Home இதழ்கள்ஆவன்னா ரூனா நிர்மல வதனா – 3

ஆவன்னா ரூனா நிர்மல வதனா – 3

by admin
0 comments

என்னைச் சுற்றிக் காரிருளில்
ஏக்கத்துடன் நான் நடக்கின்றேன்
கண்ணைச் சுழற்றிப் பார்க்கையிலே
ககன வெளியா புரியவில்லை
விண்மீன் தொடுக்க ஆசையுடன்

விரைவாய் இருந்த பொழுதினிலே
எண்ணம் கலைந்த மாயமென்ன
ஏற்றம் வருமா என்வாழ்வில்…

தெரியவில்லை.. ஏதோ தொடர்ச்சியாய் மன ஒலியா புரியவில்லை..மெல்லப் பிதற்றுகிறேன் என்று மட்டும் தெரிகிறது..

இருப்பது படுக்கையில்.. கால்கள்.. வலது கால் …அதன் மீது யார் பாரத்தை வைத்திருக்கிறார்கள்.. வலி இல்லை ஆனால் தூக்க முடியவில்லை

அந்தக் கன்னிகை என்ன சொன்னாள்.. காலை வெட்ட வேண்டுமா.. ஹச்சோ.. அப்புறம் என்னை எப்படிக் கூப்பிடுவார்கள் ஆச்சி..வதனா முடியாதே. கால் போய் வதன என்பார்களா?.!

எப்படி நடப்பது?. ஒருகால் ஒருக்கால் இல்லாது போய்விடுமா.?. வாழ்க்கையில் கிளி போலத்தான் பெண்..ஆனால் நொண்டிக் கிளி.. காலூனும் கிளி…ஏகடியம் செய்வார்களா?.. கிளி. கால் போன கிளி

வாய் விட்டே சொல்லிவிட்டேன் போல..யாரோ சிரிக்கும் சத்தமும் ஷ் என்ற சத்தமும் கேட்டது..

கண்களைத் திறந்தேன்.

எதிரில் சிரிப்பாணியுடன் கன்னிகா…

கூட கோபத்திலும் சாந்தமாய் ஜொலிக்கும் முகம் கண்கள்.. சாரைப்பாம்பாய் நெளிந்த கூந்தல்.. நெற்றியின் கீழ் வில்லா இவ்வளவு குட்டியாய் செய்வார்களா….நெற்றியில் குட்டிக் குங்குமம்.. சற்றே கீழ்பார்த்தால் மரவுரி ஆடை மறைத்த அழகு…

சற்றே வயதான பெண்மணி தான்

எழ முயன்றேன்

முடியவில்லை.. தலை வலித்தது..

“எழாதே பெண்ணே வலி மறக்க மருந்து கொடுத்திருக்கிறேன்..”

குரலா அது..? நெஞ்சைக் கிளறும் குரல் குட்டிக் குயிலின் மிழற்றலா..? யாராவது வீணையின் நரம்பைச் சுண்டி டொய்ங்க் என்று விட்டார்களா… என் குரலை விட அழகா..சற்றே பொறாமை வருகிறதே…

“அம்மா தாங்கள்? என் கால்….”

சிரித்தாள் அந்தப் பெண்மணி..” கவலைப்படாதே நிர்மலா… இந்தக் கன்னிகா எப்பொழுதும் சுட்டி..சிரிப்பு தான் அவளுக்கு..எதிலும் விளையாட்டு தான்…”

கன்னிகாவை சற்றே முறைத்தேன்

“அவள் விளையாட்டாய்ச் சொல்லியிருக்கிறாள்.. கவலைப்படாதே காலை எல்லாம் எடுக்க வேண்டாம்.. ஆனால்…”

பயந்தேன்.. “ஆனாலென்னம்மா?”

