காலையில் கண் விழிக்கும்போதே ‘இன்னக்கிப் போயி பெரிய மகளைப் பாத்துட்டு வரணும்’ என்ற எண்ணம் மாரிச்சாமியின் மனதில் அழுத்தமாய் எழுந்தது. இரண்டு நாட்களாகவே இந்த எண்ணம் மனதில் எழத்தான் செய்கிறது என்றாலும், மே மாத அக்னிவெயில் புலரும்போதே எதையோ எரிக்கும் ஆவலோடு வருவதால் அவ்வெண்ணத்தை எண்ணமாகவே வைத்திருந்தார். இன்றைய காலை கண்டிப்பாகப் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
மாரிச்சாமியின் மனைவி இறந்து வருடம் திரும்பிவிட்டது. இந்த ஒரு வருடத்தில் பலமுறை சின்னவன் எங்களுடன் வந்து இருங்கப்பா எனக் கூப்பிட்டுவிட்டான் என்றாலும், தன் வாழ்விடம் துறந்து வேறொரு இடத்தில் போயிருக்க அவருக்கு மனம் வரவில்லை என்பதால் “நான் இங்கேயே இருந்துக்கிறேன்” எனச் சொல்லிவிட்டார். தனக்கான உணவைத் தானே சமைத்துக் கொள்வதென்பது அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. சமையல்காரராய் நாற்பது வருடங்களுக்கு மேல் வாழ்வை நடத்தியவருக்குத் தன் ஒருவனுக்குச் சமைப்பது என்பது பெரிதில்லைதானே!
மாரிச்சாமிக்கு ஐந்து பிள்ளைகள்… மூத்தவன் குடும்பத்துடன் பெங்களூரில் இருக்கிறான். நடுவிலான் சிங்கப்பூரில் இருக்கிறான். சின்னவன் திருச்சியில் வருவாய்த்துறையில் இருக்கிறான். மகள்களில் மூத்தவள் சாத்தம்பத்தியிலும், ஆசிரியையான சின்னவள் காரைக்குடியிலும் இருக்கிறார்கள்.
சமையல் வேலையும் விவசாயமுமான வாழ்க்கையில் மூத்தவளைத் தவிர மற்ற பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட்டார். அப்போதைய சூழலால் நன்றாகப் படித்தும் மூத்தவளைப் பத்தாவதுக்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. வாய்ப்பிருந்தும் வசதியின்மையால் தொடர முடியாத படிப்பை, தனது பிள்ளைகளுக்குக் கொடுத்து அவர்களை நல்ல வேலையில் அமர்த்தி வைத்திருக்கும் மகள் மீது அவருக்குத் தனிப்பெருமை உண்டு என்றாலும், அவளை மட்டும் படிக்க வைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
மகன்கள் நிறை வாழ்வு வாழ்ந்தாலும் அவருக்கு நீண்ட நாட்களாக ஒரு வருத்தம் மனதுக்குள் அரித்துக் கொண்டே இருந்தது. அவரது திருமணத்துக்கு முன் மண்சுவரும் மண்தரையுமாகப் பனையோலை வீடாக இருந்து, பிள்ளைகள் பிறந்து அவர்கள் வளர்ந்தபோது இரண்டு பத்தி கொண்ட ஓட்டுவீடாக மாறியிருந்தது. அந்த ஓட்டு வீட்டில்தான் பிள்ளைகளின் திருமணம் எல்லாம் நடந்தது. சுவர்களில் விரிசல், கைமரங்களைக் கரையான் திங்க ஆரம்பித்தல் என வீட்டின் வாழ்வு சுருங்கிக் கொண்டு வர ஆரம்பித்தபோது பலமுறை மராமத்துப் பார்த்தும் இனிமேல் மொத்தமாக இடித்துத்தான் கட்ட வேண்டும் என்ற நிலையில் மகன்களிடம் சொன்னபோதும் அவர்கள் செவிசாய்க்காமல்தான் இருந்தார்கள்.
