கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மலையாளத் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி மோகன் லாலும் இணைந்து நடிக்கின்ற படம் என்கின்ற எதிர்பார்ப்பு மலையாளத் திரை உலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவிலுமே கூட ஓரளவிற்கு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் நிறைவு செய்து இருக்கிறதா என்பது தான் கேள்விக்குறி.
“பேட்ரியாட்” – படத்தின் தலைப்பு சொல்வது போலவே இந்தப் படம் நாட்டுப்பற்றையும், நாட்டிற்கு எதிராகச் செய்யப்படும் சதிகளையும் குறித்துப் பேசுகின்றது அதோடு மட்டுமல்லாமல், இன்றைய ‘டிஜிட்டல்’ உலகில் எம்மாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதைக் குறித்த சில விஷயங்களையும் போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது. ஆகவே முழுக்க முழுக்க இரு பெரும் உச்ச நட்சத்திரங்கள், அவர்களுடன் இரண்டு இளம் நட்சத்திரங்கள், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டங்கள் இணைந்து நடிக்கின்ற ஒரு பெரிய படம் நிச்சயமாக பரபரப்பான, விறுவிறுப்பான, மிகப்பெரும் அதிர்வுகளைத் தரக்கூடிய அட்டகாசமான படமாகத்தான் இருக்கும் என்று நம்பிச் செல்பவர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தையே தரக்கூடும்.
ஏனெனில் படம் வெளி வருவதற்கு முன்பே இதைக் குறித்து மம்மூட்டி தனது நேர்காணலில் மிகத் தெளிவாகவே, “இது கதாபாத்திரங்களுக்கான படமே தவிர நட்சத்திரங்களுக்கானது அல்ல” என்று கூறியிருக்கிறார், அதுதான் உண்மையும் கூட.
இரண்டு உச்ச நட்சத்திரங்கள் இருப்பதால் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் வழக்கத்திற்கு மாறாக பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக இந்தத் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அது படத்தின் ஒவ்வொரு காட்சிச் சட்டகத்திலும் தெளிவாகவே தெரிகிறது. தொழில்நுட்பத்தில் மலையாளத் திரை உலகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. அதைப்போலவே பின்னணி இசைக் கோர்ப்பிலும் கூட இதுபோன்ற பிரமாண்டப் படங்களுக்குத் தேவையான இசைக் கோர்வையை வழங்கும் அளவிற்குத் திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் படம் நிரூபித்திருக்கிறது. ஆனாலும்…
ஒரு மலையாளத் திரைப்படத்தில் நாம் வழக்கமாக எதிர்பார்க்கும், மனதோடு ஒன்ற வைக்கின்ற காட்சிகளோ அல்லது ‘அட!’ என்று வியக்க வைக்கின்ற காட்சிகளோ இல்லாமல் இருப்பது ஒரு பெரும் குறைதான்.
என்றாலும் தங்கள் திரைத் தோற்றத்தால் மம்மூக்காவும் லாலேட்டனும் இணைந்து படத்தின் எல்லா பலவீனங்களையும் இல்லாமல் போகச் செய்து விடுகிறார்கள். கூடவே குஞ்ஞாக்கோ போபனும், ஃபஹத் ஃபாஸிலும் இவர்களோடு இணைகையில் படம் வேறொரு தளத்திற்கு நகர்ந்து விடுவதை உணர முடிகிறது.
மம்மூக்கா படம் முழுதும் நிறைந்து நிற்கிறார். ஏற்ற பாத்திரத்தை மெருகூட்டுவதில் அவர் என்றைக்குச் சோடை போயிருக்கிறார்? லாலேட்டன் திரையில் வரும் காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது.
இத்தனை நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு படம் செய்வது மலையாளத்தில் இயல்பாக நடக்கக் கூடியதுதானெனினும், கத்தி மேல் நடப்பது போன்ற இந்த விசயத்தைக் கையாண்டதன் மூலம் ஓர் இயக்குநராக வென்றிருக்கிறார் மஹேஷ் நாராயணன் என்றாலும் அவரது ரசிகனாக “மஹேசிண்டெ ப்ரதிகாரம்” மனதில் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை.
சுருங்கச் சொல்வதென்றால், வழக்கமான மலையாளப் படமாகவும் இல்லாமல் முழுமையான மசாலாவாகவும் இல்லாமல் இரு தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட படமாக இருப்பதால் மலையாள அவியல் போன்ற சுவையோடு இருக்கிறது படம்.
முழுமையான “ஸத்ய” விரும்பியவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் கூட சுவையுணவாகவே அமைந்திருக்கிறது இந்த “பேட்ரியாட்”