“உன் பின்கால் எலும்பில் கொஞ்சம் அடி பலம்.. நல்லவேளை மெல்லிய விரிசலாகக் கூட இருக்கலாம்..காலப் போக்கில் சரியாகிவிடும்.. மூலிகைப் பச்சிலைச் சாறு போட்டு கட்டுப் போட்டிருக்கிறேன்.. குறைந்த பட்சம் பதினைந்து நாட்கள் வலது கால் ஊன்றக் கூடாது”

“ஹச்சோ”

“என்ன ஹச்சோ.. நீ சொல்லும்போது உன் உதடு குவிவது வெகு அழகு பெண்ணே..”

கன்னிகா இப்போது முறைத்தாள். “அம்மா.. என்னை நீங்கள் சொல்லுவதை இவளுக்குச் சொல்கிறீர்கள்”

சிரித்தாள் அந்தப் பெண்மணி..” போடி இவளே.. நீ ஒரு அழகு .. இவள் ஒரு அழகு.. நீ கொஞ்சம் இளங்கருப்பு. இவளைப்பார் சங்கின் நிறம் மெல்லிய மா நிறம். எண்ணிப் பேசுகிறாள் இவள்..எண்ணாமல் பேசுகிறாய் நீ”

“ம்க்கும்” … முகத்தைத் தோளில் இடித்தாள் கன்னிகா..” உங்களுக்குப் புதியவரைப் பார்த்தாலே பாசம் பொங்குமே… நிர்மலா உன் ஊர் ஆனைமங்கலம் தானே?”

“ஆமாம் நான் போகவேண்டுமே”

“முடியாதே”

“இல்லை நான் இறந்துவிட்டேன் என நினைத்திருப்பார்கள்..”

“ம்ஹும் இன்னும் பதினைந்து நாட்கள். அதற்கப்புறம் உன் ஊர் செல்ல ஒரு நாள் ஆகும்…”

“அதுவரை…உங்களுக்குச் சிரமம்…” அந்தப் பெண்மணியைப் பார்த்தேன்..

பெண்மணி சிரித்தாள்.. எப்படி அன்றலர்ந்த பூவாய் சிரிக்கிறார். இவர்..ஆச்சர்யப்பட்டேன்.. ஆனாலும் கண்களில் படர்ந்திருந்த சோகம்..”கன்னிகா உன்னைக் கண்ணும் கருத்தும் கூடவே வாயுமாய்ப் பார்த்துக் கொள்வாள் கவலை கொள்ளாதே..”

எழுந்து சென்றார் அவர்..

கன்னிகா வந்து “வா இவளே..கொஞ்சம் கொல்லைப்புறம் செல்லலாம்.. முகமலம்பு.. குளிப்பதானாலும் குளி உதவி செய்கிறேன்”

“சேச்சே”

“என்ன சேச்சே… நான் சொல்வதைக் கேட்கவேண்டுமாக்கும்” கன்னிகா போலியாய் மிரட்டினாள்..

“இல்லையெனில் காலை..”

“வேண்டாம் கன்னிகா… “ மெல்ல எழ வேகமாய் என்னை அணைத்தாற்போலத் தூக்கி தோளில் சாய்த்த வண்ணம் அழைத்துச் சென்றாள் அவள்..


கடந்த சில நாட்களில் அந்தப் பர்ணசாலை எனக்குப் பழகியிருந்தது..வாய் ஓயாமல் கன்னிகா பேசியதால் பொழுதும் கொஞ்சம் போன வண்ணம் இருந்தது..

அது மட்டுமல்ல எனது எல்லாவித தேவைகளையும் பார்த்துக் கொண்டாள். அவள். உடை மாற்றுவதற்கு உதவுவது (எவ்ளோ அழகடி நிம்மி நீ… ச்சு கன்னிகா ச்சும்மா இரேன்..போடி) உணவு கொடுப்பது, கால் கட்டவிழ்ப்பது. என.

