தந்தையே, ஜடாயு ஐயாவே, தாங்கள் எம் தந்தையைப் போன்றவர், தற்போது நாங்கள் அயோத்தியின் அரசனை, எங்கள் தந்தையை இழந்து நிற்கிறோம். அயோத்தியில் நடந்ததை உங்களுக்குச் சொல்கிறேன் கேளுங்கள் என்றான் இலக்குவன் ஜடாயுவிடம்.
சீதையுடன் இராம இலக்குவர்கள் காட்டிற்குள் வந்து பல மாதங்கள் கடந்துவிட்டிருந்தன. கங்கைக் கரையில் குகன், சித்திரக்கூடத்தில் பரத்வாஜ முனிவர் என்று சந்தித்துப் பின் தண்டகாரண்யம் வந்து சேர்ந்திருந்தனர். அங்கே அத்திரி முனிவரையும் அவரின் மனைவி அனுசுயாவையும் சந்தித்து பலநாள் அங்கு கழித்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
பின்பு அகத்தியரைச் சந்தித்து அவரிடம் ஆசிபெற்றனர். அகத்தியர் பின்வருவன உணர்ந்து விஸ்வகர்மா செய்த மாபெரும் தெய்வீக வில்லொன்றை இராமனுக்கு அளித்தார். அவரின் வழிகாட்டுதலின் படியே இவர்கள் இப்போது இருக்கும் பஞ்சவடிக்கு வந்தனர். அங்கே ஜடாயுவைக் கண்டனர்.
ஜடாயு, தசரதனின் நெடுநாளைய நண்பன், பறவைகளின் அரசன், அவர்களை எதிர்கொண்டான்.
இலக்குவன் அவரிடம் இதுவரை நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.
“கேளுங்கள் ஐயா கேளுங்கள், அயோத்தி ஒரு காலத்தில் தீரா மகிழ்ச்சியின் உறைவிடமாக இருந்தது என்று பலரும் கர்வனாக உணர்ந்திருந்த காலமும் உண்டு. ஆனால் இன்று அது தலைகீழாக மாறிப்போனது எங்களின் விதிவசம். அதற்கான நிகழ்வு சிலகாலங்களுக்கு முன் நடந்திருந்தது. இன்று அயோத்தி ஒரு கோரப் புயலின் பிடியில் சிக்கிய பெருங்காடாயிருக்கிறது.
அன்று என் இதயம் கோபத்தின் உச்சியில் எரிந்து கொண்டிருந்தது. அதுநாள் வரை, என் மனம் இராமனின் பட்டாபிஷேகத்தின் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. நாளை அண்ணன், அயோத்தியின் அரசனாக முடிசூடுவான் என்று கனவு கண்டிருந்தேன். ஆனால் சிற்றன்னை கைகேயியின் கொடிய வரங்கள் அந்த கனவை சுக்கு நூறாக உடைத்தன.
இராமனை காட்டுக்கு அனுப்பி, பரதனுக்கு அரசு கேட்டு, அயோத்தியின் மகிழ்ச்சியை அவள் குலைத்துவிட்டாள்.
என் கோபம், ஒரு அணையாத தீயாக பற்றி எரிந்தது. என் மனதில் சிறுவயதில் மனதில் சொன்ன முனிவரின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
“மகனே, நீ உன் அண்ணனின் நிழல், அவனை காக்கப் பிறந்தவன். உன்னால் மட்டுமே அவனுக்கான துன்பங்கள் நீங்கும். நீடூழி வாழ்க!” என்ற அந்த வார்த்தைகள், என்னை இராமனுடன் இணைத்த பெரும் பிணைப்புக்கு காரணத்தில் ஒன்றாக இருந்தது. அந்தக் குரல், என்னை ஒரு நொடி கூட இராமனை விட்டு பிரிய விடவில்லை.”
இலக்குவன் மீண்டும் தொடர்ந்தான்.
“அரண்மனையின் மண்டபத்தில், இராமன் மெல்ல நடந்து வந்தான். அவன் முகம், புயலுக்கு மத்தியில் ஒரு அமைதியான கடல் போல நிச்சலனமாக இருந்தது.
