Home கட்டுரைதள்ளுபடி செய்ய முடியாத ஆடிப்பெருக்கு

தள்ளுபடி செய்ய முடியாத ஆடிப்பெருக்கு

by Kudandhai anitha
0 comments

“இமயத்திலிருந்து கடல் வரை
நீருக்கு ஒர் வாழ்க்கை
கடலிலிருந்து மேகம் வரை
மழைக்கு ஒரு வாழ்க்கை”

இதில் நீர் எங்கு வாழ்கிறது.

ஒவ்வொரு உயிரின்  துடிப்பில் என்று தான் சொல்ல வேண்டும்.

பூமியில் பல உயிரினங்களின் தோற்றமும் மறைவும் இருந்த போதும் உயிர்கள் வாழ உணவு தேவை, அந்த உணவுக்கான ஆதாரமாக பயிர்கள் செழிப்பாக வளர நீர் தேவை, இமயத்தில் உருகும் பனியானது நீராகி நெடு தூரம் பயணப்பட்டு கடலில் சங்கமமாகும் முன் தென்மேற்கு பருவமழையுடன் சேர்ந்து ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும், இதனையே ஆற்றுப்பெருக்கு எனக் கூறுவர். தமிழகத்தில் பதினெட்டாம் பெருக்கு என்றும் அழைக்கப்படுகிறது. 

தமிழ் மாதங்கள் பன்னிரண்டு மாதங்களிலும் 18ம் தேதி இருந்தாலும் இந்த ஆடி மாதம் 18 ம் நாள் காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர் மக்கள் இந்நாளை பதின்ம வயது தொடும் பூப்பெய்திய பெண்ணாகவே இந்நன்னீரின் வரவை கொண்டாடுகிறார்கள். ஒருவரது வாழ்வில் பதின்ம வயது என்பது என்றும் மறக்கவியலா காலகட்டமே, உழவர்கள் இந் நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர் இப்போது நெல் கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும் இதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள் இதன் ஆதாரமாகவே “ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற பழமொழியும் விளைந்தது.

பயிர் செழிக்க விவசாயம் போற்ற காவிரியாற்றின் கரையில் உள்ள டெல்ட்டா மாவட்டத்து ஊர் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர் அன்றைய நாள் பெண்கள் தங்களை சிறப்பாக அலங்கரித்துக்கொண்டு காவிரி ஆற்றுப் படித்துறையில் பூஜை செய்ய ஒரு படியில் இடம் பிடித்து அந்த இடத்தை சுத்தம் செய்து வாழையிலை விரித்து அகல் விளக்கை ஏற்றி வைத்து  வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பூ, பழம் வைத்து வெல்லத்துடன் சேர்த்த நன்கு சுத்தம் செய்த பச்சரிசியையும் கலந்து படைத்து பத்தி கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழைமட்டையில் விளக்கு ஏற்றி அதை ஆற்றில் விடுவார்கள் அது மட்டுமல்லாமல் புதுமணத்தம்பதிகளை அழைத்து தாலி மாற்றுதல் போன்ற சடங்குகள் செய்ய இந்த நாளை உகந்த நாளாக தேர்ந்தெடுத்து தாலி மாற்றிவிடுவதும்.. மஞ்சள் தேய்த்து வைத்த நூலை  ஆண்களின் வலது கை மணிக்கட்டிலும் பெண்களின் கழுத்திலும் பெரியவர்கள் கட்டி விட திருமணவயதிலிருக்கும் பதின்ம வயது பெண்கள் கழுத்திலும் தாலி கயிறு போல அவர்களை அலங்கரிப்பதால் அவர்கள் முகத்திலும் வெட்கமும் நாணமும்  பொங்குவதை காணலாம். சிறுவர்கள் ஊர் கூடி தேர் இழுப்பதை பார்த்திருப்பார்கள்.  அவர்கள் வீட்டிலிருந்தே சப்பரம் செய்து அதை வண்ண காகிதங்களால் அலங்கரித்து கயிறு கட்டி இழுத்து வருவார்கள். கோயில் கோபுரம் போன்ற அமைப்புடன் செவ்வகவடிவ அடித்தளத்தில் கூம்பு வடிவ கோபுரம் கொண்டிருக்கும் நான்கு சக்கர சப்பரம் இரண்டடி உயரம் கொண்டதாக சிறுவர் சிறுமிகள் எளிதாக இழுத்து செல்ல ஏதுவானதாக இருக்கும்.

ஒரு ஊரில் ஒர் வீதியில் ஒரு வீட்டில் அந்தந்த வயதுக்கு ஏற்றவர்கள் அனைவரும் தாங்களும் மகிழ்ந்து தங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழச்செய்யும் எளிய திருவிழா தான் இந்த ஆடிப் பதினெட்டு. நீருக்கு நன்றி செலுத்திய பின்

தங்கள் வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்த பலவிதமான கலப்பு சாதங்கள்  அதை ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள். காவிரி கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ் பெற்றது. 

தமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி, குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் வரை தொடர் நிகழ்வாக காணலாம்.  திருச்சி ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டப படித்துறையில் காவிரிக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடக்கும் ஆடிப்பெருக்கு நாள் அன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர்  நம்பெருமாள் புறப்பாடாகி அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார்.  அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார் பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டாடை மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

ஆடிப்பெருக்கு குறித்து ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் மற்றும் பல சங்க இலக்கியங்களில் சப்த கன்னியரை வழிப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடப்படும் இவ்விழா இந்த காலத்திலும் யார் இதையெல்லாம் செய்துக்கொண்டு இருப்பார்கள் என்று பேசும் நகரவாசிகள் ஆற்றுப்படுகை தாண்டி பிழைப்பிற்காக ஊர் தாண்டி வந்து இருப்பார்கள் அவர்களுக்கு தங்களுக்குத் தெரியாத ஒன்று எங்குமே நடப்பதில்லை என்ற எண்ணம் தானே தவிர.. நீரும் நிலமும் விவசாயம் போற்றும் மனிதர்கள் அங்கேயே தான் இருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். உலகில் மக்கள் உயிர் வாழத் தொடங்கிய காலம் முதல் பசி என்றும் மாறவேயில்லை தானே. இன்றும் உயிர் வாழ உணவு இன்றியமையாதது அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் போற்றி மதிக்கப்பட வேண்டியவர்கள். இயற்கையை பாதுகாக்க இது போன்ற சடங்குகள் அவசியம் என்பதை உணர்ந்து ஆடம்பரம் தவிர்த்து இயற்கையை பாதுகாத்தல் வேண்டும். 

நீர் மேலாண்மையை போற்றுதல் வேண்டும். அனைத்திற்கும் மேலாக நிலம் நீர் பாதுகாக்கும் தனி மனித ஒழுக்கம் சுற்றி இருப்பவர்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வழி செய்யும். இந்த வருடம் பொங்கி வரும் ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று உறுதிமொழி ஏற்று நீராதாரங்களை அழிக்காமல் காக்க உதவுவோம்.

அனைவரது வாழ்விலும் வசந்தம் பொங்கட்டும் என்று வாழ்த்துவோம்.

Author

You may also like

Leave a Comment