நானிருந்த பர்ணசாலை அங்கிரஸ முனிவருடையதாம்.. அவர் தவம் புரிய காட்டின் உட்பகுதிக்குச் சென்று விட்டாராம்..

குடிலின் வெளியில் கொஞ்சம் அவள் மேல் சாய்ந்தவண்ணம் நடக்கப் பழகி விட்டேன் நான்..

எவ்வளவு விதமான புஷ்பங்கள்… மல்லிகை முல்லை கனகாம்பரம் செம்பருத்தி மரிக்கொழுந்து மாதவிக்கொடிப் பந்தல்கள் கொஞ்சம் தள்ளி மாமரங்கள் வேப்ப மரங்களில் இருந்து வீசும் சுகந்தக் காற்று

பின் சில காய்கறித் தோட்டங்கள்.. மொத்தம் ஆறேழு குடில்கள்..அங்கங்கே பயிலும் மாணவர்கள்

என்னிடம் பேசிய அந்தப் பெண்மணி புருவின் அம்மாவாம்..பெயர் கூட…கொஞ்சம் கஷ்டம் தான் சர்மிச்டை… சொல்லிப் பார்க்க கன்னிகா சிரித்தாள் மறுபடி முத்துக்கள் உருண்டோடுவது போல

“சர்மிஷ்டையடி நிம்மி”

“சர்மி ந்னே கூப்பிடறேனே..”

”உன் நாக்கில் தர்ப்பையை வைத்துத் தான் பொசுக்க வேண்டும்”கண்சிமிட்டினாள் கன்னிகா.

“அவர்.. அவர்ர்…” என இழுத்தேன்

“அவர்.. ஓ அவரா..சர்மிஷ்டையம்மாவின் மைந்தர்… என்னடி கண்கள் மயங்குகிறது?”

“போடி பொல்லாக் கன்னி. அதெல்லாமில்லை ஸ் ஆ” என்றேன்.. வலது காலை சற்றே ஊன்றியதால் ஏற்பட்ட வலி..”

“என்ன ஆச்சு?”… பின்னால் சர்மிஷ்டை… கூடவே பின்னால் பின்னால் யாரது? புரு.. என் மனத்தின் கட்டுக்களைத் தளர விட்டவரா?.. என் சிறுபிள்ளைத்தனத்தின் மீது கட்டுப்போட்டு என் பெண்மையை மிளிரச் செய்தவரா?…என் கனவுகளில் மட்டுமல்லாமல் என் நனவுகளிலும் என்னுடன் இருபபாரா?

சொன்னாற் போல இரவு தூங்கும் போது அவர் முகம் வந்து தொந்தரவு தான் செய்கிறது… அதுவும் அமைதியான முகம்… பருவத்தின் பொலிவில் ஒரு இளைய கன்னி தோளில் ஆடி வந்தாலும் கூட சலனமுறாத முகம். உடல்… துளியும் கெட்ட நினைவு வராத மனசு. நினைத்து நினைத்து அவருடன் பேச்சுக்கள் பல பேசுவது போல இருந்து பின் நெடு நேரம் கழித்து தான் உறங்குவேன்

“என்ன ஆச்சு?” மறுபடி சர்மியம்மா

“மன்னிக்கவும்.. கொஞ்சம் காலூன்றிவிட்டேன்”

“அது புரிகிறது” என்றார் சர்மியம்மா.. “உன் எண்ணங்கள் எங்கோ வேரூன்றி விட்டது போல இருக்கிறது..”

“இல்லை நான்… ” மெல்ல சர்மியம்மாவின் பின்னால் பார்த்தேன்…புரு இல்லை

“புரு தானே போய்விட்டான் நிம்மி… “ சிரித்தாள் கன்னிகா… இவளுக்குச் சிரிப்பைத் தவிர த் தெரியாதா என்ன.?. சர்மியம்மாவும் மெல்லச் சிரித்தார்..

