- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
3- வேள்வியின் நாயகன்.
அந்த முனிவர் வேக வேகமாய் நடக்க, ஆரம்பத்தில் தடுமாறினாலும் இரு இளைஞர்களும் அவரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தனர்.
” குருவே, தங்களின் ஆசிரமம் இன்னும் எவ்வளவு தூரம் ” என்றான் இராமன்.
முனிவர் சிரித்துக் கொண்டே இப்போது தான் வனத்துக்குள் நுழைகிறோம். இன்னும் ஆறு காதமாவது நடக்க வேண்டும். என்றார்.
இளையவன் இலக்குவனுக்கு முனிவர் சொல்லுவது காதில் விழுந்தாலும் அவன் எதிலும் கவனம் சிதறாமல் இராமனைப் பின் பற்றியே நடந்தான். இலக்குவனுக்கு இராமன் மீது அலாதிப் பிரியம்.
அவனுடைய அம்மா ஒருமுறை அவனிடம் சொல்லி இருந்தாள், பிறந்த வரிசைப் படி இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்ணன் என படுக்க வைத்திருந்தால் குழந்தைகள் எல்லாரும் ஓவென கூக்குரலிட்டு அழுதார்களாம். பின் குலகுரு வசிட்டர் சொல்லிய படி ராமன் பக்கத்தில் இலக்குவனையும் பரதன் பக்கத்தில் சத்ருக்ணனையும் மாற்றிய பிறகு தான் அவர்களின் அழுகை நின்றதாம்.
வளரும் பிராயத்தில் கூட ஒரு வழிப்போக்கனாக வந்த முனிவரும் இருவரையும் பார்த்து இலக்குவனை அழைத்துச் சொன்னார்.
‘ குழந்தாய், நீ உன் அண்ணனை விட்டு என்றும் பிரியக் கூடாது. அவனை நீ பிரிந்திருந்தால், அவனுக்குப் பேராபத்துச் சூழும். அதை உன்னால் மட்டுமே தடுக்க இயலும் “
” சொல்லுங்கள் தாத்தா யார் என் அண்ணனை ஆபத்தில் தள்ளுவார்கள் என்று இப்போதோ அவர்களை அழித்துவிடுகிறேன்” எனத் துள்ளியது இளங்கன்று.
அவர் கண்கள் வானத்தை நோக்கின. வார்த்தைகள் வறண்டன.
” குழந்தாய், விதி எதுவோ அதுவே நடக்கும். யாரால் தீங்கு என்றா கேட்கிறாய்? செல்லும் வழி எங்கும் இடர்கள் நிறைந்தவையே. அவ்வளவு ஏன் நெருங்கிய உறவுகளே அவனின் துயரங்களுக்கு அடிப்படைக் காரணமாகவும் மாறலாம்”
” தாத்தா, என் அண்ணனுக்கு நானும் நெருங்கியவன் தானே என்னாலும் தீங்கு வருமா” என்றான் சற்று கலக்கத்துடன் இலக்குவன்.
அதைக் கேட்ட அந்த முனிவரின் முகம் அத்தனை அன்புகொண்டு கனிந்துக் கிடந்தது.
” மகனே, நீ உன் அண்ணனின் நிழல், அவனை காக்கப் பிறந்தவன். உன்னால் மட்டுமே அவனுக்கான துன்பங்கள் நீங்கும். நீடூழி வாழ்க ” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
அன்று முதல் ஒரு நாழிகையேனும் இலக்குவன் இராமனை விட்டுப் பிரிந்ததே கிடையாது. இதோ இந்த கௌசிக முனிவர் வந்து வம்படியாய் இராமன் தான் தன் யாகத்தைக் காக்க வேண்டும் என அழைத்த போது இராமனுடன் யாரும் சொல்லாமலேயே உடன் வந்துவிட்டான் இலக்குவன்.
அவர்கள் வனத்தில் நடந்து கொண்டே வரும் போது இலக்குவன் காடுகளை கூர்ந்து கவனித்தான். சிம்மத்தின் கர்ஜனை, யானைகளின் பிளிறல், ஓநாய்களின் ஓசை, மரநாய்கள் என பலவித ஓசைகளை பிரித்தறிய முடிந்தது அவனுக்கு. தெரியாதவற்றை குருவிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டான்.
