காமவள்ளி தன் எச்சரிக்கையை மீறி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்த இளைஞன் சட்டென்று தன் இடையில் இருந்த அந்தக் குறுவாளை எடுத்து அவளை நோக்கி வெகு வேகமாக வீசினான்.
அந்நேரத்தில் ஒரு பெரிய ஆண் சிங்கம் காமவள்ளியின் பக்கவாட்டில் இருந்து ஆக்ரோஷமாக அவள் மீது பாய, அவனுடைய குறுவாள் அந்த சிங்கத்தின் கழுத்தருகே சற்று ஆழமாக பதிந்து தடுமாறி அவள் மீது விழுந்தது. அங்கே பசுக்களைப் போன்று பெரிய உடலைக் கொண்ட கடமான்கள் பயந்து துள்ளி ஓடின.
அவள் அந்த சிங்கத்தின் எடையினை தாங்காது தரையில் தடாலென சரிந்து விழுந்தாள். அவன் விரைந்து அவளை நோக்கி ஓடிவந்தான். அவள் மீது விழுந்த அந்தச் சிங்கம் சுதாரித்து எழுந்து அவளைத் தாக்க முயலும் போது அவன் வேகமாக உறுமினான். அந்த உறுமல் சிங்கத்தின் உறுமலை ஒத்திருந்தது. சிங்கம் அவனை நோக்கித் திரும்பியது. அவன் உறுமலுடன் கூடிய பலவிதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டு அந்த சிங்கத்தின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். சிங்கம் அவனை நோக்கிப் பாய்ந்தது.
அவள் அஞ்சினாள், விழுந்ததால் உண்டான அதிர்ச்சியும், சிங்கத்தின் நகக் கீறல்கள் வலது தோளிலும், விழுந்த போது சிங்கத்தின் எடையுடனும் தன்னுடல் கூரிய கற்களில் பலமாக ஊன்றியதால் ஏற்பட்ட வலியினாலும் அவள் எழமுடியாது அப்படியே இருந்தாள்.
சிங்கம் அவன் அருகில் சென்றதும் பழகிய கன்றினைப் போல காலடியில் அமர்ந்தது. அவன் அந்த சிங்கத்தின் பிடரியை தடவி விட்டுக்கொண்டே அந்தக் கத்தியை மெல்ல பிடுங்கினான். குபுகுபுவென பொங்கிய குருதியை தன் இடைக் கச்சையில் இருந்த துணியைக் கொண்டு அழுத்தினான். அந்த காயத்தின் ஆழத்தை சோதித்தான், மூன்றங்குலத்துக்கும் அதிகமாக உள்ளே கத்தி பாய்ந்திருந்தது.
அவன் குனிந்து அதன் காதில் ஏதோ சில ஓதினான். சட்டென்று விலகிச் சென்று அருகிருந்த சிலபல இலைகளை பறித்து கசக்கி அந்த காயத்தில் வைத்து அழுத்த, இரத்தம் வடிவது மெல்ல மெல்ல நின்றது. சிங்கம் வலியால் கர்ஜித்தது.
அத்தனையும் அவள் அச்சத்துடனும் ஆச்சரியத்துடனும் உற்று நோக்கினாள்.. அந்த சிங்கம் சற்று நேரத்தில் எழுந்து நின்றது, அவனை வணங்குவது போல தன் இரு கால்களை முன் நீட்டி தலை சாய்த்தது. பிரிந்து காட்டினுள் ஓடத் தொடங்கியது. அப்போது தான் அவள் அதை கவனித்தாள். கிட்டத்தட்ட ஆறு பெண் சிங்கங்கள் திரும்பி அந்த அடிபட்ட ஆண் சிங்கத்துடன் சென்றதை. தன்னுடைய வழக்கமான முன்னெச்சரிக்கை மறந்து போனதால் உண்டான அந்த விபரீதத்தை அவள் முழுமையாக உணர்ந்தாள், உடல் சிலிர்த்தாள்.
” என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி இளைஞரே, அந்த சிங்கக் கூட்டம் என்னைக் கொன்றிருக்கும், சமயத்தில் நீங்க வந்திராவிட்டால் என் கதி என்ன?” என்று சற்றே நடுங்கும் குரலில் அவள் சொன்னாள்.
அவன் சற்றே சினத்துடன் அவளை நோக்கினான்.
