Home கட்டுரைவங்காள நவராத்திரி: கலையும், ஆராதனையும்

வங்காள நவராத்திரி: கலையும், ஆராதனையும்

by Vaishali Ramkumar
0 comments

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி என்பது ஒரு பண்டிகை மட்டுமல்ல, அது ஓர் அசுரனை வென்ற தாயின் கதையிலிருந்து தனது மகளை வரவேற்கும் உணர்வுக்கு மாறும் ஒட்டுமொத்த நகரத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை ஆகும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஒன்பது இரவுகள் விரதம், கர்பா நடனம், மற்றும் ஒன்பது தேவியரின் வடிவங்கள் (நவதுர்கா) என ஆன்மீகத் தூய்மையைப் பிரதானமாகக் கொண்டிருக்க, கொல்கத்தாவில் இது ஒரு தனித்துவமான மாபெரும் கலாச்சாரப் பெருங்கொண்டாட்டமாக உருமாறுகிறது. இது வெறும் பக்தி மட்டுமல்ல, இது ஒரு கவிதை, ஒரு கலை, ஆராதனை, மக்களின் கூட்டிசைவான தருணம்.

நவராத்திரி குறித்து பெரும்பாலும் பேசப்படாத ஒரு விஷயம் ஒன்றுண்டு, அது துர்கா பூஜைக்குப் பின்னால் இருக்கும் ஆழ்ந்த, தனிப்பட்ட வீடு திரும்புதல் (Homecoming) என்ற நிகழ்வு. இந்துப் புராணங்களின்படி, சிவன் இமயமலையில் இருப்பதால், துர்கா தேவி ஆண்டுக்கு ஒருமுறை, இந்தச் சில நாட்கள் மட்டும், தன் பெற்றோர் வீடான பூமிக்குத் தன் குழந்தைகளான லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கார்த்திகேயன் ஆகியோருடன் வருகை தருகிறார். இந்தத் தாய் தந்தையின் வீட்டுக்கு வரும் மகள் என்ற உருவகம், விழாவின் முழு  ஆன்மாவையும் நமக்குப் பிரதிபலிக்கிறது.  

இதனால், இங்குக் கடும் விரதங்கள்  கோலோச்சுவதில்லை. மாறாக, மகிழ்ச்சி, விருந்து, புத்தாடைகள், சந்திப்புகள், பரஸ்பர அன்பின் பரிமாற்றம் ஆகியவற்றைக்கொண்ட ஒரு மகத்தான வீட்டுக் கொண்டாட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. இங்கு தனித்துவமாக ஆட்டிறைச்சி, மீன், கோழியின் இறைச்சி என  அசைவம் உண்பதும், பலவகையான  இனிப்புகள் மற்றும் எண்ணற்ற பலகாரங்களுடன் கூடிய விருந்துகளை உண்பதும் இந்தப் புதல்வியின் வருகையைக் கொண்டாடும் அங்கமாக அமைகிறது.

மேலும், கொல்கத்தாவின் பூஜையின் தனித்துவமான ஒரு மரபு குமாருடுலி (Kumartuli)  என்ற மண்வினைக்  கலைஞர்கள் வாழும் ஒரு சிற்றூரைச் சார்ந்தது. ஹூக்லி  ஆற்றின் களிமண்ணிலிருந்து மட்டும் ஒரு சிற்பி சிலைகளைச் செய்வதில்லை, மாறாக  நான்கு புனிதமான பொருட்கள் தேவை. ஆற்றின் களிமண், பசுஞ்சாணம் கோமியம் அத்துடன் முக்கியமாக   ‘வைஷ்யா பள்ளி’ அல்லது நிசித்தோ பள்ளியின் (Punnya Maati from the courtesan’s neighbourhood) வாசலில் இருந்து எடுக்கப்பட்ட புனித மண்ணை, களிமண்ணுடன் கலந்துதான் துர்கா தேவியின் சிலைகளை உருவாக்குகின்றனர். புண்ய மாத்தி அல்லது “புனித மண்” என்று அழைக்கப்படும் இந்த மண், பாரம்பரியமாக ஒரு பூசாரி அல்லது சிலை செய்பவரால் ஒரு பாலியல் தொழிலாளியிடமிருந்து மரியாதையுடன் கேட்டு வாங்கப்படுகிறது. இந்த மண் கலக்காமல் செய்யப்படும் சிலைகள் முழுமையடைவதில்லை என்பது அவர்களின் நம்பிக்ககை.  ஆகவே இந்தப் ‘புனித மண்’ சிலைக்கு ஒரு முக்கிய அங்கமாகிறது.

இது, சமூகத்தில்  புறக்கணிக்கப்பட்டவர்களையும் ( தாசிகள் ) தேவியின் உருவாக்கத்தில் இணைத்து, அவளின் சக்தி எங்கும் வியாபித்துள்ளது, யாருக்கும் பாகுபாடில்லை என்ற ஒரு நுட்பமான சமூக நீதியைப் பிரகடனம் செய்கிறது. இந்தப் பாரம்பரியம், சிலையைப் படைப்பவர்களுக்குச் சமூகத்தில் எந்தத் தகுதி இருந்தாலும், அவர்களின் பணி தேவியின் உருவாக்கத்தில் புனிதமானதே என்பதை வலியுறுத்துகிறது.  மேலும்  விபச்சார விடுதிக்குள் நுழையும் ஆண்கள் தங்கள் தூய்மையையும் நற்பண்புகளையும் வெளியே விட்டுச் செல்வதாகவும், அந்த மண் இந்த நற்பண்பை உறிஞ்சி, அதன் மூலம் புனிதப்படுத்தப்படுகிறது என்றும் நம்புகிறார்கள். மொத்தத்தில் பெண்கள் யாராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை தரவேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாகிறது.

