பயம்

by K. Ravi Shankar
0 comments

துர்கா ஹோண்டா ஆக்டிவாவில் அருகில் வந்து கொண்டிருந்தாள். மெயின் ரோடை கடந்ததும் ஹெல்மெட்டை கழட்டி விடுவாள். வழக்கமாகச் சந்திக்கும் இந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் கிடையாது. போலீஸ் தொல்லையும் கிடையாது. தொல்லை என்பதை விட காதலர்களைச் சுதந்திரமாக விட்டுவிடும் போக்கு.

துர்காவிற்கு வெள்ளை வெளிரெனத் தேகம். பள்ளி மாணவி போலச் சூட்டிகையான சின்ன வட்ட முகம். அதில் சொருகப்பட்ட அதை விடச் சற்று பெரிய கருப்பு வழுவழுப்பு காஸ்ட்லி கூலிங்கிளாஸ். அதனிடையே தெரிந்தச் சொப்பு போன்ற வெளுப்பான குட்டியான குறும்பான மூக்கு. லேசாக மூடி
இருந்த துப்பாட்டாவின் இடையே திமிறி வெளியே தெரிந்தது.

இதில் ஒரு அழகு வடியும். வண்டியை நிறுத்தியதும் கூலிங்கிளாஸ் மற்றும் துப்பட்டாவை விலக்கத் தலைமுடி இழைகள் அங்கங்கு ஒட்டிய வியர்வைத் துளித்த முகத்தில் ஒரு களை வரும். முகத்தைக் கர்சீப்பால் அழுந்த துடைத்து மலர்ச்சியாகி நாக்கால் உதடுகளை மென்மையாக வருட அதில் ஒரு களைச் சொட்டும். இந்த மூன்று விதமான களைகளையும் ஒவ்வொரு சந்திப்பிலும் வினோத் ரசிப்பான். தனக்குக் கிடைத்தப் பாக்கியமாக எண்ணிக் கொள்வான்.

அவனும் ஹெல்மெட் அணிவான். கர்சீப்பால் முகத்தை மூடி விடுவான். இந்த ஆள் இல்லாத இடத்திற்கு வந்ததும் அகற்றி விடுவான். ஒவ்வொரு சந்திப்பின்போதும் இருவருக்கும் இப்படித்தான் நடக்கும். உலகத்திலேயே இவ்வளவு ரகசியமாகப் பயந்து பயந்து காதலிப்பது தங்களைத் தவிர வேறு யாருமில்லை. அதுவும் இந்தக் காலக் கட்டத்தில். அசடு தட்டும் இந்தப் பிற்போக்குத்தனம் வினோதின் மனதை அடிக்கடி நெருடும். இதே இடத்தில் தங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் காதலித்து முடித்துக் கல்யாணப் பத்திரிக்கை வைத்து அழைத்துவிட்டு ஆல் தி பெஸ்ட்டும் சொல்லி இருக்கிறார்கள். பதிலுக்குத் துர்காவும் வினோத்தும் ஜோடியாகச் சோத்தோடு புன்னகை உதிர்த்து ’தாங்கஸ்’ என்பர்கள்.


காதல் காதல் காதல் ஒவ்வொரு சந்திப்பிலும் பயந்து பயந்துச் சாதல் இதுதான் தவறாமல் நடக்கிறது. இதுவே சுகமாக இருப்பதால் இப்படியே காதலர்களாகவே நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறோமோ? ’டீசண்டாக’ பெற்றோர் சம்மதத்துடன் விமர்சையாகத் திருமணத்தில் காதல் முடிய வேண்டும் என்று ஆசை இருவருக்கும். இது சில சமயம் அசட்டுத்தனமாகவும் சில சமயம் முதிர்ச்சியான எண்ணமாகவும் தோன்றி கடைசியில் வித்தியாசமான திங்கிங் என்றும் பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.