என் அன்னை சுமத்திரை, என்னை அருகில் வைத்து, இராமனை நோக்கி விரைந்தாள். “இராமா…” என்று அவள் குரல் தழுதழுத்தது, கண்ணீர் அவள் கண்களில் தேங்கியது. ஆனால், இராமன் புன்னகையுடன் அவளை நெருங்கினான்.
“அன்னையே, சென்று வர அனுமதி தாருங்கள்,” என்று அவன் மென்மையாகக் கூறினான். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. இராமன், தந்தையின் சொல்லை மீறாமல், காட்டுக்கு செல்லத் தயாராகிவிட்டான்.
என் கோபம், ஒரு எரிமலையைப் போல வெடித்தது. “அம்மா, விலகுங்கள்! அண்ணனை அவமதித்தது மட்டுமல்லாமல், அவரை காட்டுக்கு அனுப்புவது எந்த வகை நியாயம்? இந்த வில்லால், எதிர்க்க வரும் யாரையும் அழித்து, அண்ணனை அரசனாக முடிசூட்டுவேன்!” என்று வீடதிரக் கத்தினேன். என் உடல் கோபத்தில் நடுங்கியது, கண்கள் தீயென சிவந்தன. என் கையில் இருந்த வில், என் சீற்றத்தின் முழு உருவமாக மாறியது.
என் அன்னை, இந்தக் கோபத்தைக் கண்டு அச்சமடைந்தாள். இராமன், இதையெல்லாம் அமைதியாகக் கவனித்தான். அவன் முகம் சற்றும் சலனமடையவில்லை.
“யாரையும் அழிப்பாயா, தம்பி?” என்று மென்மையாகக் கேட்டான். நான் என் சினத்தை அடக்க முடியாமல், “ஆம், அண்ணா! யாராக இருந்தாலும்—பரதண்ணாவோ, தந்தையோ, அல்லது அந்தக் கைகேயியோ!” என்று கத்தினேன். என் நிலை இழந்திருந்தேன்
இராமன், என்னை மெல்ல அணைத்தான். அவனது கைகள், என் கோபத்தை அமைதிப்படுத்தும் மந்திரமாக இருந்தன.
“இந்தக் கோபம் கொடிது, தம்பி. சினம் என்பது நம்மைக் கொள்ளும் நோய், அதை விட்டுவிடு,” என்று அவன் மென்மையாகக் கூறினான். நானோ இன்னும் சினம் தணியாமல், “அண்ணா, நீ மட்டுமே எனக்கு தாயும் தகப்பனுமாவாய். உன்னை அவமதித்தவர்களை அப்படியே விட்டு விடுவேனா?” என்று இரைந்தேன். ஆனால், இராமனின் கடைசி வார்த்தைகள் என்னை உலுக்கின.
“என் பேச்சை மீறி நீ போர் செய்தால், அதுதான் எனக்கு நீ தரும் மரியாதையா, தம்பி?” என்று இராமன் கேட்டான். அந்த நொடியில், என் சினம் கொண்ட என் மனம் உடைந்தது. என் தவறை உணர்ந்து, அமைதியாகத் தலை குனிந்து நின்றேன்.
நானும் உடன் வருகிறேன் என்றேன். இராமன் முதலில் மறுத்தான். சரியாக அப்போது, சீதை அறைக்குள் நுழைந்தாள். அவள் கண்களில் கோபமும் பிடிவாதமும் ஒருங்கே தெரிந்தன. “இராமா, உங்களை விட்டு நான் எப்படி பிரிவேன்? கைகேயியின் சூழ்ச்சியால் நீங்கள் காட்டுக்கு செல்கிறீர்கள், ஆனால் நான் உங்களுடன் வருவேன்!” என்று அவள் கூறினாள். அவளது குரல், உறுதியும் கோபமும் கலந்து ஒலித்தது.
“அயோத்தியின் அரண்மனையை விட, உங்கள் அருகில் இருப்பதே எனக்கு சொர்க்கம்!” என்று அவள் பிடிவாதமாகக் கூறினாள்.
