் வயது வாசிப்பின் ஆரம்பத்தில் என்னை இன்னமும் படிக்க ஆர்வம் வரவைத்த மொழிபெயர்ப்பு நூல்களையே. அனைத்தும் அந்த வயதுக்கான காதலும் சாகசமும் கொண்ட சாகாவரம் படைத்த இலக்கியங்கள். பின்னர் இதன் சிறுவர் பிரதிகள், சித்திரக்கதை வடிவங்கள், திரைப்படங்கள் எனப் பலவகையிலும் மேற்கண்ட கதைகளின் வடிவங்களைப் பார்த்தேன். எதுவும் முதலில் படித்த மொழிபெயர்ப்பின் பாதி உணர்வைக்கூட எனக்குத் தரவில்லை. இப்போதைய ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் உலகில் ‘மொளி பெயர்க்கப்படும்’ பல நூல்களைக் கண்டு வெறுத்து ஓடுபவர்களும், மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்ட நண்பர்களும் தமது ஆசிரியர்களாக மேலே சொன்னவர்களை வரித்துக்கொள்ளலாம். கதையை மனதில் உள்வாங்கிக்கொண்டு மூலத்தின் சாரம் கெடாமல் தமிழில் தந்த படைப்புகள் இவை.