”வாழ்த்துக்கள் துர்காஆஆஆ! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது அனிவர்சரி” அங்கிருந்த பெயர் தெரியாத பூக்களின் இதழ்களை உள்ளங்கையில் வைத்து அவள் மீது ஊதினான். துர்கா எதுவும் பேசவில்லை. வினோத்தைச் சோகமாகப் பார்த்துவிட்டுத் தலைகுனிந்துக் கொண்டாள். கண்களில் நீர் கோத்திருந்தது. ”என்னடா துர்கா… பீலிங்கா? சும்மா நம்மள கலாய்ச்சேன்” சோகையாகச் சிரித்தான் வினோத்.

”தாங்க்ஸ் வினோத். பெரிய அச்சீவ்மெண்டுதான்….! கிராண்டா செலிபரேட் பண்ணனும். யாருக்கும் தெரியாம லவ் பண்ணி நாலு வருஷம் முடிச்சது” கன்னத்தில் வழிந்த நீர்துளிகளை உள்ளங்கையால் தேய்த்தப்படி துர்கா பதிலளித்தாள்.

” சாரிடா துர்கா.. என்னடா செய்யறது! பயப்படற விஷயத்தில ரெண்டுபேரும் ஒண்ணா இருக்கோம். இதனாலேயே ரெண்டு பேருக்கும் லவ் ஜாஸ்தி ஆயிட்டே போவுது. நீ என்ன விடப் பரவாயில்ல. நா தைரியமா இருக்கனும்னு டிரை பண்றேன் முடியல ” வினோத் உச் கொட்டி வருந்தினான்.

“அனிவர்சரி ஏற ஏற அதுவே அபசகுனம் மாதிரி ஓண்ணா சேருவமான்னு ஒரு நெகட்டீவ் பீலிங் வருது. எப்ப மேரேஜ் ஆகி எப்ப ஹஸ்பண்டு வொய்ஃபாகி வாழ்கைல குப்ப கொட்றது”

துர்கா அலுத்தவாறு வினோத்தின் கன்னத்தைத் தட்டி ஒரு நிமிடம் அமைதியாகி

”சரி விடு வினோ. ரொம்ப நேரமா வெயிட் பண்றயா? பிரைம்ல கிஷ்காந்தா காண்டம் பார்த்தியா?”

பேச்சை மாற்றினாள். தான் வருத்தப்பட்டாலும் வினோத் இவ்வாறு வருத்தப்படுவதை எப்போதும் ரசிக்க மாட்டாள் துர்கா. அவன் மீது சொல்ல முடியாத அன்பு ஏற்படும் இப்படிப் பேசும்போதெல்லாம். ஒரு பயந்தாகுளி லூசுக்கு இன்னொரு பயந்தாகுளி லூசு ஜோடியாக அமைந்தது கொடுப்பினைதான் என்று நினைத்துக் கொள்வாள். மேட் ஃபார் ஈச் அதர்.

“இப்படியே எவ்வளவு நாள் ஒட்டறது? வீட்ல சொல்லியே ஆக வேண்டும்” வினோத் செல்லமாகக் கோபப்பட்டான். கோபம் என்பதை விட ஆதங்கத் தொனி அதிகம் தென்பட்டது.

”வீட நெனச்சா உதறல் எடுக்குது வினோ. சத்தியமா அக்ரி ஆக மாட்டாங்க. ஜாதிப் பிரச்சனை. ஏண்டா லவ் பண்ண ஆரம்பிச்சோம்னு தோணுது. We are trapped. தள்ளிப் போட்டதும் தப்பு. யாருக்கும் பயப்படமா பேசமா ஓடிப் போயிருக்கனும். ஓடிப் போனால் என் தங்கை லைஃப் ஸ்பாயில் ஆகும்னு கவல வேற கூடவே வருது” துர்கா பேச்சை மாற்றினாலும் அவளை அறியாமல் மறுபடியும் இந்தப் பேச்சிற்கே வந்தது.

“வேணா வேணா….! தங்கை சாபம் தாங்காது. இங்கயும் அதே நெலமதான்.”

