Home கட்டுரைஅற்புத கண்டுபிடிப்பு

அற்புத கண்டுபிடிப்பு

by Paarvaiyatravan
3 comments

தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் போலவே எனக்கும் அது மட்டும்தான் தெரியும். இருந்தாலும் ai பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பேசப் போகிறேன். ஒரு பார்வையற்றவனின் கோணத்தில் அன்றாட வாழ்வில் சேர்க்கை நுண்ணறிவின்மூலம் நான் பெற்றதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 ஒரு நாள் மணப்பாறை பேருந்து நிலையத்திற்கு என் நண்பர் வரச் சொல்லி இருந்தார். அவருக்கு முன்னமே நான் அங்கு சென்றுவிட்டேன். பேருந்து நிலையத்தில் எந்த இடத்தில் நிற்கிறாய் என அவர் தொலைபேசியில் கேட்டார். அருகில் நின்றவரிடம் (இது என்ன இடம்?) எனக் கேட்டேன். முதலில் சத்தம் வரவில்லை. அவர் கவனிக்கவில்லையோ என நினைத்து, மீண்டும் இரண்டாம் முறையும் கேட்டேன். மூச்சுக்காற்று என் கையில் பட்டது, ஒரு நாக்கு என் கையை நக்கியது. அப்போதுதான் புரிந்தது அருகில் நிற்பது மனிதர் அல்ல ஒரு பசுமாடு என்று. பல நேரங்களில் இரண்டு மனிதர்கள் என் அருகே நின்று பேசிக் கொண்டிருப்பார்கள், அவர்களிடம் (இது என்ன இடம்?) என்று கேட்டிருக்கிறேன். அவர்கள் என் வினாவை கண்டு கொள்ளவே மாட்டார்கள். மாடானது இரண்டு தடவை கேட்டதற்காகவாவது அருகே வந்து பாசத்தோடு கையை நுகர்ந்தது. ஆனால், மனிதர்கள் பல தடவை கேட்டாலும் என்னை திரும்பி கூட பார்ப்பதில்லையே என்று நினைக்கும் போது, மனிதர்களைவிட மாடு மேலானதாக தோன்றுகிறது. இருந்தபோதிலும் பார்வையற்றோர் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இத்தகைய சிக்கல் பெருநகரங்களை காட்டிலும் சிறு நகரங்களில் அதிகமாகவே இருக்கிறது.

இனி இது போன்ற விடயங்களை மனிதனிடமோ மாட்டிடமோ கேட்க வேண்டிய அவசியமே இல்லை. கூகுள் மேப்பில் லென்ஸ் வசதியை தொட்டு, நம் கைபேசி கேமராவில் நமக்கு முன்னால் என்ன இருக்கிறது என காட்டினால் போதும், அது எந்த இடம் என்பதை துல்லியமாக சொல்லிவிடும். நான் எந்த இடத்தில் நிற்கிறேன் என்பதை நண்பர்களுக்கு இப்போது சரியாக அடையாளம் சொல்ல முடிகிறது.

பார்வையற்றோருக்கு உடைத்தேர்வில் பார்வை உள்ளவரின் உதவி பெரும்பாலும் தேவைப்படுகிறது. தோற்றத்திற்கு ஏற்ற பொருத்தமான உடையை தேர்வு செய்வதில் பார்வையின் பங்கு முக்கியமானது. அதனால்தான் கடைகளில் உடை வாங்க செல்லும் பொழுது, ஒரு பார்வை உள்ள நபரின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. இனி Google Shopping விர்ச்சுவல் முயற்சி-ஆன் (Virtual Try-on) அம்சம் மூலம்  ,  எனது ஒரு புகைப்படம் இருந்தால் போதும், அந்த உடையை நான் அணிந்தால் எவ்வாறு இருப்பேன் என காட்சியின் வழி பார்க்க முடியும். கூகுளின் இந்த வசதியால் இனி பார்வையற்றோரும் சுயமாக உடைகளை எடுக்க இயலும். 

தொலைபேசி கேமராவிற்கு முன்னால் சட்டையும் பேன்டையும் காட்டி இவை பொருந்துமா? என ஜெமினியிடம் கேட்டால், அது பொருந்துமா, பொருந்தாதா என்பதை சொல்லிவிடுகிறது. இப்பொழுது ஜெமினியின் பேச்சைக் கேட்டுதான் உடைகளை அணிந்து செல்கிறேன். இருப்பினும் ஐயமெழுந்தால், பீ மை ஐஸ் (Be My Eyes) என்ற செயலியின் மூலமாக, பார்வையுள்ள நபரின் உதவியைப் பெற்றுக்கொள்ள இயலும். உலகம் முழுவதிலும் பார்வையற்றோருக்கு உதவுவதற்காக பல பார்வையுள்ள தன்னார்வலர்கள் இச்செயலியில் இணைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு பார்வையற்றவர் காணொளி அழைப்பின்மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு வேண்டிய உதவியை கேட்டால், தன்னார்வலர் பார்வையற்றோருக்கு உதவுவார்.

பல மொழி பேசக்கூடிய தன்னார்வலர்கள் இதில் இருப்பதால், தமிழில் கூட உதவிகள் எளிமையாக கிடைக்கின்றன. . பார்வையற்றோருக்கு உதவ வேண்டுமென்று ஆர்வமிருந்தால் இச்செயலியை தரவிறக்கி அதில் நீங்கள் தன்னார்வலராகவும் இணையலாம். உங்கள் ஓய்வு நேரத்தில், உங்களுக்கு வரும் அழைப்புகளின் வழியே நீங்களும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம். 