” நான் நிற்கச் சொன்னேன் இலங்கையின் மகளே, நீங்கள் நின்றிருந்தால் இத்தனைப் பிரச்சினை வந்திருக்காது. வலியத் தேடிய வினை இது. பாவம் அந்தச் சிங்கம். வீணாக அடிபட்டது ” என்றான்
வலியையும் மீறி அவளுக்குள் மெல்ல கோபம் துளிர்த்தது.
” ஓஹோ, சிங்கத்தின் மொழி உங்களுக்குத் தெரியுமோ? நகராமல் நான் நின்றிருந்தாலும் அந்த சிங்கம் என்னைத் தாக்கியிருக்கும்”
” இல்லை இளவரசி, அதன் இலக்கு தாங்கள் அல்ல. உங்களின் இடதுபுறத்தில் ஆற்றில் நீரருந்திக் கொண்டிருந்த இருந்த கடமான்கள். அது தன் இரை தேடி பாயும் அந்த நெரத்தில் குறுக்கே வந்தது உங்கள் தவறு. அது வருவதை கவனித்தே நிற்கச் சொன்னேன். நீங்கள் சற்று தாமதித்திருந்தால், அது சரியாக அந்த கடமான்கள் கூட்டத்தை தாக்கியிருக்கும்” என்றவன் நிதானித்து
. “ ஆம், எனக்கு பறவைகள், மிருகங்களின் மன மொழியை அறியும் ஆற்றல் உண்டு. பிரம்மனின் அருள் “ என்றான்.
அவள் மௌனித்தாள்.
அவன் அருகில் வந்து காயங்களை ஆராய்ந்தான். முன் தோளில் நகம் சற்று ஆழப் பதிந்து அவளின் மார்பு கச்சையையும் சற்று அதிகமாக கிழித்து விட்டிருந்தது. அவளின் குருதி அந்த காயத்தில் இருந்து வழிந்தாலும், கச்சை கிழிந்ததால் கச்சை விலகிய இளமைப் பாகங்களில் இருந்து சங்கடத்துடன் அவன் கண்கள் விலகுவதை அவள் கவனித்தாள்.
” இளவரசி, உங்களுடைய காயத்துக்கு மருந்திட வேண்டும். சிங்கத்தின் நகம் உங்கள் மார்பில் சற்று ஆழ்ந்திருக்கிறது. “
” ம்ம்ம்”
” ம்ம் என்றால்? நான் கசக்கித் தரும் பச்சிலையை காயத்தில் வைத்து அழுத்தி கட்டிக் கொள்ளுங்கள். இரத்தம் நின்றுவிடும். இது சக்தி வாய்ந்த பச்சிலை, வெகுவாக இது இந்த கோதாவரி நதிக்கரையில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்று. வேறு சில இடங்களில் இந்த இலை கிடைத்தாலும் இத்தனை சக்தியோடு அவை செயலாற்றுவதில்லை ‘
” இளைஞரே, விழுந்த வேகத்தில் என் இடது கரத்தின் எலும்பு முறிந்துள்ளதோ எனத் தோன்றுகிறது. வலியும் உயிரைப் பிடுங்கித் தின்கிறது. இந்த நேரத்தில் கூச்சம் பார்க்க வேண்டாம். இங்கே நம்மிருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. வேறு வழியில்லை. நீங்களே…”
என்று வாக்கியத்தை முடிக்க சங்கடப்பட்டுக் கொண்டு நிறுத்தினாள் காமவள்ளி.
“உங்கள் கரத்தை இப்படிக் காட்டுங்கள்” என்று அவன் அவளின் இடக்கரத்தை பரிசோதித்தான். கூரிய கற்கள் ஆழப்பதிந்து காயங்களை உண்டாக்கி இருந்தன.
” சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள் , முதலில் காயங்களைக் கழுவ வேண்டும் அதை மறந்துவிட்டேன் பாருங்கள். மேலும் கையில் முறிவு ஏதுமில்லை என்றாலும் கற்கள் ஆழப் பதிந்து உன் இடதுப் புறத்தில் பல இடங்களில் ஊன்றி இருக்கிறது. இந்த இலையை மென்று சாற்றினை மட்டும் விழுங்குங்கள். வலி குறையும். இதோ வந்துவிடுகிறேன்”
என்ற படி ஆற்றை நோக்கி. ஓடினான். அவள் இலையை மென்று அதன் கசப்பை உணர்ந்தபடி சாற்றை விழுங்க, அவன் தன் மேலங்கியை நீரில் நனைத்தெடுத்து வந்து அவளின் காயங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
” ஆம் நீங்கள் யார்” என்றாள்.