“மேஜிக் போல உஷ்ஷ்ஷ்ன்னு கையை ஆட்டி எல்லாரும் ஓகேயாகி நம்ம மேரேஜ் முடிச்சு ஹாப்பி ஆயிடனும்….எப்படி இருக்கும்?”

“நல்லாத்தான் இருக்கும். ஹார்டுகோர் பயந்தங்குளி திங்கிங்” சிரித்தான்.

“இன்னும் எவ்வளவு நாள்தான் எந்த ஸ்டெப்பும் எடுக்காம இப்படியே ஓட்ட போறோம். இந்த டாபிக்க எங்க அப்பாகிட்ட ஒபன் பண்ணலாம்னு இருக்கேன். சும்மா மீட் பண்ணிட்டு ஒருத்தர ஒருத்தர் பாத்து ஏங்கிட்டு…. சே…! கடுப்பா இருக்கு. இங்க வந்து பத்து நிமிஷமா இதத்தான் பேசிட்டு இருக்கோம்”

”கொஞ்சம் பொறு வினோத். அடுத்த வாரம் எங்கம்மா கிட்ட சொல்லாம்னு இருக்கேன். அவங்கள கன்வீன்ஸ் பண்ணிட்டு அப்புறம்தான் என் அப்பா டிசிஷன் எடுத்தே ஆகணும். ஒருத்தர ஒருத்தர் எப்படிக் காதலிக்கிறோம். அதுக்கே நாம எட்டு ஊருக்குக் கெத்துக் காட்டனும். முக்காடு லவ்வு அசிங்கமா இருக்கு. லவ்வா கேவலப்படுத்தறம்”

சொன்ன வேகத்தில் துர்கா குரலில் நடுக்கம் தெரிந்தது. வினோத் மறுபடியும் மூடு அவுட் ஆனான்.

”வேண்டாம்டா துர்கா. நான் பாத்துக்கிறேன்”
”இல்ல வினோத். நா எங்கம்மா கிட்ட பேசறேன்”
“உங்கம்மா ஒகே இல்லைன்னா?”
“என்ன பண்றதுன்னு புரியல” முகம் சுருங்கியது.
“ஏதாவது பண்ணியே ஆகனும்”

மேலும் இந்தச் சோகப்பேச்சைத் தொடர வினோத்க்கு இஷ்டமில்லை. ஒரு வழியாகப் பேச்சு வேறு திசையில் திரும்பியது. வினோத் என்றுமில்லாத நாளாக இன்று ரொம்பக் காதலுடன் பேச ஆரம்பித்தான். துர்காவும் பதிலுக்குப் பேசிக் கொண்டிருந்தாளே தவிர மனம் என்னவோ எப்படி அம்மாவிடம் சொல்வது எப்படி என்று ஒத்திகைப் பார்த்தபடிதான் இருந்தது. தைரியமாக அடுத்தக் கட்டத்திற்கு அடி வைத்தற்கு ஓரமாகச் சந்தோஷமாகவும் இருந்தது.


ஒரு மணி நேரம் சந்திப்பு முடிந்து ஹோட்டலில் சாப்பிட்டு வீடு திரும்பினார்கள். அந்த ஒரு மணி நேரமும் துர்காவும் வினோதும் என்றும் இல்லாமல் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள். வினோதை மிஸ் பண்ணக்கூடாது. அடுத்த அனிவர்சரி டும்டும்டும்தான். பெற்றோர்களின் சம்மதத்தோடு. இரண்டு நாளில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். வாசல் கேட் வரை ஒத்திகை நினைப்பு அவளை வாட்டி எடுத்தது. சாதா தைரியம் வேண்டாம். திடீர் குண்டுத் தைரியத்தை ஏற்றிக் கொள்ள வேண்டும். வீட்டில் குண்டுத் தைரிய ஸ்பெஷலிஸ்ட் தங்கை அமுதாவிடம் விஷயத்தை உடைத்து ஹெல்ப் கேட்கலாமா என்று திடீர் யோசனை உதித்தது. அய்யோ வேண்டாவே வேண்டாம். சொதப்பலாகிவிடும். ஆபாசமாக அணுகிக் கெட்டுவிடும். யோசனையைக் கைவிட்டாள்.