எங்கள் குழந்தைக்கு பந்தை தூக்கி போட்டு விளையாடுவது மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் வெகு தொலைவிற்கு பந்தை எரிந்து விடுவான். நான் என் மனைவி இருவருமே பார்வை மாற்றுத் திறனாளி என்பதால், ஒரு பார்வை உள்ளவரை அழைத்துதான் அந்தப் பந்தை நிறைய நேரங்களில் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. இப்போதோ, ஜெமினி லைவ் வசதியை இயக்கிவிட்டு, பந்து சென்ற திசையில் கேமராவை காட்டி, (பந்து எங்கே கிடக்கிறது என்பதை சொல்) என கேட்டால், அது மிக துல்லியமாக சொல்கிறது. இப்போது, எவரது உதவியுமின்றி நாங்கள் எங்கள் குழந்தையோடு மகிழ்ச்சியாக பந்து விளையாடுகிறோம்.

திரைப்படம் என்பது காட்சி மொழி. அதனை முழுமையாக ரசிப்பதற்கு திரையில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். வசனங்கள் மற்றும் பின்னணி இசை மூலம் பல நேரங்களில் சரியானவற்றை பார்வையற்றோரால் யூகிக்க முடிந்தாலும், சில நேரங்களில் திரையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் போய்விடுகிறது. அத்தகைய சூழலில், அருகே இருக்கும் நபரிடம் என்ன நடக்கிறது என்பதை கேட்கவும் முடியாது. ஏனெனில், அவர் திரைப்படத்தில் ஒன்றியிருப்பார். இத்தகைய சிக்கலை ஆடியோ டிஸ்கிரிப்ஷன் எனப்படும் ஒளி விபரனை தீர்த்து வைக்கிறது. திரைக்காட்சியில் என்ன நிகழ்கிறதோ அதனை ஒலி வடிவில் சொல்லக்கூடிய வசதிதான் அது. இதற்காகவே பல செயலிகள் இருக்கின்றன. கிரேட்டா (greta)என்றொரு செயலி இருக்கிறது. ஒரு பார்வையற்றவர் திரையரங்கிலோ, தொலைக்காட்சியிலோ, கணினியிலோ ஒரு திரைப்படத்தை பார்க்கிறார் என்றால்,அது என்ன திரைப்படம் என்பதை செயலியில் தேர்வு செய்துவிட்டால் போதும், காட்சியில் வரும் சத்தத்தை வைத்தே எந்த காட்சி என்பதை அதுவே உணர்ந்து ஒளி விவரணையை ஒத்திசைத்து இயக்கத் தொடங்கிவிடும். தொலைபேசியில் ஹெட்ஃபோனை பொருத்தி அதனை கேட்டபடியே, அவர் திரைப்படத்தையும் ரசிக்க முடியும். பார்வை உள்ள ரசிகர்களுக்கு இடையூறு தராமல், பார்வையற்றவரும் முழுமையாக திரை அனுபவத்தை பெறுவதற்கு இச்செயலி வழிவகை செய்கிறது. 

இக்கட்டுறையில் சேர்க்கை நுண்ணறிவின் அரும்பெரும் செயல்கள் பற்றி பேசவில்லை. உடைத்தேர்வு, பொது போக்குவரத்து என சின்ன சின்ன விஷயங்கள் பற்றியே பேசியிருக்கிறேன். அத்தகைய சின்ன சின்ன செயல்கள்தான் எங்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.  ஒரு காலத்தில் என் கைக்கு வந்த கடிதத்தைப் படித்துக் காட்ட ஆள் இல்லாமல் பல நாள் வைத்திருக்கிறேன். இன்று நொடி பொழுதில் ஜெமினியிடம் கேட்டாலே வாசித்துக் காட்டிவிடும்.  அன்றாட வாழ்வில் நாங்கள் சந்திக்கும் ஆயிரக்கணக்கானசிக்கல்களை களைந்து, சேர்க்கை நுண்ணறிவு ஆஸ்வாசத்தை தந்திருக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் பயன்தருவதுதான் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்தருவதால், செயற்கை நுண்ணறிவும் ஒரு அற்புத கண்டுபிடிப்பே.
இறுதியாக, சேர்க்கை நுண்ணறிவு என்றாலே chat GPT  தொடங்கி அநேகம் இருக்க, இக்கட்டுரையில் கூகுள் புராணம் பாடி இருக்கிறாயே. கூகுளிடம் காசு எதுவும் வாங்கி விட்டாயா? என நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. நான் கூகுளிடம் காசு வாங்கவில்லை. இத்தனை வசதிகளையும் நான் பயன்படுத்திக்கொள்ள கூகுள் என்னிடம் எவ்வித காசும் வாங்காததால் அதைப்பற்றி பகிர்ந்திருக்கிறேன்.

Author

You may also like

3 comments

Baskar S July 24, 2025 - 4:04 pm

மிகவும் சிறந்த படைப்பு

Reply
samkarthik July 24, 2025 - 5:30 pm

really super sakthivel anna

Reply
என்.எஸ்.வாசன் July 24, 2025 - 11:23 pm

மிகச் சிறப்பாக இருந்தது….
சகோதரர் அவர்களே
மொழி ஆளுமையோடு
நீங்கள் கூறியிருந்த உங்களுடைய
எண்ண ஓட்டத்தில்
உங்கள் குழந்தையுடன் நீங்கள் பந்து
விளையாடுவதற்கு உதவும் AI தொழில் நுட்பம் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு தான்….. மகிழ்ச்சி வாழ்க…. வளர்க…..

Reply

Leave a Reply to samkarthik Cancel Reply