போன அத்தியாயத்தை வாசித்த சிலர் அக்காலத்தில் இக்காலத்தைப் போல் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் தென்னிந்திய நிலப்பரப்போடு வணிகம் செய்த ரோமானிய நிலப்பரப்பில் இருந்திருக்கிறது.
பண்டைய ரோமானியத்தில் பங்கு வர்த்தகம் இருந்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன. இங்கு தமிழகத்தில் வழிபாட்டு மையங்கள் சார்ந்துதான் பொருளாதாரப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதால் நிறுவனங்கள் போன்ற அமைப்பு இருந்திருக்க வாய்ப்புகள் இல்லை; ஆனால் சங்கங்கள் இருந்திருக்கின்றன.
சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டிய வழிமுறைகளை எல்லாம் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தால் நிறுவனங்கள் போன்ற அமைப்பு இருந்திருக்கலாம் என்கிற முடிவுக்கு வரலாம்.
அர்த்தசாஸ்திரம் எழுதப்பட்ட காலத்திற்கும் முந்தைய காலத்தில் எழுதப்பட்ட யாஞ்ஞவல்கிய ஸ்மிருதி மற்றும் நாரத ஸ்மிருதி போன்ற பண்டைய இந்தியச் சட்ட நூல்களில் ‘சம்பூய சமுத்தானா‘ என்கிற கூட்டு வணிக முறைக்கான வரைமுறைச் சட்டங்களைச் சொல்கிறது. இதில் முக்கியமாக அப்படித் தொடங்கிய தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை முன்பே கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.
கூட்டு வணிகம் என்பது பெரிய அளவிலான தொழில் தொடங்கத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அப்படித் தொடங்கும்பொழுது முதலீடு, கடன் ஆகியவை கட்டாயம் இருந்திருக்க வேண்டும். அதை எல்லாம் இனி வரப்போகும் அத்தியாயங்களில் சொல்கிறேன்.
பண்டைய இந்திய நிலப்பரப்பில் தொழில் சார்ந்த சங்கங்கள் இருந்ததாகச் சொன்னேன், காலப்போக்கில் அந்தச் சங்கங்கள்தான் சாதிகளாக மாறி இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனென்றால் தமிழக நிலப்பரப்பில் இருக்கும் ஒவ்வொரு சாதியும் ஏதோ ஒரு தொழிலோடு சம்பந்தப்பட்டிருக்கும். இதில் அதிக லாபம் தரும் தொழில்களைச் செய்த சாதிகள் எல்லாம் உயர்ந்த சாதிகளாகவும், குறைந்த லாபம் அல்லது லாபம் தராத தொழில்களைச் செய்த சாதிகள் எல்லாம் தாழ்ந்த சாதிகளாகவும் சமூக அடுக்கில் பதிந்து போனது.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கடந்த அத்தியாயத்தில் தென்னிந்திய நிலப்பரப்பில் வணிக அமைப்புகள் நிலைகுலைந்ததினால் ஆங்கிலேயர்களிடம் பொருளாதார உதவி பெறத் தொடங்கிய அரசர்களால் எனச் சொல்லி நிறுத்தி இருந்தேன். ஆம், அப்படிப் பெறத் தொடங்கிய அரசர்களால் என்ன மாதிரியான பொருளாதாரப் பாதிப்புகள் இந்தியா அடைந்தது என்பதைப் பார்ப்பதற்கு முன், ஏன் அம்மாதிரியான நிலைக்கு அரசர்கள் போனார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று.
ஒவ்வொரு முறையும் சமயத்தின் அடிப்படையிலும் வணிகத்தின் அடிப்படையிலும் படையெடுப்பு, போர், முற்றுகை ஆகியவை நடக்கும்பொழுது அதிலிருந்து கிடைத்தவை லாபகரமானதாக இல்லை. ஒவ்வொரு படையெடுப்புக்கும் நிகழ்ந்த செலவுகள் ஏராளம்.
உதாரணமாகச் சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் இடையே நடந்த தக்கோலப் போரில் சோழர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தந்த சிறு ராஜ்ஜியங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். அந்தப் பொருளாதார இழப்பில் இருந்து சோழர்கள் மீண்டு வரத் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமானதாகக் குறிப்புகள் சொல்கின்றன.