அம்மாவிடம் பேசுவதற்கு நாள் நேரம் குறித்துக் கொண்டாள். நாள் நெருங்க நெருங்க மனது முழுதும் பீதிக் கலந்தக் குறுகுறுப்பு ஓடியவாறு இருந்தது. சந்திப்பிற்குப் பிறகு இரண்டாவது நாள், விடிகாலையில் வினோத்தின் செல் அடித்தது. ‘என் செல்லம் துர்கா” எழுத்து ஆங்கிலத்தில் திரையில் மின்னியது. வட்ட வண்ண டிபியில் துப்பட்டா கூலிங்கிளாஸ் துர்காவின் குட்டி முகம். இவ்வளவு காலையில் என்ன
போன்? அம்மாவிடம் காதல் ஓகே ஆகிவிட்டதா?

” ஹாப்பி மார்னிங் ..! சொல்லு துர்கா….நம்ம காதல் ஓகே ஆயிடிச்சா? அடுத்தது நானா” உடம்பில் விர்ர்ர்ரென்று இனம் சந்தோஷம் ஓடியது.

” பேட் லக் வினோத். அம்மாகிட்ட கேட்கல. அத விடச் சீரியஸ் மேட்டர். என்னோட சிஸ்டர் அமுதா விட்டை விட்டு அவனோட லவ்வரோட நேத்து நைட்டு ஓடிட்டா. அம்மா பயங்கர அப்செட். அப்பா ஓடுகாலி அமுதான்னு ருத்ரதாண்டவம் ஆடறாரு. வீட்ல எல்லாம் போட்டது போட்டபடிக் கெடக்கு, எனக்கு உதறலாகி மூணு நாலுவாட்டி பாத்ரூம் போனேன்”

துர்காவின் குரலில் பதற்றம். நாலுவருட பழக்கத்தில் முதன்முதலாக உணர்ந்து வினோதும் பதட்டமானான். அடி வயிறு பவ்வென்றது. ஒரு நிமிடம் மெளனமாகித் தொடர்ந்தான்.

”உன் தங்கையா…. லவ்வா.. ஓடிட்டாளா? நம்பவே முடியல”

“இவ்வளவு வருஷம் கூடவே குப்ப கொட்ன என்னாலேயே நம்ப முடியல. எனக்கு இவ லவ்வப் பத்தி ஒரு இம்மியும் தெரியாது. ஷாக்கிங் வினோத். அமுதா எட்டு ஊருக்கு வெரி கூல் கேர்ள். அவ ’ஆபரேஷன் லவ் அமுதா’ன்னு அதிரடி ஆட்டம் ஆடிட்டா. பிளான் பண்ணி எஸ்கேப் ஆயிட்டா. இதுதாண்டா லவ்வுன்னு காட்டிட்டு போய் இருக்கா. நம்மளும் ஃபாலோ பண்ணுவோம். யாரோ வர்ற மாதிரி இருக்கு. சரி…அப்பறம் பேசறேன்…” போனை வைத்துவிட்டாள்.

வினோத் நொந்துப்போனான். அமுதாவை இதுவரை பார்த்தது கூடக் கிடையாது. அமுதா திடீரென முகமூடி அணிந்துக் கத்தியுடன் இருவர் முன் தோன்றி ’ வச்சேன் பத்தியா உங்க லவ்வுக்கு ஆப்பு’ என்று மிரட்டுவது போலப் பிரமை வந்தக் கொண்டே இருந்தது. டர்டி கேர்ள். எங்கிருந்தோ வந்து குதித்துத் தங்கை அமுதா இவ்வளவு திடீர் திருப்ப வில்லியாக மாறுவாள் என்று கனவிலும் வினோத் நினைக்கவில்லை. வில்லியா? எப்படி? சே, எதற்கு இவளைக் காய்ச்ச வேண்டும்? எங்களுக்கு இல்லாத
ஒன்று இவளுக்கு இருந்த பொறாமையினாலா? இல்லை கையலாகத்தனம்.