” இராமா, இலக்குவா அதோ தெரிகிறதல்லவா அது தான் நம் ஆசிரமம். இந்த இடத்தின் தற்போதைய பெயர் தாடகை வனம். எங்களின் இடங்களை அவளும் அவளின் கூட்டமும் சூழ்ந்து பறித்துக் கொண்டனர். உலக நன்மைக்காக நாங்கள் செய்யும் வேள்விகளையும் இடையூறு செய்து அழிக்கின்றனர்
” குருவே, தாங்களே அவர்களை அழித்திருக்கலாமே” வினவினான் இலக்குவன்.
புன்னகைத்தார் குரு.
” ஒரு சொல்லால் சுட்டெரிக்க முடியும். ஆனால் அது தவத்திற்கு இடையூறாகும். இதுநாள் வரை வென்று அடக்கிய புலனடக்கம் பயனற்றுப் போகும். தவசியர் சொற்களும், செயல்களும் வீணாகக் கூடாது மகனே “. என்றார் கௌசிகர். பேசிக்கொண்டே அவர்கள் ஆசிரமக் குடிலை அடைந்தார்கள்.
” சரி அது கிடக்கட்டும் இன்னும் இரண்டு நாளில் வேள்வி ஆரம்பம். அதற்கு முன் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது சில உண்டு” எனக் கூறி அவர்களுக்கு காயங்களுக்கு மருந்திடுவது, அதற்கான இலைகள், வேர்கள் முதல் என்ன என்ன தேவை என்று காட்டில் வாழத் தேவையானவற்றை விவரித்தார். பின் விற்பிரயோக நுணுக்கங்களை விவரித்தார்.
இராமனும் இலக்குவனும் பிரம்மித்தார்கள். வசிட்டர் சொல்லிக் கொடுத்ததை விட இது நுணுக்கமாகவும் மிக ஆழ்ந்த அறிதலாக இருந்தது இருவருக்கும்.
கௌசிகர் மூங்கில் வில்களை அகற்றிவிட்டு, மூங்கிலும் உலோகமும் சேர்ந்த புது மாதிரியான வில்லை இருவருக்கும் கொடுத்தார். அவை சற்றே எடை கூடுதலாக இருந்தது
” குருவே, இதை எடுத்துக் கொண்டு ஓட முடியாதே. எடை கூடுதலாக உள்ளதே” என்றான் இராமன்.
” இராமா, வில்லாளி விலங்குகளை வேட்டை ஆடும்போது ஓடிக்கொண்டே அம்பெய்ய மூங்கில் விற்கள் உதவும். ஆனால் எதிரியை தூர நிறுத்தி அவனை தாக்க அவை பயன்படாது. இதோ இந்த வில்லின் நாணைச் சுண்டிப் பார். இதன் ஓசை கணீரென ஒரு காதமாவது கேட்கும். இது போருக்கான இடைபட்ட வில். இவற்றை தயாரிக்கவே தனிப்பயிற்சி தேவைப்படும். மேலும் இதை விட பெரிய விற்களும் உண்டு”.
” என்ன இதை விடப் பெரிய வில்லா?? இதுவே என் உயரத்துக்கு இருக்கிறதே”
கௌசிகமுனி சிரித்தார்.
” இது போரில் அம்பெய்த உதவும் வில். பெரிய அஸ்த்திரங்கள் எய்த இது பயன்படாது இராமா. அஸ்திரங்களை வெகுதூரத்துக்கு எய்யவேண்டும். அதன் பாதிப்பு நம்மக் தாக்கும் தூரத்தில் இருந்து நாம் அதன் எல்லைக்கு வெளியே நின்று எய்வதற்கு தனிப்பட்ட பெரிய விற்கள் உதவும்”
“அதற்காக இந்த விற்களை குறைத்து மதிப்பிடாதே. இதன் மூலம் எய்யப்படும் அம்பு பெரிய ஆச்சா மரத்தையே துளைத்து வெளியேறும் வல்லமை கொண்டது. சிறந்த வில்லாளி கையில் இந்த வில் கிடைத்தால் அவன் மிக பலசாலியாவான்.”