இராமன், அவளைத் தடுக்க முயன்றான், ஆனால் சீதையின் கண்களில் இருந்த தீர்மானம் அவனை அமைதிப்படுத்தியது. எனக்குத் தெரியும் ஐயா, இராமனால் என்னையோ சீதையையோ பிரிந்து இருக்க இயலாது. அவன் உயிர் மூச்சின் காற்று நாங்கள்.
இருந்தும் இராமன் தொடர்ந்தான்.
“சீதை, காடு கொடியது. நிலம்.சுடும், காற்று சுடும், நாம் காணும் எதுவும் நம்மைச் சுடும். நீ இங்கிருப்பதே நன்று என்றான்.
ஆனால், சீதை அருகிருத்தல் தான் இராமனின் வலிமை என்பதை சீதையும் அறிவாள்.
” உன் பிரிவையும் விட அதிகமாய் சுட்டுவிடுமா அந்தக் காடு? என் தந்தை தவறு செய்துவிட்டார், உன்னை ஆண்மகன் என்று நினைத்தல்லவா என்னை உனக்கு மணமுடித்தார். தன் மனைவியைக் காப்பாற்ற இயலாத கோழை என்று அவர் அறிந்திருக்கவில்லை. ” என்றெல்லாம் பலவாறாக அவள் இராமனைத் தூண்டினாள்.
இராமன் புன்முறுவலுடன் சீதை தன்னுடன் வர அனுமதித்தான். அன்னை சுமித்திரை , இதையெல்லாம் கேட்டு மனம் அயர்ந்தாள். அவள் தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். ஏற்கனவே கோசலை இராமனை தடுக்க முயன்று தோல்வியடைந்து, இராமனை காட்டுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டதை அவள் அறிந்திருந்தாள்.
அண்ணன் இராமன் அயோத்தியின் உயிர். எங்களின் இதயம் அவன். ஆகவே அன்னை இராமனைப் பார்க்கும்போது, அவளது இதயம் உடைந்தது.
அவள் மனக்குமுறல், அவளை உள்ளிருந்து உலுக்கியது. ஆனால், அவள் தன் கண்ணீரை மறைத்து, என்னை நோக்கி, “மகனே, இராமன் இருக்கும் இடமே உனக்கு அயோத்தி. சீதை உன் தாய், இராமன் உன் தந்தை. அவர்களை இடர்களில் இருந்து காப்பது உன் கடமை,” என்று கூறினாள்.
முதலில் மறுத்த இராமன் என்னையும் அழைத்துச் செல்ல உடன்பட்டான்.
அன்னையின் குரல், உறுதியாக இருந்தாலும், உள்ளுக்குள் அவள் துக்கம் அலைகளாக எழுந்தது. நானோ என் தாயின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தேன். என் தாய் என்னைத் தடுப்பாளோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால், அன்னையின் ஆசி எனக்கு புது உற்சாகத்தை அளித்தது. நான் மரவுரி அணிந்து வரும்போதில், அன்னை என்னை அணைத்து, என் காதில் மெல்லக் கூறினாள்,
” மகனே நீ அவனுக்கு சேவகன். அதை என்றும் மறக்காதே. ஒரு வேளை காட்டில் ஏதும் விபரீதம் நடந்து…” அவள் குரல் உடைந்தது. அவள் மனதில், இராமனை இழக்கும் பயம் எழுந்தது. சற்று நிதானித்து, அவள் தொடர்ந்தாள், “இராமனுக்கு ஏதும் நேர்ந்தால்…” என்று ஆரம்பித்தாள். அவளின் எண்ணம் அறிந்தவன் நான். மகிழ்வுடனே சொன்னேன்.