அவமானமாகி அவள் நினைப்பிலிருந்து தன்னைக் கஷ்டப்பட்டு விடுவித்துக் கொண்டான். உண்மையிலேயே இப்படித் துரதிர்ஷ்டமான star crossed lovers ஆகிவிட்டோமே. வினோத் லேசாக விசும்பினான். அப்புறம் பேசுகிறேன் என்றவள் பேசவே இல்லை. அவளைத் தொடர்புக்
கொள்ளவும் முடியவில்லை. வினோத்தும் பயந்துப் போய் ஏடாகூடாமாகிவிடும் என்று அழைப்பதை விட்டுவிட்டான். நாலு வருட காதல் கண்முன் பொசுங்கும் நெடியை நாளாக நாளாக உணர்ந்தான். எதுவும்
ஓடாமல் மரக் கட்டையாக நாட்களைக் கடத்தினான். முக்காடு காதல் வெளி உலக முகம் காட்டாமல் ஓடி விட்டது.

அடுத்த ஒரு வருடத்தில் தொடர்பே இல்லாமல் போயிற்று. சரியாகக் கணக்கிட்டால் கூடவே இரண்டு மாதம் ஆகி இருக்கும். வினோத்தும் பயத்தில் தொடர்புக் கொள்ளவில்லை. நடுவில் துர்கா வேலையை
விட்டுவிட்டதாகத் தகவல் தெரிந்து கொண்டான். இதையும் தாங்க முடியவில்லை. துர்காவிற்கு என்ன ஆச்சு. பிறகு ஒரு முறைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போது நம்பர் பிளாக் செய்யப்பட்டிருந்தது. இதில் மிகுந்த அதிர்ச்சியாகிப் பிறகு மெது மெதுவாக நிலைக்கு வந்து சமாதானமானான்.

நாலு வருட காதல் ஆச்சே. சமாதானம் ஆனாலும் ஏக்கம் வாட்டி எடுத்துத் தூங்க விடாமல் செய்தது. துர்கா இல்லாத வாழ்க்கை? பீதியானான். துர்கா பயமுறுத்தப்பட்டுள்ளாள் என்று தெரிந்து கொண்டான். சில மாதம் கழித்து அமுதாவைப் போல அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும். துர்கா சொன்னது போல் அவளை அச்சாக ஃபாலோ செய்ய வேண்டும். அமுதா வில்லி அல்ல. வழிக் காட்டி இருக்கிறாள்.
பொறுமையாக இருப்போம் என்று மனதிற்குள் மீண்டும் ஒரு முறை சமாதானம் செய்து கொண்டான்.

சில நாட்கள் கழித்துத் துர்காவிற்குத் திருமணம் என்று அழைப்பிதழ் போஸ்டில் வந்தது. அதிர்ச்சியானான். அதுவும் இரண்டு நாள் முன்னால்தான் வந்தது. முகூர்த்தம் அன்றுதான் அழைந்திருந்தாள். ரிசப்ஷன் கிடையாதா? இதில் ஏதோ செய்தி இருக்கிறது. உற்றார் உறவினர் புடைசூழக் கெட்டி மேளம் கொட்ட நாதஸ்வரம் முழங்கப் புரோகிதர் மந்திரத்துடன் கழுத்தில்
மூன்று முடிச்சுடன் தாலி ஏறுவதை ரத்தமும் சதையுமாகப் பார்த்து மனதிலிருந்து அழிக்க வேண்டியா? ஒன்றும் ஓடவில்லை. சந்திக்கும்

இடத்தில் காதலர்கள் தங்களை அவ்வப்போது வாழ்த்தியது இதற்குத்தானா? உணர்ச்சி இல்லாமல் ரோபோ போல இயங்க ஆரம்பித்தான்.

துர்காவை மணக் கோலத்தில் பார்ப்பதைத் தாங்க முடியுமா? செல்வதா வேண்டாமா என்று ஒரு நாள் முழுதும் லீவ் போட்டு யோசித்து மண்டைக் காய்ந்துக் கடைசியில் போவதாக முடிவு செய்து வந்திருக்கிறான்.

