Home கவிதைஅவளும் அவனும்

அன்பிலூறிய சொல்லாரம் அவள்
அகழாத புதுமொழி அவன்
பேரின்பக் கவிதை காதல்!

ஆழ்நிலைக் கனவு அவள்
முடிவிலா மோனநிலை அவன்
மதி மயக்கம் காதல்!

இதயத் துடிப்பு அவள்
இயக்கிடும் சுவாசம் அவன்
ஊனோடு உயிராகும் காதல்!

நேசத்தின் அரசி அவள்
பாசமாளும் அரசன் அவன்
பிரியாவரம் முடிசூட்டும் காதல்!

இன்னிசை ஸ்ருதி அவள்
இயைந்த லயம் அவன்
தெவிட்டாதப் பாடல் காதல்!

தீபராக ஒளி அவள்
அம்ருதவர்ஷிணிப் பொழிவு அவன்
அணையாத சுடரிசை காதல்!

தேடத் தொலைவது அவள்
கண்டதும் மறைவது அவன்
கண்ணாமூச்சி ஆட்டம் காதல்!

கைப்பிரதிக் கடிதம் அவள்
புறா சுமக்கும் மடல் அவன்
மனத்தந்தித் தூது காதல்!

காணும் அனைத்திலும் அவள்
காட்சியாய் நிறைபவன் அவன்
பிழையற்ற பிம்பம் காதல்!

தேவை யாவுமறிபவள் அவள்
நிதமொரு தேவையாவது அவன்
எப்பொழுதும் யாசகம் காதல்!

சாய்ந்தால் ஏந்துவது அவள்
வீழாமல் தாங்குவது அவன்
சுமைதாங்கியாய் நிற்பது காதல்!

நரைகூடித் தளர்ந்தவள் அவள்
விழியொளி மங்கியவன் அவன்
என்றும் இளமை காதல்!

இறுதி வரை அவள்
பின்னரும் தொடர்வான் அவன்
தனிவழித் துணை காதல்!

Author

  • கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

You may also like

Leave a Comment