“வா இப்படி அமர்..” அங்கிருந்த கல்மேடையில் உட்கார வைத்து காலைப் பார்த்தார்..

“பரவாயில்லை..இப்போது வலி.”

தொட்டார்.

”ஸ்ஸ ஆ.” .”

ம்ம் சரி.. இன்னும் முழுக் குணமில்லை..ஆனால் விரைவில் ஆகிறது நிர்மலா உன் உடல் வலு அப்படி. பார் தெளிந்த வாசல் போல் இருக்கும் முகம் வலியால் எவ்வளவு வாடி விட்டதென்று..”

“போங்கள்”

”எங்கு போகச் சொல்கிறாய் சர்மியம்மாவை..” கன்னிகை கேட்டாள். .”அவருக்கு அவர் மனம் கவர்ந்தவர் நினைவு ஏனோ உன்னைப்பார்த்தால் வருகிறது எனில் உன்னை வர்ணிக்க ஆரம்பித்து விடுகிறார்..”

”கன்னிகா என்ன இது பொறாமைப் பேச்சு..? ” என்றார் சர்மியம்மா.. “உன்னையும் புருவையும் ஒன்றாய்த் தானே வளர்த்தேன்.. நான் இங்கு வந்து இரண்டு வருடம் கழித்து இவள் தாய்க்கு இவள் பிறந்தாள்..தாய் மரிக்க புருவுடன் இவளையும் வளர்க்கிறேனாக்கும்..”

”ம் நீங்க\ளெல்லாம் அரசகுலம்..இஷ்டத்துக்குப் பேசுவீர்க\ள் ..அன்பை மாற்றிக் கொள்வீர்கள் ” என்றாள் கன்னிகா

”கன்னிகா என்ன பேச்சு இது?”

”இருங்கள்..சர்மியம்மா அரசகுலமா நீங்கள்.?.”

”ம் ”என்றார் அவர் .கண்கள் கலங்கின..”அது பழங்கதை..புதுக்கதை கேட்கிறேன்..உனக்குப் புருவின் மீது விருப்பமா?..”

எனது நாக்கு வறண்டது.. தீர்க்கமான ஷர்மியம்மாவின் விழிகள் என் இதயத்துக்குள் பாதை எழுப்பி நுழைந்தன…

”எனக்கு சொல்லத் தெரியவில்லை.. இது புது அனுபவம்..சுற்றிலும் ஆனை மங்கலம், ஆச்சி, அப்பா, அன்பு, செல்வம் என இருந்தவள் நான்.. நான் இங்கு இருப்பதும் புது அனுபவம்.. நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை சொல்ல

நினைத்தும் சொல்ல முடியாமல் நான் தவிக்கிறேனே.. இதுவும் எனக்குப் புது அனுபவம்.”.

”அனுபவம் என்பது அப்படித்தான்பெண்ணே… வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு நொடியிலும் கிடைக்கும் சம்பவங்கள் அது தரும் அனுபவங்கள் எல்லாம் இறைவனை நோக்கி நாம் வைக்கின்ற அடிகள்.. அவை தானாகத் தானே வந்துவிடும்..”

”உங்களுக்குத் தெரிகிறது.. அது உங்கள் அனுபவம்”

”அது மட்டுமில்லை.. கேட்டுப் பெறும் அனுபவங்களும் உண்டு..என்னைப் பொறுத்தவரை கேட்காமல் வந்த அனுபவங்களே அதிகம்.”.

”என்ன ஷர்மியம்மா? ” என்று ஆரம்பித்த என்னைக் கன்னிகா கண்களால் தடுத்தாள்.

”.சொல்லட்டும் விடு.”.

”அந்தக் கேட்காமல் வந்த அனுபவங்கள்…”எனச்சொல்லிவிட்டு விம்மி அழ
ஆரம்பித்தார் ஷர்மியம்மா..

(தொடரும்)

Author

You may also like

Leave a Comment