துர்கா தேவியின் விக்கிரகத்தில், விழாவின் ஆறாவது நாளுக்கு ஒரு நாள் முன்பு ‘சக்குதான் – (கண்வரைதல்)’ – (Chokku Daan) என்ற சடங்கு நடைபெறுகிறது. இந்தச் சடங்கின்போதுதான், கலைஞர் தேவியின் கண்களை வரைகிறார். இந்தக் கண்கள் வரையப்படும் தருணம்தான், வெறும் களிமண் சிலையாக இருந்த உருவம், தெய்வீக சக்தியின் இருப்பிடமாக மாறுகிறது என்று நம்பப்படுகிறது. அதுவரை கண்களில்லாத சிலையை வைத்துக்கொண்டிருந்தாலும், அந்தத் தாய் இந்த பூமிக்கு வருகை தரும் உணர்வு இந்த கண்கள் திறக்கப்படும் நொடியில்தான் பிறக்கிறது. ஆகவே  இந்தச் சடங்கு, கலைஞர் விரதமிருந்து, மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்யும் ஒரு ஆழ்ந்த கலைப் படைப்பாகும். இது வெறும் ஒரு ஓவியம் மட்டுமல்ல, ஒரு தெய்வீக உருவத்திற்கு உயிர் கொடுக்கும் ஒரு தருணம்.

விழா நடைபெறும் நாட்களைவிட, அதிகாலையில், ‘கோலா பௌ’ (Kola Bou) -வாழை மருமகள் என்று அழைக்கப்படும் செவ்வாடை போர்த்தப்பட்ட ஒரு வாழை மரக்கன்று கங்கையில் நீராடப்பட்டு,  ஒன்பது தாவர இலைகளுடன் (நவபத்திரிகா), மஞ்சள், வில்வம், மற்றும் நெல் போன்றவற்றோடு கட்டப்பட்டு பின்னர் விநாயகரின் அருகில் வைக்கப்படும். இந்தச் சடங்கும், இந்த ஒன்பது தாவரங்களும், துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களையும், வாழ்க்கையை வழங்கும் இயற்கை சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இது வேறெங்கும் காணப்படாத ஒன்றாகும்.

ஒரு பிரபலமான நாட்டுப்புறக் கதையின்படி, கோலா பௌ விநாயகரின் மனைவி என்று கூறப்படுகிறது. இந்தக் கதையின்படி, கணபதி தனது தாயான துர்காவுக்கு ஒரு வாழை மரத்தைத் தனது மனைவியாகக் காட்டினார் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த விளக்கம் வேதங்களுக்கு முரணானது, மேலும் கோலா பௌ துர்கா தேவியின் தாவர வடிவமாகப் பார்க்கப்படுகிறது என்கிறார்கள்.  துர்கா பூசையின் ஏழாவது நாளில் (மகாசப்தமி), கோலா பௌ-வுக்கு நதியில் ஒரு சடங்கு குளியல் அளிக்கப்படுகிறது. அதன் பிறகு, வாழை மரம் ஒரு சிவப்பு மற்றும் வெள்ளை நிற சேலையால் அலங்கரிக்கப்பட்டு, ஒரு மணப்பெண் போல குங்குமத்தால் அலங்கரிக்கப்படுகிறது. இது விழாக்காலம் முழுவதும் விநாயகர் சிலைக்கு அருகில் வைக்கப்படுகிறது. திருவிழா முடிந்ததும், கோலா பௌ மீண்டும் நதியில் கரைக்கப்படுகிறது.

சமூக பூசை மன்றங்கள் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை ஏற்பாடு செய்யும், அதில் இளைஞர்கள் சக்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், சுதந்திர இயக்கத்திற்கான பயிற்சியின் ஒரு வடிவமாகவும், குச்சிகளைக் கொண்டு போலிப் போர்களில் ஈடுபடுவார்கள். சுபாஷ் சந்திர போஸ், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பாதுகாப்பான வீடுகளாகவும், சுய-சார்பை மேம்படுத்துவதாகவும் இருந்த இரண்டு சமூக பூசைகளுக்குத் தலைமை தாங்கினார்

ஆரம்பத்தில், துர்கா பூசை செல்வந்த ஜமீன்தாரர்களால் நடத்தப்பட்டது, ஆனால் பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர்களால் ஒரு அடித்தள இயக்கமாக மாற்றப்பட்டது. அவர்கள் இந்த விழாவை ஆங்கிலேயர்களுக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாகவும், சுதேசி கொள்கையை பரப்புவதற்கும் பயன்படுத்தினர். முதல் “பாரோவாரி” (சமூக) பூசை, சுதந்திரப் போராட்ட வீரர்களால் 1910-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆதி கங்கை ஆற்றின் கரையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மொத்தத்தில் நகரத்தின் இந்த மாபெரும் திருவிழா, தனது பாரம்பரியத்தின் வேர்களை பூமித் தாயின் ஆழத்தில் வைத்திருக்கின்றது என்பதை இந்தச் சடங்கு அழகாக நினைவூட்டுகிறது. கொல்கத்தாவின் துர்கா பூஜை ஒரு பிரம்மாண்டமான கலைக்கூடம், அதில் ஆராதனை, உணர்வு, மனித நேயம், மற்றும் ஒரு மகள் தனது வீடு திரும்பிய மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் நிறைந்திருக்கிறது. இந்த விழாவின் ஒவ்வொரு தருணமும், ஒவ்வொரு சடங்கும், ஒவ்வொரு கலைப் படைப்பும், மனிதனுக்கும் இயற்கைக்கும், சமூகத்திற்கும், தெய்வீகத்திற்கும் இடையே உள்ள பிணைப்பைப் பறைசாற்றுகிறது.

Author

You may also like

Leave a Comment