” மேலும் இராமா பெரிய விற்கள் அஸ்த்திரம் எய்ய பயன் படும் என்றேன் இல்லையா, அதன் உயரம் உன்னில் இரு மடங்குக்கு வரும். கையால் தூக்கிக் கொண்டு ஓடுவதென்ன, நடக்கவே முடியாது. அதற்கான நாண், மெல்லியதான உலோக இழைகளை பல கொண்டு முறுக்கி எடுத்து அமைத்திருப்பார்கள். அதை கையால் எடுத்து நிறுத்த வெகு சிரமப் பட வேண்டும். ஆனால் காலால் அதன் கழுந்தை மிதிக்க, சட்டென்று மேலெழும். அது வரும் வேகத்தை கணித்து, கையில் அதை ஏந்தி நிலை நிறுத்த வேண்டும். அதே வேகத்தில் நாண் பூட்டுதலும் நடக்க வேண்டும். வேகம் தவறக்கூடாது. அதற்கு மனமும் உடலும் நீ சொல்வதைக் கேட்க வேண்டும்”
“அப்படியான இரண்டு விற்கள் தற்போது உண்டு. சரி சரி, சமயம் வரும் போது நீயே அறிவாய்”
“உங்களுக்கு சில மந்திரங்களும் வித்தைகளும் சொல்லித் தரப் போகிறேன். முக்கியமாக இயற்கை ஒலியினை மனதில் வாங்கி அகக்கண்களால் புற நிகழ்வுகளைக் காணும் பயிற்சி. காட்டில் இருக்கும் ஒவ்வொரு பொழுதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்கு இந்தப் பயிற்சி உங்களுக்கு உதவும் ” என்றார் கௌசிகர்.
இலக்குவன் உன்னிப்பாக கவனித்தான். விற்களின் வகைகள், ஒவ்வொன்றையும் உபயோகிக்கும் முறை என விரிவாக கௌசிகர் சொன்னதை அட்சரம் பிசகாமல் மனதில் ஏற்றிக் கொண்டான். கடைசியாக சொன்ன அந்த மனப் பயிற்சியை அன்றிலிருந்தே பழகவும் ஆரம்பித்தான்.
வேள்வி ஆரம்பிக்கும் நாளுக்கு முன்பே அவர்கள் வில் பயிற்சிக்கு வேலை வந்தது.
அரக்கர் குலத்தினர் சிலர் வேள்வி ஏற்பாட்டினை குலைக்க வந்தனர். கௌசிகர் கொடுத்த வில்லும் அம்புகளும் அவர்களைத் துரத்தியடிக்க உதவியது. ஓடியவர்கள் சொல்லி இருக்க வேண்டும், அவள் வந்தாள். அவள் அந்தக் கூட்டத்தின் தலைவி, பெயர் தாடகை.
தூரத்தில் அவள் நடந்து வரும்போதே நிலத்தின் அதிர்வுகளை இலக்குவன் உணர்ந்தான். அவள் நெருங்ஜ நெருங்க, அங்கிருந்த முனிவர்கள் அச்சத்தில் ஓடினார்கள். அப்பா, எவ்வளவு பெரிய உடலமைப்பு அவளுடையது.
கருமை நிறத்திற்கு மேலு ம் கருமை சேர்க்க அவள் கரியை விலங்கின் கொழுப்பில் கரைத்து உடலில் பூசி இருந்தாள். அவள் கண்கள் கோபத்தில் சிவந்து கிடந்தன. நீரையே கண்டிராதது போல் அவளுடைய கூந்தல் ஆலமர விழுதுகள் போல் சடைக்கட்டி தொங்கிக் கொண்டிருந்தன. யானைத் தந்தங்கள், புலியின் நகங்கள், எருமைக் கொம்புகள் என பலவற்றை தன் உடலில் சுற்றிக் கட்டிக் கொண்டிருந்தாள். தேவைக்கேற்ற படி எதிரிகளைச் சாய்க்கும் ஆயுதங்கள் அவை. நிலம் அதிர அவர்கள் முன் அவள் வந்து நின்றாள்.