” நான் யாரென்பதா முக்கியம். முதலில் இந்த காயங்களுக்கு மருந்திட வேண்டும். சற்று ஒத்துழைத்தால்.. என் பணியை முடித்துவிடுவேன்” என்றான்.
அவள் ஒத்துழைத்தாள். அவன் சங்கடத்துடன் அவள் உடலின் காயங்களுக்கு மருந்திட்டான். உடைகளை நெகிழச் செய்தான். மேல் கச்சை மாற்றியே ஆக வேண்டிய கட்டாயம். அதை எடுத்து மருந்திட்டு அவனுடைய மேலங்கியை கச்சையாக்கிக் கட்டினான்.
அதை அவன் செய்தபோது அவன் பட்ட அவஸ்தைகள், அவன் கண்களில் கிடந்த ஆவலுடன் கூடிய தர்மசங்கடத்தை காமவள்ளி கவனித்தாள், உள்ளுக்குள் ரசித்தாள். எந்த ஒரு வீரனும் பெண்ணின் அழகின் முன் கோழையாகிப் போவான் என்பதை உணர்ந்தது போல மெதுவாக புன்னகைத்தாள்.
என்ன சிரிப்பு ? என்றான் சற்று கோபத்துடன். அவன் கேள்வியின் அபத்தம் புரிந்து அமைதியானான். அவளின் புன்னகை சற்று விரிந்தது.
அதே நேரம் அவளுக்கு அவன் கொடுத்தப் பச்சிலைச் சாறு வலியை ஏறக்குறைய மறக்கடித்திருந்தது. வலியின் பிரக்ஞை வெகுவாக குறைந்திருந்தது.
ஒரு ஆடவன் முதன் முதலாகத் தன்னைத் தொடும் உணர்வு முதலில் அவளை சங்கடத்திற்கு உள்ளக்கி இருந்தாளும் அந்த நேரத்தில் அது அவளுக்கு சொல்ல இயலாத இன்பம் அளித்ததது. அவனும் அப்படியே உணர்ந்தா. காம தேவன் தன் கைகளின் மலரம்புகளுடன் மேலிருந்து அவர்களைப் பார்த்து சிரித்தான். அவர்களும் ஒருவரை ஒருவர் நோக்கி காரணமின்றி பலமுறை சிரித்துக் கொண்டார்கள்.
அவர்கள் இருவரும் மருந்திடல் தாண்டி மயங்கிய நிலையில் ஒருவரோடு ஒருவர் இணைந்து பின்னி இருந்தனர்.
எவ்வளவு நேரம் என அறியாமல் கிடந்தனர். மேலே வானத்தில் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல தலைகாட்டின
அவளின் தலையை அவன் மெல்ல வருடிக் கொடுத்துக் கொண்டே சொன்னான்.
” நீ அந்த விண்மீன் போன்றவள் காமவள்ளி. நான் உன்னை தூரத்தில் இருந்து இரசித்துக் கொண்டிருந்தவன். ஆனால் விதி உன்னை என்னுடன் சேர்த்துவிட்டது “
அவன் பேச்சில் மரியாதை எப்போதோ விலகியிருந்தது.
” அப்படியானால்..” அவள் சந்தேகத்துடன் அவனைக் கேட்டாள்.
” நீ இங்கு வரும் நாட்களை கணித்து முன்னமே வந்து விடுவேன். அது அந்த நட்சத்திரங்களை தூரத்தில் இருந்து இரசிப்பதைப் போல மரங்களின் பின் நின்று உன்னை இரசித்துக் கொண்டிருந்தேன். இது வெகுநாட்களாக…” என்றான்.
” நான் இங்கே நீராடல் வழக்கம்” என்று நிறுத்தினாள் காமவள்ளி.
” காமவள்ளி, நான் அழகை இரசிப்பவன் தான், உன்னை இரசித்துப் பார்க்கும் ஒருவன் தான். ஆனா அயோக்கியன் அல்ல” என்றான் சற்று சினம் துளிர்க்க.
” ஓஹோ, இன்று மட்டும் எப்படியோ?” என்றாள் விஷமம் கண்களில் துளிர்க்க மென்முறுவலுடன்.