முகமெல்லாம் தூக்கமில்லாமல் கருப்போடிக் கண்ணாடியில் பார்க்கச் சகிக்கவில்லை. அவளைப் பார்க்காமல் ஓரு ஓரத்தில் நின்று தெரியாமல் வாழ்த்திவிட்டு வந்துவிட வேண்டும். அதைத்தான் விரும்பி இருக்கிறாள்.

அடுத்தப் பயம் வந்துவிட்டது அவளுக்கு. துர்காவை மண மேடையில் காணவில்லை. மாப்பிள்ளையையும்
காணவில்லை. முகூர்த்தத்திற்கு நேரம் இருந்தது. இதை அனுகூலமாக உணர்ந்தான். தலைகுனிந்து நடந்து வந்தான். காற்றோ ஏசியோ வராத மண்டபத்தின் ஒரு மூலையில் வேணுமென்றே உட்கார்ந்துக் கொண்டான். யாரும் பார்க்க முடியாது. பக்கத்தில் சுவர் ஓரமாக அழுக்கு ஷாமியான கலர் துணிகள்,கட்டைகள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள்,துடைக்கும் மாப்,உடைந்த கருப்போடிய அண்டா உள்ளே கரண்டிகள் குவிக்கப்பட்டிருந்து. திருமண ஹால் கல்யாணக் களைக் கட்டிக் கொண்டிருக்கத் தான் மட்டும் அனாதையாக உணர்ந்தான்.

தன் நாலு வருட துர்கா யாரோ ஆகிப் போனாள். ஏண்டா வந்தோம் என்று அரித்துக் கொண்டே இருந்தது. அழுகை முட்டியது. வராமல் இருந்தால்தான் தோற்றக் காதலுக்கு மதிப்புக் கூடுவதாக உணர்ந்தான். திடீரெனத் துர்கா மேல் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்து படபடப்பானான்.

”கட்டாயம் சாப்பிட்டுதான் போகணும்”

கைகளைக் குவித்தப்படி நின்றிருந்த பெண் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அச்சாகத் துர்காவின் ஜாடையில்! தங்கை அமுதாவா? முதன்முறை பார்க்கிறான். இவள் எப்படி இங்கே? ஓடிப்போனவள் ஆச்சே? அக்காவின் காதலைக் கொன்னவள் ஆச்சே. கடைசி ஆளாக வரிசையில் சம்பிரதாய உபசரிப்பில் இவனையும் உபசரித்தாள். படபடப்புக் குறைந்து இவள் யாரென்று குழம்ப ஆரம்பித்தான்.

“ஓகே.. தாங்க்ஸ்….” என்றான் வினோத்

”ஏங்க இருட்ல ஏசியே வராத இட த்துல தேடிப் பிடிச்சு உட்கார்ந்திருக்கீங்க. அங்க பார்த்தீங்களா சார்? அவ்வளவு இடம் இருக்கே? இட் லுக்ஸ் வெரி ஆட் சார். ஏன் சார் இப்படி? டும்டும்டும் போது நீங்க இங்கேந்து ரொம்பத் தூரம் நடந்து வந்து அட்சதைப் பூப் போடனும் ” அட்சதையும் பூவும் கையில் கொடுத்தப்படி வாயெல்லாம் பல்லாகச் சிரித்தாள்.

அப்பட்டமான அதிகப்பிரசங்கித்தனத்தைப் பார்த்து மகா எரிச்சலாக இருந்தது வினோதிற்கு. பதில் பேசாமல் அசட்டுப் புன்னகை ஒன்றை
உதிர்த்து ஆவல் தாங்காமல்

“நீங்க துர்கா சிஸ்டர் அமுதாவா? நா அவ காலேஜ் கிளாஸ்மேட்” பெயரைத் தவிர்த்ததை அமுதா கவனிக்கவில்லை. அவள் அதைச் சட்டைச் செய்த மாதிரியும் தெரியவில்லை. தான் பேசுவதில் மட்டும் குறியாக இருந்தாள்.