அவரின் தொடர் வற்புறுத்தலுக்குப் பதிலாய் ‘இனிமே யாரு அங்க வந்து இருக்கப்போறா… எதுக்கு கிராமத்துல வீட்டைக் கட்டிப் பணத்தை முடக்கணும்’ என அவர்கள் சொன்னபோது, ‘உங்களுக்கு வேண்டாம்பா… எங்களோட காலத்துக்கு எங்களுக்கு வேணுமுல்ல…’ எனச் சற்றே கோபத்துடன் பிடிவாதமாக அவர் நின்றதால் மாடுகளற்ற கசாலையையும் சேர்த்து மூன்று அறைகள் போட்டுத் தார்சு வீடு கட்டினார்கள். மூவரும் ஆளுக்கொரு அறையில் பீரோ, பாத்திரங்களைப் போட்டு வைக்க, வீட்டு ஹாலே அவர்களுக்கான வாழ்விடமாக மாறிப்போனது.
பனையோலை வீடுகளாய் உயிர் பெற்ற ஊர் கிடுகிலிருந்து ஓட்டுக்கு மாறி இப்போது பல வீடுகள் தார்சாக வளர்ச்சி பெற்றிருந்தது. ஒற்றையடிப் பாதையாக, வண்டிப்பாதையாக இருந்த ஊருக்கான வழித்தடம் சரளை ரோட்டிலிருந்து தார் ரோட்டுக்கு மாறியிருந்தது. ஊருக்குள் தண்ணீர்தொட்டி எல்லாம் வந்து சேர்ந்து வீட்டுக்கு வீடு தண்ணீர்க்குழாய் வந்து சேர்ந்தது. வயல்களும், கொல்லைகளும் காலைக் கடனைக் கழிக்குமிடமாக இருந்த நிலை மாறி வீட்டுக்கு வீடு கழிவறை வசதி வந்துவிட்டது. பக்கத்து ஊர்களுக்குப் போகும் மினிபஸ் ஊருக்கருகில் இருக்கும் வேலங்குடி விலக்கு வழியாகப் போக ஆரம்பித்தது என்றாலும் விவசாயத்துக்குத் தண்ணீர் கொடுத்த கண்மாயை வறட்சியும், கதிரைச்சுமந்த வயல்களை வேலிக்கருவையும் ஆட்சி செய்யும் ஊராக மாறிப்போயிருந்தது. விவசாயம் துறந்த ஊரிலிருந்து பல குடும்பங்கள் வெளியேறியிருந்தாலும் மாரிச்சாமி போன்ற பெருசுகள் ‘இந்த மண்ணுதான் எங்களைத் திங்கணும்’ என்ற வீம்புடன் சில வீடுகளில் இருந்தார்கள்.
மகன்கள் இந்த ஊருக்கு வரப்போவதில்லை என்பது உறுதியானபோது அவருக்கு ரொம்பவே வலித்தது. நம்மைச் சுமந்த, நாம் தவழ்ந்து வளர்ந்த மண்ணோடான உறவு இறுதிவரை தொடர வேண்டுமென நினைப்பவர் அவர் என்றாலும் இன்றைய தலைமுறை கிராமங்களை விடுத்து நகரங்களைத் தங்களது வாழ்விடமாக மாற்றிக் கொண்டபின் கிராமத்தைத் தீண்டப்படாத இடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒருவனுக்குப் பிறந்த ஊர் சுடுகாட்டில் இடம் கிடைப்பதுதான் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம் என்று நினைத்து வாழ்ந்த மனிதர்கள் இப்போது இல்லை; அதேபோல் கிராமத்தில் வாழ நினைக்கும் மனிதர்களும் இப்போது இல்லை. மாரிச்சாமி தனிமரமாக நின்றாலும் தன் இடம்தான் தனக்குச் சொர்க்கமென நினைத்தார்.
