Home வரலாறுமுனைவர் ஹஸனுத்தின் அஹ்மது எழுதிய “The History of the Muslim Ummah” என்ற நூலின் அறிமுக உரையில் இருந்து சிறுபகுதி.

முனைவர் ஹஸனுத்தின் அஹ்மது எழுதிய “The History of the Muslim Ummah” என்ற நூலின் அறிமுக உரையில் இருந்து சிறுபகுதி.

0 comments

தமிழாக்கம்: அப்துல் ஜப்பார்

வரலாறு என்பது அறிவின் உருவகம். அறிவியலின் ஆய்வகம். அது பல்வேறு விஷயங்களோடு மனிதனின் கடந்த கால சாதனைகள், சோதனைகள், வெற்றிகள், தோல்விகள் ஆகியவற்றையும் பதிவு செய்கிறது.

வரலாறு என்பது நாடறிந்த அளவில் நாடுகளைப் பற்றிய செய்திகளாகவே இருக்கின்றன. உதாரணமாக அமெரிக்க வரலாறு, இங்கிலாந்தின் வரலாறு என்பன போல. அத்தகைய ஆய்வுகளில் அங்கு வாழ்ந்த மனிதனைப் பற்றியும் பேசப்படுகிறது. ஆகவே வரலாறு என்பது ஒரு நாட்டில் நிகழும் நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் ஆகியவற்றின் தொகுப்பு எனலாம். அந்தந்த நாடுகளின் மக்கள், அரசு அமைப்புகள், ஆட்சியாளர்கள், தலைவர்கள் மற்றும் புகழ் பெற்ற மேதைகளைப் பற்றிய பதிவுகள் என்றும் கொள்ளலாம்.

நவீன உலகின் தேசியம் என்கிற கருத்துரு இஸ்லாத்தைப் பொறுத்தவரை அந்நியமானது என்பதை இங்கே கருத்தில் கொள்வது நல்லது. இஸ்லாமியத் தத்துவத்தின் படி, எல்லா முஸ்லிம்களும் அவர்கள் எந்த நாடு, இனம், மொழி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சகோதரர்கள் அல்லது ஒரே தேசிய இனம் என்கிற குடையின் கீழ் வருகிறவர்கள்தான். ஆகவே, முஸ்லிம் ‘உம்மா’ – அதாவது சமூகத்தின் வரலாறு என்பது வித்தியாசமானது. அது இஸ்லாத்தில் இணைந்து விட்ட மாந்தர்களை மட்டுமே குறிக்குமே அல்லாது அது வேறு எந்தப் பிராந்தியத்தையும் குறிப்பிடுவது அல்ல.

முஸ்லிம் – ‘உம்மா’ -சமூகத்தின் வரலாறு என்பது ஒரு கட்டுப்பாடான சிந்தனை. அது முஸ்லிம்களின் பாரம்பரியத்தின் தகவல்களைத் தருவதோடு அதன் பூர்வீகத்தையும் தெரிந்து கொள்ள உதவுகிறது. அது முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை சுட்டிக் காட்டுவதோடு எதிர்காலத்தில் நேரான வழியில் நடக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. வரலாற்றின் நோக்கம் கடந்த கால சம்பவங்களை உயிர்ப்போடு வைத்திருப்பது மட்டும் அல்ல. கடந்த கால சம்பவங்களைப் பற்றி ஓர் ஆழமான உள்ளுணர்வையும் தக்க வைப்பதோடு, சம்பவங்கள் நடந்த பின்னணி, காரண காரியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதுமாகும்.

ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்த நாட்டின் மிகவும் தொன்மையான பழமைமிகு காலகட்டத்தில் இருந்து தொடங்குகிறது. ஆனால் முஸ்லீம்களின் வரலாறு அப்படிப்பட்டது அல்ல. அது எந்த நாட்டோடும் தொடர்புடையதும் அல்ல. எந்தப் பழமையையும், பாரம்பரியங்களையும் உள்ளடக்கியதும் அல்ல.

முஸ்லிம் சமூக வரலாறு கிபி 610இல் அரேபியாவில் புனர் நிர்மாணிக்கப்பட்டது எனலாம். ஆகையால், முஸ்லிம் சமூக வரலாறு அந்த வருடத்தில் தான் தொடங்குகிறது. அது அதன் மார்க்க,சமூக, அரசியல் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால், அதன் வரலாறு என்பது கிபி 610 முதல் இன்றைய தேதி வரையிலான முஸ்லிம் சமூகத்தின் வெற்றிகள் தோல்விகள் ஆகியவைப் பற்றிய ஓர் ஆய்வாகவும் இருக்கிறது.