“தாயே, ஏதும் நடந்து சீதையோ இராமனோ இறந்தான் என்ற செய்தி என் காதுக்கு வருவதற்கு முன், அவன் தம்பி முன் நின்று இறந்தான் என்ற செய்தி வரும். கவலை வேண்டாம், சென்று வருகிறோம்!” என்று அவள் தாள் பணிந்து உறுதியாகக் கூறினேன். அன்னை , தன் அழுகையையும் ஆற்றாமையையும் மறைத்து, விக்கித்து நின்றாள். அவள் கண்கள், இராமனையும் சீதையையும் பின்தொடர்ந்து செல்லும் என்னைப் பார்த்து நிலைத்தன. நாங்கள் அவள் கண்ணை விட்டு மறைந்த பிறகும், அவள் பார்வை அந்தத் திசையில் பதிந்திருந்தது. அவள் மனதில், ஒரு தாயின் மனக்குமுறல், ஒரு புயலாக எழுந்து அடங்கியதை அவளை விட்டு வெகுதூரம் நீங்கியும் என் மனம் உணர்ந்தது.
அண்ணன் அண்ணியுடன் காட்டுக்கு வந்தேன். பல இடர்களைக் கடந்து இந்த தண்டகாரண்ய வனத்துக்கு வந்தோம். அகத்தியரின் ஆசி பெற்று இந்த பஞ்சவடிக்கு வந்திருக்கோம். “
என்று நீண்ட கதையை சடாயுவிடம் சொல்லி முடித்தான் இலக்குவன்.
ஜடாயு தன் உயிர் நண்பன் தசரதன் இழந்ததை நினைத்த்ய் மீளாத்துயரில் ஆழ்ந்தான். இலக்குவன் தொடர்ந்தான்.
” ஐயா, அகத்தியரும் பல ஆசிகளும் தெய்வீக அத்திரங்களும் அளித்து இந்தப்.பஞ்சவடிக்கு அனுப்பினார். இத்தோடு கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேல் முடிந்துவிட்டன. இன்னும் சிலகாலம் தான். அதற்குள் தங்களை சந்திக்க முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. ” என்று முடித்தான்.
ஜடாயுவின் முகம் இறுகியது. அவன் பலமாக யோசித்தான்.
மகனே, இந்த இடம் அரக்கர்களின் ஆதிக்கம் மிகுந்த இடம். இங்கே கர தூஷணர்கள் உள்ளிட்ட கொடிய அரக்கர்கள் நிறைந்த இடம். நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். இலக்குவா உனக்கு சிறுவயதில் வழிபோக்கரான முனிவர் உனக்குச் சொன்ன நேரமும் வந்து விட்டது. நீ இராமனின் நிழல். நீ அவன் கவசம்.
இலக்குவன் மௌனத்துடனும் தீர்க்கமாவும் சடாயுவை நோக்கினான்.
” என்ன இடர்கள் வரும் என்று நினைக்கிறீர்கள் ஐயா, அரக்கர்களை கணப்பொழுதில் அழிக்கும் ஆற்றல் இராமனிடம் உண்டு. இதை மீறி என்ன அபாயம் நேரிடக் கூடும்? ” என்றான் இலக்குவன்
ஜடாயு அவனைக் கூர்ந்து கவனித்தான். இவன் உறுதியும் வல்லமையும் இராமனுக்கு இணையானது என்பதை உணர்ந்தான்.
“மகனே, காட்டுக்கு உங்களை யார் அனுப்பியது என்று நினைக்கிறாய்?” என்று கேட்டான்.
“எங்கள் தந்தை,” என்றான் இலக்குவன், கோபத்துடன்.
“இல்லை,” என்று ஜடாயு மறுத்தான்.
“சிற்றன்னை?” என்று இலக்குவன் கேட்டான், கண்கள் குறுகின.
“ஹ்ம்ஹூம்,” என்று மறுத்து,ஜடாயும் சோகத்துடன் புன்னகைத்தான்.
“பரதண்ணாவா?” என்று இலக்குவன் கேட்டான், குழப்பத்துடன்.
“இல்லை, மகனே இல்லை. உங்களை இங்கே செலுத்தியது.. விதி,”
அதே நேரம் அந்தக் காட்டின் மறு பக்கத்தில் விதி காமவள்ளியின் பக்கத்தில் இராவணனின் வடிவில் நின்று சிரித்துக் கொண்டிருந்தது.
1 comment