முந்தின நாள் இரவு தண்ணீர் ஊற்றி வைத்த கஞ்சியைக் குடித்துவிட்டு பாத்திரங்களைக் கழுவி கோழிகள் இல்லாத கோழிக்கூட்டின் மீது கவிழ்த்து வைத்தவர், ‘வேலையா வெட்டியா… இப்புடி மரத்தடியில காத்து கொஞ்சமும் வெக்க கொஞ்சமுமா தாங்கிக்கிட்டு படுத்துக் கெடக்கத்தானே போறோம், அதுக்கு மக வூட்டுக்காச்சும் போயிட்டு வரலாம்’ என்ற முடிவோடு சைக்கிளைப் பார்த்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இருட்டில் வரும்போது ராசப்பனோட கொல்லைக்கிட்ட பின் வீலில் முள்ளடித்தது ஞாபகத்தில் வந்தது… காற்று இறங்கியிருப்பது தெரிந்தாலும் கையால் அதை அழுத்திப் பார்த்தார், சுத்தமாக காற்றில்லை, காற்றடித்துக் கொண்டு போனாலும் கொஞ்சத் தூரம்கூட போக முடியாது என்பதை உணர்ந்தவர் வானத்தை அண்ணாந்து பார்த்தார். வெயில் வீரியமாக இறங்கிக் கொண்டிருந்தது.
‘பஸ்சுக்குப் போகணும்னா வேலங்குடி விலக்கு வரைக்கும் இந்த வெயில்ல நடக்கணும். அதேமாரி அங்கிட்டு சொக்கநாதபுரத்துல இறங்கி சாத்தம்பத்திக்கு நடக்கணும். ஆட்டோவுக்கு போன் பண்ணுனா சுந்தரம் வருவான், முடியாட்டி வேற ஆள அனுப்புவான்தான், ஆனா அதுக்கு முன்னூறுக்கு கொறைச்சு வாங்கமாட்டான்’ என யோசித்தவர், ‘பேசாம சைக்கிளத் தள்ளிக்கிட்டுப் போயி ஒத்தக்கடை சந்திக்கிட்ட பஞ்சர் பாத்துக்கிட்டுப் போயிரலாம்’ என நினைத்தவராய் கொடியில் கிடந்த வேஷ்டியை எடுத்துக்கட்டி, இடைவாரை இறுக்கி மாட்டினார். சட்டையை எடுத்து ஒருபக்கம் மாட்டிக் கொண்டு இடது தோளில் வெள்ளைத்துண்டொன்றைப் போட்டுக் கொண்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போய் வேலிக்கு வெளியில் நிறுத்திவிட்டு, வேலியை இழுத்துச் சாத்திவிட்டு தோளில் கிடந்த துண்டை தலைக்கு மாற்றிச் சூட்டைத் தணித்தவராய் ஒத்தக்கடை நோக்கி ஆளரவமற்ற ரோட்டில் சைக்கிளை உருட்ட ஆரம்பித்தார்.
தனது பத்தாவது வயதில் சைக்கிள் பழகி, கவட்டைக் காலில் ஓட்ட ஆரம்பித்து, மெல்ல மெல்ல சீட்டிலேறி அமர்ந்தவர் இன்றுவரை சைக்கிள் ஓட்டுகிறார். மகன்கள் டிவிஎஸ் வாங்கித் தருகிறோம் என்று சொன்னபோது எனக்குச் சைக்கிள் போதுமெனச் சொல்லிவிட்டார். எவ்வளவு கிலோமீட்டர் தூரம் என்றாலும் சைக்கிளில் போய்விடுவார். ஒருகாலத்தில் வண்டிப் பந்தயம், சினிமா, கூத்து எனத் தன் வயதொத்த நண்பர்களுடன் பத்திருபது கிலோமீட்டர் பயணித்துப் பார்த்து வந்தவர்தான். வயசுக் காலத்தில் முன்பக்கம் ஒருவர் பின்பக்கம் ஒருவர் என அமர்த்தி, கிலோமீட்டர் கணக்கில் தொய்வில்லாமல் ஓட்டியவர். இந்த வயதிலும் அவரால் சைக்கிளில் எவ்வளவு தூரம் என்றாலும் பயணப்பட முடியும். முன்பெல்லாம் பஞ்சர் சாமான்கள் வாங்கி வைத்திருப்பார்; பஞ்சரானால் அவரே பார்த்துக் கொள்வார். இப்போது தார் ரோடு ஆனபின்னர் பஞ்சர் அதிகம் ஆவதில்லை என்பதாலும் ‘நாம என்னத்தப் பஞ்சர் பாத்துக்கிட்டு, கடையில விட்டுப் பார்த்துக்கலாம்’ என்ற வயதின் அலுப்பாலும் பஞ்சர் பார்க்கும் எண்ணத்தை விட்டுவிட்டு, கடைகளில் பார்க்க ஆரம்பித்தார்.