“ நைஸ் டு மீட் யூ அண்ட் எஸ் சார் ஐ ஆம் அமுதா. த்ரிஹன்ரட் பெர்சன் கன்ஃபார்ம்டா நான்தான் அமுதா. நோ டவுட் யார்” துடிப்பான
உடல்மொழியில் சற்று குலுங்கிச் சிரித்தப்படிப் பதிலளித்தாள்.

அடி மனதில் வெறுப்பை மறைத்துக் நமுட்டுச் சிரிப்புடன் அவளை உற்றுப் பார்த்தவாறு இருந்தான். அந்த ஊடுருவும் பார்வையின் அர்த்தத்தைக் குற்ற உணர்வுடன் உள்வாங்கித் தலைக் குனிந்துச் சிரித்துவிட்டுப் பக்கத்தில் இருந்த சேரில் உட்கார்ந்து சன்னமான குரலில்

” எஸ் சார் ஐ காட் யூ உங்க மைண்டல என்ன ஓடுதுன்னு. துர்கா எதுவும் சொல்லலயா கழுத…? நீங்க டியர்ஸ்டு பிரெண்டுன்னு சொன்னா.
ஊரெல்லாம் தெரிஞ்ச விஷயம்தான். இப்ப ஊரே ஓகே ஆயிடிச்சு. எல்லாம் செட்டில் ஆயாச்சு சார். பேரண்ட்ஸ் முதல்லா தாம் தூம்னு குதிச்சாங்க. அப்பறம் இதெல்லாம் ஒரு மேட்டரான்னு தெளிஞ்சு ஓகேடின்னுட்டாங்க. கிராண்டா மேரேஜ் பண்ணி இருக்கலாமேன்னு வருத்தப்பட்டாங்க. ஓடுகாலிய தாங்குத் தாங்குன்னு தாங்கறாங்க. இப்ப கூட அம்மா பேத்திய தாங்கிட்டுதான் இருக்காங்க “ சிரித்தப்படிப் பக்கவாட்டில் கைக் காட்டினாள்.

தூரத்தில் அமுதாவின் அம்மா குழந்தைக்குப் பீடிங் பாட்டிலில் பால் ஊட்டிக் கொண்டிருந்தாள்.

” யூ நோ இதிலப் பாதிக் கூட்டம் என் புகுந்த வீட்டுக்காரங்கதான்” பீத்தல் தொனியில் சொல்லிவிட்டுத் தொடர்ந்தாள்….

“ துர்காவுக்கு அவசர அவசரமாக் கல்யாணம் நிச்சியம் ஆன ராசி. அதுக்கு அடுத்த ரெண்டாவது மாசமே எனக்கு யோகம் அடிச்சு என் மேட்டர் எல்லாம் மேஜிக் போலச் சரியாடிச்சு. ஐ மஸ்ட் தாங் ஹெர் மில்லியன் டைம்ஸ். மாப்பிள வெரி ஹாண்ட்செம் கய். கொடுத்து வச்சவ. சம்பந்தமே இல்லாத மேட்டர ஓவரா பிராங்கா பேசி ரொம்பப் போரட்டிச்சிட்டேனோ? என் டைப் அப்படி. டோண்ட் மைண்ட் சார். இருந்து சாப்பிட்டுப் போங்க” இளித்தப்படிக் கிளம்பினாள்.

காத்திருந்தது போல அவள் போன அடுத்த நிமிடம் தலையில் புது ஹெல்மட்டை மாட்டிக் கொண்டான். தலைகுனிந்துப் பக்கவாட்டு டைனிங் ஹாலின் சாப்பாடு வாயில் வழியாக வாசலுக்கு வந்தான். கையில் வைத்திருந்த வேர்வையில் குளித்திருந்த அட்சதையும் பூவையும் யாரும் இல்லாத வாசல் வரவேற்பு டேபிளில் வைத்துவிட்டு வெளியேறினான்.

Author

You may also like

Leave a Comment