இந்தத் தக்கோலப் போர் நடக்கக் காரணங்கள் என இரண்டு நமக்குக் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் ராஷ்டிரகூடர்கள் இந்து மதம் சார்ந்த சமயங்களை ஆதரித்தாலும் பின்னர் அவர்கள் சமண சமயத்தை ஆதரித்தார்கள். சோழர்களோ தீவிரமாகச் சைவ சமயத்தை ஆதரித்துக்கொண்டு இருந்தார்கள்.
தக்கோலம் மற்றும் அதன் அருகில் இருக்கும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் பழமையான சலநாதீஸ்வரர் கோயில் இருக்கிறது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். எட்டாம் நூற்றாண்டில் ராஷ்டிரகூட ராஜ்ஜியம் அமைக்கப்படுகிறது. சிலர் ராஷ்டிரகூட ராஜ்ஜியத்தின் சரித்திரம் அதற்கு முன்பிலிருந்தே ஆரம்பிக்கிறதெனச் சொல்வார்கள்.
தக்கோலம் மற்றும் அதன் அருகில் இருக்கும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் பழமையான சமண சமயத் தீர்த்தங்கரரின் சிலையும் சமணக் குறிப்புகளும் கிடைத்து இருக்கின்றன. மேலும் அரக்கோணத்தில் இருக்கும் உப்புகுளம் என்கிற ஊரில் பெருமாள் கோயில் பின்பகுதியில் பழமையான சமணச் சிலை ஒன்று இருக்கிறது. இதனை எல்லாம் பார்க்கும்பொழுது தக்கோலப் போர் நடந்த காலத்தில் அங்கு சமண சமயம் பரவலாக வழிபாட்டில் இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அக்காலத்தில் ஒரு இடத்தில் இரண்டு சமயங்கள் ஒரே நேரத்தில் கோலோச்சிக் கொண்டு இருந்தன எனக் குறிப்புகள் இருந்தால் கண்டிப்பாக அது ஒரு வணிக மையமாக இருக்க வேண்டும்.
ஆம், தக்கோலம், அரக்கோணம் ஆகிய இடங்கள் அக்காலத்தில் முக்கியமான வணிகச் சாலைகள் கடந்து செல்லும் இடமாகவும் வணிக மையமாகவும் இருந்தன. சோழர்களிடத்தில் தக்கோலம் இல்லாததால் வணிகத்தில் முழுமையான லாபம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ராஷ்டிரகூடர்களுக்கோ முக்கியமான துறைமுகங்கள் இல்லாததால் அவர்களது வணிகமும் முழுமையடையவில்லை.
இதே காலத்தில்தான் பல சமணக் கோயில்கள் சைவர்களால் கைப்பற்றப்பட்டு, அவற்றை இடித்துச் சைவக் கோயில்களாகக் கட்டிச் சமணக் கோயிலின் சொத்துகளைச் சைவக் கோயில் வசமாக்கினார்கள். இதிலிருந்து சமணத்திற்கும் சைவத்திற்கும் கடுமையான வணிக நோக்கத்திலான போட்டி இருந்ததைப் புரிந்து கொள்ளலாம். சைவ சமயத்தைக் கண்மூடித்தனமாகப் பரப்பிக்கொண்டு இருந்த கிருமிகண்ட சோழனிடமிருந்து தப்பித்துச் சென்று ஹோய்சாலப் பேரரசில் அடைக்கலம் பெற்றார் ராமானுஜர்.
அப்பொழுது ஹோய்சால ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு இருந்தவர் பிட்டிதேவா. ஹோய்சால ராஜ்ஜியமும் அரச குடும்பத்தினரும் தீவிரமாகச் சமண சமயத்தை ஆதரித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த அடைக்கலம் புகுந்ததை நவீன காலத்தில் திரைப்படங்களில் சொல்லப்படுவதைப் போல ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்கிற வசனத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.
ராமானுஜர் தலைமையில் பிட்டிதேவா சமண சமயத்தைத் துறந்து வைணவ சமயத்தை ஏற்றுக்கொண்டு ‘விஷ்ணுவர்தனா’ எனப் புதுப் பெயரை வைத்துக்கொண்டார். இதன்பிறகுதான் சோழர்களுக்கும் ஹோய்சாலர்களுக்குமான போர் தலக்காட்டில் நடக்கிறது. தலக்காடும் பண்டைய காலத்தில் முக்கியமான வணிக மையம்தான்.
(தொடரும்).