நல்ல வெயில், உச்சந்தலையிலிருந்து வேர்வை இறங்கி காதோரங்களிலும் பின்பக்கமும் வடிய ஆரம்பித்திருந்தது. துண்டால் துடைத்துக் கொண்டார். ‘அக்னி நட்சத்திரத்துல மழை வந்தா நல்லாத்தானிருக்கும். என்னா கொழுத்துக் கொழுத்துது.. நம்மளாலே முடியலயே, ஆடு மாடெல்லாம் பாவந்தானே… குடிக்கிறதுக்கு தண்ணீயுமில்லாம, மேயப் புல்லுமில்லாம இந்த வெயில்ல அதுக திரியிறது கொடுமை’ என நினைத்துக் கொண்டார்.
சைக்கிளைப் பஞ்சர் பார்க்கச் சொல்லிவிட்டு சிவா டீக்கடையில் போய் டீ சாப்பிட்டுவிட்டு, சக்திக்கு ஒரு டீயையும் மகளுக்குப் பிடித்த அப்பத்தையும் வாங்கிக் கொண்டு வந்தார். ஓரிடத்தில் முள்ளிருக்க, அதை எடுத்து பஞ்சர் பார்த்து காற்றடித்துத் தண்ணீரில் வைத்துப் பார்த்த சக்தி “பெரியப்பா… டியூப், டயர் ரெண்டுமே போச்சு. ரெண்டையும் மாத்துறதுதான் நல்லது” என்றான்.
“செயினு அடிக்கடி கழளுதுப்பா… அதையும் சரி பண்ணுவே” என்றதும் நட்டைக் கழற்றி கொஞ்சம் பின்னிழுத்து வைத்துவிட்டு, தேங்காய் எண்ணெய் போட்ட சக்தி, “பெரியப்பா… செயினையும் மாத்தணும். பேசாம அண்ணனுங்ககிட்டச் சொல்லி ஒரு வண்டிய வாங்கிப் போடுங்க” என்றான்.
“நம்ம காலத்துக்குச் சைக்கிள் போதும்ப்பா. அவனுக வாங்கித் தாரேன்னுதான் நிக்கிறானுவ, நமக்கு அதெல்லாம் வேணாம்ப்பா. இன்னைக்கு பெரியக்காவப் பாக்கப்போறேன். ரெண்டு நாள் செண்டு கொண்டாந்து விடுறேன். என்னென்ன வேலை பாக்கணுமோ அம்புட்டையும் ஒட்டுக்கப் பாத்துப்புடு” என்றபடி இடைவாரிலிருந்து பணத்தை எடுத்து நீட்டினார்.
“அட இருக்கட்டும் போங்க பெரியப்பா… அதான் டீ வாங்கிக் கொடுத்திட்டியல்ல” என்றவனிடம் “டீ உனக்கு… பாக்குற வேலைக்கான வருமானம் உன் குடும்பத்துக்கு…” என்றபடி சக்தியின் கையில் வைத்து அழுத்தினார்.