அந்தச் சிறுவர்களைப் பார்த்து அவள் நகைத்தாள். இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று அறைந்து இன்னும் பலமாக சிரித்தாள்.
இலக்குவன் அண்ணாந்து பார்த்தான். அவள் உயரமும், பருமனும் கண்டு வியந்தான். இராமன் பெண் என அம்பு விடாமல் நின்றான். இலக்குவனுக்கு கை துடித்தது. தனுர்வித்தயை ஏட்டுக்கல்வியாக, பயிற்சி கூடங்களில் விளையாட்டாக செய்ததை இங்கே நேரடியாக சோதித்துவிடலாம் என நினைத்த போது கௌசிகர் இராமனிடம் சொன்னார்.
” இராமா இவள் பெண்ணென்று பாராதே, இவளால் அழிந்தோர் பலர்.. விடு கணையை”
அடுத்த நொடி இராமனின் கையில் இருந்த வில்லின் நாண் அதிர்ந்து ஒலித்தது. இராமன் அந்த வில்லில் கூர்மையான அம்பை பொருத்தினான். அம்பின் முனை உலோகத்தால் பொருத்தப்பட்டிருந்தது. அந்த மாலை ஒளியில் உலோக முனையின் ஓரங்கள் பளிச்சிட்டதைக் கண்டதும் அதன் கூர்மை அவன் மனதில் புலப்பட்டது. அம்பில் அடிப்பகுதியில் கழுகின் இறகுகள் கட்டப்பட்டிருந்தது.
தாடகை இராமனை நோக்கி குனிந்தாள். இலக்குவன் பதறினான். அவசரமாக தன் வில்லில் அம்பை பொருத்தினான். ஆனால் அதற்குள் இராமன் அம்பு பொருத்திய நாணை தன் காதுவரைக்கும் இழுத்து விட்டான். அது அவள் மார்பைத் துளைத்தது. அவள் வேரற்ற மரமாய் இராமனை நோக்கி வீழ்ந்தாள். இலக்குவன் சரேலென இடையில் பாய்ந்து இராமனுடன் பக்கவாட்டில் உருண்டான். அந்த அம்பு பின்னிருந்த கடல் போன்ற ஏரியில் விழுந்து குத்திட்டு நின்றது. தாடகை மாண்டாள்.
அன்றிரவு இராமனின் வில்லாற்றல் குறித்து எல்லோரும் ஆச்சரியமாக பேசினார்கள். இராமனைக் கொண்டாடினார்கள்.
இலக்குவன் இராமனைக் கோபித்துக் கொண்டான்.
” அண்ணா, அவள் கொஞ்சம் விட்டிருந்தால்.உன்னை இரு கையால் பற்றி நசுக்கி இருப்பாள். ஏன் அவ்வளவு தாமதம்”
இராமன் இலக்குவனிடம் சொன்னான்
” தம்பி, கொஞ்சல் சலனமாகத்தான் இருந்தது. என்ன இருந்தாலும் பெண் இல்லையா”
“அண்ணா, ஒரு நொடி தாமதித்திருந்தால் என் கணை அவளை வீழ்த்தி இருக்கும்.”
இலக்குவன் உறுதியாகச் சொன்னான்
” என் மேல் அவ்வளவு அன்பா தம்பி”
“ஏன் உனக்குத் தெரியாதா அண்ணா, நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? உன்னை எதிர்த்து யார் வந்தாலும் என்னைத் தாண்டித்தான் அவர்கள் உன்னிடம் வரமுடியும்”
இராமனின் கண்கள் பனித்தன. இலக்குவனை இழுத்து அணைத்துக் கொண்டான்.
இலக்குவன் அணைத்தபடி இராமனின் காதில் சொன்னான்.
” அது யாராக இருந்தாலும் அண்ணா, அப்பா, பரதண்ணா, தம்பி சத்துருக்கணன் என யாரும் அதில் விலக்கல்ல. ” என்றான்.
இராமனின் கண்கள் திகைப்பாலும் மகிழ்வாலும் நிறைந்திருந்தன.
1 comment