Home கவிதைஅழகின் வெளிச்சம்.

வகுப்பறை கீதங்களில்
வரவேற்றிடும்
வாழ்த்து மழை.

பிஞ்சுகளின் கரங்களில்
தேகத்தில் பாய்கிறது
பனித்துளிகளின் குளிர்ச்சி.

கொஞ்சிடும் பேச்சுகளில்
ராகங்கள் கூட்டிடும்
இசைச்சுரங்களின் சேர்க்கை.

எண்ணங்கள் விரித்திடும்
சின்னச் சின்னக் கனவுகளில்
வகுப்பறையெங்கும்
வண்ணத்துப்பூச்சிகள்.

குடும்பத்தை வினவுகையில்
விழியும் மொழியும்
விளிம்பிடும் உற்சாகம்.

புத்தகம் படிக்கையில்
மத்தாப்புச் சிதறலென
பிறந்திடும் சிந்தனைகள்.

ஐயத்தை எழுப்புகையில்
மனவாசனைகளில்
நிரம்பிடும் தெளிவு.

சித்திரங்களில் ஆடிடும்
நிறங்களின் கலவைக்குள்
மயில்தோகையின் பரிமாணம்.

பாராட்டும் பொழுதெல்லாம்
புன்னகை மலரென
பூத்திடும் பேச்சுப் பூக்கள்.

கவனக்குறைவால்
வசவுகள் பெறுகையில்
சுருங்கிடும் முகத்திலும்
அழகின் வெளிச்சம்.

உலகைக் கற்றிட
பள்ளியில் நுழைந்திடும்
குழந்தைகளால்
உயிர்ப்பிக்க முடிகிறது
கட்டிடத்தின் வாழ்வை.

அடித்தாலும் தவிர்த்தாலும்
அப்போதே மறந்துவிட்டு
அன்போடு ஓடிவரும்
குழந்தைச் செல்வத்திடம்
கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்
சொர்க்கத்தின் நிறைவோடு
பயணித்தல் எளிதாகும்.

Author

  • கி. சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர்  அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர். பிறப்பு  திண்டுக்கல் மாவட்டத்தில் பழநிக்கு அருகில் அய்யம்பாளையம். இருப்பு  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் நரசிங்காபுரம். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, புன்னகை,  ஏழைதாசன், தமிழ்ப் பல்லவி, தினத்தந்தி, தினபூமி, மனித நேயம், புதிய உறவு, புதிய ஆசிரியன், உரத்த சிந்தனை, வானவில்,பொற்றாமரை போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல் விமர்சனங்களில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு இணைய இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் விமர்சனக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1.மின்மினிகள்(1999)
    2.தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022)
    3.தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)
    4.அன்பு மொழி(2024)
    5.மீன் சுமக்கும் கடல் (2025)
          என   ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
    கோவை மேன்மதி மன்றம் இவருக்கு "தாய்த் தமிழ் காவலர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களில் கலந்துகொண்டு கவி பாடியுள்ளார். உடுமலை இலக்கியக் களம் என்ற அமைப்பின் செயலாளராகப் பணிபுரிகிறார்

You may also like

Leave a Comment