“காசுல மட்டும் கரெக்ட்டா இருப்பீங்க… ஆமா இந்த வெயில்லயா அக்காவப் பாக்கப் போறீங்க” என்றவனிடம் “ஆமா… பாக்கணுமின்னு தோணுச்சுன்னா வெயிலென்ன மழையென்ன… அதுவும் தனியாத்தானே கிடக்கு. ஆடு மாடுகளை வச்சிக்கிட்டு இருக்கதால அதால நம்மூருக்கு ஓடியார முடியாது. அப்படியும் யாரையாச்சும் பாத்துக்கச் சொல்லிட்டு இடைக்கிடை ஓடியாரத்தான் செய்யுது. இன்னைக்கு நாம போயிட்டு வருவோம்னு கெளம்பிட்டேன். சைக்கிள்தானே, போயி பாத்துட்டு அங்கன அது சமைக்கிறத தின்னுட்டு வெயிலுக்குக் கிடந்து உறங்கிட்டு, வெயில் தாள கெளம்பி வரவேண்டியதுதான். நம்ம வூட்டுல ஆடா மாடா… இல்ல எங்க போனீய… எதுக்கு இருட்டுக்குள்ள வாரீயன்னு கேட்க ஆளெதுவும் இருக்கா. நம்ம வூட்டுக்கு நாமதானே ராசா… சரி வரவா” என்றவர் சைக்கிளில் கிடந்த மஞ்சப்பையில் அப்பப் பொட்டலத்தை வைத்து, ஸ்டாண்டை எடுத்துச் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போய் மாணிக்கம் கடையில் ரொட்டி, மிக்சரென வாங்கி அதே மஞ்சப்பையில் வைத்துக் கொண்டு, சட்டையின் மறுகையையும் மாட்டிக் கொண்டு பட்டனைப் போட்டுக் கொண்டு துண்டையெடுத்து தலையில் போட்டுக் கொண்டு சைக்கிளை மிதிக்கலானார்.
எருக்கூடையைத் தூக்கிக் கொண்டு வந்த லட்சுமி, தூரத்தில் மாரிச்சாமி சைக்கிளில் வருவதைப் பார்த்து, ‘இங்கேருந்து மொட்ட வெயில்ல விழுந்து வர்றாரே’ என நினைத்துக் கொண்டு மேட்டுச் செய்யிக்குப் போகலாமென வந்தவள், ரோட்டோரத்திலிருந்த வெட்டுச்செய்யில் கொட்டிவிட்டு நின்றாள்.
மகளருகில் வந்தவர் “ஏத்தா… எதுக்கு இந்த வேவாத வெயில்ல நிக்கிறே..?” எனச் சைக்கிளிலிருந்து இறங்கினார். சட்டையெல்லாம் தெப்பலாய் நனைந்திருந்தது. தலையிலிருந்து வேர்வை சொட்டிக் கொண்டிருந்தது. துண்டையெடுத்து அழுத்தித் துடைத்தார்.
“நான் எருக்கொட்ட வந்தேன்… ஆமா நீங்க எதுக்கு இப்ப மொட்டவெயில்ல விழுந்து வர்றீய..?”
“இதெல்லாம் வெயிலையே பாத்து வளர்ந்த கட்டதானே, அதென்னத்தச் செஞ்சிரும். என்னமோ தெரியல ரெண்டு நாளா உன்னெனப்பு. அதான் கஞ்சியக் குடிச்சதும் கெளம்பி வந்துட்டேன். சைக்கிளு பஞ்சராக் கிடந்ததால் நேரமாயிருச்சு, இல்லேன்னா சத்த முன்னால வந்திருப்பேன்” சிரித்தார்.
லட்சுமிக்கு அப்படி ஒன்றும் குறைந்த வயதில்லை. மாரிச்சாமிக்கு இப்போது எண்பத்தெட்டு. இருபத்தியொரு வயதில் திருமணம்… இருபத்தி ரெண்டாவது வயதில் லட்சுமி பிறந்தாள். அப்படிப் பார்க்கப் போனால் அவளுக்கும் அறுபத்தஞ்சைத் கடந்துருச்சு. எத்தனை வயசான என்ன, பெத்தவங்களுக்குப் பிள்ளைங்க மேல இருக்க பாசம் குறையாதுல்ல. அதுவும் பெண் பிள்ளைகள் என்றால் அப்பாக்களின் பாசத்துக்குச் சொல்லவா வேண்டும்!
“எனக்குப் போன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனுல்லப்பா. எதுக்கு இம்புட்டுத் தூரம் வர்றீய… வந்தா தங்கவா போறீயா… போகணும்னு கால்ல வென்னித்தண்ணிய ஊத்திக்கிட்டு நிப்பீய”
“இதென்ன தூரம், வயசு காலத்துல முப்பது கிலோமீட்டரெல்லாம் சைக்கிள்ல போயிருக்கேன். ஆமா வூட்டப் போட்டுட்டு இருக்க முடியுமா..?” சிரித்தார்.