திருக்குர்ஆனின் போதனையாலும், தனது சொந்த அப்பழுக்கற்ற உன்னத வாழ்க்கை முறையாலும் இறைத்தூதர் தன்னிடம் வந்தவர்களை நற்பண்பு உடைய மனிதர்களாக வாழப் பயிற்சி அளித்தார்கள். இதன் நற்பயன், பயிற்சி பெற்றவர்களின் ஆர்வத்துக்கும் அறிவுத் திறனுக்கும் ஏற்ப வித்தியாசப்பட்டது. திருக்குர்ஆனின்படி, இஸ்லாம் மார்க்கம் தான் மிகவும் தொன்மையானது. அதன் போதனைகள் பல்வேறு இறைத்தூதர்கள் மூலம் மக்களுக்கு அருளப்பட்டது. அத்தகைய போதனைகளைக் காலப்போக்கில் மக்கள் அலட்சியப்படுத்தி விட்டதாலும் மறந்து விட்டதாலும் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக இஸ்லாம் மீண்டும் மக்களுக்குக் கொண்டுவரப்பட்டது. அதனால்தான் இறைத்தூதர் அவர்கள் இஸ்லாத்தைத் தான் தான் முதன் முதலில் கொண்டு வந்ததாகக் கூறவில்லை.

பெருமானார் ஆத்மார்த்தமான அர்ப்பண போதம் உள்ள வீரமிகு உத்தமத் தோழர்கள் ஒரு லட்சம் பேரை தனக்குப் பின் விட்டுச் சென்றார்கள். இந்த நல்லடியார்களின் சாதனைகள் தான் முஸ்லிம் சமூகச் சரித்திரத்தின் துவக்கப் புள்ளி என்று கருதலாம்.

இஸ்லாம் பறந்து விரிந்து நீண்ட இந்த காலகட்டத்தில் இந்த உத்தமத் தோழர்கள் சென்று, கண்டு, வென்று ஆட்சி செய்த நாடுகளைப் பற்றியும் அங்கிருந்த நிலவரங்கள் பற்றியும் முஸ்லிம் சமூக வரலாற்றில் பேசப்படுகிறது.

மற்றபடி உள்ளூர் சரித்திரப் பதிவுகளில் முஸ்லிம் சமூகத்தைக் குறித்த முழுமையான விரிவான விவரங்கள் எதுவும் இல்லை.

முஸ்லிம் சமூகம் என்பது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு. ஆகவே கிலாபத் என்பதனை ‘காமன்வெல்த் ஆஃப் நேஷன்’ நாடுகளின் ஒன்றிணைப்பு எனலாம். இந்த ‘கிலாபத்’ அல்லது ஒன்றிணைப்பு என்பதன் கருத்துரு சாதாரணமாக மன்னர்கள், சக்கரவர்த்திகள், ஜனாதிபதிகள், தலைமை தாங்கும் உலக ஆதாய விஷயங்களை மையமாகக் கொண்ட அரசியல் கூட்டமைப்பாகும். இஸ்லாம் மார்க்கத்தையும், இவ்வுலக விஷயங்களையும் வெவ்வேறாகக் கருதவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே ‘கிலாபத்’ என்பது மார்க்கம் மற்றும் அரசாண்மை ஆகியவற்றின் ஒன்றிணைப்பு என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

‘கலிஃபா’ எனப்படுபவர் சமய, சமூக அரசியல், பொருளாதார வாழ்க்கையின் சகல அம்சங்களின் கூட்டுக் கலவையை பிரதிபலிக்கும் முஸ்லிம் சமூகம் என்ற ஒன்றிணைப்புக்குத் தலைவர்.

‘கலிஃபா’ என்பவர் முஸ்லிம் மார்க்க, அரசமைப்பு ஆகியவற்றின் தலைவர் என்பதால் ‘கிலாபத்தின்’ சரித்திரமே முஸ்லிம் சமூகத்தின் சரித்திரம் என்று கொள்ளப்படுகிறது.

Author

  • சாத்தான்குளத்தில் பிறந்த அப்துல் ஜப்பார் நாடகக் கலைஞராகவும், ஒலிபரப்பாளராகவும் இருந்தவர். தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பரவலாக அறியப்பட்டவர். 'காற்று வெளியினிலே', 'அழைத்தார் பிரபாகரன்' நூல்களின் ஆசிரியர். 'இறைத்தூதர் முகம்மது' என்ற நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர்.

You may also like

Leave a Comment