நவராத்திரி என்றழைக்கப்படும் ஒன்பான் இரவில் முப்பெருந்தேவியரான மலைமகள், அலைமகள், கலைமகளை வழிபடும் மரபு நம்மிடம் இருந்துவருகின்றது. முதல் மூன்று நாள்கள் வீரத்தின் அடையாளமான மலைமகளும் (துர்க்கை), அடுத்த மூன்று நாள்கள் செல்வத்தை அளிக்கும் அலைமகளும் (இலட்சுமி), இறுதி மூன்று நாள்கள் கல்வியின் செல்வியான கலைமகளும் (சரஸ்வதி) வழிபடப்பெறுகின்றனர்.
நவராத்திரியின் ஒன்பதாவது நாளன்று கலைமகளைச் சிறப்பிக்கும் வகையில் ’கலைமகள் விழா’ (சரஸ்வதி பூஜை) கொண்டாடப்படுகின்றது. சைவ வைணவ பேதமின்றி இரு பிரிவினரும் கலைமகளைத் தொழுவர். திரிபுரசுந்தரியின் அம்சமென்று தேவிபக்தர்களும் அவளை வணங்குவர். பௌத்தர்களும் சமணர்களும்கூடக் கலைமகளை வழிபடுவர்.
இவ்வாறு சமய பேதமின்றி அனைவராலும் வழிபடப்பெறும் கலைமகளின் சிறப்புகள் சிலவற்றை இலக்கியங்களின்வழி அறிந்துகொள்வோம்.
சீவகசிந்தாமணியில் நாமகள்:
படைப்புக் கடவுளான பிரமனின் துணைவியாக விளங்குபவள் கலைமகள். பிரமனின் நாக்கிலும், மக்களின் வாக்கிலும் விளங்குபவள் என்பதனால் கலைமகளுக்கு ’நாமகள்’ என்ற பெயருமுண்டு. திருத்தக்கதேவர் இயற்றியதும் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக விளங்குவதுமான சீவக சிந்தாமணி, ’நாமகள் இலம்பகத்தையே’ தொடக்கமாகக் கொண்டிருக்கின்றது. காப்பியத் தலைவனான சீவகன், அச்சணந்தி எனும் ஆசிரியரிடம் கல்வி பயின்ற செய்திகளை இவ்விலம்பகம் இயம்புவதால் கல்விக்குரிய தெய்வமாகிய நாமகளின் பெயரை இதற்குப் பொருத்தமாகச் சூட்டியிருக்கின்றார் திருத்தக்கதேவர்.
மணிமேகலையில் சிந்தாதேவி:
சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில், சிந்தாதேவி (சிந்தையில் உறைபவள்) எனும் பெயரில் குறிக்கப்படுகின்றாள் கலைமகள். ஆபுத்திரன் எனும் இளைஞன் தன் முறையற்ற பிறப்புக் காரணமாகத் தான் வாழ்ந்த ஊரிலுள்ளோரால் புறக்கணிக்கப்படுகின்றான்; அதனைத் தொடர்ந்து மதுரையிலுள்ள சிந்தாதேவியின் செழுங்கலை நியமத்தில் (கலைமகள் கோயில்) அவன் தங்குகின்றான். மழைபெய்துகொண்டிருந்த ஓர் இரவில் பசியில் வாடிய ஏழைமக்கள் சிலர் ”உணவு கிடைக்குமா?” என்று அவனிடம் இரந்துவேண்டுகின்றனர். ”தானே இரந்துண்டு வாழும் நிலையில் இவர்களுக்கு எப்படி உதவுவது?” என்றெண்ணி ஆபுத்திரன் வருந்தியபோதில், நியமத்தில் குடிகொண்டிருந்த தேவியாகிய சிந்தாவிளக்குத் தோன்றித் தன் கையிலிருந்த அமுதசுரபியை அவனிடம் அளித்து, “நாட்டில் பஞ்சம் வந்தாலும் இந்த ஓட்டிலிருந்து சுரக்கும் அமுதுக்குப் பஞ்சம் வராது” என்று கூறி மறைந்தது என்கின்றது மணிமேகலை. இந்தச் சிந்தாதேவிக்குக் காஞ்சியிலும் ஆலயம் இருந்ததாகத் தெரிகின்றது.
கலைமகளுக்கு அந்தாதி பாடிய கவிச்சக்கரவர்த்தி:
கவிச்சக்கரவர்த்தி கம்பர் கலைமகளின்பால் கொண்ட பற்றின் காரணமாகச் ‘சரஸ்வதி அந்தாதி’ எனும் பெயரில் பனுவலொன்றைப் படைத்திருக்கின்றார். அதில், ”கலைமகளின் பாதங்களைப் பணிவார்க்கு அவள் பலகலையும் தருவாள், முத்தியும் அருள்வாள்; அவள் அருளிருந்தால் இப்புவியில் பெறற்கரிய பொருளென்று ஏதுமில்லை” என்று அவளைப் புகழ்கின்றார்.
பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி வெள்ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள் இருப்பவென் சிந்தையுள்ளே
ஏதாம் புவியில் பெறலரி தாவ தெனக்கினியே. (சரஸ்வதி அந்தாதி – 7)
கலைமகளுக்குக் கோயிலெடுத்த கவிராட்சதர்:
விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழ அரசர்களிடத்தும் அவைக்களப் புலவராகவும் அவர்களுக்கு ஆசிரியராகவும் விளங்கிய சிறப்புக்குரியவர் ஒட்டக்கூத்தர். இவர் ’கவிராட்சதர்’ என்று புகழப்பட்டவர். இவ்வரசர்களுள் ஒருவன் ஒட்டக்கூத்தரைச் சிறப்பிக்கும் வகையில் அரிசிலாற்றங்கரையில் ஓர் ஊருக்குக் ‘கூத்தனூர்’ என்று பெயர்சூட்டி அவ்வூரை இவருக்குப் பரிசாய்க் கொடுத்தான். அங்குக் கல்விக் கடவுளாகிய கலைமகளுக்கு இவர் ஒரு கோவிலைக் கட்டினார். அக்கோவில் ’கூத்தனூர் மகா சரஸ்வதி அம்மன் திருக்கோவில்’ எனும் பெயரில் இன்றும் புகழோடு விளங்கிவருகின்றது.
ஒட்டக்கூத்தர் இயற்றிய ’தக்கயாகப் பரணி’ எனும் நூல் இவரது புலமைக்குக் கட்டியங்கூறுவது. இந்நூலின் முடிவில் ஒட்டக்கூத்தரை வாழ்த்தும் வகையில் இரு பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றில், ”ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே” என்று அரிசிலாற்றங்கரையில் கோவில் கொண்டுள்ள கலைமகள் போற்றப்படுகின்றாள்.
கலைமகள் கருணையால் புதுமொழி கற்ற அருளாளர்:
17ஆம் நூற்றாண்டில் சைவமும் தமிழும் தழைக்கத் தோன்றிய அருளாளரான குமரகுருபரர், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா போன்ற பக்திச்சுவை சொட்டும் நூல்கள் பலவற்றை யாத்தவர். அவர் வடநாட்டிலுள்ள காசியில் தம் வாழ்வின் பிற்பகுதியில் தங்கியிருந்தார். அப்போது அங்கொரு சைவ மடம் கட்டவேண்டும் எனும் எண்ணம் அவர் சிந்தையில் உதித்தது. தன் ஆசையை அங்கே ஆட்சியிலிருந்த முகலாய மன்னனிடம் தெரிவிக்க விரும்பினார். ஆனால் அவருக்கோ, அப்பகுதியின் வழக்குமொழியான, இந்துஸ்தானி தெரியாது. அரசனுக்கோ தமிழ் தெரியாது. ”எப்படித் தன் எண்ணத்தை மன்னனிடம் சொல்லிப் புரியவைப்பது?” என்று குழம்பிக்கொண்டிருந்தவருக்கு மனத்தில் ஒரு மின்னல்வெட்டியது. ”நாமகள் அல்லவோ நம்மைப் பேசவைக்கிறாள்; அவளிடமே என் விண்ணப்பத்தை வைக்கிறேன்” என்று எண்ணியவராய்ச் சகல கலைகளையும் அருளுகின்ற அம்பிகையைத் துதித்து,
”தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவில்நின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.” என்று அவள்மீது ’சகலகலாவல்லி மாலை’ பாடினார்.
பாடலைக் கேட்டு மகிழ்ந்த சகலகலாவல்லி அம்மை, குமரகுருபரருக்கு இந்துஸ்தானி மொழி பேசும் ஆற்றலை அருள, அவரும் முகலாய மன்னனைக் கண்டு காசியில் சைவ மடம் கட்டவேண்டும் எனும் தம் அவாவை அவனிடம் வெளிப்படுத்த, அவனும் அதற்கிசைந்தான் என்கிறது குமரகுருபரரின் வரலாறு. அந்த மடம் ‘குமாரசாமி மடம்’ எனும் பெயரால் இன்றும் காசி நகரில் காட்சியளித்து வருகின்றது.
பாரதியின் புகழ்பாடிய மகாகவி பாரதி:
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராய்த் திகழ்ந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதி. இளம் வயதிலேயே பாப்புனையும் ஆற்றல் பெற்றிருந்த அவரைப் பாராட்டிப் ’பாரதி’ (கலைமகள்) எனும் பட்டத்தை, அவரது 11ஆவது அகவையில், எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் அளித்தனர். தம் பெயரிலேயே கலைமகளைக் கொண்டிருந்த மகாகவி, கலைகளின் உறைவிடமான அன்னையின் புகழை நாவினிக்கப் பாடியிருக்கின்றார். அப்பாடலில், ’கலைமகள் பூசை’ செய்யவேண்டிய முறையை அவர் நமக்கு அறியத்தருகின்றார்; அவரின் கவிமொழியிலேயே அதனைக் காண்போம்.
”மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம்!
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
[…]
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்” என்கிறார் மகாகவி.
நற்றமிழ் உறவுகளே! ஞானத்தின் வடிவமாய்ச் சமயத்தவராலும், கலைகளின் முதல்வியாய்ச் சான்றோராலும் போற்றப்படுபவளும், நவராத்திரி நாயகியருள் ஒருத்தியாய்த் திகழ்பவளுமான அன்னைக் கலைமகளை நாமும் துதிப்போம்; நல்லருள் பெறுவோம்!