“ஆமா பொல்லாத வூடு… முப்பது கிலோமீட்டரு வயசு காலத்துல போயிருக்கலாம். இப்ப உங்க வயசென்ன…”
“அதெல்லாம் நான் நினைக்கிறதே இல்லைத்தா. சின்ன வயசுல நல்லா உழைச்ச உடம்பு, அதான் இப்பவும் சைக்கிள் ஓட்ட முடியுது. மூட்டை தூக்க முடியுது. இல்லைன்னா இந்நேரம் நரம்பெல்லாம் செத்துப் போயிருக்காது”
“ம்… இனி அலையிறதக் குறைச்சுக்கங்கப்பா”
“எங்க போறேன். அந்த வூட்டுல குர்ரான்னு உக்காந்திருப்பேன்… டிவி பாப்பேன். எப்பவாச்சும் உன்னைப் பாக்க வருவேன். வராத்துல ரெண்டு நாளாச்சும் சிவா கடையில டீயும் அப்பமும் சாப்பிடணும்… அம்புட்டுத்தான்”
“சொன்னா எப்பக் கேட்டிருக்கீங்க… ஆமா தம்பிக எதுவும் சொன்னானுங்களோ? அதுக்காகத்தான் இம்புட்டுத் தூரம் வந்தீங்களோன்னு நினைச்சேன்”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. ரெண்டு நாளாவே உன்னைப் பாக்கணும்னு தோணுச்சு, வந்தேன்”
இருவரும் பேசியபடியே வீட்டுக்கு வந்தார்கள். காபி போட்டுக் கொடுத்தாள். குடித்துவிட்டு மகளுடன் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார். மாப்பிள்ளை கோயம்புத்தூரிலும், பேரன் பேத்திகள் எல்லாம் திருமணமாகி வெளியூர்களிலும் இருப்பதால் லட்சுமி மட்டுமே தனியே இருந்தாள்.
மகள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, அவள் “ரெண்டு நாள் இருந்துட்டுப் போங்கப்பா” என்று சொல்ல, “எனக்கு நம்ம வூட்டுக்குப் போயிடணும். உன்னைப் பாக்கணும் போல இருந்துச்சு, வந்தேன்; பாத்துட்டேன்…” என்றவர் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு, “சம்பாதிச்சது போதும்னு மாப்பிள்ளைய வரச்சொல்லுத்தா… நீ மட்டும் தனியாக் கிடந்துகிட்டு, ஆடு மாடுகளை வச்சுக்கிட்டு… காலம் திரும்பி வராதுத்தா… அதான் பிள்ளைய நல்லா சமாளிக்குதுகள்ல, பின்ன என்ன?” என்றார் வாஞ்சையுடன்.
லட்சுமி சிரித்தாள். “அவரு வந்து இங்க என்ன பண்ணப் போறாருப்பா… வூட்டுக்குள்ள முடங்கிட்டா வாழ்க்கை போயிரும். இன்னும் கொஞ்சக் காலம் அங்கிட்டு இருக்கட்டுமே”
“உன் தம்பி மூத்தவன் ரெண்டு நாள் முன்னாடி பேசுனான். வூட்டுல பின்பக்கச் செவறு வெடிச்சுக்கிட்டு நிக்கிது. கொஞ்சம் மராமத்து பாக்கணும்ப்பான்னு சொன்னதுக்கு ‘அதெல்லாம் இனி முடியாது, அந்த வூட்ட வேலை பாத்து என்னத்துக்கு ஆகப்போவுது? நீங்க பேசாம சின்னவனுகிட்ட போயி இருங்க. இனிமே தனியாவெல்லாம் இருக்க வேண்டாம்’னு சொன்னான். ஊருக்குள்ள வூடுன்னு ஒண்ணு வேணுமுல்ல. நானே இல்லைன்னாலும் அவனுக வந்தா போனா வூடு வேணாமாத்தா…? அவனுகளுக்குத்தான் ஊரே வேணாமே! இருந்தாலும் ஊருக்குள்ள நம்ம பேரு சொல்ல ஒரு வூடு இருக்கணுமுல்லாத்தா, அதச் சொன்னதுக்கு கத்துறான். நீ சின்னவனுகிட்ட பேசி அந்தச் செவரை மட்டுமாச்சும் மராமத்துப் பாத்து வைக்கச் சொல்லுவே” மெதுவாகச் சொன்னார்.