” இன்றும் மனம் ஒருமித்து சகல நிகழ்வுகளையும் இருக்கும் இடத்தில் இருந்து இயற்கையின் ஒலி அலைகளைக் கொண்டு மனத்தால் காணும் பயிற்சியில் இருந்தேன். இடையில் நிறுத்த இயலாமல் மாட்டிக் கொண்டேன். இப்போது கூட மருந்திடும் காரணம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்….” என்றான் பெருமூச்சு விட்டுக் கொண்டே.
அவள் சட்டென்று எழுந்து தன் ஆடைகளை சரி செய்து கொண்டாள்.
” ஓகோ.. இது தான் நீங்கள் மருந்திடுவதா? என் காயம் இனி சரியாகிவிடும் அல்லவா” என்றாள் கண்களில் நிறைந்த குறும்புடன்.
அவன் எழுந்து அமர்ந்து தலை கவிழ்ந்திருந்தான்.
” என்ன இளைஞரே .. இப்போது ஏன் தலை கவிழ்ந்திருக்கிறீர்கள், மருந்திடும் முன்பே அல்லவா யோசித்திருக்க வேண்டும்” என்றாள் இன்னும் சீண்டலாக.
அவன் தலை நிமிர்ந்தான், எழுந்து அவளின் முகத்தை இரு கைகளால் ஏந்தியபடி சொன்னான்.
“காமவள்ளி, இந்த நிமிடம் முதல் நீ என் மனைவி, இந்த கோதாவரி சாட்சி, சுற்றி நிற்கும் மரங்கள் சாட்சி, வானத்தின் சூரியனும், சந்திரனும், காற்றும் என யாவையும் சாட்சி. நீ என் உயிர், நீ என் ஒளி, நீ நான் உச்சரிக்கும் மந்திரம்” என்றான் வெகுவாய் உணர்ச்சி மேலிட்டவனாய்.
அவள் நெகிழ்ந்தாள். அவனை தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டு காதில் கிசுகிசுத்தாள்.
” ம்ம்ம் இது தான் உண்மையான வீரத்துக்கு அழகு. நான் ஏற்கிறேன். நான் இனி உங்களின் மனைவி” என்றாள்.
” நீங்கள் யார் எனக் கேட்டேன், என் பெயர், ஊர் எல்லாம் எப்படித் தெரிந்தது, என்னை இளவரசி என்றீர்களே என்னைப் பற்றி எல்லாம் தெரியுமோ ? தெரியுமென்றால்.எப்படி” என கேள்விகளை அடுக்கினாள்.
” காமவள்ளி, உன்னை அறிவது அத்தனைக் கடினமான செயல் அல்ல. இந்த தண்டகவனம் முனிவர்களும், அரக்கர்களும் வாழும் இடம். இங்கே பெண்ணொருத்தி தனித்துச் செல்வதென்றால் அவள் அதீத வீரமிக்கவளாகத்தான் இருக்க வேண்டும். மருத்து இலைகள் சேகரிக்க வரும்போது உன்னைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
உன்னை அரக்கர்கள் வணங்கிச் செல்வதும், முனிவர்கள் வெறுத்துச் செல்வதும் கண்டு வியந்தேன். அரக்கர்கள் ஒரு பெண்ணை வணங்கிச் செல்வதென்றால் யாராக அவள் இருக்க முடியும்?
மேலும் நான் மந்திரங்கள் அறிந்தவன். வானவர்களுக்கு இணையாக கல்வி கற்றவன், அரக்கர்களுக்கு இணையான வலிமை பெற்றவன், என் நாவின் சொல்வேகம் மின்னலை ஒத்தது.”
அவன் பேசப் பேச அவள் கண்களில் கலவரம் குடியேறியது. அவசர அவசரமாக கேட்டாள்
” அப்படியானால்… அப்படியானால்…” விக்கித்தாள்
“ஆம் காமவள்ளி, நான் காலகேயன், தானவ குலத்தைச் சேர்ந்தவன்”
” கடவுளே… பிரம்ம தேவா இதென்ன சோதனை”
” இப்போது புரிந்ததா இந்த வித்யுத்ஜிவா யாரென்று. ” எனக் கூறியபடி அவளை இழுத்து அணைத்தான்.
அவள் கண்களின் ஆறெனப் பெருகிய கண்ணீர் அவன் தோளை நனைக்க அவள்
” நன்றாகத் தெரிந்து. நீதங்கள் எங்களின் குலப் பகைவர்”
என்றாள் விசும்பிக் கொண்டே.
( தொடரும்)