இதைச் சொல்வதற்குத்தான் வந்திருப்பார் என்றாலும் ‘என் மீதான பாசத்தில்தான் இத்தனை தூரம் சைக்கிளை மிதித்து இந்த வெயிலில் வந்திருக்கிறார்’ என நினைத்துக் கொண்டவள், “சரி சொல்றேன்… இங்கிட்டு வாங்கன்னு நான் கூப்பிடுறேன்… சின்னவன் கூப்பிடுறான். நீங்களும்தான் வீம்பு பண்ணாம எங்கிட்டாச்சும் ஒரு பக்கம் போயி இருக்கலாம்ல. இந்த வயசுல நீங்க தனியாக் கிடந்துகிட்டு… சரிவராதுல்லப்பா… ராத்திரியில ஏதாச்சும் ஒண்ணுன்னா என்ன பண்றது? அவனுக சொல்றது சரிதானே. ஊருக்குள்ள அந்த வூடு இருக்கட்டும். நீங்க எங்க கூட இருங்க. அதுதான் இனிச் சரின்னு தோணுது”
“வீம்பெல்லாம் இல்லைத்தா… எண்பத்தெட்டு வருஷப் பந்தம் அந்த மண்ணுக்கும் எனக்கும். அவனுகள மாதிரி எந்த உறவையும் என்னால படக்குன்னு முறிச்சுக்க முடியாதுத்தா… என்னோட வாழ்க்கை அந்த மண்ணுலதான். இதெல்லாம் சொன்னா அவனுகளுக்குப் புரியாது. சின்னவனோட போயிருந்தா வூட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கணும்… அது என்னால முடியும்னு நீ நினைக்கிறியா…? செத்துப் போவேந்தா… செத்துப் போவேன்” சொல்லிவிட்டு எழுந்தவர் இடைவார் சிப்பைத் திறந்து மூன்று ஐந்நூறு ரூபாய் நோட்டை எடுத்து, லட்சுமி ‘எதுக்குப்பா இதெல்லாம்’ என மறுத்தபோதும் கையில் வைத்துவிட்டுத் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு மொட்டை வெயிலில் சைக்கிளை மிதிக்கலானார்.
அவரையே பார்த்துக் கொண்டு நின்ற லட்சுமிக்கு ‘நானே இந்த ஊரை விட்டுப் போகமாட்டேன்னு வீராப்பாத்தானே இருக்கேன். அப்ப எங்க அப்பனுக்குக் கூடுதல் வீராப்பு இருக்கும்தானே’ என நினைத்துக் கொண்டு கையிலிருந்த பணத்தைப் பார்த்தாள். ‘அன்னையில இருந்து இப்ப வரைக்கும் இவரு இப்படித்தான்; எப்ப வந்தாலும் எனக்குப் பணம் கொடுக்காமப் போகமாட்டாரு’ என நினைத்துக் கொண்டவள், ‘எல்லாரும் படிச்சு நல்ல வேலையில இருக்காங்க… என்னைப் படிக்க வைக்கலயேன்னு மனசுக்குள்ள நினைப்பாரா இருக்குமோ..?’ என யோசித்தபடி அவர் போவதையே வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘கடைசி வரைக்கும் எம் மகளுக்கு என்னால முடிஞ்சதக் கொடுக்கணும். இந்தக் காசக் கொடுக்கத்தானே இம்புட்டுத் தூரம் ஓடியாந்தேன்’ என நினைத்துக் கொண்டே சைக்கிளை மிதித்தார் மாரிச்சாமி.
பின் வீல் கல்லில் அடிபடுவது போல் தெரிய, இறங்கிப் பார்த்தார். காற்று இறங்கியிருந்தது. சொக்கநாதபுரம் விலக்கு வரைக்கும் உருட்டிக்கிட்டுத்தான் போகணும் என நினைத்தவர், சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார்.
மாரிச்சாமிக்கும் லட்சுமிக்கும் வெக்கை உறைக்கவில்லை.